Published : 09 Oct 2020 15:51 pm

Updated : 09 Oct 2020 15:51 pm

 

Published : 09 Oct 2020 03:51 PM
Last Updated : 09 Oct 2020 03:51 PM

இயற்கை அன்னையையும் அமெரிக்கர்களையும் ஏமாற்றும் ட்ரம்ப்

trump-deceiving-mother-nature-and-americans

‘கோவிட்-19’ பெருந்தொற்றுடனான தனது குறுகிய கால அனுபவத்திலிருந்து அதிபர் ட்ரம்ப் கற்றுக்கொண்டது என்ன என்பதுதான் இன்றைய மிக முக்கியக் கேள்வி. ஒருபோதும் கற்றுக்கொள்ளாத அதேசமயம் ஒருபோதும் மறந்துவிடாத தலைவர்களில் ட்ரம்ப்பும் ஒருவர். குடிமக்களாகிய நாம் (அமெரிக்கர்கள்) குறிப்பாக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் இதுவரை கற்றுக்கொண்டது என்ன என்பது முக்கியமான இன்னொரு கேள்வி.

ஏனெனில் ட்ரம்ப் மீதான விவாதம் முடிந்துவிட்டது.தீர்ப்பு இதுதான்: அவர் தன்னை சூப்பர்மேனாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால், ‘சூப்பர்ஸ்ப்ரெடர்’ (தொற்று அதிகம் பரவ வழிவகுத்தவர்) ஆகத்தான் மாறியிருக்கிறார். வைரஸைப் பரப்புவது மட்டுமல்ல; ஒரு பெருந்தொற்று சமயத்தில் உலகத்தை அணுகும் விஷயத்தில் அவர் தனக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் ஆபத்தான வகையில் தவறிழைத்திருக்கிறார். அவரை மீண்டும் அதிபராகத் தேர்வுசெய்வது என்பது அமெரிக்கர்களின் ஒட்டுமொத்தப் பைத்தியக்காரச் செயலாக அமைந்துவிடும்.

ஆனால், நான் அப்படிக் கருதுவதோ, ஒருவேளை நீங்களும்கூட அப்படிக் கருதுவதோ ஒரு விஷயம் அல்ல. ட்ரம்ப்பின் வாக்காளர்கள் அப்படிக் கருதுவார்களா? சிறியதும் பெரியதுமான எல்லா விஷயங்களிலும் ட்ரம்ப் செய்த மிக அடிப்படையான பிழைகளை அவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில், ஜோ பிடன் திறமையாகப் பேசுவதைப் பொறுத்துதான் அது சாத்தியமாகும்.

ட்ரம்பின் சிறிய தவறுகள்

‘சிறிய விஷய’ங்களின் பட்டியல் மிக நீளமானது: ஒரு பெருந்தொற்று காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல; அறிவின் அடையாளம்.

பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது என்பது கலாச்சார அடையாளம் அல்ல. “நான் ஒரு பொறுப்பான நபர். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமியிடமிருந்து என்னையும் எனது தாத்தா – பாட்டியையும்; என்னையும் எனது வாடிக்கையாளரையும்; என்னையும் எனது சக ஊழியரையும்; என்னையும் எனது அண்டை வீட்டுக்காரரையும் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்புணர்வு கொண்ட நபர் நான்” என்பதைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாத, பொது அறிவு சார்ந்த பாதுகாப்பு உணர்வு அது. வலிமை என்பது பெருந்தொற்றுக் காலத்தில் ஆண்மைத்தன்மையை வெளிக்காட்டுவது அல்ல.

பெருந்தொற்று சமயத்தில் முகக்கவசம் அணிவதை எதிர்ப்பது என்பது சுதந்திரத்தைப் பேணிக் காப்பது ஆகாது. பொதுமுடக்கம் என்பது நாம் ஒன்றுகூடுவதற்கான, பேசுவதற்கான உரிமையை நசுக்குவது அல்ல. சிவப்பு மாநிலங்களை (குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்கள்) ஒப்பிட நீல மாநிலங்களில் (ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவானவை) கரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. விஞ்ஞானிகள் அரசியல்வாதிகள் அல்ல; அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகள் அல்ல. எல்லாமே அரசியல் அல்ல. ‘லைஸால்’ என்பது தரையைச் சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினிதான், உங்கள் நுரையீரலைச் சுத்தம் செய்யக்கூடியதல்ல. முகக்கவசமா அல்லது வேலையா என்பதைத் தேர்வுசெய்வதல்ல நமது நோக்கம். வேலை செய்வதற்கு முகக்கவசம் அவசியம் என்பதே நமது நோக்கம். முகக்கவசம் அணிவதை உங்கள் ஊழியர்கள் அதிகமாகப் பின்பற்றினால், உங்கள் தொழில் தொடர்ந்து இயங்கும், செழிப்படையும்.

