

தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், எல்லாக் கால ஆசிரியர்களும் ஒரே மாதிரியான ஆசிரியர்கள்தானா?
முந்தைய காலத்தில் ஆசிரியர் தெய்வமாகப் போற்றப்பட்டார். அறம் செய்ய விரும்புதலையும், செய்யும் செயல்கள் அறத்தின்பால் இருக்க வேண்டும் என்பதையும் குருவின் பணியாகக் கொண்டது அன்றைய சமூகத்தின் கல்விக் கோட்பாடு. ஆசிரியர் தெய்வமாக உருவகிக்கப்பட்டால்தான் அறக் கல்வியை மாணவர் உள்வாங்க முடியும். ஆசிரியரும் தார்மீகத்துடனும் ஞானச் செருக்குடனும், அறிவுத் திறனுடனும் தன் பணியை ஆற்ற முடியும் எனும் வகையில் இருந்தது அன்றைய சூழல்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வியின் நோக்கம் வெவ்வேறாக இருந்துவந்திருக்கிறது. புராதனக் காலத்தில் குலக் கல்வியாக இருந்த கல்விமுறை, ஆங்கிலேயர் காலத்தில் பொதுக் கல்வியாக மாற்றப்பட்டது. ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சிக்கான குமாஸ்தாக்களை உருவாக்குவது அதன் நோக்கமாக இருப்பினும், மறுபுறம் மேற்கத்திய அறிவியல் மற்றும் இலக்கிய - தத்துவப் போக்குகளை இந்திய மாணவர்கள் கற்பதற்கும் அது வழி வகுத்தது. மேற்கத்திய அழகியலும், அறிவியலும் கற்றுக் கொடுக்கப்பட்டாலும் இந்திய அறவியல் பாடத்திட்டங்களில் ஸ்திரமாக நின்றது.
சுதந்திரத்துக்குப் பின்பும் கல்விக் கோட்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. தேசத்தின் கட்டுமானத்தில் தங்கள் பங்கு உள்ளதாக நம்பி ஈடுபாட்டுடன் பணிபுரிந்தார்கள் ஆசிரியர்கள். தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று அவர்கள் நம்பினார்கள். மத்திய, மாநில அரசுகளும் கல்வியை இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதைத் தங்கள் கடமையாகக் கருதின. அதற்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்ததுடன், நாடு முழுவதும் சிறு பள்ளிகள் முதல் பெரும் ஆராய்ச்சி நிறுவனங்கள்வரை கட்டமைக்கும் நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்தன. ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், கால ஓட்டத்தில் சூழல்கள் மாறின.
மாறிவரும் கல்விக் கொள்கைகள்
1986-ல் ராஜீவ் காந்தியின் ‘புதிய கல்விக் கொள்கை’ பிரகடனம் செய்யப்பட்டது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை மட்டும் உருவாக்கவில்லை. ஆசிரியர்களையும் உருவாக்கத் தொடங்கியது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடிக்கப்பட்ட இந்தக் கல்விக் கொள்கையின் வழி பயணம் செய்து, உருவானவர்கள்தான் இன்றைய ஆசிரியர்கள். இன்னும் 1990-களில் உலகமயமாதல் கொள்கைகள் உள்வாங்கப்பட்ட பின்னர், கல்விக்கான கோட்பாடுகள் முற்றிலுமாக மாறத் தொடங்கின.
உலகமயத்தின் முதல் விளைவாகத் தனியார்மயமாக் கப்பட்டது கல்விதான். அரசால் அனைத்து மக்களுக்கும் கல்வி தர இயலாத நிலையில், இவை அரசுக்குத் தீர்வாகத் தோன்றின. சுயநிதிக் கல்லூரிகள் என்பவை, தொழிற்கல்வியாக மட்டுமே உருபெறத் தொடங்கின. இன்று தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளில் வெறும் 6 கல்லூரிகளே அரசுக் கல்லூரிகள். 498 தனியார் கல்லூரிகள்.
அதேபோல் அரசு உதவிபெறும் கலை - அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 133. ஆனால், தன்னாட்சிக் கல்லூரிகள் 438 ஆகிவிட்டன. அரசுக் கல்லூரிகளிலேயே சுயநிதி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும், புதிய பாடத்திட்டங்கள் எவற்றையும் அரசு நிதி உதவி பெற்று நடத்த, கடந்த 25 ஆண்டுகளாக அரசு அனுமதி மறுத்துவருகிறது. எனவே, நவீன பாடத்திட்டங்கள் அனைத்தும் சுய நிதிக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
சுய நிதி நிறுவனங்களும் ஆசிரியர்களின் சுயமும்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தேசக் கட்டுமானத்துக்காக வள்ளல் பெருமக்களால் உருவாக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களின் நோக்கங்கள், தேச நலன் பற்றியவை. ஆனால், இன்று இயங்கும் பெரும்பாலான சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் நோக்கம் என்ன? இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை எப்படி இருக்கிறது?
