Published : 17 Oct 2020 06:50 AM
Last Updated : 17 Oct 2020 06:50 AM

செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு?

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து இருக்கிறது.

மின்சாரம், இணையம் போல, செயற்கை நுண்ணறிவு (செ.நு.) மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளம் ஆகும். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செ. நு. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

‘சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் விற்பன்னர்கள் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்தனர். உலகளாவிய வர்த்தகத் தலைவர்கள், முக்கிய முடுவு எடுப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கு பெற்றனர். ஐந்து நாட்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சிலவற்றைப் பார்த்தாலே, இந்த மாநாட்டின் முக்கியத்துவம் / பயன்பாடு புரிந்து விடும்.

செ.நு. வழியே உலகை மாற்றுதலில் - நம் முன்னே உள்ள பாதை; 100 கோடி மக்களுக்கு அதிகாரம் வழங்குதல்; மொழிகளுக்கு இடையிலான தடைகளை செ.நு. மூலம் நீக்குதல், தொடர்பு சாதனங்களை இணைத்தல்; unlocking Maps for Societal impact; ஆய்வுக்கூடத்தில் இருந்து சந்தைக்கு (Lab to Market), செ.நு.வால், சுகாதாரத்துறையில் புதுமைகள்; பொறுப்பான செ.நு.வில் தரவுகளின் பங்கு, செ.நு. செயலாக்கத்தில் அரசாங்கத்தின் பங்கு!

ஜூன் 2018-ல் - செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் (National Strategy for Artificial Intelligence) வெளியிடப்பட்டது. இதன்படி, 2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சியை, 1.3% உயர்த்துதல்; சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இடம் நகர்தல் (mobility) ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருதல் என முடிவாயிற்று.

நிதி ஆயோக் அமைப்பின் ‘அப்ரோச் பேப்பர்ஸ்’, ஆரோக்கியமான செ.நு. அமைப்புக்கு, நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது. 1. ஆய்வுகளை மேம்படுத்துதல் 2. பணியாளர் திறன் வளர்த்தல் 3. செ.நு. தீர்வுகளை தகவமைத்தல் 4. பொறுப்பான செ.நு.க்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.

கம்ப்யூட்டிங் ஆற்றல், தரவு சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தரவுகளின் மொத்தம் (வால்யூம்) இவைதாம் செ.நு.வின் விரைந்த வளர்ச்சிக்கு உதவும். இதிலே ‘டிஜிட்டல் இந்தியா’ முனைவுகள் மூலம், டிஜிட்டல் தரவுகள் உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறோம். ஆனாலும், சிறப்பு வாய்ந்த கம்ப்யூட்டர், தகவல் சேகரிப்பு வசதிகளில் நாம் இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்துக்கு, 957 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதல் வருமானம் தருகிற வல்லமை, இந்தியாவின் செ.நு. துறைக்கு இருக்கிறது. ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துகிற ஆற்றல் செ.நு.வுக்கு இருப்பதை உணர்ந்த நிதி ஆயோக், புதிய தொழில் நுட்பங்களின் மீது ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக தேசிய நிகழ்வு (National Program on AI) ஒன்றைத் தீட்டி இருக்கிறது. இதை நோக்கியே, 2018 ஜூன் 4 அன்று, ’தேசிய திட்டம்’ வெளியிடப்பட்டது.

இது விஷயத்தில், தேவையான அளவுக்கு பயிற்சி சார் 'validation' இல்லாமை; இது தொடர்பான சோதனைகளுக்கு பெருத்த அளவில் ஆதரவு இன்மை; வளர்ச்சி, பயிற்சி, பணிஅமர்த்தல் கட்டமைப்புக்கு ஆகும் அதீத செலவு ஆகியன நம் முன் உள்ள தடைகள் / சவால்கள்.