பெரிய தவறுகள்

ட்ரம்ப் செய்த பெரிய தவறுகள் இரு மடங்கு ஆகும். முதல் தவறு, பெருந்தொற்று சமயத்தில் நாட்டை வழிநடத்துவதில் அவர் செய்தது. பொதுவாகவே தலைமைப் பண்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். பெருந்தொற்று சமயத்தில் அது வாழ்வா சாவா எனும் விஷயமாகிவிடுகிறது. ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், அதிபர்கள், பள்ளி மேற்பார்வையாளர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள், மேயர்கள், ஆளுநர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என எல்லா மட்டத்தைச் சேர்ந்த தலைவர்களிடமும், முன்பு எப்போதையும்விட இன்று வழிகாட்டும் தன்மை அதிகமாக வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பெருமளவிலான மக்கள் குழப்பமான மனநிலையிலும், ஆபத்தை உணராமலும் இருக்கிறார்கள்.

பெருந்தொற்றுக் காலத்தில் மிக மோசமான தலைவராக, தார்மிகப் பொறுப்பற்ற ஒரு தலைவராகக் காட்சியளிக்கிறார் ட்ரம்ப்.

“ஒரு நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வாழ வேண்டிய சூழல் என்று வரும்போது மக்கள் ஒருவிதமான மனநிலைக்குச் செல்ல முனைகிறார்கள். தனிமனிதச் சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயல்பாகவே ஆபத்தை எதிர்கொள்ளத் தயங்காதது போலவும் நடந்துகொள்கிறார்கள்” என்கிறார் டோவ் சீட்மேன். விழுமியங்களின் அடிப்படையிலான தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் எல்.ஆர்.என் மற்றும் ஹவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சொஸைட்டியின் நிறுவனத் தலைவர் இவர்.

எப்படியானவர் ட்ரம்ப்?

மக்கள் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான விதத்திலும், அதை எதிர்கொள்ளும் விதத்திலும் இப்படியான எண்ணப்போக்கை அவர்களிடம் வெளிப்படையாகவே பார்க்க முடியும் என்று சொல்லும் சீட்மேன், “இப்படியான எண்ணப்போக்கு கொண்டவர்களின் பட்டியலில் முதலாவதாக வருபவர்களை இப்படி வகைப்படுத்தலாம்: தாங்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்றும், தவறான இடத்தில், தவறான நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய நோய்க்கிருமியின் தொற்றுக்குள்ளானதாகவும் கருதுபவர்கள் அவர்கள்” என்கிறார்.

மேலும், “இரண்டாவதாக, மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகத் துணிச்சலுடன் வைரஸை நோக்கி ஓடி, தொற்றுக்குள்ளான முன்னணித் தொழிலாளர்கள், நாயகர்களைச் சொல்லலாம். மூன்றாவதாக, பொறுப்பற்ற தனிமனிதர்கள். முகக்கவசம் அணியாமல், 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்பவர்கள்” என்று சொல்லும் சீட்மேன் இறுதியாகக் குறிப்பிடுவது தலைவர்களை!

“அவர்கள் அதிகாரமிக்க பதவிகளில் இருப்பவர்கள். உயிர்காக்கும் வழிகாட்டுதல்களைத் தருவார்கள் என மக்களால் நம்பப்படுபவர்கள். நெருக்கடியான தருணத்தில் உரிய வகையில் நடந்துகொண்டால், மக்கள் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தங்களின் அறிவுரைகளுக்குச் செவிமடுப்பார்கள் என்றும், தங்களை முன்மாதிரியாகக் கருதிப் பின்பற்றுவார்கள் என்றும் உணர்ந்து சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். பிற தலைவர்களோ அவ்வாறு மக்களை வழிநடத்த மாட்டார்கள். அறிவியலை அலட்சியம் செய்யுமாறு மக்களை ஊக்கப்படுத்துவதுடன், அவர்களைக் காக்கும் கடமையிலிருந்தும் தவறிவிடுவார்கள். இது தார்மீகப் பொறுப்பற்ற தன்மை” என்கிறார் சீட்மேன். அப்படியானவர்தான் ட்ரம்ப்.

