Last Updated : 11 Oct, 2020 08:04 AM

Published : 11 Oct 2020 08:04 AM
Last Updated : 11 Oct 2020 08:04 AM

ராம் விலாஸ் பாஸ்வான்: தனித்துவமான ஓர் அரசியல் பயணம்

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் (1946-2020) மறைவு பிஹார் மாநிலத்துக்கு வெளியே தேசிய அரசியல் வெளியிலும் ஓர் பேரிழப்பு. ஏறக்குறைய 50 ஆண்டு காலம் அரசியல் துறையில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தவர் அவர். எம்ஏ பட்டம் பெற்று பின்பு சட்டப் படிப்பையும் படித்தவர். காவல் துறை துணைக் கண்காணிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அந்தப் பணியில் சேராமல் அரசியல் களத்தில் இறங்கினார். அந்தக் காலகட்டத்து இளைஞர்களைப் போலவே அவரும் ஜெயப்ரகாஷ் நாராயணின் தாக்கத்துக்கு ஆளானவர்.

அரசியலில் அடியெடுத்த உடனேயே 1969-ல் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார். நெருக்கடிநிலையில் சிறைவாசம் அனுபவித்தார். நெருக்கடிநிலை நீங்கியதும் ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கட்சியின் சார்பில் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 4.2 லட்சம் என்ற மிக அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றதற்காக கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றது. 1989-ல் அந்தச் சாதனையை அவரே முறியடித்து 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மொத்தம் ஒன்பது முறை மக்களவை உறுப்பினர். ஒரே தொகுதியிலிருந்து எட்டு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ல் மட்டும் தோல்வியைத் தழுவினார். 2019 தேர்தலிலும் அவர் போட்டியிட விரும்பவில்லை. ஆக, இந்த இரு சந்தர்ப்பங்களில் மட்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

முதல்வர் கனவு

சம்யுக்த சோஷலிஸ்ட், ஜனதா, ஜனதா தளம் என தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த பாஸ்வான், 2000-ல் லோக் ஜனசக்தி கட்சியைத் தொடங்கினார். பிஹாரில் அவருடைய லோக் ஜனசக்தி கட்சிக்கு 6.5% வாக்குகளே இருந்தாலும், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் இருவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது முக்கியத் தலைவராக அவரே இருந்தார். பிஹாரின் முதல்வர் ஆகும் கனவு அவருக்கு இருந்தது; நிச்சயமாகத் தன்னுடைய மகன் அந்த இடத்தில் அமர்வார் என்றும்கூட அவர் நம்பினார். லாலு - நிதீஷ் இருவருக்கும் இடையிலான போராகச் சுருங்கிவிட்டிருந்த பிஹார் அரசியல் களத்தைத் தங்கள் வசம் கொண்டுவர முற்பட்ட தேசிய அரசியல் கட்சிகள் பாஸ்வானைப் பயன்படுத்தின; பதிலுக்கு பாஸ்வானும் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டார்.

தேசிய அரசியலில் 1989 தொடங்கி 2020 வரையில் வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி என்று ஆறு பிரதமர்களின் அமைச்சரவைகளில் அங்கம் வகித்தவர் பாஸ்வான். அதன் காரணமாகவே, தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தெரிந்தவர் என்று அவரது அரசியல் எதிரிகளாலேயே சொல்லப்பட்டார். ஆனால், அவர் எந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் எதிர்க் கூட்டணியோடும் தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பராமரிப்பவராக இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோதும் சோனியாவுடன் நட்பு பாராட்டினார். அதனாலேயே, குஜராத் கலவரங்களைக் காரணம் காட்டி, 2002-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி 2004-ல் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் அவரால் இடம்பெற முடிந்தது; பின்னர், அங்கிருந்து விலகி 2014-ல் மோடி தலைமையிலான அரசிலும் இடம்பெற முடிந்தது.

ரயில்வே, தொழிலாளர் நலம், நிலக்கரி, தொலைத்தொடர்பு, ரசாயனம் மற்றும் உரம், உணவுத் துறை என்று பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். தற்போதைய மத்திய அமைச்சரவையில் அவர் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளின் அமைச்சராகப் பதவியில் இருந்தார். அரசியல் வாழ்வின் தொடக்கக் காலத்தைப் போல அவருடைய நாயக அந்தஸ்து நீண்ட காலத்துக்குத் தொடராமல் போனதற்கும் அவருடைய அணி மாறும் கலாச்சாரமும் பதவிக்கான தேட்டமுமே காரணமாக இருந்தது. அதேசமயம் எந்தத் துறையில் இருந்தாலும், அடித்தட்டு மக்களுக்குத் தன்னாலானதைச் செய்பவராகவும் இருந்தார் அவர்.

தலித் அரசியலின் சிதைவு

பிஹாரில் சோஷலிஸ முழக்கத்தோடு, பல சமூகங்களின் கதம்பம்போல உருவான ஜனதா தளத்தின் அரசியல் தனக்குப் பெரிய வாய்ப்பாக அமையும் என்று கருதினார் பாஸ்வான். மாறாக, லாலு அதைத் தனதாக்கிக்கொண்டார். அடுத்த இடத்தில் நிதீஷ் உருவாகிவந்தார். சொந்தக் கட்சி மட்டுமே தனக்கான வாகனமாக இருக்க முடியும் என்று எண்ணிய பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சியைத் தொடங்கினார். பத்துக் கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிஹாரில் 15% வாக்கு வங்கியைக் கொண்ட தலித்துகளின் முகமாகத் தன்னை அவர் முன்னிறுத்திக்கொண்டாலும், நாடு தழுவிய தலித் அரசியலோடு அவரால் இணைந்து செல்ல முடியவில்லை.

