

நமது நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் குடிமக்களின் வாழ்நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 75 ஆண்டுகள். இது விரைவில் 85 ஆண்டுகளாக உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 11% ஆகும். உலக மொத்தப் பரப்பில் இந்தியாவின் அளவு சுமார் 2.4%தான். ஆனால், மக்கள்தொகையைப் பொறுத்தவரை உலக அளவில் இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 16%. அத்தனை முதியவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆயுள் நீடிப்பு ஆய்வுகள்
1950-ல் நம் நாட்டின் இறப்பு விகிதம் 25% ஆக இருந்தது. மருத்துவ முன்னேற்றத்தாலும் படிப்பறிவாலும், நம் நாட்டில் இறப்பின் விகிதம் 2023-ல் 7.7% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதியவர்களின் உடல்நலம் பல நோய்களால் பாதிக்கப்பட்டாலும் அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். இந்தப் பருவத்தில் காணும் முக்கிய நோய்களான மாரடைப்பு, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க முடியும். மாரடைப்பு என்றால் மரணம் என்ற அச்சம் போய் அறுவை சிகிச்சை மூலம் சுமார் 20 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை மூட்டுக்கள் பொருத்தும் சிசிச்சைகள் மூலம் வாழும் நாட்கள் அதிகத் தொல்லையின்றி அமைகின்றன.
மட்டுமின்றி, சில தடுப்பூசிகள் மூலமும் ஆயுட்காலத்தைத் தொல்லையின்றி நீடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நிமோனியா சளிக் காய்ச்சலுக்கு ஒரு தடுப்பூசி போட்டால் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை இந்நோயின்றி இருக்கலாம். ஆகையால், இந்த அச்சுறுத்தலுக்கு விடை கொடுக்கலாம். இப்படி மறைமுகமாக ஆயுளை நீடிப்பதும் நடக்கிறது. ஆனால், நேரடியாகவே ஆயுளை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளும் இன்று தீவிரமாக நடக்கின்றன. ஓர் உதாரணமாக, மெலட்டோனின் உடலில் குறைவதால் முதுமை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது; இதற்காக அந்தத் திரவத்தை உடலில் செலுத்தி இளமையை நீட்டிக்க நடக்கும் ஆராய்ச்சியைச் சொல்லலாம். குறைந்த உணவு, அதாவது 20%-40% வரை குறைவாக உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்பது ஓர் ஆய்வின் முடிவு. அப்படி முயற்சிப்போரும் இருக்கின்றனர். ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிகிச்சை மூலமும் முதுமையில் வரும் பல நோய்களை வெல்ல முடியும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
விளைவுகள் என்னவாகும்?
நோய்களுக்கு விடை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான முதியவர்கள் நிறைய பேர் சமுதாயத்தில் இருப்பது மற்றவர்களுக்கு நன்மையே; ஏனெனில் அனுபவ அறிவு இளைய சமுதாயத்துக்கு என்றுமே பயன் மிக்கது. ஆனால், இப்படியான ஆயுள் நீட்டிப்பு முறைகளை அப்படி ஆக்கபூர்வமானதாகக் கருத முடியவில்லை. ஒரு பேச்சுக்குக் கேட்டுக்கொள்வோம், ஒரு சமூகத்தில் 100 வயதுக்கு மேல் பெரும்பாலானோர் வாழ்வது இயல்பானால், அந்தச் சமூகத்தின் நிலை என்னவாகும், முதலில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப நிலைதான் என்னவாகும்? ஏனென்றால், அவர்களுடைய பிள்ளைகளுக்கே அப்போது 70 வயது கடந்திருக்கும். சுமார் 30 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் உழைத்துவிட்டு 40, 50 ஆண்டுகளுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் அதிகமானால், நாட்டின் பொருளாதாரமே நிலைகுலையும். எல்லாவற்றுக்கும் மேல் ஆயுளை இப்படி நீட்டிப்பதானது, துடிப்பான வாழ்க்கையை நீட்டிப்பது ஆகிவிடுவதில்லையே!
ஆகையால், நீண்ட ஆயுள் வாழ்க்கை என்பதைவிட நிலைத்த நிம்மதியான வாழ்க்கை என்பதே ஒரு நல்ல சமூகத்துக்கான இலக்காக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பெரியவர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்களில் பலர் நீண்ட காலம் வாழும் ஆசையில் வாழவில்லை; இறக்கும் வரை நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். எவ்வளவோ பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ள இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை வலுக்கட்டாயமாக அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்வதேகூட இன்று ஒரு பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எப்படி? தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, சம்பளம் தர வேண்டியிராத ஆட்களாக, நம்பிக்கை உள்ள நபர்களாக தங்களைப் பயன்படுத்திக்கொள்வதாகப் பல பெரியவர்கள் நினைக்கிறார்கள். வயதான காலத்தில் தங்கள் சொந்தபந்தங்களுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த இடத்திலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்படுவதான இவர்களுடைய துயரம் அவலமானது. கைவிடல் ஒருவகை அவலம் என்றால், கட்டிப்போடல் ஒருவகை அவலம்!
உண்மையில் நல்ல உடல், மன நலன் மற்றும் கண்ணியமான வாழ்க்கைச் சூழல் இவற்றை நம் மூத்த குடிகளுக்கு உருவாக்கித்தர வேண்டும். இதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. நன்றியுணர்வும் பொறுப்புணர்வும் இருந்தால் போதும்!
- வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
அக்டோபர்-1: உலக முதியோர் நாள்