Published : 08 Oct 2020 07:56 am

Updated : 08 Oct 2020 07:56 am

 

Published : 08 Oct 2020 07:56 AM
Last Updated : 08 Oct 2020 07:56 AM

ஐந்தாவது தூணை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா?

fifth-pillar

சித்தார்த் பை

சிறிய நகரங்களெல்லாம் எதிரொலிக்கும் அறைகள் போன்று குறுகிய உலகங்களாகவே வெகுகாலமாக இருந்தன. அமெரிக்காவில் நான் படிக்கச் சென்றபோது நியூயார்க் மாநிலத்தின் ஒரு சிறிய நகரத்தையே தேர்ந்தெடுத்தேன். எனினும், அங்குள்ள பல்கலைக்கழகமானது உலகப் புகழ்பெற்றதாக இருந்தது. நான் சேர்ந்தபோது அங்கு செய்திகள் என்பவையே மிகக் குறைவாக இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்துபோனேன். அங்கு வெளிவந்த ‘டெமாக்ரட் & குரானிக்கில்’ என்ற உள்ளூர்ப் பத்திரிகை அந்தப் பிரதேசத்தின் செய்திகளை மட்டுமே தந்தது. உலக அளவிலான செய்திகளை மட்டுமல்ல, அமெரிக்க அளவிலான செய்திகளைக்கூட அதில் பார்க்க முடியாது. இந்தியாவில் தினமும் விரிவான பல விஷயங்களைப் பேசும் பல நாளிதழ்களைப் படித்து வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு அந்தச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

என் மீது அன்புமழை பொழியும் என்னுடைய அப்பா எனக்கு ‘தி இந்து’ சர்வதேசப் பதிப்பின் சந்தாவை அன்பளிப்பாகத் தந்தார். அது வாரமொருமுறை அச்சாகி அஞ்சலில் வந்து என்னைச் சேர்வதற்கு மேலும் ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும். சிறிய துண்டறிக்கை வடிவத்தில் ஆறு பக்கம் மட்டுமே அது இருக்கும். எனினும் சர்வதேச, இந்திய, அமெரிக்கச் செய்திகள் பற்றி எனக்கு மிகவும் அவசியமான பார்வையை அது வழங்கியது.

பாரபட்சமான செய்திகள்

அமெரிக்க செய்தித்தாள்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த தசாப்தத்துக்கு முந்தைய தசாப்தமான 1980-களில் சின்னச் சின்ன நகரங்களுக்கென்றே நூற்றுக்கணக்கான செய்தி நிறுவனங்கள் இருந்தன, பல்வேறு மொழிகள் காணப்படும் தற்போதைய இந்தியாவில் காணப்படுவது போன்றே. இவை எல்லாவற்றையும் இணையம் அழித்தொழித்துவிட்டது. உலகின் அத்தனை மூலைமுடுக்குகளிலிருந்தும் வரும் பல்வேறுபட்ட பெரும் அளவிலான செய்திகளைப் பெறுவதற்கு ஜனநாயகரீதியில் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், இதனால் சிறிய நகரங்களும் கிராமப்புறங்களும் தங்களுக்கான சிறு உலகங்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்றும் நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், இணையமோ அதற்கு மாறான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டதைவிட குறைவாகவே செய்தி நிறுவனங்கள் தற்போது காணப்படுகின்றன.

இதில் கேலிக்கூத்து என்னவென்றால் இந்த நிறுவனங்கள் யாவும் செய்தி நிறுவனங்கள் அல்ல; அவையெல்லாம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களே. இவற்றுக்கு இதழியல் நெறிமுறை ஏதும் கிடையாது. உண்மையைப் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். எல்லாமே ஒரு கருத்துதான்; ஆனால், அப்படித் தெளிவாக அடையாளமிடப்பட்டிருப்பதில்லை. இதன் விளைவாக, இந்த ஊடகங்களில் கிடைக்கும் செய்திகளில் பெரும்பாலானவை பாரபட்சமானவையாகவே இருக்கின்றன. தனிநபர்களின் தகவல்களை நேர்மையற்ற முறையில் விற்பது, பகைமை கொண்ட அந்நிய நாடுகள் குறுக்கீடு செய்வது போன்றவை ஒரு தேர்தலின் முடிவைக்கூட பாதிக்கக்கூடியவை. இதைவிட மோசம் எதுவென்றால் தவறானதும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான செய்திகள் மிக விரைவில் வன்முறையைத் தூண்டிவிடக்கூடியவையாகும். இந்தியாவில் இதை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் வெளியான சாதாரண விளம்பரமொன்றை யாரோ சிலர் திரித்துக் காணொளியாக வெளியிட, அது வாட்ஸ்அப்பில் வெகு வேகமாகப் பரவி வன்முறைக்கு வித்திட்டது. இதன் காரணமாக, இந்திய அரசின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வாட்ஸ்அப் வந்தது.

