Published : 04 Nov 2020 10:05 AM
Last Updated : 04 Nov 2020 10:05 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 10: தீபாவளியைச் சிறப்பாக்கும் ‘சுளுந்து’

கல்யாணி நித்யானந்தன்

பெரியப்பாவின் கிராமத்து வீட்டில் கழித்த இளம்பருவ நாட்கள் மறக்க முடியாதவை. காலை ஒன்பது மணி வாக்கில் தெருக்கோடியில் ஓடும் பெரியாற்றுப் பாசன வாய்க்காலுக்குப் போக அக்காக்கள், குடத்தோடும் மாற்றுத் துணிகளோடும் எங்களை ‘மேய்க்க’ கூடவே வருவார்கள். உற்சாகமாகக் குளிப்போம். தெளிந்த நீர். அன்று சாயப்பட்டறைகள் இல்லை. அடியில் சிறு சிறு கற்களும் பட்டுப் போன்ற மணலும் இருக்கும். அந்த மணலை எடுத்துத்தான் பெரும்பாலானவர்கள் கை, கால், முதுகு தேய்த்துக் கொள்வார்கள். ‘சோப்பு’ (சவுக்காரம்) சிலரே உபயோகிப்பார்கள். அந்த வேதிப்பொருள்கூட நீரில் கலப்பதில்லை. ‘போதும்.. போதும்... கரை ஏறுங்கள்’ என்று அதட்டப்படும்வரை குளிப்போம்.

அகோரப் பசியுடன் வீடு திரும்பியதும், நெற்றிக்கு இட்டுக்கொண்டு, சாப்பிட வரிசையாக உட்காருவோம். கேட்டு வாங்கியதைத் துளியும் எறியக் கூடாது. ரசஞ்சாதம் இலையில் ஒட்டாமல் லாவகமாகச் சாப்பிட வேண்டும்.

அன்றெல்லாம் கணவன் உண்ட இலையிலேயோ, தட்டிலேயோதான் மனைவிகள் உணவருந்துவார்கள். என் அப்பா சாப்பிட்டு முடிக்கும்போது, அநேகமாகக் கூட்டும், கறியும் இலையில் தாராளமாக பாக்கி இருக்கும். ‘அப்பா பாத்திரம் எறியலாமா?’ என்று ஒருமுறை நான் கேட்டதற்கு ஒரு மர்ம புன்னகையுடன் அம்மா உள்ளே போய்விட்டார்கள்.

ஒருமுறை என் பாட்டி சிரித்துக்கொண்டே ‘‘இனியனுக்கு (என் அப்பாவின் மறுபெயர்) பெண்டாட்டி மேலே ரொம்ப அக்கறை’’ என்று சொன்னார்கள். பிறகு ஒருமுறை, என் அப்பாவே விளக்கம் அளித்தார். ‘‘அம்மா எல்லாருக்கும் பரிமாறிவிட்டு, சில நேரம் கறி, கூட்டு தனக்கென்று மிச்சம் வைத்துக்கொள்ள மாட்டாள். அதனால்தான் இந்த ‘டிரிக்’” என்றார். நினைக்கும்போது என்னவோ செய்கிறது. விளம்பரப்படுத்தப்படாத, ஆழ்ந்த அக்கறையும், அன்பும். இதைப் புரிந்துகொண்டு ரசிக்கும் மாமியார். எப்பேர்ப்பட்ட உறவுகள்! என் தாயார் அடிக்கடி ‘‘நான் மீண்டும் பெண்ணாகவே பிறந்து உங்க அப்பாவையே கல்யாணம் பண்ணிக்க வேணும்’’ என்று கூறுவதின் அர்த்தம் எவ்வளவு ஆழ்ந்தது. கண்ணில் துளிர்த்த நீர் கன்னத்தைக் கடக்கும் முன் கையால் துடைத்திடும் உறவு.

சாப்பாடு முடிந்ததும் இரண்டு வேலைகள். ‘இலை’ எடுக்க வேண்டும். வாழையிலை, தையல் இலையானால் நேராக எருக்குழிக்குப் போகும். தட்டுகள் தேய்த்துக் கழுவி வெய்யிலில் வைக்கப்பட வேண்டும். எச்சிலைக் கழுவ தனியாக நார்ப்பஞ்சு. சமையல் பாத்திரங்களுக்கு அதை உபயோகிக்கக் கூடாது. (கரோனா மாதிரி இருக்கிறது அல்லவா?) இந்த வேலை கஷ்டமல்ல. ‘எச்சில இடுவது’தான் தொல்லை. அதுவும் பாட்டியின் மேற்பார்வையில். அதைத் தவிர்க்க முயல்வோம். ‘ஈரச் சுருனை’யை ஒரு ஓரத்தில் தொடங்கி, குனிந்து கையால் இடமும் வலமுமாகத் துடைக்க வேண்டும். கடைசிவரை தரையில் வைத்த கையை எடுக்காமல், குனிந்த முதுகு நிமிராமல் துடைக்க வேண்டும். நிமிர்ந்தால், ‘இந்த வயதிலேயே இடுப்பு வளையவில்லையானால்,

பிள்ளை பெற்ற பிறகு எப்படி வளையும்’ என்று பாட்டி ‘பல்லை’ கடிப்பார்கள்.

