Published : 11 Sep 2015 09:44 AM
Last Updated : 11 Sep 2015 09:44 AM

சின்னச் சங்கரன் கதை!

பாரதி மகாகவி என்பது எல்லோருக்கும் தெரியும். பாரதியின் உரைநடை? அட்டகாசமான பாரதியின் உரைநடைக்குச் சின்ன உதாரணம் அவர் எழுதிய ‘சின்ன சங்கரன் கதை’. பாரதி எழுதிய முடிவுறாக் காவியமான அதிலிருந்து சில பகுதிகளை இன்றைய தலைமுறை வாசகர்களின் வாசிப்புக்காக தருகிறோம்.

“மஹாராஜ ராஜபூஜித மஹாராஜ ராஜ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூராதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கருநிறம். நரைபாய்ந்த மீசை, கிருதா. முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் கவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப்போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் குழிந்த கண்கள். இமைப்புறங்களில் ‘காக்கைக்கால்’ அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக் கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும் புகையிலைச் சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகாரமான உடல். பிள்ளையார் வயிறு. ஒருவிதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளாஞ்சி.

இவர் காலையில் எழுந்தால், இரவில் நித்திரை போகும்வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின்வருமாறு:

காலை எட்டு அல்லது எட்டரை மணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு ஒன்பது மணியானவுடன் பழையது சாப்பிட உட்காருவார். பழையதிற்குத் தொட்டுக்கொள்ளத் தமது அரமனையிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளிலிருந்து பழங்கறிகள் கொண்டு வரச்சொல்லி வெகு ரஸமாக உண்பார். (அதாவது காலை ‘லேஹ்யம்’ முடிந்த பிறகு. இந்த அபினி லேஹ்யம் உருட்டிப்போட்டுக்கொள்ளாமல் ஒரு காரியங்கூடத் தொடங்கமாட்டார். பார்ப்பார் எடுத்ததற்கெல்லாம் ஆசமனம் செய்யத் தவறாதிருப்பது போல) பழையது முடிந்தவுடன் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபாமண்டபத்தருகேயுள்ள ஒரு கூடத்தில் சாய் நாற்காலியின் மீது வந்து படுத்துக்கொள்வார். ஒருவன் கால்களிரண்டையும் பிடித்துக்கொண்டிருப்பான். இவர் வெற்றிலை போட்டுக் காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்.

எதிரே ஆராவது உத்யோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர்ப் பிரபுக்கள், இவர்களில் ஒருவன் வந்து கதை, புரளி, கோள்வார்த்தை, ஊர்வம்பு, ராஜாங்க வ்யவஹாரங்கள் - ஏதேனும் பேசிக்கொண்டிருப்பான். சில நாட்களிலே வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும். அரமனைச் சேவல் எதிரியை நல்ல அடிகள் அடிக்கும்போது ஜமீந்தாரவர்கள், நிஷ்பக்ஷபாதமாக, இருபக்கக் கோழிகளின் தாய், பாட்டி, அக்காள், தங்கை எல்லோரையும் வாய் குளிர வைது ஸந்தோஷம் பாராட்டுவார்.

பெரும்பாலும், சண்டை முடிவிலே அரமனைக் கோழிதான் தோற்றுப்போவது வழக்கம். பிறகு பழைய அரமனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலை ‘ஸம்ஸ்தான வித்வானாக’ வைப்பார்கள். அடுத்த சண்டையில் இது தோற்றுப்போய் மற்றொன்று வரும். எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரமனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது. ஜமீன் போஷணையிலேயே அந்த நயமுண்டாகிறது.

பகல் ஒன்றரை மணிக்கு ஸ்நாநம் தொடங்கும். வெந்நீரிலேதான் ஸ்நாநம் செய்வார். ராமசாமிக் கவுண்டர் ஸ்நாநஞ் செய்வதென்றால் அது ஸாதாரணக் காரியமன்று. ஜலத்தையெடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர். உடம்பு தேய்க்க இரண்டு பேர். தலை துவட்ட ஒருவன். உடம்பு துடைக்க ஒருவன். வேறு வேஷ்டி கொண்டு அரையிலுடுத்த ஒருவன்.