இந்தத் தடைகளை வென்றெடுக்க, செ.நு.வை மையமாகக் கொண்ட 'cloud' கட்டமைப்பு நிறுவப்படும். இதற்கு வழி கோலுகிறது - ‘ஐராவத்’ தளம். AIRAWAT (AI Research, Analytics and knoWledge Assimilation platform)

உலகின் மிகுந்த ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்புகளை, 'TOP500' என்று பட்டியல் இடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்தத் தர வரிசை, ‘லினியர்’ சமன்பாட்டின் அடர்த்தியான அமைப்பில் எத்தனை விரைவாக தீர்வு கண்டுபிடிக்கிறது என்று கணிக்கிற LINPACK முறை ஆகும். இதன்படி, உயர்நிலையில், யார்-யார், எவ்வளவு இருக்கிறார்கள்..? முதல் 500 நிறுவனங்களில், சீனா - 228; அமெரிக்கா - 117; ஜப்பான் - 29.

இதிலே சற்றே வேதனை தருகிற உண்மை - 18 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் 5/500 இருந்தன; ஆனால், இன்று இரண்டு மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம், உலகளவில் இத்துறையில் பல நாடுகளும் தொடர்ந்து காட்டுகிற ஆர்வம் / செய்கிற முதலீடுகள். இதன் காரணமாக, ‘நுழைவுத் தகுதி நிலை’ உயர்ந்து கொண்டு வருகிறது. ஜூன் 2018-ல் 716Tflop/s இருந்தது; நவம்பர் 2019-ல் அது, 1142 Tflop/s ஆக உயர்ந்து விட்டது!

தற்போது நம்மிடம் உள்ள செ.நு. கட்டமைப்பு வசதிகள், பொதுவான பிரயோகங்களுக்கு உகந்தவையாக இல்லை. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே அவை செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, Indian Institute of Tropical Meteorology நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர், பருவ நிலை குறித்த விவரங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. (‘அப்ரோச் பேப்பர்’ - நிதி ஆயோக்) அதற்கு அப்பால் அது ‘பயணிக்காது’.

செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படுகிற அதிநவீன கட்டமைப்புக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டு வருகிறோம். 70-க்கும் மேற்பட்ட, ‘சூப்பர் கம்ப்யூட்டிங் க்ரிட்’ உருவாக்க முயல்கிறோம்.

பல்வேறு அமைச்சரகங்களை ஒருங்கிணைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக் கட்டுமான அமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே. ‘டிஜிட்டல் பணம் செலுத்துதலில், நவீன அமைப்பு முறையை நாம் கொண்டுள்ளோம். ஆகஸ்ட் 2016-ல் இருந்து, 143 வங்கிகள் மூலம், 125 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் தற்போதுள்ள குழந்தைப் பருவ, செயற்கை நுண்ணறிவின் ‘ஈக்கோ சிஸ்டம்’ மேலும் வலுப்பெற, ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’ கட்டமைப்பு விரிவடைய வேண்டும். மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத் துறைகள் இணைந்து, ஒரு கால நிர்ணயம் வைத்துக் கொண்டு, இலக்கு நோக்கி முன்னேறுதல் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் தலைமை இடமாக இந்தியா திகழ்வதற்கான அத்தனை தகுதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலக நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, நமது அணுகுமுறை மாறியாக வேண்டும்.

‘செயற்கை நுண்ணறிவா..? அது எதற்கு இப்போது..?’ என்ற கேள்வி, மிகப் பெரிய முட்டுக்கட்டையாகும். ஒரே சமயத்தில், எல்லா துறைகளும் வளர்ச்சி பெறுவதுதான் சரியானதாகும். இதில் முற்போக்கு, பிற்போக்கு என்று ஏதும் இல்லை. இது, இருக்கும் ஒன்றை நசுக்கி விட்டுப் புதிதாய் ஒன்றை வளர்க்கும் முயற்சியும் இல்லை.

ஏற்கெனவே, காலம் காலமாக நாம் வலுவாக உள்ள பல்வேறு களங்களில், மேலும் வளம் பெற, இத்துறை பல்வேறு வழிகளில் துணை புரியும்.

செயற்கை நுண்ணறிவு செழித்து வளர, ‘இயற்கை நல்லறிவு’ இயல்பாக இருத்தல் வேண்டும். இன்றைய சூழலில் சாத்தியமா..?

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x