Last Updated : 05 Oct, 2020 05:41 PM

Published : 05 Oct 2020 05:41 PM
Last Updated : 05 Oct 2020 05:41 PM

சிறகை விரிக்கும் சிராக் விலகல் வியூகம் கைகொடுக்குமா?

“எங்கள் கட்சிக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நாள்” – தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) அறிவித்த பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு இப்படித்தான் பதிலளித்தார் அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான். டெல்லியில் இந்த முடிவை அவர் அறிவித்த பின்னர் பாட்னாவில் அக்கட்சியின் அலுவலகங்கள் திருவிழாக் கோலம் கொண்டிருக்கின்றன. “எங்கள் முதல் முழு வெற்றி இது” என்று ஆர்ப்பரிக்கும் எல்ஜேபி கட்சியினர், பிஹாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக்க சிராக் பாஸ்வான் முதல்வராக வேண்டும் என்றும் முழங்குகிறார்கள்.

முறிந்த உறவு

தனித்துப் போட்டியிட முடிவெடுத்துவிட்டாலும் தொடர்ந்து பாஜகவுடனான உறவைப் பேணுவோம் என்று எல்ஜேபி கூறியிருக்கிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறியிருக்கும் எல்ஜேபி, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் நம்பிக்கையுடன் பேசியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

பிஹார் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், அதற்கு முன்னதாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது எனும் முடிவை சிராக் அறிவித்துவிட்டார். இதய அறுவை சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானின் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளும் சிராக், டெல்லியில் தனது வீட்டில் நடந்த கட்சிக் கூட்டத்தில்தான் இந்த முக்கிய முடிவை அறிவித்திருக்கிறார்.

பிணக்கின் பின்னணி

கடந்த சில மாதங்களாகவே நிதீஷ் அரசு மீது சிராக் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், பொருளாதார நிலை, கரோனா பரவலை அரசு கையாண்ட விதம் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து அரசை விமர்சித்தார். பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்று அரசியல் லாபம் பார்த்திருக்கும் பாஸ்வான் குடும்பத்தினர் அம்மக்களுக்குப் பெரிதாக உதவவில்லை என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களும் விமர்சித்து வந்தனர்.

தனது தந்தையின் உடல்நிலை குறித்து நிதீஷ் குமார் விசாரிக்காதது சிராக்குக்கு மன வருத்தத்தைத் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. தனது கடிதங்களுக்கு நிதீஷ் பதிலளிக்கவில்லை என்றும், தனது தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் சிராக்குக்கு அதிருப்தி உண்டு. புகைச்சல் முற்றிய நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் சிராக்.

தொகுதிக் கணக்குகள்

எல்ஜேபியின் இந்த முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஏற்கெனவே மனதளவில் தயாராக இருந்தது. “ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவராக சிராக் ஒருபோதும் ஆகிவிட முடியாது. ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பது இன்னொன்றை எதிர்ப்பது என்பது என்ன மாதிரியான அரசியல்?” என்று அக்கட்சித் தலைவர்கள் பொருமுகின்றனர். நிதீஷ் அரசு பட்டியலினச் சமூகத்தினருக்காக எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறம், எல்ஜேபி வெளியேறுவதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அக்கட்சியினர் கூறிவருகின்றனர். பாஜகவின் துணையே போதும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கை.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும், 121 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடலாம் என்று பேசப்பட்டுவந்தது. தனக்கான தொகுதிகளில் எல்ஜேபிக்கு பாஜக உள் ஒதுக்கீடு செய்யும் என்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திட்டமாக இருந்தது. தற்போது எல்ஜேபி வெளியேறிவிட்ட நிலையில், கூடுதல் தொகுதிகளைக் கேட்க ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டிருக்கிறது.

மறைமுகக் கணக்குகள்

பாஜகவைப் பொறுத்தவரை இந்தச் சூழல் எதிர்காலத்தில் தனக்கு நன்மை பயக்கும் என்றே கருதுகிறது. இவ்விவகாரத்தை ஆரம்பம் முதல் நிதானமாகவே அக்கட்சி கையாள்கிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சிராக் நேரடியாகச் சந்தித்துப் பேசிய பின்னரும் இது தொடர்பான நடவடிக்கைகளில் வேகம் காட்டவில்லை பாஜக.