ஸ்நாநம் முடிந்தவுடனே பூஜை. ஜமீந்தார் பூக்களை வாரிவாரி முன்னே வைத்திருக்கும் விக்கிரகத்தின் மேல் வீசுவார். பூஜா காலத்தில் ஸ்தல பாகவதர்கள் வந்து பாடுவார்கள். சில சமயங்களில் ஸங்கீத விஷயமாக ஸம்பாஷணைகள் நடப்பதுண்டு. ஜமீந்தார் தாம் ‘கவனம்’ செய்த கீர்த்தனைகளைப் பாகவதர்களிடம் பாடிக்காட்டுவார். (ஸங்கீதத்திலும் ஸாஹித்யத்திலும் ராமசாமிக் கவுண்டர் புலி, அந்த ஸங்கதி ஞாபகமிருக்கட்டும்.)

ஒருநாள் ஸம்ஸ்தான வித்வான் அண்ணாத்துரை ஐயர், தோடி நாராயணய்யங்கார், பல்லவி வேதாசலக் குருக்கள் முதலிய வித்வான்களனைவரும் வந்து கூடியிருந்தனர். அண்ணாத்துரை அய்யரை நோக்கி ஜமீந்தார்: “நான் அடாணாவில் ‘மானே யங்கே போனவகை யென்னடீ’என்ற வர்ண மெட்டிலே பரமசிவன்மேல் ஒரு ஸாஹித்யம் பார்த்திருக்கிறேனே. (ஒரு கீர்த்தனை செய்திருக்கிறேன் என்றர்த்தம்.) அதை நீங்கள் கேட்கவில்லையே” என்றார்.

“உத்தரவாகட்டும்” என்றார் பாகவாதர் (சொல்லு, கேட்போம் - என்றர்த்தம்).

உடனே ஜமீந்தார் ஜலதோஷம் பிடித்த பன்னிரண்டு குயில்கள் சேர்ந்து சுருதியும் லயமும் ஒன்றுபடாமல் பாடுவது போன்ற தமது திவ்விய சாரீரத்தை எடுத்துப் பின்வரும் கீர்த்தனை பாடலாயினார். ஒரு பாகவதர் தம்பூரில் சுருதி மீட்டினார். ஜமீந்தார் அந்த சுருதியை லக்ஷ்யம் பண்ணவில்லை.

ராகம்: அடாணா தாளம்: ரூபகம்

(‘மானே யங்கே போனவகை யென்னடீ’

என்ற வர்ண மெட்டு)

பல்லவி

மானே கையில் தானே தரித்தானே - ஒரு

மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே)

(பல்லவியில் முதல் வரி பாடி முடிவதற்குள்ளாகவே அண்ணாத்துரை பாகவதர் “பேஷான கீர்த்தனம்! பேஷான கீர்த்தனம்! சபாஷ்! சபாஷ்!” என்றார். “ஒரு வரி பாடுமுன்னே இது நல்ல கீர்த்தனையென்று எப்படித் தெரிந்தது?” என்று ஜமீந்தார் கேட்டார். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் பார்த்தால் போதாதா?” என்றார் பாகவதர். ஜமீந்தாரும் இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஸந்தோஷ மிகுந்தவராய் மேலே பாடலாயினர்.)

பல்லவி

மானே கையில் தானே தரித்தானே-ஒரு

மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே)

அனுபல்லவி

கோனே சிவனே குருவே யருவே மெய்ஞ்

ஞானபான மோனமான நாதா தாமரைப் பாதா (மானே)

(“அனுபல்லவியில் இரண்டாம் அடியில் ‘முடுகு’ வைத்திருந்திருக்கிறேன் பார்த்தீர்களா?” என்று ஜமீந்தார் கேட்க, பாகவதர்களெல்லோரும் “பேஷ்! பேஷ்! பேஷ்!” என்றனர்.)

சரணம்

எந்தனை மோக்ஷ கதியினில் சேர்த்திட

இன்னமு மாகாதா? - உன்னைச்

சொந்தக் குலதெய்வ மென்றுநித் தந்துதி

சொன்னது போதாதா?

விந்தை யுடனிங்கு வந்தென்னை யாளவும்

மெத்த மெத்த வாதா?

வந்தனை தந்துனைப் போற்றிடும் ராமசா

மிக்கவுண்டராஜ போஜ னுக்கருள்செய் யும்பாதா (மானே)

“மிக்கவுண்ட ராஜபோஜ

னுக்கருள்செய் யும்பாதா”

என்று கடைசி யடியை இரண்டாமுறை திருப்பிப் பாடி, ராமசாமிக் கவுண்டர் மிகவும் திருப்தியுடன், தியாகையர் ‘நகுமோமு’ கீர்த்தனத்தை ஒரு சிஷ்யனிடம் முதல் முறை பாடிக்காட்டிய பிறகு புன்சிரிப்புச் சிரிப்பது போல நகைத்தருளினார்.

