Published : 04 Nov 2020 03:13 am

Updated : 04 Nov 2020 07:09 am

 

Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 07:09 AM

24 மணி நேரமும் கடைகளைத் திறக்க அனுமதித்தால் என்ன?

24-hours-shop-opening-time

ஊரடங்கைக் காரணம் காட்டி மார்ச் 25-ம் தேதி போடப்பட்ட தடை ஒருவழியாக அக்டோபர் 21-ம் தேதியோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இனி உணவகங்கள், தேநீர்க் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளையும் இரவு 10 மணி வரையில் திறந்து வியாபாரம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். வியாபாரிகள் மட்டுமின்றிப் பொதுமக்களையும் ‘அப்பாடா...' போடவைத்த அறிவிப்பு இது.

தூங்கா நகரான மதுரையில் பேருந்து நிலையம், ரயில் நிலையப் பகுதிகளில் இரவு 12 மணி வரையில் கடைகள் திறந்திருப்பது வழக்கம். கரோனா காரணமாக இன்னமும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. சங்க காலத்திலேயே பகல் அங்காடி, அல் (இரவு) அங்காடிகள் இருந்த, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மதுரா கோட்ஸ் மில் தொழிலாளர்களை நம்பி நள்ளிரவு வரையில் உணவகங்கள் செயல்பட்ட நகர் மதுரை. இப்போதும்கூட மதுரை தூங்கா நகர்தான். ஆனால், காவல் துறைதான் அதைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைக்கிறது.


தீபாவளிக் கடைகள்

இது பண்டிகைக் காலம் என்பதால், அத்துடன் தொடர்புடைய கடைகளில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை தியாகராய நகரில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று சில ஜவுளிக்கடைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். இப்படியே போனால், தமிழ்நாட்டில் தீபாவளி நெருக்கத்தில் அத்தனை கடைகளுக்கும் சீல் வைக்க வேண்டியதிருக்கும்.

மதுரை, திருச்சி போன்ற பிற மாநகரங்களிலும் அதிகாரிகளின் தொல்லைக்கு ஆளாகிறார்கள் வியாபாரிகள். பெரு வியாபாரிகளுக்குப் பிரச்சினையில்லை. என்ன செய்தால், அதிகாரிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்கிற தந்திர உபாயங்களை அறிந்தவர்கள் அவர்கள். ஆனால், சிறு வியாபாரிகள்? ஏற்கெனவே சித்திரைத் திருவிழா வியாபாரத்தையும், ஆடித் தள்ளுபடி கால வியாபாரத்தையும் இழந்துள்ள சிறு வியாபாரிகள், தீபாவளியைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறார்கள். எனவே, தீபாவளி வரையிலாவது நள்ளிரவு 12 மணி வரையில் கடைகளைத் திறக்க அனுமதித்தால், முன்பு இழந்த வருமானத்தை அவர்கள் ஈடுகட்ட வாய்ப்பு ஏற்படும். ஊரடங்கு நேரத்திலும் தனது கல்லாவைக் கருத்தில் கொண்டு, டாஸ்மாக் திறப்பில் ஆர்வம் காட்டிய அரசு, அதே வாய்ப்பைப் பிற வணிகர்களுக்கும் தருவதுதானே நியாயம்?

போனஸ்

துயர் மிக்க இந்த ஆண்டில் மக்களுக்குச் சற்று இளைப்பாறுதலைத் தருகிற நிகழ்வாக இந்தப் பண்டிகைக் காலத்தைக் கருதுகிறார்கள் பொதுமக்கள். இருப்பவனுக்குத் தினந்தோறும் தீபாவளி, இல்லாதவனுக்கு இந்த ஒரு நாள்தானே தீபாவளி? அவர்கள் கடன் வாங்கியாவது கடைக்குப் போயாக வேண்டுமே? கடைகளிலோ கூட்டம் அலைமோதுகிறது. தனிமனித இடைவெளிக்கு வாய்ப்பே இல்லை. காலையிலோ மதியமோ கடைக்குப் போகலாம் என்றால், ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டியது வரும். ஏற்கெனவே சம்பளக் குறைப்பு, வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்கள் விடுமுறை எடுக்க விரும்பமாட்டார்கள். விரும்பினாலும் முதலாளிகள் தரமாட்டார்கள். மாலையில் வேலை முடித்து, குடும்பத்தை அழைத்துக்கொண்டு கடைக்குப் போனால் 10 மணிக்குள் துணிமணிகளை வாங்குவது இயலாத காரியம். இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் முன்வைக்கிற தீர்வு, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே.