தவறுக்குத் துணை போனவர்கள்

முடிவாக, “இன்றைக்குத் தலைமைப் பண்புக்கும், நல்ல நிர்வாகத்துக்கும் உண்மையாகவே தட்டுப்பாடு நிலவுவதைப் பார்க்கிறோம். யார் மீது நம்பிக்கை வைப்பது, எதை நம்புவது என மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால், குழப்பாமல் உண்மையையே உலகுக்கு வழங்கும் தலைவர்களும், நம்பிக்கையைச் சிதைக்காமல் அதிக நம்பகத்தன்மையை உலகுக்கு வழங்கும் தலைவர்களும் முன்னெப்போதையும்விட தற்போது முக்கியத்துவம் பெறுகின்றனர். அப்படியான தலைவர்களைத்தான் நாம் போற்றுகிறோம். அவர்களைத்தான் வரலாறு நல்லவிதமாக நினைவுகூர்கிறது” என்று நிறைவுசெய்கிறார் சீட்மேன்.

ட்ரம்ப்பும், ‘ஃபாக்ஸ் நியூஸ்’ சேனலும், ஃபேஸ்புக்கும் இந்தப் பட்டியலில் இடம்பெறப்போவதில்லை. உண்மைகளை எந்த அளவுக்குக் குழப்பினார்கள் என்றும், நம்பகத்தன்மையை எந்த அளவுக்குக் குலைத்தார்கள் என்றும்தான் அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். கூடவே புனைவுகளின் மத்தியில் உண்மைகளைப் பிரித்தறிந்துகொள்ளும் ஆற்றல் நிறைந்த நமது அறிவுசார் எதிர்ப்பு சக்தியிலும், ஒன்றிணைந்து ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆற்றல் நிறைந்த சமூக ரீதியிலான நமது எதிர்ப்பு சக்தியிலும் எந்த அளவுக்குச் சமரசம் செய்துகொண்டார்கள் என்றும் அவர்கள் நினைவுகூரப்படுவார்கள்.

இயற்கை அன்னையின் ஆற்றல்

ட்ரம்ப் முற்றிலும் தவறு செய்த இரண்டாவது பெரிய விஷயம், இயற்கை அன்னை. ஒருபோதும் இயற்கை அன்னையுடன் மோதக் கூடாது!

பெருந்தொற்று என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனால், உலகத்தை இயற்கை அன்னையின் வழியாக அல்லாமல் சந்தை வழியாகவே பார்க்கிறார் ட்ரம்ப். அவரும் அவரது ஆலோசகர்களும் சந்தை வணிகத்தில் பதற்றம் உருவாகிவிடாத வகையில் கரோனா வைரஸின் ஆபத்தைக் குறைத்தே மதிப்பிட்டுப் பேசிவந்தனர். சந்தை வணிகத்தின் வளர்ச்சியானது மீண்டும் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் என்பதே இதற்குக் காரணம்.

வெள்ளை மாளிகையில் மார்ச் மாதம் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, கரோனா வைரஸ் பரவல் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய நிருபரை அதிபரின் ஆலோசகர் கெல்யானி கான்வே வெளிப்படையாகவே பரிகாசம் செய்தார்.

“அமெரிக்காவில் இந்த வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று அந்த நிருபரிடம் சீறினார். “இப்படிச் சொல்ல நீங்கள் என்ன மருத்துவரா அல்லது வழக்கறிஞரா? இதெல்லாம் தவறு. நீங்கள் எதையோ சொல்வீர்கள். அதெல்லாம் உண்மையாகி விடாது” என்று அவர் சொன்னார்.

ஆனால், அதுதான் உண்மை. ட்ரம்ப்பும் அவரது ஆலோசகர்களும் கரோனா வைரஸின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தபோது, அமைதியாகவும், தவிர்க்க முடியாத அளவுக்குத் தீவிரமாகவும், அதிவேகமாகவும், இரக்கமற்ற வகையிலும் அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸைப் பரப்பிக்கொண்டிருந்தாள் இயற்கை அன்னை. மாநில எல்லைகள், அரசியல் சார்பு என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அந்த வைரஸ் பரவியது. தற்போது கான்வேவும் கூட கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இயற்கை முன்வைக்கும் கேள்விகள்

ஒரு பெருந்தொற்று காலத்தில் உங்களிடமும் உங்கள் தலைவரிடமும் இயற்கை அன்னை மூன்று அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறாள்.