பாகவதர்களெல்லோரும் சபாஷ் சொல்லிக் கொட்டி விட்டார்கள்.

பிறகு அண்ணாத்துரை பாகவதர், “மஹாராஜா இந்தக் கீர்த்தனத்தை எழுதிக் கொடுத்தால் நான் வீட்டிலே போய்ச் சிட்சை ஸ்வரங்கள் சேர்த்துப் பாட்டையும் நன்றாகப் பாடம் செய்துகொண்டு வருவேன். இதை நித்தியம் பூஜா காலத்தில் பாட வேண்டுமென்பது என்னுடைய அபிப்பிராயம்” என்றார்.

“அதுக்கென்ன? செய்யுங்கள்!” என்றார் ஜமீந்தார்.

பூஜை முடிந்தவுடனே போஜனம். கிருஷ்ணய்யங்கார் வீட்டிலிருந்து ‘உப்புச்சாறு’, கேசவய்யர் வீட்டிலிருந்து ‘அவியல்’, குமாரசாமிப் பிள்ளை வீட்டுக் கீரைச் சுண்டல். இன்னும் பலர் வீட்டிலிருந்து பலவித மாமிசப் பக்குவங்கள். இவ்வளவு கோலாகலத்துடன் ஒரு மட்டில் போஜனம் முடிவு பெறும்.

ராமசாமிக் கவுண்டர், பார்ப்பார் சொல்லுவது போல, நல்ல ‘போஜனப் பிரியன்’. மெலிந்த சரீரமுடைய ஒரு சிநேகிதனுக்கு அவர் பின்வருமாறு பிரசங்கம் செய்ததாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.

“இதோ பாரு, ரங்கா, நீயேன் மெலிஞ்சு மெலிஞ்சு போரே (போகிறாய்) தெரியுமா? சரியாய்ச் சாப்பிடறதில்லை. சாப்பாடு சரியானபடி செல்ல ஒரு வழி சொல்றேன் கேளு. ஒரு கை நிறையச் சோறெடுத்தால் அதுதான் ஒரு கவளம். அப்படி நீ எத்தனை கவளம் தின்பை? எட்டுக் கவளம். ரம்ப அதிகமாய்ப்போனால் ஒன்பது கவளம் வைச்சுக்கோ. அவ்வளவுதான். சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட வேணும். அதற்கு நீ என்ன செய்ய வேணுமென்றால், இன்றைக்கு ஒன்பது கவளம் சாப்பிடுகிறாயா? நாளைக்குப் பத்துக் கவளமாக்க வேணும். நாளன்றைக்குப் பதினொன்றாக்க வேணும். நாலா நாள் பன்னிரண்டு. இப்படி நாள்தோறும் ஒவ்வொன்றாக அதிகப்படுத்திக்கொண்டேபோய் முப்பத்திரண்டாவதோடு நிறுத்திவிட வேணும். பிறகு ஒருபோதும் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறையவே செய்யலாகாது.”

பகல் போஜனம் முடிந்தவுடனே ஜமீந்தார் நித்திரை செய்யத் தொடங்குவார். அரமனைக்கு வெளியேகூடச் சில சமயங்களில் சத்தங் கேட்கும்படியாகக் குறட்டை விட்டுத் தூங்குவார். மாலை ஐந்து மணிக்கு விழிப்பார்.

விழித்தவுடன் ஆறாவது அல்லது ஏழாவது முறை ‘ஆசமனம்’ செய்துவிட்டுக் கொஞ்சம் பலகாரம் சாப்பிடுவார். உடனே ஐரோப்பிய உடை தரித்துக்கொண்டு கச்சேரிக்குப் போவார். அங்கே பலர் பலவிதமான விண்ணப்பங்கள் கொண்டு கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிக்கொள்வார். அதாவது பக்கத்தில் நிற்கும் குமாஸ்தா அவற்றை வாங்கிவைக்கும்போது இவர் பார்த்துக்கொண்டிருப்பார். விண்ணப்பங்கள் வாங்கி முடிந்த பிறகு காகிதங்களில் கையெழுத்துப் போடும் காரியம் தொடங்கும். பழைய மனுக்கள், திவான் கச்சேரிக் கடிதங்கள் - இவற்றின்மேல் குமாஸ்தா தனதிஷ்டப்படியெல்லாம் உத்தரவுகளெழுதி வைத்திருப்பான். அவற்றின் கீழ் வரிசையாகக் கையெழுத்துப் போட்டுக்கொண்டே வரவேண்டும். இன்னின்ன வ்யவஹாரங்களைப் பற்றிய காகிதங்களின் மேல் இன்னின்ன உத்தரவுகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற சமாச்சாரமே ‘லேஹ்ய’க் கவுண்டருக்குத் தெரியாது.

