Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

இந்தியத் தயாரிப்பு செல்பேசிகளுக்கு எதிர்காலமே இல்லையா?

சிதம்பரன் ஜி.அய்யர்

சமீபத்தில், ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் அமைச்சகம், இந்தியாவை மிகப் பெரும் செல்பேசி உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில் 16 நிறுவனங்களுக்கு உற்பத்தி அடிப்படையிலான மானியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியத் திட்டமானது மின்னணுவியல் சாதனங்களை மிகப் பெரும் எண்ணிக்கையில் தயாரிப்பதற்காகக் கடந்த ஏப்ரல் 1, 2020 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனங்களில் 5 உள்நாட்டு நிறுவனங்கள், 5 வெளிநாட்டு செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளடங்கும். எஞ்சிய 6 நிறுவனங்கள் உதிரிப் பாகங்களைத் தயாரிப்பவை. விலை மலிவான உள்ளூர் உதிரிப் பாகங்களுக்கு அளிக்கப்பட்ட மானியமானது, விலைமதிப்பு அதிகமுள்ள பாகங்களின் உற்பத்திக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்பேசி உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரிகளை உயர்த்துவதன் மூலமாக இது செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் இறக்குமதி

ஆப்பிள், ஸியோமி, ஓப்போ, ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்றாலும் பெரும்பாலும் அவை உற்பத்தி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின் வாயிலாகவே அதைச் செய்துள்ளன. அதன் விளைவாக, 2016-17ல் 13.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த உற்பத்தி, 2019-20ல் 31.7 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும், 2017-18ன் வருடாந்திரத் தொழிற்சாலைகள் கணக்கெடுப்பின்படி தொழிற்சாலைகள் அளவிலான உற்பத்தி குறித்த தகவல்களைப் பார்க்கும்போது, கணக்கிலெடுக்கப்பட்ட நிறுவனங்களின் மதிப்புக் கூட்டும் செய்முறையானது 1.6% முதல் 17.4% வரை வேறுபடுகிறது. கணக்கிலெடுக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களில் 85%-க்கும் மேலான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைப் பற்றிய ஐநாவின் தகவல்களை (2017-19) ஒப்பிடும்போது, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்துமே அவை இறக்குமதி செய்யும் செல்பேசிகளைவிடவும் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன என்பது தெரியவருகிறது. உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்னால், அவற்றுக்கு மதிப்புக் கூட்டுவதற்கான வசதிகள் அங்கு இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் செல்பேசி உதிரிப் பாகங்களின் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரித்துள்ளது, 2019-ல் குறைந்தபட்சம் இறக்குமதியானது ஏற்றுமதியைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே, உள்ளூர் உதிரிப் பாகங்களைக் கொண்டு செல்பேசி தயாரிப்பதை ஊக்குவிக்கும் திட்டமானது உள்ளூர்த் தயாரிப்புகளின் விலைமதிப்பை உயர்த்தும் அதேநேரத்தில், உள்ளூர் செல்பேசித் தயாரிப்புகளின் மதிப்புக் கூட்டுவதற்கான திட்டங்கள் வளரும் நிலையிலேயே உள்ளன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

மேலும் செப்டம்பர் 2019-ல், உள்ளூர் உதிரிப் பாகங்களைக் கொண்டு செல்பேசிகளைத் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் சுங்கவரிகளை உயர்த்தியதை எதிர்த்து சீன தைவான் நிறுவனம் ஒன்று முறையிட்டது. இத்திட்டமானது உடன்பாடுகளை மீறியதாக ஒருவேளை உலக வர்த்தக நிறுவனத்தில் முடிவுசெய்யப்பட்டால், நாம் கட்டுப்பாடற்ற செல்பேசி இறக்குமதி குவிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். உள்ளூரில் தயாரிக்கப்படும் செல்பேசி உதிரிப் பாகங்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும். உள்ளூர் உதிரி பாகங்களைக் கொண்டு செல்பேசிகளைத் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுவரும் முதலீடுகளையும் அது கடுமையாகப் பாதிக்கும்.

உற்பத்தி மதிப்பில் கவனம்

உற்பத்தி அடிப்படையில் மானியம் அளிக்கும் புதிய திட்டம் அத்துறையில் முதலீட்டை வளர்த்தெடுக்கவும் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்கவும் வாய்ப்புகளை உருவாக்க முனைகிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் வேறுபடுகிறது. அதாவது, உள்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பெருக்கி அவற்றின் விலைமதிப்பை உயர்த்துவதே மீண்டும் இதன் நோக்கமாக இருக்கிறதேயொழிய உள்ளூர்த் தயாரிப்புகளின் மதிப்பைக் கூட்டுவதாக இல்லை. நமது மதிப்பீடுகளின்படி, இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இத்திட்டத்தின் நிறைவில் அதாவது 2025-ம் நிதியாண்டில் ஆண்டொன்றுக்குக் கூடுதலாக 60 கோடி செல்பேசிகளை உற்பத்திசெய்யும் திறனை நம் தொழிற்சாலைகள் பெறக் கூடும்.

