

ஸ்பானிஷ் காய்ச்சல் வந்தபோது இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 66.1% ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே; பல்வகைப்பட்ட வறுமையினால் ஏற்பட்ட பின்விளைவுகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். அதே மாதிரியான போக்கு இன்றும் நீடிக்கிறது. தனிமனித இடைவெளியையும் சுகாதாரமான பொருட்களின் பயன்பாட்டையும் பரிந்துரைக்கும் பொதுச் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாமை, தனிக் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மை, போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாதது எல்லாம் குறைந்த அளவிலும் நடுத்தர அளவிலும் வருமானம் கொண்ட நாடுகளின் யதார்த்தங்களாகும். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் வீடற்றவர்களும், அதீத வறுமையில் இருப்பவர்களும் அடங்குவார்கள். இவர்களில் பலரும் அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். பல தலைமுறைகளாக சமூகரீதியில் பின்தங்கிய சூழல், சமூகப் பாதுகாப்பின்மை ஆகிய பின்னணியில் பெரும் துரதிர்ஷ்டத்துக்கு ஆளாகும் நிலையில் அவர்கள் உள்ளார்கள்.
சுகாதாரம் சார்ந்த அதிர்ச்சிகள் கீழ்நோக்கிய சரிவினை வீடற்ற நிலையை நோக்கி மட்டுமல்ல, நம்பிக்கையற்ற நிலையை நோக்கியும் தள்ளிவிடக் கூடியவை. உலக அளவில், பெருந்தொற்றைக் கையாள்வதற்குத் தயாராக இல்லாத நிலையும், கிட்டத்தட்ட மருத்துவக் கட்டமைப்புகள் அடைந்த சீர்குலைவும் சுகாதாரத்தின் மீது நாம் கவனம் செலுத்த முடியாத வகையில் நமது கவனத்தைச் சிதைத்துவிட்டன. கட்டமைப்புரீதியிலான தடைகள், சமத்துவமின்மைகள் போன்றவை நியாயப்படுத்த முடியாத அளவுக்கு ஊடுருவியிருப்பதை சரிசெய்ய பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. எனினும், நமது ஏழை மக்களின் தேவைகள் மீது ஒரு பேரிடரின்போது மட்டும்தான் நாம் அக்கறை செலுத்த விழைவோமா?
சுகாதாரம், சமூகநலத் துறைகளுக்கு அதிகம் செலவிட வேண்டும் என்பதை இந்தப் பெருந்தொற்று நன்கு உணர வைத்திருக்கிறது. ஏழ்மையை இயல்பான விஷயமாக ஆக்கும் நியாயமற்ற கட்டமைப்புகள் பரவலாவதற்கு சுகாதாரம் தொடர்பான சமூகக் காரணிகள் ஆற்றும் பங்கு தொடர்பில் மாநிலங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும். ஒரு நபரின் சமூகப் பின்னணியும் அவரது ஆரோக்கியமும் சேர்ந்து மேலான வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கு உதவுகின்றன. ஏழ்மைக்கும் மன அழுத்தத்துக்கும் மன நலனுக்கும் இடையே இருக்கும் தொடர்புக்கு சான்றுகள் நன்றாகக் கண்டறியப்பட்டிருக்கின்றன. மனத்துயரை ஒரு மனநோயாக எப்போதும் கருதிவிட முடியாது என்றாலும் பெருந்தொற்றின்போது தற்கொலைகளும் மனநலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில், மிகவும் தனித்துத் தெரியும் ஏதிலிகள் யாரென்றால் மனநலப் பிரச்சினைகளோடு வாழும் வீடற்ற நபர்கள்தான். இவர்கள் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் நீண்ட கால சிறைவாசத்துக்கும் ஆளாகும் ஆபத்தில் உள்ளார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர் வெளிப்புறத்தில்தான் உறங்குகிறார்கள்; அவர்களில் 35% பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனநலப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள்.
மனநலப் பிரச்சினைகளுடன் இருக்கும் வீடற்ற மனிதர்களின் இருப்பானது அவர்களுக்குப் பரிதாபத்தாலும் இரக்கத்தாலும் உதவி செய்யப் பலரையும் தூண்டுகிறது; அதே நேரத்தில் அவர்கள் ஒழிந்துபோக வேண்டுமென்று எண்ணுபவர்களும் சமூகத்துடன் அவர்கள் கலப்பதைத் தடுப்பவர்களும் இருக்கிறார்கள். வீடற்றவர்களில் வெகு சிலரைத் துறவுநிலையுடன் தொடர்புப்படுத்தி அவர்களை சாமியார்கள் போலக் கருதுவதும் உண்டு; எனினும் வீட்டற்றவர்களில் பெரும்பாலானோரைக் கண்டாலே மற்றவர்களுக்கு அச்சமும் அருவருப்பும் ஏற்படுகிறது; அவர்கள் கேலிக்குரிய பொருளாகவே கருதப்படுகிறார்கள். இது, இன்றும்கூட காணப்படும் சமூகத்தின் படிநிலை சார்ந்த அமைப்பில் அவர்களுக்கு மிகக் கீழான இடம் ஒதுக்கப்படுவதற்குக் காரணமாகியிருக்கிறது.
அதீத வறுமை, போர்கள், இயற்கையான அல்லது மனிதர்-உருவாக்கிய பேரிடர்கள், உடல் நலனுக்கும் மருத்துவ நலனுக்கும் மருத்துவ வசதி கிடைக்காமை, சமூகத் துயர்கள், பராமரிப்பில் ஏற்படும் இடையூறுகள், குடும்ப வன்முறை போன்றவை வீடற்ற நிலையை நோக்கி இட்டுச்செல்லும். இந்தியாவில், மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட வீடற்ற நபர்கள்தான் அரசு மனநல மருத்துவமனைகளில் நீண்ட காலம் இருக்கும் நோயாளிகள் ஆவார்கள். ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, மிகக் குறைவான கவனம் கிடைக்கப்பெற்ற இந்தத் தரப்பினருக்கான சேவைகள் உலக அளவில் மிகவும் குறைவு.