அப்படி நீட்டிப்பதன் மூலம் கிடைக்கிற இன்னொரு நன்மை, ஏற்கெனவே பணிபுரிகிற தொழிலாளர்களுக்குக் கூடுதல் பணி நேரமும் சம்பளமும் கிடைக்கும். போனஸும் கிடைக்கும். வேலையிழந்து தவிக்கிற பல்லாயிரக்கணக்கானோருக்கு இந்தப் பண்டிகைக் காலத்துக்கு மட்டுமாவது தற்காலிக வேலை அமையக்கூடும். இந்த ஊரடங்குக் காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்றோரும் பயனடைவார்கள்.

என்ன ஆனது அரசாணை?

தீபாவளியை விடுங்கள். சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களின் முக்கியமான வணிகப் பகுதிகளை மட்டுமாவது 24 மணி நேரமும் செயல்பட அனுமதிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டிய காலகட்டம் இது. உலகம் முழுவதும் இப்போது ‘24 மணி நேரமும் செயல்படுகிற நகர்’ ( 24 Hours City) என்ற அந்தஸ்தை வளர்ந்த நகரங்களுக்குக் கொடுத்துவருகின்றன அந்தந்த நாட்டு அரசுகள். இது நகர வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவுவதுடன், பகலெல்லாம் ஊர் சுற்றுகிற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருட்கள் வாங்குவதற்கான நேரமாக இரவைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. இந்தியாவிலும் அதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது.

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்கத்திலும் கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் நாள் முழுவதும் திறந்து வைக்கும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது ஒன்றிய அரசு. மாநிலங்கள் தேவைக்கேற்ப இந்தச் சட்ட அனுமதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அது கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்கக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசும் அனுமதி வழங்கியது. அதற்காக ‘தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் -1947’-ல் திருத்தமும் செய்யப்பட்டது. அப்போதைய தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் அந்த அரசாணையைப் பத்திரிகைகளுக்குச் செய்தியாக அனுப்பினார். ஆண்டு முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைக்கும் நேரம், மூடும் நேரம் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டம் முழு சுதந்திரம் வழங்குவதாகவும், பாதுகாப்பு, கழிப்பறை, போக்குவரத்து வசதி போன்றவை அளிக்கப்படும் நிலையில், பெண்களுக்கும் இரவுப் பணி வழங்கலாம் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது. கூடவே, பணியாளருக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் மற்றும் வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலைசெய்ய தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. மிகைநேரப் பணி (ஓவர் டியூட்டி) அளித்தாலும் நாளொன்றுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல், வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நடந்தது என்ன? வழக்கம் போல 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி போலீஸார் மிரட்டினார்கள். பேருந்து நிலையப் பகுதியில் உள்ள டீக்கடைக்காரர்கள் கூட ஷட்டரை இறக்கி விட்டுவிட்டு, கள்ளச்சாராயம்போல தேநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதே கள நிலவரம்.

இரவில் கடை திறப்பதால் ஆள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால், திருட்டு குறையும் என்பது நிரூபிக்கப்பட்ட கூற்று. மக்களுக்கு நேரடியாக உதவ முடியாத அரசுகள், இதுபோன்ற வாய்ப்புகளின் வாயிலாகவாவது அவர்களுக்குக் கூடுதல் வருமானத்துக்கு உதவலாம். விரும்புபவர்கள் விடிய விடிய கடை திறக்கலாம், காவல் துறையினர் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்று அரசு அறிவித்தால் மட்டும் போதும். வாய்ப்புள்ளவர்கள் நிம்மதியாக வணிகம் செய்வார்கள். செய்யுமா அரசு?

- கே.கே. மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in


24 மணி நேரமும் கடைகளைத் திறக்க அனுமதித்தால் என்னLockdownDiwali shopping

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x