Published : 09 Oct 2020 07:33 AM
Last Updated : 09 Oct 2020 07:33 AM

எம்.பக்தவத்சலம்: ஒரு தோல்வியின் படிப்பினை

அரசியல் வானில் சூரிய சந்திரர்களுக்கு நடுவில் நட்சத்திரங்கள் அரிதாகத்தான் கவனம் பெறுகின்றன. காமராஜருக்கும் அண்ணாவுக்கும் இடையே தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த எம்.பக்தவத்சலமும் (1897-1987) அப்படியொரு நட்சத்திரமாகிவிட்டார். திறமையிலும் தியாகத்திலும் யாருக்கும் குறையாதவர் என்றாலும், அவர் தமிழக வரலாற்றில் மிகவும் அரிதாகவே நினைவுகூரப்படுகிறார்.

பக்தவத்சலத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது தாய்மாமா சி.என்.முத்துரங்க முதலியாரைப் பற்றியும் குறிப்பிடுவது ஒரு வழக்கம். தென்னிந்தியாவின் அரசியல் சூழல் பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்று அணி பிரிந்து கிடந்த காலத்தில், பிராமணர் அல்லாதார் தரப்பிலிருந்து தேசிய இயக்கத்தை வலுப்படுத்தியவர் அவர். 1934-லேயே மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை முன்மாதிரியாகக் கொண்டே பக்தவத்சலமும் அரசியல் களத்துக்குள் அடியெடுத்துவைத்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற பக்தவத்சலம், அதைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சாகப் பங்கெடுத்தார். மும்முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட சிறைகளில் தண்டனையை அனுபவித்தார். அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடுவதால் அந்த ஆட்சியில் சிறையில் எந்தவிதமான சலுகைகளையும் கோரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்.

நல்ல நிர்வாகி

1964-ல் காமராஜர் காங்கிரஸின் தேசியத் தலைமையை ஏற்றுக்கொள்ள அவரையடுத்து தமிழக முதல்வராக பக்தவத்சலம் பொறுப்பேற்றுக்கொண்டார். உட்கட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக முறையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். ஆனால், வாய்ப்பும் பெரும்பான்மையும் மட்டுமே அவர் முதல்வரானதற்குக் காரணமல்ல. 1937-ல் ராஜாஜியின் முதல் அமைச்சரவையிலேயே அங்கம் வகித்தவர் அவர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமாக காங்கிரஸ் அமைச்சரவைகளில் விவசாயம், கல்வி, பொதுப் பணித் துறை, அற நிலையத் துறை என்று பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சரவை அனுபவம் பெற்றவர். நல்ல நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.

1946-ல் அவர் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோதுதான் கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டம் உருவானது. கொங்கு மண்டலத்தின் முன்னேற்றப் படிகளில் அது முக்கியமான ஒன்று. அவர் விவசாயத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான், கோவை விவசாயக் கல்லூரி மேம்படுத்தப்பட்டது. அதுவே இன்று பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான கோயில்களைப் புனரமைத்தார். அதிக வருமானம் கிடைக்கும் கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தருமபுர ஆதீனம் அவருக்கு நல்லறங்காவலர் என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கோயில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு என்று அந்த நாட்களில் எந்தக் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.

தொழில் துறையும் கல்வியும்

ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திர பிரதேசம் பிரிந்து சென்றதால் வேளாண் உற்பத்தி சரிந்த நிலையில், தமிழகத்தைத் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உயர்த்தியதில் காமராஜர் தலைமையிலான சி.சுப்ரமணியன், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன் கூட்டணிக்கு முக்கியப் பங்குண்டு. பக்தவத்சலம் முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவரை முழுச் சுதந்திரத்துடன் பணியாற்ற பக்தவத்சலம் அனுமதித்தார். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியில் பக்தவத்சலம்-வெங்கட்ராமன் நட்புறவின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியது. முதலமைச்சருக்கும் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருக்கும் இடையிலான உறவுக்கும்கூட அது ஒரு முன்னுதாரணம்.

பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில்தான் உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்காகப் பணியிடைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. பின்னாட்களில், தமிழக மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தங்களது உயர் படிப்புகளைத் தொடர இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதே நேரத்தில், கல்லூரிகளில் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான். புகுமுக வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்கு மானியங்களை அளித்து ஊக்குவித்தார். இவர் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம்தான் இன்று பாடநூல் நிறுவனமாக விரிந்துபரந்துள்ளது.

