Last Updated : 19 Nov, 2020 03:14 AM

 

Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியா வருமா?

உலக அளவில் கரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைக் கொண்டுவருவதில் வளர்ந்த நாடுகள் போட்டி போடுகின்றன. தற்சமயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவேக்சின்’, ‘ஜைகோவ்-டி’ இரண்டு தடுப்பூசிகளைச் சேர்த்து 11 ‘சோதனைத் தடுப்பூசிகள்’ 3-ம் கட்ட ஆய்வில் உள்ளன. இந்தியத் தடுப்பூசிகளுக்கு 50% பலன் கிடைத்தாலே போதும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க கரோனா தடுப்பூசி 90% பலன் தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 92% பலன் தருவதாக அந்த நாடு அறிவித்தது. இந்த வாரம், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ‘எம்ஆர்என்ஏ-1273’ (mRNA-1273) தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ‘வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியத் தடுப்பூசிகளைவிடத் தரம் கூடியதென்றால் எந்தத் தடுப்பூசியை எவருக்கு முன்னிலைப்படுத்துவது?’ எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். அதேநேரம், கரோனாவுக்கான தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதிலும் சிரமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மருந்து வணிகம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தத்தின்படி ஒரு புதிய தடுப்பூசியைச் சந்தைப்படுத்தும் உரிமை அதைக் கண்டுபிடித்த மருந்து நிறுவனத்துக்கு 20 வருடங்களுக்குச் சொந்தமாகிறது. இக்காலகட்டத்தில், அந்த நிறுவனத்தின் அனுமதி, ஒப்பந்தம் எதுவுமில்லாமல் அந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கவோ சந்தைப்படுத்தவோ எவருக்கும் உரிமையில்லை. போதுமான சோதனைகளை நடத்தி, திறன் மிகுந்ததும் தரமானதும் பாதுகாப்பானதுமான தடுப்பூசியைத் தயாரிப்பதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. கரோனாவுக்கான தடுப்பூசியைக் கொண்டுவருவதில் கடந்த 10 மாதங்களாகக் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் லாபத்தை எதிர்நோக்குவதும் வழக்கம்தான்.

விலக்கு வேண்டும்

கரோனா தடுப்பூசி வணிகத்தில் லாபம் ஈட்டுவது முக்கிய நோக்கமென்றால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வெளிநாட்டுத் தடுப்பூசிகளை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆகவே, கரோனா தடுப்பூசி நிறுவனங்கள் வணிக நலனைப் பின்னுக்குத் தள்ளி, மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுக்க முன்வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதற்காக, ‘கரோனா தடுப்பூசியைச் சந்தைப்படுத்தும்போது அறிவுசார் காப்புரிமையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து உலக வர்த்தக அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகள் கொண்டுவரும் கரோனா தடுப்பூசியை அந்தந்த நாடுகளில் தயாரித்து வணிகப்படுத்தும் உரிமையை வழங்கினால் அல்லது சலுகை விலையில் வழங்கினால், பொருளாதார இழப்புள்ள நாடுகளுக்கு அது பயன்படும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

இதற்கு வழி தேடும் முயற்சிதான் காப்புரிமையில் இந்தியா விலக்கு கேட்பது. அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோதே சில விதிவிலக்குகளும் அதில் இணைக்கப்பட்டன. முக்கியமாக, மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவச் சூழல் ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள, காப்புரிமை விதிகள் தளர்த்தப்படலாம் என்கிறது ஒரு விதி. அதைப் பயன்படுத்தி, காப்புரிமை பெறும் மருந்து நிறுவனத்துடன் பேசி, நியாயமான காப்புரிமைத் தொகையைச் செலுத்தி உலக சுகாதார நிறுவனம் உரிமம் பெறலாம். ஆனால், அதற்கு ‘உலக வர்த்தகக் காப்புரிமைக் கழகம்’ சம்மதிக்க வேண்டும். இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

இப்போது காப்புரிமை பெறுவதற்கு ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கும் தடுப்பூசி நிறுவனங்களைச் சார்ந்த பணக்கார நாடுகளின் ஆதிக்கம் இதில் அதிகம். ஆகவே, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பிடம் வைத்திருக்கும் கோரிக்கை பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 15-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கையின் மீது எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிந்திருக்கிறது. எனவே, வெளிநாட்டுத் தடுப்பூசிகள் தரம் மிகுந்ததாக அறிவிக்கப்பட்டால், இந்தியாவுக்கு அவை கிடைப்பது வர்த்தகக் காப்புரிமைக் கழகத்தின் கையில்தான் உள்ளது.

