Last Updated : 05 Nov, 2020 03:12 AM

 

Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

கருவிகளும் கொலு இருக்கும் நவராத்திரி

நவராத்திரி என்றால் கொலுப் படிகளில் அடுக்கிய பொம்மைகள்தான் நினைவுக்கு வரும். பொம்மைகள் மட்டுமே கொலுவோடு இணைந்து நவராத்திரிக்கு அப்படி ஒரு பிம்பம்.

நாயனக்காரர், விவசாயி, நெசவாளர், பத்தர், தச்சர், கொல்லர், குயவர் போன்றவர்கள் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான ஆயுத பூஜையில் தங்கள் தொழில் கருவிகளைக் கொலுவில் வைக்கிறார்கள். மறுநாள் விஜயதசமியில் அவற்றைக் கொலுவிலிருந்து எடுத்து வழக்கம்போல் தொழில் செய்கிறார்கள். இதையும் ‘கொலு அடுக்குவது’, ‘கொலு பிரிப்பது’ என்று சொல்வது வழக்கம்.

தேங்கிப்போகாத மரபு

இப்போதெல்லாம் விவசாயிகள் வீட்டு ஆயுத பூஜையில் கலப்பை இருப்பதில்லை. கலப்பையைக் கழுவி அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, கூடவே கருக்கரிவாள், மண்வெட்டி, மரக்கால், படி, முறம் முதலியவற்றையும் பூஜையில் வைப்பது அப்போதைய வழக்கம். தேடினாலும் இப்போது கலப்பையும் கருக்கரிவாளும் கிடைக்காது. அவற்றுக்குப் பதிலாக உழவு இயந்திரத்துக்கும் அறுவடை இயந்திரத்துக்கும், ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கும் பூஜைபோடுகிறார்கள். இடது கை மேழியில் அழுந்த, அழுந்த, வலது கையால் இரட்டைக் காளை பூட்டிய ஏர் ஓட்டும் ஒரு இளைத்த மனிதர் அன்றைய விவசாயிகளின் பிம்பம். பளிச்சென்ற வெள்ளையில் முழுக்கைச் சட்டை அணிந்து, முண்டாசு கட்டி, முகம் மலர டிராக்டர் ஓட்டுவது இன்றைய விவசாயிகளின் பிம்பம். மரபின் உள் அம்சங்கள் விரைவாக மாறுகின்றன. மரபு மட்டும் அதே அவசரத்தில் மாறுவதில்லை.

ஆயுத பூஜையில் கொலுவிருந்த நாகசுரத்தை மறுநாள் விஜயதசமியில் பெரியவர்கள் எடுத்துத் தர, நாயனக்காரர் முதலில் கம்பீர நாட்டை ராகம் வாசித்து தானம் வாசிப்பது மரபு. தவில்காரர் கண்டகதியில் அலாரிப்பு வாசிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோயில் நாயனக்காரர் வீட்டில் மூன்று தலைமுறையினர் வாசித்த நாகசுரங்கள் ஆயுத பூஜையில் கொலு இருக்கின்றன. அவற்றோடு தவில், சுதிப் பெட்டி, கைத்தாளங்களும், தேரோட்டத்தில் வாசிக்கும் கொடுகொட்டியும் இருக்கின்றன.

பத்தர்களின் கொலுப் படிகள்

பத்தர்கள் வீட்டில் ஆயுத பூஜைக்குப் பெரியது, சிறியது, அதற்கும் சிறியது என்று மூன்று மேஜைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியிருக்கும். உமி நிரப்பிய பட்டறைக் குடம், குறடு, சுத்தியல், சாமணம், பொடுவெட்டி, விளக்குக் குழாய், ரெகிரோடு முதலிய கருவிகளுக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மேஜைகளில் கொலுவாக அடுக்கி வைப்பார்கள். நடு மேஜையின் மையத்தில் கொஞ்சம் பவுன், அதன்மீது அம்மனின் அடையாளமாகக் குங்குமம் வைத்த எலுமிச்சம் பழம். இந்த ஆயுதங்களுக்கு வெற்றிலைபாக்கு, பழங்கள், அவல்கடலை படையல். மறுநாள் கொலு பிரிக்கும்போது பூஜையில் இருந்த பவுனை உருக்கி வழக்கம்போல் தொழில் துவங்குவார்கள்.

தச்சர்கள், கொல்லர்கள் வீட்டில் கருவிகள் அதிகம். உளி, செருவா உளி, சுத்தியல், மூலைமட்டம், ரசமட்டம், கை வாள், எறியல், வாச்சு, வருவு ஊசி, இழைப்புளி, துரப்பணம், சம்மட்டி, பனயல், உலை, உலையாணிக்கோல், துருத்திப் பெட்டி எல்லாவற்றுக்கும் பால், இளநீர், சந்தனம் அபிஷேகம் நடக்கும். பின்னர் சந்தனம், குங்குமம் வைத்து முடிந்தவற்றைக் கொலுவில் அடுக்குவார்கள். மறுநாள் கொலு பிரிக்கும்போது ஆயுதங்களுக்குக் கறிக்குழம்புப் படையலும் உண்டு. கோயிலில் அம்பாள் புறப்பட்டு ஊர் எல்லையில் அம்பு போட்ட பிறகு கொலு இருந்த கருவிகளைப் பிரிப்பார்கள். கொலு பிரித்து வரும் உளியின் வாயில் பால் படும்படியாக முதலில் அதை ஒதியன் போன்ற பால் மரத்தில் குத்துவது வழக்கம்.