நினைத்துப் பார்த்தால் வீட்டு தினசரி வேலைகள் எல்லாமே தேகப் பயிற்சிதான். தண்ணீர் இழுப்பது, அம்மியில், ஆட்டுரலில் அரைப்பது, இயந்திரத்தில் மாவு திரிப்பது, தேங்காய் துருவுவது எல்லாம் தோள்களுக்கும் கைகளுக்கும் முதுகுக்கும் பயிற்சிதானே. குனிந்து நமஸ்காரம் செய்வது, சம்மணமிட்டுத் தரையில் உட்காருவது, மெத்தையின்றி பாயிலோ, ஜமுக்காளத்திலோ தரையில் படுப்பது எல்லாம். இன்று வளையாத வாழ்க்கை வாழ்ந்து ‘ஜிம்’முக்குப் போய் பணம் கொடுத்து செய்கிறோம். இன்று 50 வயதில் சட்டையை, பனியனை கழற்றுவதற்கோ, கொண்டை போடவோ தோள்களும் கழுத்தும் ஒத்துழைப்பதில்லை.

மதிய நேரத்தில் தாழ்வாரத்திலோ திண்ணையிலோ விளையாடுவோம். பரமபதம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், ஏழாங்கல், திண்ணையில் பாண்டி போன்றவற்றை விளையாடுவோம். ஏரோப்ளேன் பாண்டி என்றும் ஒன்று உண்டு. புளியங்கொட்டை ஊதுதல் விளையாட்டில் புளியங்கொட்டைகளைக் குவித்து, ஓரமாக ஊதி ஊதி பிரிந்து வரும் கொட்டைகளை லாவகமாகக் கைவிரல் வேறொன்றில் படாமல் எடுக்க வேண்டும். பட்டால் ‘அவுட்’. பச்சை வாழைமட்டையைக் கிழித்து இரண்டு முனைகளையும் பிடித்து எதிராளியிடம் உள்ளதில் மாட்டி ‘கிச்சு கிச்’வென்று இழுப்போம். பூவரச இலையில் செய்த ஊதல் (வெள்ளையனின் உபாயம்). இதெல்லாம் பெரியவர்கள் தூங்கும்போது விளையாடினால் திட்டு விழும். கார்த்திகை, தீபாவளி சமயத்தில் ‘சுளுந்து’ செய்து கொடுப்பார்கள். துணியில் நெல் உமியையும் கரித்தூளையும் சேர்த்துக் கட்டி,

கயிற்றின் நுனியில் கட்டி தீ வைப்பார்கள். கயிற்றைப் பிடித்து வேகமாக சுழற்றும்போது தீப்பொறிகள் வாண வேடிக்கை போல் பறக்கும். சின்னக் குழந்தைகளுக்கு இது தரப்பட மாட்டாது. தென்னங்குரும்பையில் தென்னம் ஈர்க்கோலைக் குத்தி, வளைந்த இடத்தில் குச்சியை வைத்து ‘கிலுகிலுப்பை’ மாதிரி சுற்றுவோம். காலண்டர் தேதியைக் கிழித்து இறுக்க உருட்டி, அதன் மேல் பழைய சைக்கிள் டியூப்பைக் கத்தரித்த வளையங்களை மேலே மேலே போட்டு ‘கிரிக்கெட்’ பந்து செய்வார்கள் பிள்ளைக் குழந்தைகள். பாவாடையை ‘தார்பாய்ச்சி’ கட்டிக்கொண்டு ஆண் குழந்தைகளுடன் ‘கிட்டிப்புள்’ விளையாடி திட்டு வாங்கியிருக்கறேன். ஆனால், என் பிள்ளைக்கு ‘கிட்டிப்புள்’ சொல்லிக் கொடுக்க இந்த அனுபவம்தான் கைகொடுத்தது.

ஒரு நூதன அனுபவத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பசு கன்று போட்டிருந்தது. முதல் சில நாட்கள் தாய்ப் பசுவின் பால் மஞ்சளாக, கொழுப்பு நிறைந்ததாக இருக்கும். ‘சீம்பால்’ என்று சொல்வார்கள். ஜீரணிக்க கஷ்டம் என்பதால், கன்றுக்கு அதைக் கொஞ்சம்தான் ஊட்ட விடுவார்கள். அதனால், அதற்குக் கஞ்சி (அரிசி) புகட்ட வேண்டும். மூங்கில் துண்டத்தில் கீழே கணுவும் மேல் முனை பேனா ‘நிப்’போல சீவப்பட்டு, முனை மழுங்கப்பட்டு இருக்கும். கன்றின் இருபுறமும் கால்களை வைத்துக்கொண்டு தொடையால் கன்றைப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு கன்றின் தலையை நிமிர்த்தி, கஞ்சி நிறைந்த மூங்கில் நுனியை அதன் வாயில் வைத்துப் புகட்ட வேண்டும். இதுபோல நிற்க சிறியவர்களுக்கே முடியும் என்பதால் இது எங்கள் வேலை. போட்டி போட்டுக்கொண்டு செய்வோம்.

இந்த ‘சீம்பாலில்’ ஜீனி சேர்த்து அடுப்பில் வைத்த உடனேயே திரிந்து விடும். அதில் சிறிது பொடித்த

கறுப்பு மிளகைப் போட்டுத் தின்னக் கொடுப்பார்கள். அலாதியான, மறக்க முடியாத ருசி. பாக்கெட் பாலில் கிட்டாத அனுபவம் இது. ‘பால்கோவா’ எல்லாம் எந்த மூலை!

கட்டாயம் இல்லாமல், இயல்பாகவே பகிர்ந்து செய்யப்பட்ட வேலைகள், இயற்கை உணவு, இயற்கை விளையாட்டு, இயற்கையான வாழ்க்கை முறை, உடலை உறுதிப்படுத்தும் தினசரி வேலைகள்.

ஒருவருக்கொருவர் அக்கறை காட்டியும், விட்டுக் கொடுத்தும் போகும் குடும்பம். வேற்றுமையிலும் ஒற்றுமை. வெளியார் முன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காத பண்பு. கண்டும் கேட்டும், இவற்றைக் கற்ற குழந்தைகள்! அதுவொரு நிலாக் காலம்தான்!

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x