

வழக்கறிஞரும் அரசியலருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மறைந்த அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் தமிழக நண்பர்களில் ஒருவர். நெருக்கடிநிலைக் காலகட்டத்துக்கு முன்பு பாஸ்வான் சென்னைக்கு வந்திருந்த காலகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட உறவு பின்னர் கடைசி வரை நீடித்தது. பாஸ்வான் நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
தமிழகத்துடனான பாஸ்வானின் உறவைச் சொல்லுங்களேன்...
பாஸ்வானுக்குத் தமிழகத்துடனான உறவின் மையம் சமூகநீதி. வி.பி.சிங் காலத்தில் தொடங்கி கூட்டணி திமுக மத்திய ஆட்சியில் பங்கேற்கும்போதெல்லாம் பெரும்பாலும் பாஸ்வானும் அந்த அரசுகளில் பங்கேற்றிருக்கிறார். அதேபோல, மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்குவதிலும் அவர் பிடிமானம் கொண்டிருந்தார். ஆகையால், திமுக - திகவுடன் நெருக்கமான உறவு அவருக்கு இருந்தது. கருணாநிதி, வீரமணி, வைகோ, செழியன், முரசொலி மாறன் ஆகியோருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக எழுந்த சோஷலிஸ்ட் கட்சிகள் சமூகநீதித் தளத்தில் ஆற்றிய பணிகளை முன்னரே தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் செய்திருப்பதாக அவர் கருதினார். தேசிய அரசியலில் இருந்தாலும், மாநிலங்களின் உரிமைகளும், தேசிய இனங்களின் தனித்தன்மையும் பேணப்பட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். பொதுவாகவே, அவர் பதவி வகிக்கும் துறை சார்ந்து நம்மவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குக் காதுகொடுப்பவராகவும், தன்னால் முடிந்தவற்றை முடித்துக்கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார். சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று அதற்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். தமிழகத்தை உற்றுக்கவனித்த அரசியலர் அவர்.
அமைச்சரவையில் பாஸ்வான் பங்கேற்ற தருணங்களில் அந்தத் துறைகளில் உங்களையும் ஆலோசனைக் குழுக்களில் அவர் இணைத்துக்கொண்டிருக்கிறார்; அந்த அனுபவத்தைச் சொல்லலாமா?
தன்னை ஓர் அகில இந்தியத் தலைவராகவே அவர் கருதினார். தான் சார்ந்திருக்கும் அமைச்சரவையில் பல பிராந்தியங்களின் பிரதிநிதித்துவமும் குரலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். ரயில்வே அமைச்சராக அவர் இருந்தபோது, அதன் ஆலோசனைக் குழுவில் என்னை உறுப்பினர் ஆக்கினார். தமிழகத்தில் மீட்டர் கேஜ் பாதைகள்தான் அப்போது அதிகம். கோவை வழியாகச் செல்லும் ரயில்களில் மட்டும்தான் அகலப் பாதை இருந்தது. தமிழ்நாட்டின் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகள் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, ஆய்வுக்கு உத்தரவிட்டதோடு அகலப் பாதை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்னதாகத் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது, சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது பெரும் பிரச்சினையாக இருந்தது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், சிவகாசி பிரச்சினை தொடர்பில் ஆய்வுசெய்ய ஒரு குழுவை அமைத்தார். அதிலும் நான் இடம் பெற்றிருந்தேன். குழந்தைத் தொழிலாளர் முறை இங்கு ஒழிக்கப்பட வேண்டும் என்றால், முதலில் இப்பகுதியில் நிலவும் வறுமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று அறிக்கை அளித்தோம். அந்தச் சமயத்தில் ஒருநாள் சிவகாசிக்கே நேரில் வந்து நிலைமையை அறிந்துகொண்டதுடன் இது பன்முனையில் எதிர்கொள்ள வேண்டிய காரியம் என்பதை ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்டினார். இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்திலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். 2012 டெஸோ மாநாட்டில் பங்கேற்க நாங்கள் அழைத்தபோது அவர் அதில் பங்கேற்றார்.
தனிப்பட்ட வகையில் அவருடனான நட்பைச் சொல்லுங்களேன்...
நிறைய இடங்களுக்கு இங்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறேன். தமிழகத்தில் மாமல்லபுரமும் கொடைக்கானலும் அவருக்கு மிகவும் பிடித்த இடங்கள். இப்படிச் செல்லும்போதெல்லாம் தமிழக அரசியல் வரலாறு, சமூகச் சூழல், முக்கியமான பிரச்சினைகள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வருவார். தமிழ்நாட்டிலும் அவருடைய கட்சியைக் கட்டினாலும், திருமாவளவனையும் விசிகவையும் மிகுந்த மதிப்போடு பார்த்தவர் அவர். ‘நீங்களெல்லாம் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும்’ என்று அடிக்கடி என்னிடம் சொல்பவர், ஒருமுறை தலைவர் கருணாநிதியிடமே இதைச் சொல்லிவிட்டார். அந்த அளவுக்குத் தனிப்பட்ட அளவிலும் என்னிடம் அன்பு செலுத்தியவர் அவர்.
- ச.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.inச.கோபாலகிருஷ்ணன்