Last Updated : 27 Sep, 2020 06:36 AM

Published : 27 Sep 2020 06:36 AM
Last Updated : 27 Sep 2020 06:36 AM

எஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்

ஸ்ரீபதி பண்டித ரத்யுல பாலசுப்பிரமணியம் எனும் இளைஞனாக ஆந்திரத்திலிருந்து தொடங்கிய எஸ்பிபியின் இசைப் பயணம், இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் தடம் பதித்திருக்கிறது. ஒரு பொறியாளராக வர விரும்பிய இளைஞன், தற்செயலாகத் திரையுலகுக்கு வந்ததுதான் எஸ்பிபி எனும் சரித்திரத்தின் தொடக்கப் புள்ளி. தெலுங்கு, கன்னடம், தமிழ் தொடங்கி இந்தி, வங்கம், ஒடியா எனப் பல்வேறு மொழிகளில் பாடியதன் மூலம் தனக்கென பரந்துபட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார் எஸ்பிபி.

முறையான இசைப் பயிற்சி இல்லாத, அதே சமயம் இசை விற்பன்னர்களையே வியக்கவைக்கும் திறன் கொண்ட சுயம்புக் கலைஞராக உருவாகி வளர்ந்தவர் அவர். புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளை வாசிக்கும் திறனும் அவருக்குக் கைகூடியிருந்தது. முகமது ரஃபியின் மிகத் தீவிரமான ரசிகர். தனது பதின்ம வயதில் அவரது பாடல்களைக் கேட்டு இப்படியும் பாட முடியுமா என அதிசயித்தவர். ஒரு பின்னணிப் பாடகரிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் இத்தனைத் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா எனும் ஆச்சரியமும் ஆர்வமும் அவருக்குள் நிரம்பத் தொடங்கியது அப்போதுதான்.

பின்னாட்களில், மிகப் பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டிருந்த சமயத்தில் இளம் பாடகனாகத் திரையிசையுலகில் எஸ்பிபி நுழைந்தார். கதைக்கு, கதாபாத்திரத்தின் தன்மைக்கு, பாடல் இடம்பெறும் சூழலுக்கு ஏற்ப பாடும் திறனைக் கண்டடைந்ததன் பின்னணியில், இளம் வயதில் அவர் கைக்கொண்ட ஆழமான ரசனைக்கு முக்கிய இடம் உண்டு. அதைத்தான் அள்ள அள்ளக் குறையாமல் தன் ரசிகர்களுக்கும் வழங்கினார்.

கால எல்லைகளைக் கடந்த குரல்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என சற்றே முதிர்ந்த நடிகர்களுக்குப் பாடத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் போன்ற அப்போதைய இளம் நடிகர்களுக்குப் பாடினார் எஸ்பிபி. அந்தக் காலகட்டத்தில், மலையாளம் நீங்கலாக, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரதானப் பாடகராக உருவாகியிருந்தார்.

1980-களின் இளைஞர்களின் குரல் பிரதியாக இருந்தது எஸ்பிபியின் தனித்தன்மை. ‘…கொஞ்சம் அனுசரி’, ‘…என்னை ஆதரி’ எனக் காதலுக்காக ஏங்கும் இளைஞர்களின் மனதாக அவரது குரல் ஒலித்தது. அந்தக் காலத்து இளம் பெண்களின் மானசீகக் காதல்களும் அவரது குரலையே மையம் கொண்டிருந்தன. ‘அழகான பூக்கள்’ (அன்பே ஓடிவா), ‘அந்தரங்கம் யாவுமே’ (ஆயிரம் நிலவே வா), ‘ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது’ (ஓ மானே மானே), ‘ஓ வெண்ணிலாவே வா ஓடிவா’ (ஆனந்த கும்மி) என ஏராளமான பாடல்களில் இதை உணர முடியும். அப்போது இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், எஸ்பிபியின் குரல் ஆகியவற்றின் கலவையில் இருந்த கச்சிதம் இதைச் சாத்தியமாக்கியது. நடிகர்கள் பேசும் முறையை அவதானித்து, அந்த பாணியைப் பாடலுக்குள் கொண்டுவரும் சாகசத்தன்மை எஸ்பிபியின் இன்னொரு பலம். ஒரு பாடகனுக்குள் ஒரு நடிகன் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட எஸ்பிபிக்கு இவையெல்லாம் சாத்தியமானதில் ஆச்சரியமில்லை.

