Published : 23 Sep 2020 07:39 AM
Last Updated : 23 Sep 2020 07:39 AM

அப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்?

ஹிமான்ஷு

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் தொடர்பில் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகள் சமீபத்தில்தான் எதிர்ப்பைத் தொடங்கின. ஆனால், ஜூன் மாதத்தில் இந்த மசோதாக்கள் அவசரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதிலிருந்தே விவசாயிகளின் போராட்டம் தொடங்கிவிட்டது.

உணவுப் பதப்படுத்தல் மற்றும் தொழிலகங்கள் துறை அமைச்சரும் ஷிரோமணி அகாலி தளத்தின் எம்.பி.யுமான ஹர்ஸிம்ரத் கௌர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதும், ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளும்கூட எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் இந்த மசோதாக்களுக்கான எதிர்ப்புகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்பதையே உணர்த்துகின்றன; மாறாக, விவசாயிகள் மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக இந்த எதிர்ப்புகள் இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாய வர்த்தகத்தில் அரசின் பங்கேற்பை ஒழித்துக்கட்டுவதை இந்த மசோதாக்கள் இலக்காகக் கொண்டிருக்கின்றன. வேளாண் விளைபொருள் சந்தைக் கழகங்களின் (ஏபிஎம்சி) அமைப்புக்கு வெளியே இடைத்தரகர்கள் இல்லாத வர்த்தக மண்டலங்களையும், அரசின் வரிவிதிப்புக்கு உட்படாத நிலையை உருவாக்குவதன் மூலமும் அந்த மசோதாக்கள் இதைச் செய்ய முயல்கின்றன. ஏபிஎம்சிகளில் சீர்திருத்தம் செய்யும் முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல; கடந்த இருபது ஆண்டுகளாக அடுத்தடுத்த அரசுகளின் செயல்திட்டத்தில் இது இருந்துவருகிறது. அளவுக்கதிகமாக அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்றும் மண்டிகளின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் தேவை என்றும் பெரும்பாலான விவசாய அமைப்புகள் ஒப்புக்கொள்கின்றன. ஒன்றிய அரசாலும் மாநில அளவிலும் இதற்கு முன் இது தொடர்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, இவற்றை விவசாயிகளும் வரவேற்றிருக்கின்றனர். அப்படி இருக்கையில், இப்போது மட்டும் பிரச்சினை என்றால், வெறுமனே அது மசோதாக்கள் தொடர்பிலானது அல்ல; அவற்றை அறிமுகப்படுத்திய விதத்திலும் இருக்கிறது.

ஹர்ஸிம்ரத் கௌர் சுட்டிக்காட்டியபடி, விவசாயிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல தரப்புகளிடமும் கருத்துகளைக் கேட்டறிய அரசு தவறியிருக்கிறது. விவசாயமும் விவசாய வர்த்தகமும் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில் மாநிலங்கள் உட்பட யாருடனும் அது கலந்தாலோசிக்கவில்லை. மேலும், விவசாயத்தைப் பெருநிறுவனமயமாக்கும் பெரிய செயல்திட்டத்தின் பங்காகவும் விவசாயத்துக்கு அரசு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளும் முயற்சியாகவும் இந்த மசோதாக்களை விவசாய அமைப்புகள் கருதுகின்றன. அதே நேரத்தில், ஏபிஎம்சி மண்டிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியும், அரசால் உறுதியளிக்கப்பட்டிருக்கும் ‘குறைந்தபட்ச ஆதார விலை’யைக் காலப்போக்கில் விலக்கிக்கொள்ளக்கூடிய முயற்சியும்தான் தற்போது அதிகக் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

மோசமான புரிதல்

ஒட்டுமொத்த விவசாய வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஏபிஎம்சி பங்களிப்பு செய்கிறது. ஆனால், விவசாய விளைபொருட்கள் வர்த்தகத்தில் விலையை நிர்ணயிப்பதிலும், எந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம் என்று தேர்ந்தெடுப்பதிலும் ஏபிஎம்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏபிஎம்சிகளையும் அந்த மண்டிகளில் வர்த்தகத்தைச் சாத்தியப்படுத்தும் இடைத்தரகர்களையும் குறைகூறுவதென்பது விவசாயச் சந்தைகள் இயங்கும் விதம் குறித்த மோசமான புரிதலையே பிரதிபலிக்கிறது. விவசாய வர்த்தகம் எனும் பெரும் சூழமைவின் ஒரு பகுதிதான் இடைத்தரகர்கள்; அவர்கள் விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் வலுவான பாலமாகத் திகழ்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் மண்டிகளின் இயங்கு முறைகள் தொடர்பிலான பரிச்சயம் கொண்டிருக்கிறர்கள்; மண்டிகளில் சில குறைகள் இருந்தாலும் விவசாய வர்த்தகத்தின் அடிப்படையான பகுதியாக அவற்றை அவர்கள் பார்க்கிறார்கள். தற்போதைய மசோதாக்கள் ஏபிஎம்சி மண்டிகளை ஒழித்துக்கட்டிவிடாது என்றாலும் விவசாயிகளின் நலன்களைப் பெருநிறுவனங்களின் நலன்களுக்காகப் பலிகொடுப்பது, ஏபிஎம்சி அல்லாத இந்த மண்டிகளில் கட்டுப்பாடு இல்லாதது போன்றவையெல்லாம் கவலை அளிக்கும் அம்சங்களாகும். மேலும், ஏபிஎம்சி அல்லாத மண்டிகளில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதது ‘குறைந்தபட்ச ஆதார விலை’ அடிப்படையிலான கொள்முதலை ஒழித்துக்கட்டுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

பிஹார் உதாரணம்

ஏபிஎம்சிகளை 2006-ல் பிஹார் அரசு இழுத்து மூடியது. மண்டிகளை ஒழித்துக்கட்டிய பிறகு பிஹார் விவசாயிகள் பெரும்பாலான பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவான அளவே விலையைப் பெற்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குவிண்டால் சோளத்தின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,850 என்றால், பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைபொருளை ரூ.1,000-க்கும் குறைவாகவே விற்றனர். இப்படியான அனுபவங்களே விவசாயிகளின் அச்சத்துக்கு அடிப்படையான காரணம்.

சில்லறை விலைகள் அதிகமாக இருந்தாலும் விளைநிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்களின் விலைகள் குறைந்துவருவதையே மொத்த விலை அட்டவணையின் தரவுகள் உணர்த்துகின்றன. குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் நெல்லும் கோதுமையும் இதற்கு விதிவிலக்கு அல்ல எனும்போது குறைந்தபட்ச ஆதார விலைக்கு வெளியேவுள்ள பெரும்பாலான பயிர்களைப் பொறுத்தவரை இந்த விலைக் குறைவு மேலும் மோசமாக இருக்கிறது. ஆக, விவசாயிகளின் போராட்டங்களெல்லாம் அடிப்படையில் விவசாயிகளுக்கும் மேற்கண்ட சீர்திருத்தங்களின் விளைவுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையின் பிரதிபலிப்பேயாகும்!

- ஹிமான்ஷு, இணை பேராசிரியர், பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடலுக்கான மையம், சமூக அறிவியல்களுக்கான கல்லூரி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.

© தி இந்து, தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x