கடுமையான எச்சரிக்கை

ஜியோவின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்ட போட்டி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் புதிதாக 50 கோடியிலிருந்து 70 கோடிப் பேர் வரை புதிதாக இணையத்துக்குள் வந்திருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் சிறுநகரங்களையும் கிராமப்புறங்களையும் சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் இணைய அனுபவம் இந்தியாவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பாலான அமெரிக்கர்கள் தற்போது தங்களுக்கான செய்திகளை சந்தேகத்துக்குரிய இணைய மூலங்களிலிருந்து பெறுகிறார்கள். எதிரெதிர் துருவமாகக் காட்சியளிக்கும் கட்சிகளுக்கிடையிலான பிளவு மேலும் கடுமையாகியிருப்பது மிகவும் தெளிவு. சராசரி அமெரிக்கர்களின் நிலைப்பாடுகள் இப்படிக் கடுமையாக எதிரெதிர் துருவங்களாக ஆகியிருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இதுபோன்ற அதீதமான எதிரெதிர் துருவமாதல் போக்கு இன்னும் ஒருசில ஆண்டுகளிலேயே நடந்துவிடும்.

இந்த நிறுவனங்கள் துல்லியமான அல்காரிதங்களைப் பயன்படுத்துகின்றன. பயனாளிகளை அதிக நேரம் இணையத்தில் இருக்க வைப்பது, விளம்பரங்கள் மீது சொடுக்க வைப்பது போன்ற நோக்கில் இந்த அல்காரிதங்கள் உருவாக்கப்படுகின்றன. பயனாளிகள் என்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அல்காரிதம் நினைக்கிறதோ அவை தொடர்பான தகவல்கள் அள்ளிக் கொட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட செல்பேசியை ஒரு மின் வணிகத் தளத்தில் நான் ஒரே ஒரு முறை தேடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அடுத்த முறை அந்தத் தளத்தில் தேடும்போது அதே வகை செல்பேசியை இணையம் எனக்குக் காட்டும். வலதுசாரிப் பதிவுகள் மீது நான் விருப்பம் காட்டினேன் என்றால் தனிநபர்கள், நிறுவனங்கள் போன்றவர்களின் வலதுசாரிப் பதிவுகள்தான் எனக்கு அதிகமாகக் காட்டப்படும்.

இணையத்துக்குப் புதிதாக வந்திருக்கும் இந்தியர்கள் அதனுடன் பழகிக்கொண்டிருக்கும்போதே சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் எதிரொலி அறைரீதியிலான அல்காரிதங்களுக்கு (தான் சார்ந்த விஷயங்களிலேயே ஒருவர் உலவும் உலகத்துக்கு) எளிதில் இரையாகிவிடுவார். அளவுக்கதிகமாக நேரத்தை ஒருவர் சமூக ஊடகத்தில் செலவிடுவார் என்றால் வணிகப் பொருட்கள், அரசியல் நிலைப்பாடுகள் போன்றவற்றுக்கான விளம்பரங்களுக்கு அவர் எளிதில் இலக்காகிவிடுவார். இதை மற்ற அல்காரிதங்கள் உறுதிசெய்துகொள்ளும். நம்மை நெருங்கிக்கொண்டிருக்கும் இணையத்தின் பொய்த் தகவல் சூறாவளியை நாம் எப்படி அணுகுவதென்பது பற்றி நிறைய பேச முடியும். அதற்கொரு தொடக்கத்தை நான் இங்கே கொடுக்க முயல்கிறேன்.