அவரைச் சமாதானப்படுத்த அமித் ஷாவே முயன்றிருக்கிறார் என்றும், 30 தொகுதிகள் வரை எல்ஜேபிக்கு ஒதுக்க பாஜக தயாராக இருந்ததாகவும் செய்திகள் வந்தாலும் எல்ஜேபியின் வெளியேற்றம் தொடர்பாக வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் பாஜக முன்வைக்கவில்லை. சிராக் மூலம் மறைமுகமாக நிதீஷ் குமாரை வலுவிழக்க பாஜக முயல்கிறதா எனும் விவாதங்களும் நடந்துவருகின்றன.

திட்டம் என்ன?

நிதீஷ் அரசுக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடம் நிலவுவதாகக் கருதுகிறது எல்ஜேபி. அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் எடுத்திருக்கும் இந்த முடிவு நிதீஷுக்குப் பின்னடைவைத் தரும் என்றும் எல்ஜேபி நம்புகிறது.

எந்த அடிப்படையில் இத்தனை துணிச்சலுடன் சிராக் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது முக்கியமான கேள்வி. பிஹார் மக்கள் தொகையில் 17 சதவீதப் பட்டியலினச் சமூகத்தினர் வசிக்கின்றனர். இதில் ராம்விலாஸ் பாஸ்வான் சார்ந்திருக்கும் துஸாத் சமூகத்தினர் 5 சதவீதம். இந்தச் சமூகத்தினரின் பெரும்பாலானோர் எல்ஜேபியின் ஆதரவாளர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினரின் கணிசமான ஆதரவும் எல்ஜேபிக்கு உண்டு. எனவே, பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளை இழக்கும் அபாயம் ஐக்கிய ஜனதா தளத்துக்கு நேர்ந்திருக்கிறது.

2015 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 42 இடங்களில் போட்டியிட்டு இரண்டே இடங்களில்தான் வென்றது எல்ஜேபி (அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இல்லை!). எனினும் அந்தத் தேர்தலில் 4.83 சதவீத வாக்குகள் எல்ஜேபிக்குக் கிடைத்தன. 2019 மக்களவைத் தேர்தலில், போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் எல்ஜேபி வென்றது. 7.86 சதவீத வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன. இவையெல்லாம் அக்கட்சிக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இது முதல் முறையல்ல!

தேர்தலின்போது இப்படியான வியூகத்தை மேற்கொள்வது எல்ஜேபிக்குப் புதிதல்ல. 2005 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் எல்ஜேபி இருந்தது. எனினும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான பிணக்கின் காரணமாக அக்கட்சியை மட்டும் எதிர்த்துத் தனது வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது.

பின்னாட்களில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த ராம்விலாஸ் பாஸ்வான், “நாங்கள் அதைச் செய்யாமல் இருந்திருந்தால், நிதீஷ் குமார் முதல்வர் பதவிக்கு வந்திருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டார்.

முதிய தலைமுறைத் தலைவர்களின் காலம் முடிந்துவிட்டதாகவும், இளைய தலைமுறைத் தலைவர்களிடம் வெற்றிக்கான முனைப்பு இல்லை என்றும் சிராக் கருதுகிறார். அந்த நம்பிக்கையில் தன் கட்சிக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கைக் குறைப்பதன் மூலம் அதன் இடத்துக்கு வந்துவிட முடியும் என்றும், அதன் மூலம் பாஜகவுடனான உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கருகிறார்.

திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சிராக், ‘மிலா நா மிலே ஹம்’ (2010) எனும் இந்தித் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் (அவருக்கு ஜோடியாக நடித்தவர் கங்கணா ரணாவத்!). அந்தப் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அரசியல் பக்கம் திரும்பினார். 2014 மக்களவைத் தேர்தலில் ஜமுயி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

2000-ல் எல்ஜேபி கட்சியை நிறுவிய ராம்விலாஸ் பாஸ்வான் அரசியலில் வெற்றிகரமாக இயங்கி வருபவர். சமீபகாலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கட்சியின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் தனது மகனையே முன்னிறுத்துகிறார்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நவம்பர் 10-ல் தெரிந்துவிடும்!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x