Published : 25 Oct 2015 09:35 AM
Last Updated : 25 Oct 2015 09:35 AM

பிஹார் தேர்த்ல்: சாதிதான் தீர்மானிக்கிறதா?

மக்களவைப் பொதுத் தேர்தலில் லாலுவின் ரா.ஜ.த.வும் காங்கிரஸும் கூட்டாகப் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட்டது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிட்டன. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்துக்கான வாக்குகளைவிட அதிகமா, குறைவா என்றொரு கணக்கைப் போட்டுப் பார்த்தோம்.

2014-ல் நடந்த தேர்தலின்போது, இப்போது கூட்டு சேர்ந்திருக்கும் லாலுவும் நிதிஷும் 2 தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், அவர்கள் இருவரும் பெறும் மொத்த வாக்குகள் குறைவாகவே இருந்திருக்கும். அதன் பலனாக 83 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோற்றுப்போயிருப்பார்கள். ஆனால், இந்தக் கூட்டணி இப்போதுள்ளதைப் போல பலமாக அமைந்திருந்தால் 145 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் நிதிஷ் கட்சி, லாலு கட்சி, காங்கிரஸ் கட்சி என்ற மூன்றும் அவரவர்களுக்குரிய வாக்குகளை மற்ற 2 கட்சிகளுக்கும் முழுதாகப் போய்ச் சேருமாறு வாக்குகளைப் போடுவதில்தான் வெற்றிவாய்ப்பு இருக்கிறது. மக்களவையில் 83 தொகுதிகளில் வென்ற பாஜக கூட்டணி, அதே வீதத்தில் ஆதிக்கம் செலுத்தினால் அவர்களைத் தோற்கடிப்பது எளிதல்ல.

2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப் பிளந்ததால் வெற்றி எளிதானது. நிதிஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி பாஜக கூட்டணியின் கோட்டைக்குள் புகுந்து, அவற்றின் வாக்குகளைக் கைப்பற்றி தங்களுடைய வேட்பாளர்களுக்குத் திறமையாகப் பிரித்துக் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.

சில சாதிகள் வெற்றிபெறும் கட்சியைத் தீர்மானிப்பவையாக அமைகின்றன. லாலு கட்சிக்கு யாதவர்களும் பாஜகவுக்கு மேல் சாதியினரும் ஆதாரமாக இருக்கின்றனர். இவ்விரு கட்சிகளும் அதே தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிட்டு அவற்றிலேயே வெற்றி பெறுவது முக்கியம்.

வெற்றிக்கும் சாதிக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கொள்கை இங்கே ஆட்டம் காண்கிறது. 2010-ல் 22 தொகுதிகளில் வென்ற லாலு கட்சி, 2014-ல் 32 இடங்களில் வென்றது. 2010-ல் வென்ற 22 தொகுதிகளில் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றது. 2010-ல் பாஜக கூட்டணி வென்ற 23 தொகுதிகளை 2014-ல் லாலு கட்சி வென்றது குறிப்பிடத்தக்கது. அதாவது, பல தொகுதிகள் இப்படி அடுத்தடுத்த தேர்தல்களில் கைமாறியுள்ளன. அதாவது, சாதி இங்கே தொடர் சாதக அம்சமாக இல்லை.

இதற்கு 3 காரணங்கள் இருக்கக்கூடும். 1.வாக்காளர்கள் தங்கள் சாதி வேட்பாளருக்கே வாக்களிக்க விரும்பினாலும், பெரும்பாலான கட்சிகள் ஒரு தொகுதியில் எந்த சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அதைச் சேர்ந்தவருக்கே போட்டியிட வாய்ப்பு தருகின்றன. இதனால் ஒரே சாதியைச் சேர்ந்த வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர்களிடையே சாதி வாக்குகள் சிதறுகின்றன. இத்தேர்தலில் பல யாதவர்களை வேட்பாளர்களாக பாஜக நிறுத்தியிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

2. ஒரு சாதிக் குழுவுக்குள் வாக்குகள் பிளவுபடாது என்று வைத்துக்கொண்டாலும் ஒரு தொகுதியில் வெற்றிபெற பல சாதிகளின் கூட்டு அவசியம். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற இப்படிச் சில சாதிகள் சேர்ந்து வாக்களித்தாக வேண்டும். இதனால்தான் பாஜக மேல் சாதியினரையும் தலித்துகளையும் ஒரே சமயத்தில் ஈர்க்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யாதவர்களையும் குர்மிகளையும் ஈர்க்கிறது. 3. பிஹார் வாக்காளர்களில் 25%-க்கும் மேல் உள்ளவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களுக்கு சாதிய உணர்வுகளைவிட, முன்னேற்றமே முக்கியமாக இருக்கிறது.

எங்களிடம் உள்ள புள்ளிவிவரங்கள்படி 2015 தேர்தலில் பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது. ஆனால், நிலைமை வெகு எளிதாக எதிரணிக்கும் சாதகமாகப் போகக்கூடும். காரணம், பிஹாரில் தேர்தல் நிலவரம் திடீர் திடீரென எதிர் முனைக்கு மாறும் தன்மை கொண்டது. 2010-ல் ஒரு கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில் 2014-ல் வெற்றி பெற்றதில்லை. அப்படிப்பட்ட மாறுதல்கள் இப்போதும் ஏற்படலாம்.

பாஜக போன்ற தேசிய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் செல்வாக்கைப் பெறலாம். மாநிலத் தேர்தலில் அது எளிதல்ல. முதல்வர் நிதிஷ்குமாரின் நிர்வாகத்தில் பிஹாரிகளுக்குத் திருப்திதான் நிலவுகிறது. இவரைவிட நன்றாக எங்களால் ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கையை பாஜக கூட்டணி ஏற்படுத்த வேண்டும்.

முன்னெப்போதையும்விட பிஹாரிகள் இப்போது அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை ‘முன்னேற்றம்’. இதுதான் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. ஏனென்றால், இரு தரப்புக்குமே இதுதான் முக்கியம்!

தமிழில்: சாரி © ‘தி இந்து’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x