வெள்ளையனே வெளியேறு காலகட்டத்தில் காங்கிரஸிலிருந்து ராஜாஜி வெளியேறியபோது, காமராஜருடனும் காங்கிரஸுடனும் இணைந்து நின்ற பக்தவத்சலம் இந்திரா காலத்தில் காங்கிரஸ் உடைந்தபோது சி.சுப்ரமணியத்துடன் இணைந்து இந்திராவுடன்தான் நின்றார். ஆனால், இந்த முடிவுகள் எதுவும் அவரது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக எடுக்கப்படவில்லை. அவரது இறுதிக் காலத்தில் பலமுறை அவருக்கு ஆளுநர் பதவிக்கான அழைப்புகள் வந்தபோது நான் பென்ஷன்வாதியல்ல, அரசியல்வாதி என்று சொல்லி அதை மறுத்தவர் அவர்.

அரசியலில் இழந்தவர்

பக்தவத்சலத்தின் தந்தையார் இறந்தபோது அவருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் ஒரு சென்ட் அளவுகூட பக்தவத்சலத்தால் பாதுகாக்கப்படவில்லை. அரசியலுக்காக அவர் அளித்ததுதான் அதிகமே ஒழிய அங்கிருந்து பெற்றுக்கொண்டது பெயரையும் புகழையும் மட்டும்தான். அமெரிக்காவில் உயர் கல்வி முடித்த அவரது மகனுக்கு அரசுப் பணிக்குக்கூட அவர் முயலவில்லை. வட இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில்தான் அவர் பணியாற்றினார். அதேபோல, அவரது மகள்களில் ஒருவர் ஹோம் சயின்ஸ் படிக்க விரும்பினார். தந்தையின் பெயரைப் பயன்படுத்தி பரிந்துரைகள் பெறுவதற்கு அனுமதியில்லை. எனவே, வேறொரு கல்லூரியில் புவியியல் படித்தார். இன்னொரு மகள், வீட்டு வசதி வாரியத்தில் மனு போட்டிருந்தார். அது தெரிந்து இவர் தடுக்கவே கடைசியில் அவர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அவரது மகள்களில் ஒருவரும் சமூக சேவகியான சரோஜினி வரதப்பனுக்கு சட்டமன்ற மேலவை அல்லது நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் கிடைக்கலாம் என்ற வாய்ப்பு வந்தது. ஒரு வீட்டில் இருவர் பதவி வகிக்கக் கூடாது என்று அந்த யோசனைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். குடும்பமும் உறவுகளும் எப்போதும் எந்த உதவியும் அவரிடமிருந்து பெற முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் பக்தவத்சலம். ஆனால், மக்களுக்கு அவர் வீடும் அலுவலகமும் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தன. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் யாரும் அவரைச் சந்தித்துப் பேச முடியும். அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே சேவகர்கள் தன்னைப் பின்தொடர்வதையும் வாகனத்தில் சைரன் ஒலிப்பதையும் தவிர்த்தவர். தனிமனித வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க பல பண்புகளையும் ஒருங்கே பெற்ற பக்தவத்சலம் அரசியலில் தோல்வியுற்றதற்கு முக்கியக் காரணமும்கூட அவரது பண்புகளில் ஒன்றுதான். கட்சிக்கும் தலைமைக்கும் அவர் காட்டிய அளவுகடந்த விசுவாசமே அது.

தோல்வியின் காரணங்கள்

காமராஜருக்குப் பிறகு கட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மையைப் பெற்றே பக்தவத்சலம் முதல்வரானார். ஆனால், காமராஜரின் அமைச்சரவை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் அவரைப் பின்தொடர்ந்தது. ஒரு முதல்வராக அவர் தன்னிச்சையாக முடிவெடுக்காத நிலையில் இருந்தார். அன்றைய காங்கிரஸின் தேசியத் தலைமை எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தலையசைத்தார். மிக முக்கியமாக, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மொழிப் போராட்டங்களை அவர் கையாளத் தொடங்கியபோது அவருடைய ஆட்சி மூர்க்கமானது. ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட தவறுகளை அடுத்து வந்த தேர்தலிலும்கூட அவரால் சரிசெய்துகொள்ள முடியவில்லை. அவர் பரிந்துரைத்த வேட்பாளர்களின் பட்டியல் புறந்தள்ளப்பட்டது. கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் கட்சியின் தேசியத் தலைமையே முடிவுசெய்தது. தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியலான தமிழ் உணர்வு பக்தவத்சலத்தின் ஆட்சி, அவருடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளின் ஆட்சிக் கனவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

எவ்வளவு நல்ல நிர்வாகியாக இருந்தாலும், தியாகங்களை செய்தாலும் ‘மக்களா; கட்சியா?’ என்ற சூழல் வரும்போது அரசியலில் மக்கள் பக்கம் நின்று அவர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களே மக்கள் மனதில் நிலைத்திருப்பார்கள் என்பதற்கான வரலாற்றுப் பாடம் ஆகிப்போனார் பக்தவத்சலம்.

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

அக்.9: எம்.பக்தவத்சலம் பிறந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x