மெல்லிசை பாணியிலான பாடல்கள் மட்டுமல்லாமல் சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்களையும் அவரால் மிகச் சிறப்பாகப் பாட முடிந்தது. ‘சங்கராபரணம்’ படத்தின் பாடல்கள் பற்றிப் பேசும்போது, “சாஸ்திரிய இசையில் நிபுணத்துவம் கொண்டவருக்கு நிகராகப் பாடியிருந்தார்” என்று அப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

1990-களில் ரஹ்மான் வரவால் திரையிசைப் போக்கு மாறி, பாடகர்களின் எண்ணிக்கை பெரும் அலையாக அதிகரித்த பின்னரும் எஸ்பிபிக்கான தனித்துவமான இடம் இருந்துகொண்டேதான் இருந்தது. ரஜினிக்காக ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ எனக் கம்பீர வேகத்துடன் பாடவும், அஜீத்துக்காக ‘உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே’ என உருகி வழியவும் அவரால் முடிந்தது. ‘என் காதலே…’ என்று அவர் குரலெடுத்துப் பாடத் தொடங்கியதும், இமைகளில் நீர்க் கசிய இன்றைய இளைஞர்கள் உருகி நிற்கும் காணொலிகள் சொல்லும் எஸ்பிபியின் இறவாச் சரித்திரத்தை!

ஜானகி – பாலு – ராஜா கூட்டணி

இளம் வயதிலேயே தன்னுடைய இசைத் திறமையை அங்கீகரித்த எஸ்.ஜானகியுடன்தான், பிற்காலத்தில் எஸ்பிபியின் இசை சாம்ராஜ்யம் மிகப் பெரிய அளவில் உருவானது. ‘காளிதாஸ கலாநிகேதன்’ எனும் அமைப்பு நடத்திய இசைப் போட்டியில் பங்கேற்றுப் பாடும்போது, எஸ்பிபிக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. பரிசளிக்க வந்திருந்த ஜானகி, எஸ்பிபி பாடியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, “இந்தப் பையனுக்குத்தானே முதல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைக் கடிந்துகொண்டாராம். திரையிசைப் பாடகராக வர வேண்டும் என்று அதே மேடையில் எஸ்பிபிக்கு அழைப்பு விடுத்ததும் ஜானகிதான். ஆந்திரத்தின் நெல்லூரைச் சேர்ந்தவர் எஸ்பிபி. ஜானகியின் கணவரும் நெல்லூர்க்காரர்தான். இப்படி அவர்கள் இருவருக்குள்ளும் தற்செயலான பந்தம் உண்டு. எஸ்பிபியும் இளையராஜாவும் இசைக்குழு நடத்திய காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களானவர்கள். ஜானகி – எஸ்பிபி - இளையராஜா எனும் மூவரிடையிலான இந்தத் தனிப்பட்ட பந்தம், அவர்களின் இசையுலக வாழ்வைச் செழுமையாக்கியது என்றே சொல்ல வேண்டும். தனது இசைக்குறிப்புகளை அப்படியே அடியொற்றிப் பாட வேண்டும் எனும் கண்டிப்பு கொண்ட இளையராஜாவும், வாய்ப்பு கிடைத்தால் பாடலை மெருகேற்றும் (improvise) ஆர்வம் மிக்க எஸ்பிபியும் பரஸ்பரம் தங்கள் எல்லையை உணர்ந்து கலைத் திறனைப் பகிர்ந்துகொண்டு, ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைத்திருக்கிறார்கள்.

தனது சக போட்டியாளரான கே.ஜே.யேசுதாஸின் மீது அளப்பரிய மதிப்பு கொண்டிருந்தார் எஸ்பிபி. யேசுதாஸுக்கு அவர் பாத பூஜை செய்ததெல்லாம் இசையுலகில் அரிதான நிகழ்வு. மேடை என்றெல்லாம் பார்க்காமல் மூத்த கலைஞர்களின் காலில், அந்தக் கனத்த சரீரம் விழுந்து வணங்கும் காட்சிகள் எஸ்பிபி எனும் எளிய ஆளுமையின் உன்னதத்தை உணர்த்துபவை. ஒலிப்பதிவுக் கூடங்களிலும், பொது மேடைகளிலும், வாத்தியக் கலைஞர்களிடம் அவர் பழகும் விதமும், அவர்கள் மீது அவர் காட்டும் அக்கறையும் அவரது உயர் பண்புகளுக்கு உதாரணங்கள். டிரம்மர் சிவமணி அடிக்கொரு தடவை எஸ்பிபியின் பெயரை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதே இதற்குச் சாட்சி!