செய்ய வேண்டிய விஷயங்கள்

முதலாவதாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாத் தரப்புகளிடமிருந்தும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையத்தில் தவறான தகவல்களும் வெறுப்புப் பிரச்சாரமும் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஈடுகொடுக்க அவை திணறிக்கொண்டிருக்கும் வேளையில் இடதுசாரி, வலதுசாரிப் பார்வைகள் இரண்டையும் அவை ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை யாரையும் திருப்திப்படுத்த முடியாது என்றாலும் நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

இரண்டாவதாக, அதுபோன்ற நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போன அமெரிக்காவைப் போலில்லாமல் இந்தியா தனது சொந்தப் பாதையை வகுத்தாக வேண்டும். இவை பல்கிப் பெருகுவதற்கு முன்பு அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அமெரிக்காவில் இந்தப் பிரச்சினைகளுக்கென்று போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை என்பதால் இந்தப் பிரச்சினைகள் ஒரு தசாப்தத்துக்கும் மேலே நீடிக்கின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மூன்றாவது நபர்களின் கருத்துகள், விஷயங்களைக் காட்டுவதைப் பொறுத்தவரை பேச்சு சுதந்திரத்தைப் பின்பற்றுகின்றன என்று அமெரிக்க நீதிமன்றங்கள் கூறுகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளில் பேச்சு சுதந்திரம் அரசமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. ஆகவே, இணையத்தில் வெளியிடப்படும் விஷயங்கள் துல்லியத்தின் அடிப்படையில் வடிகட்டப்படவும், சில சமயங்களில் நாகரிகத்தின் அடிப்படையில் வடிகட்டப்படவும், அதே நேரத்தில் பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படாத வகையிலும் இந்தியாவில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நமது நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்றுவதில்லை என்பதையும் ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டங்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவே அவை செய்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மூன்றாவது விஷயம், பெருநிறுவனங்களின் பொறுப்பேற்பு தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, ஃபேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரத்தைக் கையாளும் விதத்தில் ‘வெளிப்படையான அறிக்கை’களை வெளியிடுகிறது; கூடவே, ஃபேஸ்புக்கின் உள்விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் போன்ற ‘மேற்பார்வை குழு’வையும் அமைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மைக்காக இந்த நிறுவனங்கள் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்த எண்ணிக்கைகளெல்லாம் மூடப்பட்ட அறைக்கு உள்ளே எடுக்கப்பட்ட தீர்மானங்களைத்தான் பிரதிபலிக்கின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. வெளிப்படைத்தன்மை குறித்த நடவடிக்கைகளெல்லாம் பெருநிறுவனங்களின் ரகசியச் செயல்பாடுகளாகவே அமைகின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் தன்னகத்தே எந்த அளவுக்குப் பாரபட்சங்களைக் கொண்டிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வழியே இல்லை. அவர்களின் பிரதான அல்காரிதங்கள் விளம்பரங்களையும், விஷயங்கள் அதீதமாகத் தனிநபர்கள் தொடர்பாக இருப்பதையும் பார்க்கும்போது அவர்கள் வழங்கும் செய்திகள் பாரபட்சமற்றவையாக இருக்கும் என்பதை நம்ப முடியவில்லை. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் நம்பகமான செய்திகளுக்காகவும் பல்வேறுபட்ட பார்வைக் கோணங்களுக்காகவும் வேறு ஆதாரங்களை நாட வேண்டும் என்று இது உணர்த்துகிறது. இந்தியாவின் சிறுசிறு கிராமங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் இணையத்துக்குள் வரும்போது இது சாத்தியமா என்பது சந்தேகமே. வலுவான குறுக்கீடு நமக்குத் தேவை. மேலும், பெரிதும் பொறுப்புணர்வு கொண்ட நான்காம் தூணாக இருந்துவரும் ஊடகத்தோடு சேர்ந்து பெரும் தொழில்நுட்பத்தின் பேரில் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாத ஐந்தாவது தூணின் உருவாக்கத்தையும் நாம் காணும் காலம் இது!

- சித்தார்த் பை, சியானா கேப்பிட்டல் நிறுவனத்தின் நிறுவனர்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை


Fifth pillarஐந்தாவது தூணை நம்மால் கட்டுப்படுத்த முடியுமாஊடகங்கள்தொழில்நுட்ப நிறுவனங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author