இந்தியாவின் பெரும்பகுதியினர் மாணவர்கள். இவர்களைச் சிந்திக்க மற்றும் செயல்பட வைக்கும் முக்கியமான பொறுப்பு ஆசிரியர்களைச் சாரும். ஆசிரியர்கள் மட்டுமே இளைய தலைமுறையை எளிதில் அணுக இயலும். நுட்பமாகச் சிந்திக்க வைக்க இயலும். அநீதிகள், மற்றும் மானுடத் துயரங்களுக்கு எதிர்வினை செய்விக்க இயலும். ஜனநாயக மதிப்பீடுகள் கூர்மைப்பட அவசியமான விழிப்பு நிலை இன்னும் போதிய அளவு வளரவில்லை என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுவார். அந்த விழிப்பு நிலையை ஆசிரியர் தானும் பெற்று, மாணவர்களுக்கும் பல்வகை உரிமைகள் பற்றி விளக்க வேண்டியுள்ளது. ஆனால் ஆசிரியரின் இன்றைய தன்மை என்ன?
சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 26 பல்கலைக் கழகங்களும், 695 கல்லூரிகளும் இருந்தன. இன்று 700 பல்கலைக்கழகங்களும், 35,539 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 30,000-க்கும் மேற்பட்டவை சுயநிதி நிறுவனங்கள். இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த ஊதியத்துக்குத்தான் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுபவம் குறைந்தவர்கள் அவர்கள் கற்பிப்பவராக மட்டும் இல்லாமல், வளாகத்தின் பண்பாட்டுப் பாதுகாவலர் களாகவும் செயல்படுகின்றனர். மாணவர்களைக் கண்காணிப்பது, சக ஆசிரியர்களைக் கண்காணிப்பது, தகவல்களை முதலாளியிடம் தெரிவிப்பது போன்ற பணிகளைச் செய்யும்படியும் இவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
பெரும்பாலான உயர்கல்வி வளாகங்களுக்குள் ஜனநாயக அமைப்புகளும் இருப்பதில்லை. வெளிப்படைத் தன்மையும் இருப்பதில்லை. சுதந்திரம் என்பது ஆசிரியருக்கும் இல்லாத நிலை. மேலும், ஆசிரியர் அடக்கமான மாணவரை உருவாக்குவதே தன் பணியாகக் கருதுகிறார். இப்படியான சூழலில் வீரிய சிந்தனை கொண்ட மாணவர்கள் உருவாக என்ன சாத்தியம் இருக்க முடியும்?
இன்றைய சவால்கள்
இன்று ஒவ்வொரு விநாடியும் புதிய அறிவுக் கீற்றுகள், கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படும் வேளையில், ஆசிரியர் மிகவும் விழிப்பாகவும் தன்னைத் தொடர்ந்து அறிவுச் செழுமை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத் திலும் இருக்கிறார். கற்பிப்பதற்கான புதிய முறைகளை ஆசிரியர் அறிய வேண்டிய அவசியம் உள்ளது. புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது.
அறிவியல் பார்வை, அறிவியல் அணுகுமுறை, அறக்கோட்பாடுகள், அன்பு மனம், ஆரோக்கியமான உறவுமுறைகளைப் பலப்படுத்தும் பண்பு, பணிவு, துணிச்சல், நேர்மை, உலக அமைதிக்கான செயல்களில் பங்கேற்பு, உலக அறிவியல் மற்றும் பொருளாதாரம் குறித்த கூர்மையான அறிவு, சவால்களைச் சமாளிக்கும் திறன், மானுடத்தின் மாண்பைப் போற்றும் பண்பு என பல்வகைப் பண்புகளையும், திறன்களையும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்குப் புத்தக வாசிப்பு, விவாதப் பங்கேற்பு, புற உலகச் சேவை செயல்பாடுகள், ஊடக அறிவு வளர்ப்பு, கணினி அறிவு, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகள், பிரதான பாடங்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளில் தொடர் பங்கேற்பு… என கற்றலின் களம் விரிவடைகிறது.
மொத்தத்தில், நேர்மையான குணமும் கூர்மையான அறிவும் அச்சம் தவிர்க்கும் பண்பும் கொண்ட செயல்வீரர்களை ஆசிரியர் உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கு முதலில் ஆசிரியர் தயாராக வேண்டும். அப்படிப்பட்ட புதிய ஆசிரியர் இன்றைய கல்விச் சூழலில் உருவாக முடியுமா?
- பேரா. இரா.முரளி, முன்னாள் முதல்வர்,
மதுரைக் கல்லூரி, மதுரை.
தொடர்புக்கு: murali_phil@hotmail.com