Published : 21 Oct 2020 10:41 am

Updated : 21 Oct 2020 10:41 am

 

Published : 21 Oct 2020 10:41 AM
Last Updated : 21 Oct 2020 10:41 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 8: நடுவானில் திறந்துகொண்ட விமானக் கதவு

sila-tharunangalum-sila-nigalvugalum

கல்யாணி நித்யானந்தன்

காலையில் சுடச்சுட காபியுடன் சுடச்சுட செய்திகளைத் தரும் ‘தி இந்து’ நாளிதழோடுதான் நாளைத் தொடங்குவோம். அது 1972-73 என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அன்றெல்லாம் ‘தி இந்து’ நாளிதழ் சென்னையில் மட்டுமே அச்சடிக்கப்படும். ‘தி இந்து’வின் சொந்த விமானத்தில் முதல் நாள் இரவு, நாளிதழ் கட்டுகள் ஏற்றப்பட்டு திருச்சி, மதுரையில் அந்த நகரங்களுக்கான கட்டுகள் இறக்கப்பட்டு அதிகாலையில் திருவனந்தபுரத்தை அடையும்.

அப்போது எனக்குக் குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. என் அக்கா மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகி, மணமகன் வீட்டில் நடத்த நாள் குறிக்கப்பட்டது. சம்பந்தி வீடு திருவனந்தபுரத்தில். என் அக்காவும் அத்திம்பேரும் இந்தோரிலிருந்து சென்னை வழியாக என்னுடன் திருவனந்தபுரத்துக்குச் செல்வதாக ஏற்பாடு. அக்காவின் உடல்நலம் குன்றியிருந்ததால், சென்னையில் இரு தினங்கள் தங்கி, குறித்த தினத்துக்கு முன்தினம் திருவனந்தபுரத்தை அடைவதாக இருந்தோம்.


இதற்குச் சில தினங்களுக்கு முன்பாக எனக்குத் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. என் கணவரின் பணியுடன் சம்பந்தப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரருக்கு வீட்டில் விருந்தளிக்க வேண்டும். ஆனால், அவர் நிச்சயதார்த்த தேதிக்கு முதல் நாள் மாலை மட்டுமேதான் ஓய்வாக இருந்தார். விருந்தையும் நிறுத்த முடியாது. சகோதரியையும் கைவிட முடியாது. தவித்தேன்... பறந்து செல்லவும் வழியில்லை. ஏனென்றால், அன்றெல்லாம் தமிழகத்தில் அவ்வளவு விமான சேவை கிடையாது.

அப்போதுதான் ‘தி இந்து’ விமான சேவையைச் சார்ந்த, எனக்குப் பரிச்சயமான விமானி ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. சில நேரம், தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு அவசியம் ஏற்பட்டால் அந்த விமானத்தில் அழைத்துப் போயிருப்பதாகக் கூறியிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு சூழ்நிலையை விவரித்தேன். அவரும் முயற்சி எடுத்து, மேலதிகாரிகளிடம் என் நிலைமையை விளக்கினார். ஒருவழியாக அந்த விமானத்தில் அன்று பயணம் செய்ய அனுமதி கிடைத்தது.

அக்காவும் அத்திம்பேரும் முதல் நாளே ரயிலில் சென்றார்கள். மறுநாள் இரவு விருந்து ஒருவழியாக முடிந்தது. விருந்தாளிகள் உணவுக்குப் பிறகு பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் விடைபெற்று விமான நிலையத்துக்கு விரைந்தேன்.

விமானங்கள் தரையிறங்கும் பாதையில் ஒரு கோடியில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை அடைந்தேன். நல்ல காலம், என் வாகனத்தை விமானத்தின் அருகில் செல்ல அனுமதித்தார்கள்.

அது இரு இன்ஜின்களுடன் கூடிய 'DAKOTA' என்ற விமானம். சாதாரண காற்றாடி சுழலும் இயந்திரங்கள். ‘ஜெட்’ அல்ல. இவை அதிக உயரத்தில் பறப்பதில்லை. இதனால், உள்ளே காற்றழுத்தம் செய்யத் தேவையில்லை. விமானத்தில் ஏறினேன். கதவின் அருகில் உள்ள இருக்கையில் ‘தி இந்து’வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரருகில் நான். நடுப்பாதையைக் கடந்த இருக்கைகளில் மூவர் அமர்ந்திருந்தனர். வெளிநாட்டவர். மற்றபடி விமானம் முழுக்க கட்டுக்கட்டாக நாளிதழ்கள்.