அன்பு நிறைந்த ஆளுமை

பொதுவாகத் தனது பணி அனுபவங்களையே இளம் தலைமுறைப் பாடகர்களுக்கான பாடமாக முன்வைத்தவர் எஸ்பிபி. வகுப்பு எடுக்கும் தொனியில் அல்லாமல் இயல்பாக இசையார்வத்தை வளர்த்தெடுக்கும் பாணி அவருடையது. இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், சக பாடகர்கள் என எல்லோரைப் பற்றியும் அறிந்துவைத்திருப்பது ஒரு பாடகரின் வெளிப்பாட்டுத் திறனை வளர்த்தெடுக்கும் என்பதை மட்டும் கோடிட்டுக் காட்டுவார்.

இசையுலகில் தேக்கங்கள் நிகழும்போது, பொறுப்புள்ள மூத்த கலைஞராக, வழிகாட்டியின் ஸ்தானத்திலிருந்து அறிவுரை சொல்லியிருக்கிறார். எனினும், வார்த்தைகளால் ஒருபோதும் யாரையும் நோகடித்துவிட மாட்டார். தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டு வேறொருவருக்குச் சென்றாலும் வருந்தி நிற்க மாட்டார். அதுபோன்ற பல தருணங்களைத் தடுமாற்றமின்றி கடந்து வந்திருக்கிறார். அவரது திறமையையும் நட்பார்ந்த பண்பையும் உணர்ந்த திரையுலகப் பிரபலங்கள் அவருக்காகப் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவரது முயற்சிகளுக்குத் துணை நின்றிருக்கிறார்கள்.

எளிதில் தொடர்புகொள்ளக் கூடிய மேதையாக, இசையுலகம் தொடர்பாக ரசிகர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள தயங்காத எளியவராக இறுதிவரை இருந்தார் எஸ்பிபி.

அர்ப்பணிப்பு மிக்கவர்

எந்த மொழியில் பாடினாலும் உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவார் எஸ்பிபி. சல்மான் கானின் ஆரம்பக் காலப் பாடல்களைப் பாடி அவரது வெற்றிக்கு அடித்தளம் ஏற்படுத்திக்கொடுத்தார். ‘மைனே ப்யார் கியா’ படத்தில் தொடங்கி பல படங்களில் எஸ்பிபிதான் சல்மானுக்குப் பாடினார். இந்தி உட்பட பல மொழிகளை அறிந்துவைத்திருந்தார்.

எந்த மொழியில் பாடினாலும், அந்த மொழி ரசிகர்களின் சொந்த மண்ணைச் சேர்ந்தவராகவே பார்க்கப்பட்டார். அந்த அளவுக்கு உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் அக்கறை காட்டினார். பிரத்யேகக் கலாச்சார எல்லைகளைத் தாண்டி பரவலான வரவேற்பைப் பெறும் தகுதியும் அவரது குரலுக்கு வாய்த்திருந்தது. மலையாளத்தில் ஏசுதாஸுக்குத்தான் பிரதான இடம் என்றாலும், அங்கும் எஸ்பிபிக்கு உயர்ந்த இடம் இருந்தது.

சாகாவரம் கொண்ட குரல்

நிகழ்த்துக் கலைஞராகத் தனது கலைத் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்துவதற்கான தாகமும் உத்வேகமும் இறுதிவரை எஸ்பிபியிடம் தொடர்ந்தன. அனிருத் இசையில் அவர் பாடிய பாடல்கள் வரை இதை உணர முடியும். ‘தேவர் மகன்’ படத்தில் வரும் ‘சாந்துப்பொட்டு ஒரு சந்தனப் பொட்டு’ பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். அதில் இடையில் கமலின் குரலும் ஒலிக்கும். சிலம்பம் சுழற்றிக்கொண்டே வீராவேசமாகப் பாடும் கமலின் குரலைத் தொடர்ந்து திரும்பவும் பல்லவியை எஸ்பிபி பாடுவார். சரணத்தை முடிக்கும்போது ஆர்ப்பாட்டமாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார் கமல். அப்போது தொண்டை சற்று அடைத்துக்கொள்ளும் அல்லவா? அதே தொனியில் ‘சாந்துப்பொட்டு’ என்று கனத்த குரலில் பல்லவியைத் தொடர்வார் எஸ்பிபி. பாடல் உருவாக்கத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்புதான் இத்தகைய நுணுக்கங்களை அவருக்குக் கையளித்தது.

ஆத்திகரான எஸ்பிபி இதையெல்லாம் கடவுளின் பரிசு என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்ளலாம். எனினும், இயல்பாக ஊற்றெடுக்கும் இசைத் திறனை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுத்துக்கொண்ட ஒரு மேதை என்றே காலம் அவரை நினைவில் வைத்திருக்கும்.

- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x