

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொள்ளைநோய் அச்சத்தாலும், ஊரடங்கு நெருக்கடியாலும் சொந்த ஊர் திரும்பி, இப்போது மீண்டும் பிழைப்புத் தேடி நகரங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் தொழிற்சாலைகள் அவர்களை வரவேற்கின்றன. ‘இது நீடிக்குமா?’ என்ற அச்சம் இரு தரப்பினர் மத்தியிலுமே இருந்தாலும், வேலை ஓட வேண்டும் என்ற எண்ணம் இரு தரப்பாரையுமே இணைக்கிறது. பாதியில் பணிகளை அவர்கள் விட்டுவிட்டுச் சென்றபோது, உள்ளூர் இளைஞர்களைக் கொண்டே இனி தொழிலகங்களை இயக்குவதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தொழிலகங்களில் எதிரொலித்தது. ஆனால், பெரும்பாலும் அப்படி நடக்கவில்லை. ஏன்?
கசக்கும் உண்மை என்னவென்றால், தமிழக இளைஞர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விழையவில்லை என்பதே ஆகும். உள்ளபடி, வீதிக்கு வீதி இளைஞர்கள் வேலையின்றி அமர்ந்திருப்பதை இன்று தமிழகம் எங்கும் காண முடிகிறது. ஏன் அது இன்னமும் சமூகப் பிரச்சினை ஆகவில்லை என்றால், அவர்கள் பெற்றோரின் நிழலில் அமர்ந்திருக்கின்றனர். தங்களுடைய படிப்புக்கு ஏற்ற வேலைக்குக் காத்திருப்பதாகச் சொல்கின்றனர்.
அவர்கள் குறிப்பிடும் படிப்பு பெரும்பாலும் வெறும் சான்றிதழ் மட்டும்தான்; சான்றிதழ் குறிப்பிடும் படிப்புக்கும், அதில் அவர்கள் பெற்றிருக்கும் அறிவுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது. அப்படியென்றால், சான்றிதழை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, கிடைக்கும் வேலைகளை நோக்கி நகர்வதே நல்லது. ஆனால், அதைச் செய்ய மறுக்கின்றனர். எனக்குத் தெரிந்த பல தொழிலக நிர்வாகிகள் சொல்லும் உண்மை இது, “இன்ஜினீயர்னு பட்டம் வெச்சிருக்காங்க. பாலிடெக்னிக் மாணவர்களுக்குத் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயம்கூடத் தெரியலை. ஆனாலும், இன்ஜினீயர்னு நம்புறாங்க. ஆனா, பல கஷ்டங்கள் இடையில தொழில் செய்யுற நிறுவனங்கள் எப்படி ஒருத்தருக்குத் தெரியாத வேலைக்கும், இல்லாத திறனுக்கும் சம்பளம் கொடுக்க முடியும்? ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுக்கும் இடத்தில், ஆயிரத்து ஐநூறு கொடுத்தால் எப்படிக் கட்டுப்படியாகும்? முக்கியமா உடல் உழைப்பு கேவலம்னு நம்ம பசங்க நினைக்கிறாங்க. ஆனா, அவங்க எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற வேலைங்கிறது மாயமான் வேட்டையே தவிர வேற இல்லை!”
இதே தொழில் துறையினர் தமிழக இளைஞர்களுக்கு உள்ள வேறு ஒரு சாதக அம்சத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. படிப்புக்கேற்ற திறனை முழுமையாகப் பெற்றிருக்கவில்லை என்றாலும், வெளிமாநில இளைஞர்களுடன் ஒப்பிட பல மடங்கு மேம்பட்டவர்கள் தமிழக இளைஞர்கள். வேலைகளை இவர்களால் வேகமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, கொள்ளைநோய்க்குப் பிறகு தொழில் துறை வேகமாக இயந்திரமயமாக்கலை நோக்கியும் நகர்கிறது என்பதால், அந்தத் தளத்திலும் தங்களை வேகமாக இவர்களால் இருத்திக்கொள்ள முடியும் என்பதே அது. ஆனால், இதுகுறித்தெல்லாம் எந்தப் பரிசீலனையும் நம் இளைஞர்கள் மத்தியில் நடப்பதாகத் தெரியவில்லை.
குறைந்தபட்சம் இன்னும் ஓராண்டுக்குள் கொள்ளைநோய் முடிவுக்குக் கொண்டுவரப்படும் சமிக்ஞைகள் ஏதும் தெரியாத நிலையில், பொருளாதாரரீதியான சரிவு எல்லா இடங்களையும் சூழ்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சும்மா இருப்பதைவிட ஏதோ ஒரு வேலையில் இருப்பது சிறந்தது. பல சுயமுன்னேற்றப் புத்தகங்களில் அடிக்கடி சொல்லப்படும் மேற்கோள்தான். ஆனால், கரோனா காலத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது: ‘வெற்றியின் பயணத்தை எந்த இடத்திலிருந்து தொடங்குகிறோம் என்பது முக்கியமில்லை, பயணத்தை எங்கு முடிக்கிறோம் என்பதுதான் எப்போதுமே முக்கியமானது.’
- புதுமடம் ஜாபர்அலி,
தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com