ஜஸ்வந்த் சிங்: அமைதியின் தூதுவர் 

ஜஸ்வந்த் சிங்: அமைதியின் தூதுவர் 
Updated on
2 min read

இந்தியாவின் மூத்த நாடாளுமன்றவாதிகளுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங், 1980 தொடங்கி 2014 வரையிலான காலகட்டத்தில் நான்கு முறை மக்களவைக்கும் ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1998 தொடங்கி 2004 வரையிலான காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பொறுப்புவகித்தவர். அந்நாட்களில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருடன் பாஜகவின் முகங்களில் அவரும் ஒருவராக இருந்தவர். 2014-ல் தனது வீட்டில் தடுமாறி விழுந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக நினைவு தப்பிய நிலையில் இருந்த அவர், செப்டம்பர் 27 அன்று காலமானார். பதவியில் இல்லாதபோதும், படுக்கையில் இருந்தபோதும் அவரது பெயர் தேசிய அரசியலில் தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டே இருந்தது, அவரது அரசியல் பங்களிப்புகளுக்கான அங்கீகாரம்.

பாதுகாப்புக்கு ஒரு பாடம்

ராணுவ அதிகாரியாகப் பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு, 1960-களில் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஜஸ்வந்த் சிங், பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். வாஜ்பாய் 1996-ல் முதன்முறை பிரதமராகப் பொறுப்பேற்ற இரண்டு வார கால ஆட்சியில், அவர் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இரண்டாண்டுகள் கழித்து, வாஜ்பாய் மீண்டும் பிரதமரானபோது வெளியுறவுத் துறை அமைச்சரானார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலாக மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தக் காலகட்டத்தை மிகவும் திறமையாக நிர்வகித்ததில் அவர் தனது முத்திரைகளைப் பதித்தார்.

நேபாளத்திலிருந்து டெல்லிக்கு 177 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானில் காந்தஹாரில் தரையிறக்கப்பட்ட சம்பவம் அவருக்குப் பெரும் சோதனைக் காலமாக அமைந்தது. மூன்று தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளைக் காப்பாற்றும் முடிவை எடுத்தார் ஜஸ்வந்த் சிங். தீவிரவாதிகளை விடுவித்தது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும், பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதைத் தவிர்த்து, வேறு எந்த யோசனையுமே தனக்கு எழவில்லை என்று பின்னாட்களில் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவர். அந்தக் கடத்தல் சம்பவத்தையடுத்து விமானப் பயணங்களுக்கான பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட்டன என்ற வகையில் அது நமக்கு ஒரு பாடமாகவும் அமைந்தது.

பேச்சே களம்

வெளியுறவு அமைச்சராக, ‘இந்திய துணைக் கண்டத்தின் நில வரைபடம் முன்கூட்டியே தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டது, இனி அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று வலியுறுத்திய ஜஸ்வந்த் சிங், ‘இந்தியா தனது நிலத்தில் விரற்கடை அளவுகூட விட்டுக்கொடுக்காது’ என்றும் எச்சரித்தபடியே இருந்தவர். ஆனால், பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்வதே அமைதிக்கான வழி என்பதை ஆழமாக நம்பி, அதற்கான முயற்சிகளை இடைவிடாது மேற்கொண்டவர்.

கார்கில் சண்டைக்குப் பிறகு அடுத்த இரண்டாண்டுகளில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக முஷாரப்பை டெல்லிக்கு அழைத்தபோது, வெளியுறவுத் துறை அதிகாரிகள்கூட அதை விரும்பவில்லை. கட்சிக்குள்ளும் சலசலப்பு எழுந்தபடியிருந்தது. எனினும், வாஜ்பாய் அவரது ஆலோசனைகளையே பின்பற்றினார். பாகிஸ்தானுடனான அந்த ஆக்ரா பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோதும், ‘அமைதிக்கு இன்னும் நெடும் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது’ என்ற நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே செய்தியாளர்களிடம் ஜஸ்வந்த் சிங் பகிர்ந்துகொண்டார்.

பொக்ரான் விளைவுகள்

கார்கில் சண்டைக்குப் பிறகு அணு ஆயுதச் சோதனை நடத்தி உலகுக்குத் தனது வலிமையைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த சோதனையைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த மிகச் சிலரில் ஜஸ்வந்த் சிங்கும் ஒருவர். அணு ஆயுதச் சோதனையின் விளைவாக இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, தனது தேர்ந்த ராஜதந்திரத்தால் அதை வெற்றிகொண்டவர் அவர். நியூயார்க்கில் நடந்த ஐநா சபை மாநாட்டில் அமெரிக்காவின் உள்துறை துணைச்செயலாளர் ஸ்ட்ராப் டால்பாட்டைச் சந்தித்த ஜஸ்வந்த் சிங், இந்தியா அணு ஆயுதச் சோதனையை நடத்த வேண்டியதன் நியாயங்களை அவருக்கு எடுத்துரைத்தார். மூன்று கண்டங்களில் 7 நாடுகளில் 14 முறை அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் தொடர்ந்தன. காலத்தின் கட்டாயமான இந்தியாவின் ஒரு தற்காப்பு முன்னெடுப்பை, சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால் ஜஸ்வந்த் சிங்கின் அசாத்திய பொறுமையும் நட்பார்ந்த முறையிலான தொடர் பேச்சுவார்த்தைகளுமே முக்கியக் காரணமாக இருந்தன.

2002-ல் யஷ்வந்த் சின்காவை அடுத்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்வந்த் சிங், 2004-ல் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைக்கும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். பாஜக 2004 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு, அந்தக் கட்சியின் சார்பில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 2009-ல் மீண்டும் பாஜக தோல்வியடைந்தது குறித்து கட்சிக்குள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால், அவரது வேண்டுகோள் கட்சிக்குள் விரும்பப்படவில்லை.

ஒரு சர்ச்சைப் புத்தகம்

ஜஸ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் பயணமும், ஜின்னா தொடர்பிலான உயர்வான மதிப்பீடுகளோடு அவர் எழுதிய புத்தகமும் பாஜகவில் அவருக்கு எதிர்ப்பை ஏற்படுத்தின. 2009-ல் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பத்து மாதங்கள் கழித்து
எல்.கே.அத்வானியின் வற்புறுத்தலால் மீண்டும் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து பாஜகவுக்குள் நீடிக்க முடியவில்லை. 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தனது சொந்தத் தொகுதியான பார்மரில் சுயேச்சையாகவே போட்டியிட்டார். இன்னொரு ராஜபுதனத் தலைவரை ஏற்றுக்கொள்ள பாஜகவின் மாநிலக் கட்சித் தலைமைக்கு மனம் இல்லை. விளைவாக, இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பவர்களில் ஒருவராக உருவெடுத்த அந்தத் தலைவர், கடைசியில் கட்சி உட்பூசலால் தோற்கடிக்கப்பட்டார். ‘நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன், ஆனால் அதை என்னால் நம்பவே முடியவில்லை’ என்று தனது மனவோட்டத்தை அன்று அப்படியே செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் ஜஸ்வந்த் சிங். அதுதானே அரசியல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in