Last Updated : 15 Oct, 2020 07:28 AM

 

Published : 15 Oct 2020 07:28 AM
Last Updated : 15 Oct 2020 07:28 AM

லண்டன்-டெல்லி: ஒரு பஸ் பயணம்!

ஒரு பஸ், 20 பயணிகள், 18 நாடுகள், 70 நாட்கள், 20,000 கிமீ ... லண்டனில் தொடங்கி டெல்லி வரையிலான ஒரு நெடும் பயணம். பத்தாண்டுகளுக்கு முன்பு துஷார் அகர்வாலுக்கும் அவரது நண்பர் சஞ்சய் மதனுக்கும் தோன்றிய யோசனை 2021 மே மாதத்தில் நிறைவேறப்போகிறது. இப்படியெல்லாமும்கூட யோசனை தோன்றுமா? இந்த நண்பர்கள் இருவரும் அப்படி ஒரு பயணத் திட்டத்தை உருவாக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம். துஷார் மேத்தா டெல்லியிலிருந்து லண்டன் வரை காரிலேயே பயணித்தவர். தனிநபர் நெடும் பயணங்களுக்காக லிம்கா சாதனைப் பட்டியலில் ஏகப்பட்ட முறை இடம்பிடித்த இவர்கள் இருவரும் ‘அட்வெஞ்சர்ஸ் ஓவர்லாண்ட்’ என்ற பெயரில் சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.

நண்பர்கள் இருவரும் 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 டிசம்பர் வரை உலகத்தைத் தங்களது காரிலேயே வலம்வந்தவர்கள். 6 கண்டங்கள், 50 நாடுகள், 90,000 கிமீ என்று உலகின் மிகப் பெரிய பயணம் என்று கின்னஸிலும் இடம்பிடித்தனர். ‘தி கிரேட் வேர்ல்ட் இந்தியன் ட்ரிப்’ என்ற தலைப்பில் அவர்களுடைய பயண அனுபவங்கள் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம்தான் கார் பயணங்களுக்கு மிகவும் சிறந்தது என்பதும், பொலிவிய மரணச்சாலை மிகவும் அபாயகரமானது என்பதும் அவர்களின் பயண அனுபவம்.

உலகத்தைத் தனியாக காரில் வலம்வந்த இந்த நண்பர்கள்தான், இப்போது டெல்லியிலிருந்து லண்டனுக்கு பஸ் பயணத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து லண்டனுக்கும் அங்கிருந்து மீண்டும் டெல்லிக்குமாக இந்த பஸ் இயக்கப்படவிருக்கிறது. மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் வழியாக சீனாவின் பட்டுப் பாதை நகரங்களைக் கடந்து மாஸ்கோவுக்கும் அங்கிருந்து பெல்ஜியம் வழியாக லண்டனுக்கும் பயணிக்கும். பயணக் கட்டணம் ஒரு வழிப் பயணத்துக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில், ரூ.15 லட்சம். இந்தப் பயணத்துக்கு இதுவரை 40,000 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பியாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் இந்தத் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருந்தது, ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரையிலான ஹிப்பிகளின் தரைவழிப் பயணங்கள். 1957-ல் ‘இந்தியாமேன்’ என்ற லண்டன் நிறுவனமானது இந்தியாவுக்கான பஸ் பயணத்தை முதன்முறை தொடங்கிவைத்தது. ஆனால், அந்தப் பயணத்தின் பாதை வேறு. லண்டனிலிருந்து பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய ஒன்பது நாடுகளின் வழியான பயணம் அது. இந்தியாவுக்குள் டெல்லி, ஆக்ரா, அலகாபாத், காசி வழியாகக் கடைசியில் கொல்கத்தா வந்துசேர்ந்தது. பயணிகளில் ஒருவரான பீட்டர் மோஸ் அந்த அனுபவங்களை ‘இந்தியாமேன்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார்.

டேவிட் அட்டன்பரோ அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே 1955-ல் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் மாணவர்கள் ஆறு பேரைக் கொண்ட குழுவுடன் லேண்ட் ரோவர் கார்கள் இரண்டில் லண்டனிலிருந்து இந்தியா வந்திருக்கிறார். அவரது பயணம், சிற்சில இடர்ப்பாடுகளுடன் மலேசியா வரையில் தொடர்ந்தது. அந்தப் பயணத்தைக் குறித்து ‘தி லாஸ்ட் ரோட் - ஓவர்லேண்ட் டு சிங்கப்பூர்’ என்ற ஆவணப்படம் விவரிக்கிறது. எத்தனை விதமான நிலவெளிகள்... எத்தனை விதமான மனிதமுகங்கள்... அந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது நாமும் ஒரு பயணியாகிவிடுவோம்.

1979-ல் நடந்த ஈரான் புரட்சியும், அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா கைப்பற்றியதும் இந்தத் தரைவழித் தடத்தின் புவியியல் அரசியலையே மாற்றிப்போட்டுவிட்டன. எண்பதுகளுக்குப் பிறகு இந்திய, பாகிஸ்தான் எல்லைகளைக் கடப்பது மிகவும் சிக்கலானதாகிவிட்டது. எனவே, லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணங்களுக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வேறொரு வழித்தடத்தில் இந்த நெடும் பயணம் இப்போது மீண்டும் தொடங்கவுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் வடமேற்கு நாடுகளுக்கு இடையிலான சுமுக உறவு குறித்த ஏக்கத்தையும் அது ஏற்படுத்தாமல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x