சமீபத்தில், இந்திய செல்பேசி மற்றும் மின்னணுவியல் அமைப்புக்காக எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு வெவ்வேறு நாடுகளில் செல்பேசிகளின் உற்பத்திச் செலவுகளை ஒப்பிட்டுக் காட்டியது. ஒரு செல்பேசியின் உற்பத்திச் செலவு எந்தவிதமான மானியமும் அளிக்கப்படாத நிலையில், 100 டாலராக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மானியங்கள் மற்றும் இதர பலன்களுடன் சேர்ந்து அதன் உண்மை மதிப்பு சீனாவில் 79.55 ஆகவும் வியட்நாமில் 89.05 ஆகவும் உள்ளது. ஆனால், இந்தியாவில் இது உற்பத்தி அடிப்படையிலான மானியங்களையும் உள்ளடக்கி 92.51 ஆக உள்ளது. இந்த ஆய்வின்படி, உற்பத்தி அடிப்படையில் மானியங்கள் அளிக்கப்பட்டாலும் அது தற்போதைய நிலையை மாற்றிவிடக்கூடிய நடவடிக்கையாக இருக்கப்போவதில்லை, செல்பேசி உற்பத்தியின் பெரும்பகுதி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் விருப்பமாக மட்டுமே அது இருக்கக்கூடும்.

2018-19ல் 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த செல்பேசி ஏற்றுமதி, 2019-20ல் 3.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. அதைப் போலவே மேற்கண்ட ஆண்டுகளில் முறையே ஒரு செல்பேசிக்கான விலைமதிப்பு 91.1 அமெரிக்க டாலரிலிருந்து 87 டாலர்களாகவும் குறைந்திருக்கிறது. இதிலிருந்து நமது ஏற்றுமதிக்கான போட்டித் திறன் என்பது குறைந்த விலை கொண்ட செல்பேசிகள் என்பது தெளிவாகிறது. எனினும் உற்பத்தி அடிப்படையிலான மானியத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, ரூ.15,000 (204.65 அமெரிக்க டாலர்கள்) அல்லது அதற்கு மேற்பட்ட விற்பனை விலை கொண்ட செல்பேசிகளுக்கு மட்டுமே மானியங்கள் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். உற்பத்தி அடிப்படையிலான மானியத் திட்டம் தற்போதைய செல்பேசி ஏற்றுமதியை வலுப்படுத்தாது, அதற்குப் பதிலாக அதிக விற்பனை விலை கொண்ட சந்தையில் குறைவான எண்ணிக்கை கொண்ட செல்பேசிகளே இடம்பெறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் சிரமம்

மானியத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு நிறுவனங்களில் சாம்சங் நிறுவனமும் ஒன்று. மற்ற நான்கு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தயாரிப்பில் ஈடுபடுபவை. இந்திய செல்போன் சந்தையிலிருந்து உள்நாட்டு நிறுவனங்கள் ஏறக்குறைய துடைத்து அழிக்கப்பட்டுவிட்டன. எனவே, உற்பத்தி அடிப்படையிலான மானியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதும் குறைந்தபட்ச அளவிலேனும் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதும் அவற்றால் இயலாதவொன்றாகவே தெரிகிறது. உள்நாட்டு நிறுவனங்கள், குறைவான விலை கொண்ட செல்பேசிகளைக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் வாய்ப்பைப் பெறக்கூடும். எனினும், கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் செயல்திறன் அவ்வாறு உறுதியளிக்க முடியாத நிலையிலேயே உள்ளது.

விற்பனைச் சங்கிலியில் வாய்ப்பு

இறுதியாக, 6 உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ‘குறிப்பிட்ட மின்னணுவியல் உதிரிப் பாகங்கள்’ பிரிவில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றன. இது வரவேற்கத்தக்க முடிவு என்றாலும், செல்பேசித் தயாரிப்புக்கான சூழலை இதனால் நிச்சயமாக உருவாக்க முடியாது. உதாரணத்துக்கு, சாம்சங்கின் 67 உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர்களில் 63 நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. இந்தியாவில் மிகப் பெரிய அளவில் சாம்சங் முதலீடு செய்திருந்தாலும், அதன் விற்பனைச் சங்கிலியில் இந்திய நிறுவனங்களை இணைத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

ஆக, உள்ளூர் உதிரிப் பாகங்களைக் கொண்டு செல்பேசிகளைத் தயாரிக்க ஊக்குவிக்கும் கொள்கையானது, உள்நாட்டு உற்பத்தியைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது என்றபோதிலும் 2016-17 தொடங்கி, இத்தொழில் துறையில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு மதிப்பைக் கூட்டவும் உதவியாக இருந்திருக்கிறது. சுங்க வரியின் வாயிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பாதுகாக்கும் உத்தி, உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், உற்பத்தி அடிப்படையில் மானியங்களை அளிக்கும் தற்போதைய புதிய திட்டம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறதேயொழிய, உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு மதிப்பைக் கூட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தத் திட்டமானது உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் 6 நிறுவனங்களுக்கு உள்நாட்டில் தயாரிப்பதற்குத் தனியாக உரிமம் வழங்கியுள்ளது. ஆனால், உதிரிப் பாகங்களைத் தயாரிப்பவர்களையும் அவற்றைத் தொகுத்து இறுதிப் பொருளை உருவாக்குபவர்களையும் ஒன்றாக்கத் தவறிவிட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது விற்பனைச் சங்கிலியை இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிப்பதே அதை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக இருக்கும்.

- சிதம்பரன் ஜி.அய்யர், திருவனந்தபுரம் வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர்
© ‘தி இந்து’, தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x