நெசவாளிகள் வீட்டுத் தொழில் கருவிகளான தறி, தறிமேடை, தறி நாடா, பூட்டாங்கட்டை, திருவட்டம், ராட்டினம், தராசு முதலியவற்றைச் சுத்தம்செய்து அவற்றுக்குச் சந்தனம், குங்குமம் வைப்பார்கள். குயவர்கள் வீட்டிலும் கல், தட்டுப் பலகை, திருகை முதலியவற்றுக்கு இப்படியே பூஜை உண்டு.

நிஜத்துக்கு இல்லாத கோலாகலம்

கிராமத் தொழிலாளர்களின் ஆயுத பூஜை கோயிலில் நடக்கும் நவராத்திரி போன்று விழாவும் வைபோகமுமாக இருக்காது. கோயில் விழாக்களையும், தெய்வங்களையும் எவ்வளவுதான் நிஜத்துக்கு மேம்பட்டவையாக நாம் வைத்துக் கொண்டாடினாலும் தாங்கள் நிஜமல்ல அடையாளம் மட்டுமே என்ற தன்மையை அவை கழித்துக்கொள்ளாது. ஒருவேளை அடையாளம் என்று இருப்பதால்தான் அவற்றால் நிஜத்துக்கும் மேலே செல்ல முடிகிறது என்றுகூட இருக்கும். எல்லா தொழில்களும் கருவிகளும் அன்றாடப் பொருளாதாரத்தோடு நிஜமான உறவு உள்ளவை. அடையாளமாக இருப்பவை நிஜத்தைவிடக் கோலாகலப்படுவது ஒரு பண்பாட்டு சுவாரசியம்.

பத்து நாட்களும் கொலு மண்டபத்தில் இருக்கும் எங்கள் ஊர்ப் பெருமாளுக்கு நாளுக்கு ஒரு அலங்காரம், அந்தந்த வேளைக்கு உரிய அணிமணிகள். கட்டும் வேட்டியின் கரைகூட மாறாத மரபு என்று சொல்கிறார் கோயில் தீட்சிதர். கிரீடம், வைரமுடி, செளரிமுடி, ஆண்டாள் கொண்டை, கிருஷ்ணன் கொண்டை, ராஜா முண்டாசு என்று விதவிதமான தலையலங்காரம். காலில் தண்டை, அதற்கு மேல் பாடகமும் முத்துச் சலங்கையும். இடையில் இடுப்புச் சலங்கை, அரைஞாண், வைகுண்ட வாசல் சாவி. மார்பில் மாங்காமாலை, காசு மாலை, வைரப் பதக்கம், கண்டபேரண்ட பட்சி பதக்கம், என்றுமே பிரிந்தறியாத மகாலட்சுமி பதக்கம். கழுத்தில் வைர அட்டிகை, கண்ட சரம், மகர கண்டிகை. நெற்றியில் கஸ்தூரித் திலகம். ஒரு காதில் தாடங்கம், மற்றொன்றில் குண்டலம். கபா என்ற கால் சராய் தரித்து, மேலே வெல்வெட்டாலான பிளப்பு கபா அணிந்து, ஒற்றைக்கலையிலிருந்து ஐந்து கலை தீவட்டி சலாம் ஏற்றுக்கொண்டு வருவார் பெருமாள். விஜயதசமியில் அவர் தங்கக் குதிரை ஏறி, வன்னி மரக் கிளையில் இருக்கும் வில்லும் அம்பும் ஏந்தி, எட்டுத் திக்கிலும், வானத்திலும் பூமியிலும் அம்பு போடுவதோடு கோயில் நவராத்திரி நிறைவடையும்.

வீட்டிலிருக்கும் பொம்மைக் கொலு, முளைத்த நவதானியத்தில் துவங்கி, ஐந்து, ஏழு, ஒன்பது படிகளாக உயர்ந்து நிற்கும். அவற்றில் எடுப்பாகத் தெரியும் ஆணும் பெண்ணுமான ஆடை கட்டிய இரண்டு மரப்பாச்சிகளும் உண்டு. ஒரு கொலுவில் ஐரோப்பிய மாதுகூட இருந்தார். நீச்சல் குளம் இருந்தது. புராண, இதிகாச நாயகர்களோடு புத்தர் சிலையும் இருந்தது. கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுத்து வழியனுப்புவார்கள். ஒவ்வொரு நாளும் வழிபாட்டுக்குப் பிறகு கொலுவுக்கு ஆரத்தி எடுப்பார்கள்.

விஜயதசமி வழிபாடு முடிந்தவுடன் பொம்மைகளுக்கு, குறிப்பாக மரப்பாச்சிகளுக்கு, பால் பழம் கொடுத்துப் படுக்கும் வசத்தில் வைத்துவிடுவார்கள். பிறகு அடுத்த ஆண்டு கொலு வரை அவை பெட்டிக்குள் உறங்கும். தொழிற் கருவிகள் விஜயதசமி நாளில் கொலு கலைந்து தொழில் செய்ய வரும். பொம்மைக் கொலுவின் பொம்மைகள் அன்றைக்குப் பால் பழம் உண்டு ஒரு வருடம் உறங்கச் செல்லும். நம் கலாச்சார வழக்கத்துக்கு இப்படியும் ஒரு விநோத வண்ணக் கலவை!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x