ஒரு சமயம் வழக்கப்படி உத்தரவுகள் தயார் பண்ணிக்கொண்டுவரும் குமாஸ்தா ஊரிலில்லை. அவன் இடத்திற்கு மற்றொருவன் வந்திருந்தான். ஜமீந்தார் தாமே மனுதார்களுக்கு உத்தரவு எழுதுவாரென்று அவன் நினைத்து மனுக் காகிதங்களை அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டான். ஜமீந்தாரும் விட்டுக்கொடாதபடி அந்த மனுக்களை ஒவ்வொன்றாகத் திருப்பிப் பார்த்து மேலே உத்தரவுகள் எழுதத் தொடங்கினார்.

கவுண்டபுரத்துக்கு மேற்கே இரண்டு நாழிகை தூரத்திலுள்ள நடுக்கனூர் கிராமத்திலிருந்து வில்வபதி செட்டி என்ற ஒரு கிழவன் பின்வருமாறு மனுக் கொடுத்திருந்தான்.

“பிதா மஹாராஜா அவர்கள் காலத்தில் நான் மிகவும் ஊழியம் செய்திருக்கிறேன். இப்போது பலவிதக் கஷ்டங்களால் நான் ஏழையாய்ப் போய், மக்களையும் சாகக்கொடுத்துவிட்டுத் தள்ளாத காலத்தில் சோற்றுக்குச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மஹாராஜா அவர்கள் சமுகத்தில் கிருபை செய்து எனக்கு ஜீவனத்துக்கு ஏதேனும் மனோவர்த்திச் செலவிலே கொடுக்கும்படி பிரார்த்திக்கிறேன்.”

இந்த மனுவை ஜமீந்தார் தமது குமாஸ்தாவின் உதவியினால் வாசித்து முடித்துவிட்டுப் பிறகு காகிதத்தின் புறத்திலே அடியிற் கண்டபடி உத்தரவெழுதிவிட்டார்.

“தாசில்தார் குமரப்பிள்ளைக்கு - வில்வபதி செட்டி பேருக்கு நிலம் விட்டு விடவும்”. இதை எழுதி நீளமாக ராமசாமிக் கவுண்டர் என்று கையெழுத்துப் போட்டுத் தீர்த்துவிட்டார்.

இப்படிப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பித்து ஜமீந்தார் தமது கச்சேரியை முடித்து விட்டார். மறுநாள் இந்த வில்வபதி செட்டியின் மனு திவான் கச்சேரிக்கு வந்துசேர்ந்தது. கவுண்டருடைய உத்தரவைத் திவான் படித்துப் பார்த்தார். தாசில்தார் குமரப்பிள்ளையின் அதிகாரத்துக்குட்பட்ட பூமியில் மேற்படி செட்டிக்கு ஜீவனாம்சத்துக்கு நிலம் விடவேண்டுமென்று கவுண்டரவர்களுடைய திருவுள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டார். ஆனால் எவ்வளவு நிலம், எந்தவிதமான நிலம், என்ன நிபந்தனைகள் முதலிய விவரங்களொன்றும் தெரியவில்லை. உத்தரவை அடித்துவிட்டுத் திவான் வேறு மாதிரி எழுதிக் கொண்டுவந்து ரஹஸ்யமாகக் கவுண்டரின் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார். கடைசியில் வில்வபதி செட்டிக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. உத்தரவிலுள்ள பிழைகளைத் திவான் எடுத்துக் காட்டியபோது ஜமீந்தார் குற்றம் முழுவதையும் குமாஸ்தாவின் தலையிலே தூக்கிப் போட்டுவிட்டார்.

“நான் மனுவை வாசித்துப் பார்க்கவேயில்லை. வேறே பெரிய விவகாரமொன்றிலே புத்தியைச் செலுத்திக் கொண்டிருந்தேன். இந்த மனு என்ன விஷயம் என்று குமாஸ்தாவைக் கேட்டேன். ‘செட்டி மிகவும் ஏழை; அவனுக்கு உதவி செய்ய வேண்டியதுதான்’ என்று குமாஸ்தா சொன்னான். தங்களுடைய அபிப்பிராயந் தெரிந்துதான் சொல்கிறானென்று நினைத்து உத்தரவெழுதி விட்டேன்.

ஸாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் ஸவாரி செய்துகொண்டு வருவார். கவுண்ட நகரம் சரித்திரப் பெருமையும், ‘க்ஷேத்திர மகாத்மியமும்’ வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரைவண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் ‘வாங்கா’ ஊதுவார்கள். இந்த ‘வாங்கா’ என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். சில தினங்களில் பல்லக்கு ஸவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ‘ஆட்டு வண்டி’ ஸவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக்கூடும். இரண்டு ஆடுகளைப் வழக்கப்படுத்தி, அவற்றுக்கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தால் அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறை கொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு தாமே பயமில்லாமல் ஓட்டுவார். குதிரைகள் துஷ்ட ஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்த ஸந்தேகமில்லையல்லவா?

இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை ஸவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது - தயார் செய்துகொண்டுவருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போம். பிரக்கினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும். எனினும் இவருக்கு பயந்தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும், குதிரையை எப்படியாவது நகர்த்திக்கொண்டுபோக வேண்டுமென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டுபோவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார். வாங்காச் சத்தத்துக்குக் குறைவிராது. இந்த வ்யவஹாரம் ஒரு நாள் நடந்தால் பிறகு மூன்று நான்கு வருஷங்களுக்கு இதை நினைக்கமாட்டார்.

இவருக்குப் புத்திர பாக்கியம் இல்லை. அதற்காகப் பலவித ஹோமங்கள், பூஜைகள், கிரக சாந்திகள், தீர்த்த யாத்திரைகள், யந்திர ஸ்தாபனங்கள் முதலியன செய்துகொண்டு வருகிறார். இந்த அவஸரத்திலே குதிரையிலிருந்து தவறி விழுந்து உயிர் போய்விடுமானால் பிறகு இவருடைய சக்ராதிபத்யத்துக்கு ஒரு மகன் பிறக்க இடமே இல்லாமல் போய்விடுமல்லவா? எத்தனை பேர் குதிரையிலிருந்து விழுந்து செத்திருக்கிறார்கள். அதையும் கவனிக்க வேண்டாமா? சில மாதங்களுக்கு முன்புகூட ருஷியா தேசத்தில் ஒரு குதிரைப் பந்தயத்திலே ஒருவன் வேலி தாண்டி விழுந்து உயிர் போய்விட்டதாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதியிருந்த விஷயத்தை இவரிடம் யாரோ வந்து சொல்லவில்லையா? நாலு காரியத்தையும் யோசனை செய்துதானே நடக்க வேண்டும். ஒருதரம் போன உயிர் திருப்பி வருமா?

சாயங்காலத்து சவாரி முடிந்தவுடனே கவுண்டரவர்கள் அரமனைக்குள் வருவார். நாலைந்து பேராக இருந்து இவருடைய ஐரோப்பிய உடுப்புக்களைக் கழற்றியெறிந்துவிட்டு வேஷ்டி உடுத்துவார்கள். உத்தரீயத்தைத் தாமாகவே வாங்கி மேலே போட்டுக்கொள்வார். மனுஷன் வேலைக்கு மாத்திரம் பின்வாங்க மாட்டார். அது ஒரு குணம் இவரிடத்தில். பிறகு கைகால் சுத்தி செய்துகொண்டு லேஹ்யம் சாப்பிட்ட பிறகு சாய் நாற்காலிக்கு வந்துவிடுவார். அப்பால் வெற்றிலை, புகையிலை, ஊர்வம்பு, கதை முதலியன.

இரவு சுமார் பத்து மணியாகும்போது ஜமீந்தாருக்கு ஒருவாறு புகையிலைச் சாறும் லேஹ்ய வெறியுமாகச் சேர்ந்து தலையை மயக்கி சாய்ந்தபடி, கதை கேட்கக்கூட முடியாதவாறு செய்துவிடும். வம்பு பேசும் ‘காரியஸ்தர்களுக்கும்’ நின்றுநின்று காலோய்ந்து போய்விடும். எனவே கவுண்டர் எழுந்து கைகால் சுத்தி செய்வித்துக்கொண்டு, ஸந்தியாவந்தனம் செய்து முடித்து, லேஹ்யம் தின்றுவிட்டு அந்தப்புரத்திலே போய் சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட்டு உடனே நித்திரைக்குப் போய்விடுவார்.

பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்னச் சங்கரன் கதை

பதிப்பாசிரியர் - ஆ .இரா. வேங்கடா சலபதி

பக்கங்கள் - 70

விலை - ரூ. 60

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001.

இன்று பாரதியின் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x