உடல்ரீதியிலான துணைநோய்கள், கூடவே போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றுக்கு அவர்கள் ஆளாகும் வாய்ப்பிருப்பதாலும், வீடற்ற நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பாலியல் அத்துமீறல், ஆதரவு வலைப்பின்னலும் சொந்தங்களும் இல்லாத நிலை போன்றவை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு எதிராக அவர்களிடம் எந்த பாதுகாப்பும் இல்லாததாலும் அவர்களது ஆயுள் குறைகிறது. மேலும், தனிமையுணர்வும் அதீதமாக அவர்களை ஒதுக்கிவைத்தலும் தங்களின் சுயமதிப்பு குறித்த தாழ்வான உணர்வுக்கும், சுருங்கிப்போன குழு அடையாளத்துக்கும் காரணமாகின்றன; கூடவே, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அவர்களின் கூட்டுத் திறனையும் பலவீனப்படுத்துகின்றன. மேலும், கேலியான பெயர்களைச் சொல்லி அழைக்கும் பழக்கம் நமக்கு வழிவழியாக வந்திருக்கிறது; அதைப் போலவே காலனிய காலகட்டத்தில் நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட மனநலமற்றோர் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவையெல்லாம் பிற்காலத்தில் போதாமைகளால் பீடிக்கப்பட்டு சீர்திருத்துவதற்கான தண்டனைகள் வழங்கும் இடம்போல் ஆகிவிட்டன. போதுமான அளவு பராமரிப்புப் பணியாளர்கள் இல்லாதது பராமரிப்பு வழங்கும் சூழலையே மோசமானதாக ஆக்கிவிட்டிருக்கிறது. நல்லவேளை, குறுகிய கண்ணோட்டம் கொண்ட வழிமுறைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிகிச்சை, சமூகப் பராமரிப்பு ஆகிய புதிய பரிணாமங்களுக்கு வழிவகுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.
ஐநாவின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “பாதிப்புக்குள்ளாகக் கூடியோருக்காக உதவ முன்வர வேண்டும்” என்று மிகவும் சரியான தருணத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார். உடல் குறைபாடு, நாள்பட்ட நோய் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்டோர் உட்பட மிகுந்த பாதிப்புக்குள்ளாகக் கூடியோரின் துயரைத் துடைக்க இந்திய மதிப்பில் 7,370 கோடி நிதியத்தை ஐ.நா. நிறுவியிருக்கிறது. அதுபோன்று தமிழ்நாடு அரசும், வீடற்ற நபர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு, ‘எமெர்ஜென்ஸி அண்டு ரெகவரி சென்ட்டர்’களை (ஈ.சி.ஆர்.சி.) மதிப்பீடு செய்யும். இந்த மையங்கள் 10 மாவட்டங்களிலுள்ள இதுபோன்ற நபர்களின் சிகிச்சைக்கு உதவி செய்யும். சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரத் திட்டம், சென்னையில் உள்ள அரசு மனநலக் காப்பகம், மனநலப் பராமரிப்புக்கான ‘தி பான்யன் அமைப்பு’ எல்லாம் சேர்ந்து மனநலப் பராமரிப்பு சேவையை வழங்கும்.
மாவட்ட மருத்துவமனைகளிலும் சமூக பராமரிப்பு மையங்களிலும் உளவியல்-சமூகரீதியிலான துயரத்தில் இருப்போருக்கென்று 300 படுக்கை இடங்கள் ஒதுக்கப்படும், இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சேவை வழங்கப்படும். எந்த அளவுக்கு முன்னதாக இந்தப் பராமரிப்பு சேவைகளில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறாரோ அந்த அளவுக்கு தீங்கு, காயம், பட்டினி போன்றவற்றைத் தவிர்த்து, நல்ல சிகிச்சையைப் பெற முடியும். ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் இது போன்ற நபர்கள் மீது நிலவும் தீண்டாமையைக் களைய முயலலாம். அரசுத் துறை, மேம்பாட்டுத் துறை, பெருநிறுவனத் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து இவர்களுக்கு உதவலாம்.
எனினும், வீடற்ற நிலையும் மனநலன் சார்ந்த பிரச்சினையும் தனித்தனியாகவே கையாள முடியாத பிரச்சினைகளை முன்வைக்கின்றன. இவை ஒன்றுசேர்ந்தால் மேலும் பல சவால்களை முன்வைக்கின்றன. வீடற்றவர்களுக்கு
‘ஈ.சி.ஆர்.சி.’கள் மட்டுமே தீர்வல்ல என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்; இந்தப் பிரச்சினையை வழக்கமான வழிமுறைகளைக் கொண்டு தீர்க்க முடியாது என்பதை உணர்கிறோம். பல வகையான அனுபவங்களையும் அணுகுமுறைகளையும் உள்ளடக்கிய வழிமுறை வேண்டும். இந்த வழிமுறைகளில் பொறுப்பேற்பும் நேர்மையும் இருக்க வேண்டியது அவசியம்.
வந்தனா கோபிகுமார், ‘தி பான்யன்’ அமைப்பின் இணை நிறுவனர்;
ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதன்மை சுகாதாரச் செயலர்.
‘தி இந்து’. சுருக்கமாகத் தமிழில்: தம்பி