

தனது கலையையும் ரசனையையும் தத்துவார்த்த மனநிலையையும் புரிந்துகொள்ளாத சமூகத்தைக் கடைசிவரை நேசித்தார் ஹுசைன். ஒரு கலைஞன் அதிகப்படியாகச் செய்யக் கூடியது அன்புசெய்வதைத் தவிர வேறென்ன?!
மோசமான நடத்தையைத் தவிர வேறெதுவும் ஆபாசம் அல்ல என்று கூறிய கலைஞர் எம்.எஃப். ஹுசைன். இந்துக் கடவுளர்களை நிர்வாணமாக வரைந்தவர் என்று அடிப்படைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை. 'இந்தியாவின் பிக்காசோ' என்று 'போர்ப்ஸ்' இதழால் பாராட்டப்பட்டவர்.
ஒரு ஓவியன் உருவாகிறார்
1915 செப்டம்பர் 17-ல் மகாராஷ்டிரத்தின் பந்தர்பூர் நகரில் பிறந்தவர் மக்பூல் ஃபிதா ஹுசைன். இளம் வயதிலேயே தாயை இழந்த ஹுசைன், பின்னர் தனது வீட்டை விட்டும் வெளியேற நேர்ந்தது. உணர்வுகள் அலைமோதும் வயதில் கொடுங்கனவுகள் தன்னைத் துரத்தியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அவரது வாழ்வை மீட்டெடுக்க இந்து, இஸ்லாம் மதங்களின் புனித நூல்கள் அவருக்கு உதவின. ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை என இதிகாசங்களை இளம் வயதிலேயே கற்றுக்கொண்டு, தனது நண்பர்களுடன் விவாதித்தவர் அவர். பிற்காலத்தில் அவரது ஓவியங்களில் இதிகாசக் காட்சிகளும், கடவுளர்களின் உருவங்களும் அதிகமாக இடம்பெற இதுவே காரணமானது எனலாம். பெரிய படைப்புகளை உருவாக்குவதற்கு முன்னர் எப்போதும் விநாயகர் உருவத்தை வரைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஹுசைன்.
மும்பையின் 'சர் ஜாம்செட்ஜீ ஜீஜீபாய் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்' ஓவியப் பள்ளியில் ஓவியக் கலையைக் கற்றுக்கொண்ட ஹுசைன், திரைப்பட பேனர் ஓவியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். "பேனர் வரைந்த காலத்தில், ஒரு சதுர அடிக்கு நான்கு அல்லது ஆறு அணாவுக்கு மேல் கிடைக்காது. ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானவர்கள் எங்களுக்குச் சம்பளம் தரவே மாட்டார்கள்" என்று நினைவுகூர்ந்தார் ஹுசைன். பிரம்மாண்டமான கேன்வாஸில் அன்றைய பாலிவுட் நட்சத்திரங்களின் முகங்களை வரைந்து தள்ளிய அவருக்கு, பிற்காலத்தில் படைப்பூக்கம் மிளிரும் ஓவியங்களைத் தொடர்ந்து வரைவதற்கு அது ஒரு பயிற்சியாகவே அமைந்தது எனலாம்.
இந்தியப் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் ஆகிய வரலாற்று நிகழ்வுகள் அவருக்குப் பெரும் தாக்கம் தந்தன. பிரான்சிஸ் நியூட்டன் சோஸா, எஸ்.ஹெச். ராஸா உள்ளிட்ட ஓவியர்களுடன் இணைந்து 'ப்ரொக்ரெஸ்ஸிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் குரூப்' எனும் குழுவைத் தொடங்கினார். இந்தியாவில் நவீன ஓவியங்களுக்கான பெரும் திறப்பாக அமைந்தது அக்குழு. 1952-ல் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், தனது முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அவரது புகழ் பரவியது. பிற்காலத்தில் 2 மில்லியன் டாலருக்கு அவரது ஓவியம் விலைபோகும் அளவுக்குப் புகழ்பெற்றார்.
அழகின் ஆராதகர்!