“1.நீங்கள் பணிவானவரா? என் வைரஸை மதிக்கிறீர்களா? அதை நீங்கள் மதிக்காவிட்டால், அது உங்களையும் உங்கள் அன்புக்குரியவரையும் பாதிக்கக்கூடும்.

2. உங்கள் தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியில் ஏதேனும் குறை இருக்கிறதா என்பதைக் கண்டறிய நான் உருவாக்கிய வைரஸ் இது. இதை எதிர்கொள்வதில் நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்களா?

3. இந்த வைரஸுக்கான உங்களது எதிர்வினை வேதியியல், உயிரியல், இயற்பியலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா? ஏனென்றால் இவையெல்லாம் அடங்கியவள்தான் நான். ஒருவேளை உங்களது எதிர்வினை அரசியல், சித்தாந்தம், சந்தை வணிகம், தேர்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது எனில், நீங்கள் தோல்வியடைவீர்கள். அதற்கு உங்கள் சமூகம்தான் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.”

இவ்விஷயத்தில் ட்ரம்ப் பணிவானவராக இருக்கவில்லை. வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய அளவிலான ஒத்துழைப்பை அவர் கோரவில்லை. வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது எதிர்வினை அமையவில்லை. மாறாக, சித்தாந்தம், அரசியல், சந்தை மற்றும் தேர்தலின் அடிப்படையிலேயே அது அமைந்தது. அதற்காக மிகப் பெரிய விலையை நமது தேசம் (அமெரிக்கா) கொடுத்திருக்கிறது.

தெரிவுகளும் தீர்வும்

நம்மிடம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன என நாம் நம்ப வேண்டும் என்று ட்ரம்ப் விரும்பினார். முதலாவது: வணிகச் சந்தையைத் திறந்துவிடுவது, கூடவே கரோனா வைரஸை அலட்சியம் செய்வது (இதைத்தான் பரிந்துரை செய்வதாக ட்ரம்ப் சொல்லிக்கொண்டார்). இரண்டாவது: வைரஸுக்குப் பயந்து வணிகச் சந்தையை மூடிவிடுவது (இதைத்தான் ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள் என்று ட்ரம்ப் சொன்னார்).

இது ஒரு மோசடி. புத்திசாலித்தனமாகப் பொருளாதார நடவடிக்கைகளைத் திறந்துவைப்பது அல்லது பொறுப்பற்ற முறையில் அலட்சியத்துடன் அதைத் திறந்துவைப்பது ஆகியவைதான் நம்மிடம் இருந்த உண்மையான தெரிவுகள்.

முதல் தெரிவின்படி முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றைக் கடைப்பிடித்து மக்கள் கடைகளுக்குச் சென்று வரலாம், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லலாம், அவசியமான வேலைகளுக்காக மக்கள் வெளியில் செல்லலாம். இது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் வணிகத்தைத் திறந்திருக்கச் செய்ய முடியும். மக்கள் தொற்றுக்குள்ளாவதையும் தவிர்க்க முடியும். ஜோ பிடன் இதைத்தான் பரிந்துரைக்கிறார்.

முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வது, பணிக்கு அல்லது பள்ளிக்குச் சென்றுவிட்டு தொற்று அபாயத்துடன் வீடு திரும்புவது எனும் நிலையில் மக்களை வைத்தபடி, பொறுப்பற்ற முறையில் பொருளாதார நடவடிக்கைகளைத் திறந்து வைப்பது இரண்டாவது தெரிவு. அதைத்தான் ட்ரம்ப் பரிந்துரைக்கிறார்.

இயற்கை அன்னையையோ அமெரிக்கர்களையோ ட்ரம்ப் மதித்ததே இல்லை. இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம், அவரது ஆதரவாளர்கள் இதை உணர வேண்டும் என்றும், அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வது மட்டும்தான். அதைப் பொறுத்துத்தான் பல அமெரிக்கர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் அமையும்!

நன்றி: தி நியூயார்க் டைம்ஸ், தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்,
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

தவறவிடாதீர்!

AmericansMother NatureTrumpஇயற்கை அன்னைஅமெரிக்கர்கள்ட்ரம்ப்சூப்பர்ஸ்ப்ரெடர்அமெரிக்காடொனால்ட் ட்ரம்ப்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x