தலித்துகளின் நாடு தழுவிய தலைவர் எனும் பிம்பம் மாயாவதிக்குக் கிடைத்தபோது அதை ஒதுக்கித்தள்ளினார் பாஸ்வான். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைப் போலவே பாஸ்வானும் தன்னுடைய லோக் ஜனசக்தி கட்சியை எல்லா மாநிலங்களிலும் விஸ்தரிக்க முற்பட்டார். ஆனால், மாயாவதி சார்ந்த ஜாதவ் சமூகத்துடன் ஒப்பிட எண்ணிக்கையில் குறைவானது பாஸ்வான் சார்ந்த துசாத் சமூகம் என்பதோடு, ஜாதவ் சமூகம்போல எண்ணிக்கையில் மாநிலங்களைக் கடந்து விரிந்த சமூகமும் அல்ல என்பது பாஸ்வானுக்குப் பெரிய சறுக்கலாக இருந்தது.

பிஹாரிலுள்ள பட்டியலின சாதிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகையைக் கொண்ட துசாத் சமூகத்தைத் தாண்டியும் தங்கள் தலைவராகப் பார்க்கப்பட்ட பாஸ்வான் ஒருகட்டத்தில் அவர் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியாக மட்டுமே பார்க்கப்படலானார். பட்டியலின சாதிகளிலேயே வெவ்வேறு தலைவர்கள் உருவானார்கள். பாஜக துணையோடு ஆட்சிக்கு வந்த நிதீஷ் தலித் வாக்குவங்கியை உடைக்கும் வகையில் உருவாக்கிய ‘மஹாதலித்’ எனும் புதிய அடையாளம் ஒருசமயத்தில் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க 22 பட்டியலினச் சாதிகளில் பாஸ்வானின் துசாத் சமூகத்தைத் தவிர 21 சாதிகளையும் உள்ளடக்கியபோது இது மேலும் பட்டவர்த்தனம் ஆனது (பின்னர் துசாத் வாக்குவங்கியையும் உடைக்க அவர்களையும் ‘மஹாதலித்’ வட்டத்துக்குள் கொண்டுவந்தார் நிதீஷ்). ‘மஹாதலித்’ வாக்கு அரசியலிலிருந்து உருவான ஜிதன் ராம் மாஞ்சியை நிதீஷ், பாஜக இரு தரப்புகளின் துணையுடன் பாஸ்வானுக்கு சவால் விடும் வகையில் உருவானார்.

மேலும், லாலுவைப் போலவே குடும்ப அரசியல் குற்றச்சாட்டிலிருந்து பாஸ்வானாலும் தப்ப முடியவில்லை. தற்போதைய மக்களவையில் லோக் ஜனசக்தியின் ஆறு உறுப்பினர்களில் இரண்டு பேர் அவரது சகோதரர்கள், மற்றொருவர் அவரது மகன் சிராக் பாஸ்வான். மகனை முதலில் சினிமாவில் நடிக்கவைத்து கதாநாயகனாக்கத்தான் முயன்றார். அந்த முயற்சி பலிக்காதததால், அரசியலில் தனக்கு வாரிசாக்கினார். இது எல்லாமுமாக சேர்ந்து தலித் அரசியல் என்று கட்சி தொடங்கியவர் கடைசியில் குடும்ப அரசியலுக்குள் கட்சியைச் சுருக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது. ஆனால், இவ்வளவைத் தாண்டியும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி அதை செல்வாக்கோடு வைத்திருந்தார் பாஸ்வான். லாலு, நிதீஷோடு ஒப்பிடத்தக்க தலைவராகவே எல்லாக் காலங்களிலும் அவர் இருந்தார். ஒரு சிறிய கட்சியின் தலைவராக இருந்தபோதிலும் நாடெங்கும் அறியப்பட்ட தலைவராகவே இருந்தார். எப்போதும் அவருடைய வீட்டுக் கதவுகள் அனைவருக்குமே திறந்திருந்தன. அவரது அரசியல் வாழ்வின் வெற்றிக்கு அதுவே காரணமாகவும் அமைந்திருந்தது. எதிர்க்கட்சியினரும்கூட அவரிடம் உதவிகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடிந்தது.

முக்கியமான பங்களிப்புகள்

பாஸ்வானின் அரசியல் பயணத்தில் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது அவர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலம். கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவே மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அவரும் குறிப்பிடத்தக்க பங்களித்தார். அப்போது, பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு அவரே முக்கியக் காரணமாக இருந்தார். ஒரு சோஷலிஸ்ட்டாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் தலித் அரசியலின் முன்னோடியாக அவர் கொண்டாடப்படுவதற்கு இந்தச் சட்டத்தின் உருவாக்கம் ஒரு முக்கியக் காரணம். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டதன் பின்னணியிலும் அவர்தான் இருந்தார்.

ஏழ்மையான பின்னணியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உயர் கல்வி பயின்று அரசியலில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக்கொண்டவர் பாஸ்வான். ஜெகஜீவன் ராமுக்குப் பிறகு பிஹாரிலிருந்து தேசிய அரசியலில் முத்திரை பதித்த தலித் தலைவர் அவர். கூட்டணி ஆட்சிக்குப் பேர் போன பிஹார் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், இம்முறை இரண்டு பிரதான கூட்டணிகளையும் புறக்கணித்து, தனக்கென்று தனிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அவருடைய மகன். பாஸ்வான் வளர்த்தெடுத்த கட்சியும், அதன் அரசியல் பாதையும் எத்தகைய வலுவைக் கொண்டிருக்கிறது என்பதை அவருக்குப் பிறகான லோக் ஜனசக்தி கட்சியின் பயணமே சொல்ல வேண்டும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x