சலனப் படங்கள் மூலம் கலையின் ஆன்மாவை உணர வைக்கும் முயற்சிகளை 1960-களிலேயே அவர் முன்னெடுத்தார். அவர் இயக்கிய 'த்ரூ தி ஐ ஆஃப் எ பெயின்டர்' எனும் குறும்படம், 1967-ல் பெர்லின் திரைப்பட விழாவில் 'தங்கக் கரடி'விருதை வென்றது. 55 நிமிடங்கள் கொண்ட அந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. கண்ணில் தென்படும் காட்சிகளில் கிடைக்கும் அழகுணர்ச்சியை அப்படத்தில் பதிவுசெய்திருந்தார்.
ஹுசைனுக்கு மாதுரி தீட்சித் அழகின் மீது பெரும் மயக்கம் உண்டு. வெளிப்படையாகவே அவரைப் புகழ்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார் ஹுசைன். "மாதுரி நடித்த 'ஹம் ஆப்கே ஹெய்ன் கெளன்' படத்தை 60 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்" என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-ல் மாதுரி நடித்த 'ஆஜா நாச்லே' படத்தைப் பார்ப்பதற்காக திரையரங்கின் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கினார். தான் இயக்கிய 'கஜ காமினி'யில் மாதுரியை நடிக்கவைத்தவர் அடுத்து 'மீனாட்சி: எ டேல் ஆஃப் த்ரீ சிட்டீஸ்' படத்தில் மாதுரியை நடிக்கவைக்க முடியாததால், தபுவை நடிக்கவைத்தார்.
ஹுசைனிடம் இருந்த இன்னொரு பழக்கம், தான் சந்திக்கும் பிரமுகர்களிடம், அவர்களை மையமாக வைத்து ஓவியங்கள் வரைந்து தருவது. அன்னை தெரசாவைச் சந்திக்கச் சென்றபோது அவரை மையமாக வைத்து வரைந்த ஓவியத்தை அவரிடம் வழங்கினார் ஹுசைன். அதில் 'கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்'என்று எழுதிக் கையெழுத்திட்டார் அன்னை தெரசா.
இயக்குநர் சத்யஜித் ராயுடனான அவரது சந்திப்பும் குறிப்பிடத் தக்கது. கொல்கத்தாவில் உள்ள ராயின் இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது, சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பின்னர், ஒரு வெள்ளைத் தாளை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றை ஹுசைனிடம் கொடுத்தார் ராய். இருவரும் ஒருவரை ஒருவர் ஓவியமாக வரைந்தனர். (ராயும் சிறந்த ஓவியர் அல்லவா!) பின்னர் ராய் இயக்கிய 'சாருலதா' திரைப்படத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டனர். சில நாட்களுக்குப் பின்னர், அப்படத்தின் காட்சிகளின் பின்னணியில் ராயை வரைந்து அனுப்பிவைத்தார் ஹுசைன்.
இந்தியாவின் நேசர்
பல்வேறு முகங்களைக் கொண்ட அந்தத் தனித்த கலைஞர் வாழ்நாள் முழுவதும் சர்ச்சைக்குரியவராகவே இருந்து மரித்துப்போனார். இறுதிக் காலத்தில் கத்தாருக்கும் லண்டனுக்கும் இடையில் அலைந்துகொண்டிருந்தார். இந்தியா திரும்ப வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்தாலும், மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படலாம் என்ற அச்சம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது.
"இந்தியா முற்றிலும் அலாதியானதொரு நாடு. தாராளப் போக்கும் பன்முகத்தன்மையும் கொண்டது. உலகில் அதுபோல ஒரு நாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியா என்பது வாழ்வின் கொண்டாட்டம். உலகில் வேறு எங்கும் இது போன்ற தன்மையைக் காண இயலாது" என்றெல்லாம் இந்தியாவைக் கொண்டாடியவர். தனது கலையையும் ரசனையையும் தத்துவார்த்த மனநிலையையும் புரிந்துகொள்ளாத சமூகத்தைக் கடைசிவரை நேசித்தார். ஒரு கலைஞன் அதிகப்படியாகச் செய்யக்கூடியது அன்புசெய்வதைத் தவிர வேறென்ன!
தொடர்புக்கு:chandramohan.v@thehindutamil.co.in