தடுப்பூசி தேசியம்

குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயர் வைப்பதுபோல், கரோனா தடுப்பூசி இன்னமும் உறுதிப்படாத நிலையிலும் அதன் விநியோகத்தில் பல அந்நிய நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை இப்போதே முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா 6 பெரிய நிறுவனங்களுடன் 80 கோடி அளவிலான தடுப்பூசிகள் விநியோகத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஒவ்வொரு அமெரிக்கக் குடிநபருக்கும் இரண்டு தவணைகளுக்கு மேல் பயன்படுத்தப்படுவதற்கு உரித்தானது. இங்கிலாந்தும் 34 கோடி அளவிலான தடுப்பூசியைப் பெறுவதற்குப் பல மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது அங்கு ஒவ்வொரு தனி நபருக்கும் 5 தவணைகள் போடுவதற்குச் சமம். சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மெக்ஸிகோவும் இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டன. இதன்படி, இந்த மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் வெற்றி அடைந்தால், வேறு நாடுகளுக்கு அதை வழங்குவதற்கு முன்பு ஒப்புக்கொண்ட நாடுகளுக்குத்தான் முதலில் வழங்க வேண்டும். இதற்குத் ‘தடுப்பூசி தேசியம்’ என்று பெயர்.

இன்னும் உறுதிசெய்யப்படாத தடுப்பூசிகளுக்கு முன்கூட்டியே விநியோக ஒப்பந்தம் செய்வதால், பொருளாதாரத்தில் பலம் குறைந்த இந்தியா போன்ற நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். முன்னணித் தேவையில் இருக்கும் ஏழை நாடுகளுக்கு அது கிடைக்காமல் போகலாம். தடுப்பூசியின் விலை அதிகரிக்கலாம். 2009-ல் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல் பெருந்தொற்றின்போது பணக்கார நாடுகள் தடுப்பூசியை முன்பதிவு செய்தபோதும் பதுக்கிவைத்தபோதும் முதன்மையாகத் தேவைப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு இந்தத் தடுப்பூசி கிடைக்கத் தாமதம் ஆனதால், அங்கு பாதிப்பு அதிகமானது நினைவிருக்கலாம். இதேபோன்றதொரு நிலைமை இந்தியாவுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.

ஒரு பெருந்தொற்றுக்குப் போதுமான தடுப்பூசி கிடைக்காமல் உலகில் ஒரு பகுதியினர் பாதிப்புக்கு உள்ளானால், அது அந்தக் கிருமிகளை வெகுகாலம் புழக்கத்தில் வைத்திருக்கவே வழிசெய்யும். அதனால், மற்ற நாடுகளும் பொருளாதாரரீதியில் பாதிப்பைச் சந்திக்கும். ஆகவே, இந்த நிலைமை மாற வேண்டும். கரோனா தடுப்பூசிக்கென்றே உலக சுகாதார நிறுவனம் சர்வதேசக் கூட்டமைப்புடன் இணைந்து ‘ஆக்ட்-ஆக்ஸிலெரேட்டர்’ எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமமாகவும் மலிவு விலையிலும் தடுப்பூசி கிடைக்கச் செய்கிறது. இதற்கு ‘கோவாக்ஸ் வசதி’ என்று பெயர்.

கரோனாவுக்கான வெளிநாட்டுத் தடுப்பூசிகள் இந்தியாவுக்குக் கிடைப்பதில் ‘தடுப்பூசி தேசியம்’ தடையாக இருக்குமானால், ‘கோவாக்ஸ் வசதி’யைப் பெறுவதற்கு ‘ஆக்ட்’ அமைப்புக்கு இந்தியா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இந்தியாவிலிருந்து இருவர் இருக்கும்போது இந்தச் சிரமங்களைச் சுலபமாகக் கடந்துவிடலாம் என்பது நமது நம்பிக்கை.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x