11 மணிக்குப் புறப்பட்ட விமானம் திருச்சியை அடைந்தது. அந்த நகருக்குரிய கட்டுகள் இறக்கப்பட்டு, கதவு மூடப்பட்டு, விமானம் புறப்பட்டது. பத்து நிமிடங்கள் பறந்திருப்போம். அப்போதுதான் அது நிகழ்ந்தது. திடீரென கதவு திறந்துகொண்டது! அடுத்திருந்த இளைஞர் தன்னிச்சையாக ‘சடார்’ என்று எழுந்து கையை நீட்டி, கதவைப் பிடிக்கப் போனார். என்னமோ... தரையில் போய்க்கொண்டு இருக்கும் காரின் கதவைத் திறந்த மாதிரி. அதிர்ச்சி அடைந்த நான், அவரது காற்சட்டையின் விளிம்பையும், பெல்ட்டையும் இரு கைகளால் இழுத்துப் பிடித்தவாறு, அவரைத் திட்டினேன். அவர் திடுக்கிட்டு நின்றார். அதற்குள் கேப்டன் ஓடிவந்து விட்டார். அந்த இளைஞரிடம் கட்டவிழ்ந்து கிடக்கும் கயிறை எடுக்கச் சொல்லி விட்டு மற்ற மூன்று ஆண்களையும் கூப்பிட்டார். கேப்டனின் பின்னால் அந்த நால்வரும் முன்புள்ளவரின் காற்சட்டை விளிம்பையும் பெல்ட்டையும் பிடித்துக்கொண்டு ‘ரயில் விளையாட்டு’ விளையாடுவது போல நிற்கவைத்தார்.

பிறகு ஜாக்கிரதையாக வெளியே நீட்டி கதவின் பிடியை இழுத்து மூடி, கயிறால் அதை முன் உள்ள இருக்கையுடன் கட்டினார். நாங்கள் பிடித்துக்கொண்டிருந்த மூச்சை வெளியே விட்டு இருக்கையில் உட்கார்ந்தோம். விழுந்தோம் என்றுகூட சொல்லலாம்!

மதுரையை அடைந்து கட்டுகளை இறக்கினோம். கேப்டனும் தரை சேவைப் பணியாளர்களும் என்னமோ பேசிக்கொண்டார்கள். கேப்டன் திருச்சி விமான தரை சேவைப் பணியாளர்களைத் திட்டுவது கேட்டது. கதவு பழுது பார்க்கப்பட்டதோ என்னவோ தெரியாது. ஆனால், சந்தேகத்துக்கு இடம்கொடாமல் கதவு மீண்டும் கயிறால் கட்டப்பட்டது. புறப்பட்டோம்.

சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் இருக்கைகளின் மேல் உள்ள ஒரு அறையைத் திறந்து எங்களுக்கு ஆளுக்கு ஒரு கம்பளியைக் கொடுத்தார். மேற்குத்தொடர்ச்சி மலையைக் கடக்க விமானம் அதிக உயரத்தில் பறக்கும் என்றும் அப்போது குளிரும் என்றும் விளக்கமளித்தார்.

அதிகாலையில் திருவனந்தபுரத்தை அடைந்தோம். நிச்சயதார்த்தமும் நன்றாக நடந்தது. ரயிலில் சென்னை திரும்பினோம். சென்னை திரும்பியதும் என் கணவரிடம் இந்த அனுபவத்தை விவரித்தபோது முதலில் நம்ப முடியாமல் திகைத்தார். பிறகு விழுந்து விழுந்து சிரித்தார்.

இந்தக் காலமாயிருந்தால், மதுரை விமான நிலைய அதிகாரிகள் எங்கள் விமானத்தை அங்கேயே நிறுத்தியிருப்பார்கள். கயிறால் கட்டப்பட்ட கதவுடன், நாளிதழ்கள் உடன் வரப் பறந்த அனுபவம் எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்? ‘தி இந்து’வுக்கு நன்றி. இக்கட்டான தருணத்தில் சமயோசிதமாக சமாளித்த விமானிக்கு ஒரு ‘சலாம்’!

இன்று விமானப் பயணங்களும் முன்னேறிவிட்டன. ‘தி இந்து’வும் தமிழிலும் இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது. ஆனால், இன்றும் சுடச்சுட காபியுடனும் சுடச்சுட ‘தி இந்து’வுடனும்தான் காலை நேரம் ரசிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

தவறவிடாதீர்!


சில தருணங்களும் சில நிகழ்வுகளும்நடுவானில் திறந்துகொண்ட விமான கதவுகல்யாணி நித்யானந்தன்Blogger specialSpecial articles

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x