ஃபேஸ்புக்: வானுயர்ந்த சர்வாதிகாரம்!

ஃபேஸ்புக்: வானுயர்ந்த சர்வாதிகாரம்!
Updated on
3 min read

சமீபத்தில், ‘அமெரிக்கத் தேர்தலைக் காப்பதற்கென்று ஃபேஸ்புக் உருவாக்கிய புதிய வழிமுறை’களை அதன் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்தார். தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் அரசியல்ரீதியிலான விளம்பரங்களைத் தடுத்தல், தவறான தகவல்களைக் கொண்டிருக்கும் பதிவுகளை அடையாளம் காட்டுதல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியலர்கள் வெற்றியை அறிவிக்கும் பதிவுகளை அடையாளம் காட்டுதல் போன்றவை இந்த வழிமுறைகளில் அடங்கும்.

பெருந்தொற்றின்போது தேர்தல் குழப்பங்களைத் தடுப்பதில் இந்த வழிமுறைகள் எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்று பலரும் வாதிடலாம். ஆனால், விவாதத்துக்கே இடம் கொடுக்காதது எதுவென்றால், ஜனநாயகம் என்ற கம்பளத்தில் ஃபேஸ்புக் தன்னை எவ்வளவு நெருக்கமாகப் பின்னிக்கொண்டிருக்கிறது என்பதுதான்.

தேர்தல் அரசியலோடு பிணைப்பு

தேர்தல் பாதுகாப்பு பற்றி ஸக்கர்பெர்க் தனது வலைப்பூவில் எழுதியிருப்பது பத்திரிகையாளர் மாக்ஸ் ரீட் 2017-ல் எழுதிய முக்கியமான கட்டுரையின் வரியொன்றை நினைவுபடுத்துகிறது. ஜெர்மனியில் தேர்தல்கள் ‘நியாயமான முறையில் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில்’ மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே போன்று ஸக்கர்பெர்க் அளித்த வாக்குறுதி தன்னை மிகவும் கவர்ந்தது என்று மாக்ஸ் ரீட் கூறுகிறார். ஸக்கர்பெர்க்கின் அக்கறை பாராட்டத்தக்கது என்று எழுதும் ரீட், இது ஃபேஸ்புக்கின் வானளாவிய சக்தியைக் கமுக்கமாக ஒப்புக்கொண்டது போன்றதாகும் என்கிறார். “அரசுக்கு உரிய அதிகாரத்தையும் அதைத் தாண்டிய அதிகாரத்தையும் தான் கொண்டுள்ளதாக ஃபேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பாகும் அது. இறையாண்மை கொண்ட, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் அதீத அரசு போன்ற அமைப்பு அது, அதற்குள்ளேதான் அரசுகளே இயங்குகின்றன” என்று எழுதினார் ரீட்.

அந்த அதிகாரம் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எடுக்கும் முடிவுகளால் வலுப்படுத்தப்படுகிறது; அவர்தான் அந்நிறுவனத்தினுள் வாக்களிக்கும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். அந்த நிறுவனத்தின் மேல் ஸக்கர்பெர்க் கொண்டிருக்கும் இரும்புப் பிடியைப் பற்றி ‘தி டைம்ஸ்’ இதழில் ஃபேஸ்புக்கின் இணை நிறுவனரான கிறிஸ் ஹ்யூஸ் கடந்த ஆண்டு இப்படி எழுதினார்:

மார்க்கின் செல்வாக்கு அசாதாரணமானது; தனியார் துறையிலோ அரசாங்கத்திலோ எவர் கொண்டிருக்கும் செல்வாக்கையும் விட அதிகமானது. சில நூறு கோடிப் பேருக்கும் மேல் தினமும் பயன்படுத்தும் ‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘வாட்ஸ்அப்’ ஆகிய முக்கியமான மூன்று தகவல் தொடர்புத் தளங்களை அவர் தன் வசம் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கின் உட்குழு ஒரு ஆலோசனைக் குழுபோன்றுதான் இருக்கிறதே தவிர, மேற்பார்வையிடும் குழுவாக இல்லை. ஏனெனில், வாக்களிக்கும் பங்குகளில் 60%-ஐ ஸக்கர்பெர்க் தன் வசம் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கின் அல்காரிதம்களை எப்படி ஒருங்கமைப்பது என்பதை ஸக்கர்பெர்க் மட்டுமே தீர்மானிக்க முடியும். அப்படி ஒருங்கமைப்பதன் மூலம் மக்கள் தங்கள் நியூஸ் ஃபீட்ஸில் எவையெவற்றைப் பார்க்க முடியும், எந்தெந்த அந்தரங்கப் பாதுகாப்பு வசதிகளை அவர்கள் பயன்படுத்த முடியும், எந்தத் தகவல்கள் அவர்களுக்குப் போய்ச்சேருகிறது என்பதையெல்லாம் தீர்மானிக்க முடியும். வன்முறையையும் பிரச்சினையையும் தூண்டும் பேச்சை வெறுமனே வசைபாடும் பேச்சிலிருந்து எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பதற்கான விதிமுறைகளை அவரால் நிறுவ முடியும். ஒரு போட்டி நிறுவனம் இருக்கிறதென்றால் அதை வாங்குவதன் மூலமோ, அதற்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலமோ, பிரதியெடுப்பதன் மூலமோ அதை இழுத்து மூடச் செய்ய அவரால் முடியும்.

அசாதாரண அதிகாரக் குவிப்பு

ஹ்யூஸின் விவரணை மிகைப்படுத்தப்பட்டதுபோல் தோன்றினால், இதுபோன்ற அதிகாரக் குவிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் காரணம். ‘‘ஃபேஸ்புக்கின் சக்தியை நாம் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டுவந்திருக்கிறோம்” என்கிறார் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் ஊடகக் கல்விப் பேராசிரியர் சிவா வைத்தியநாதன். “இந்த ஊடகத்தின் உண்மையான அளவையும் செல்வாக்கையும் மக்களால் புரிந்துகொள்வது உண்மையில் கடினமே. நம்மில் மூன்றில் ஒருவர் இதைப் பயன்படுத்துகிறோம் – மனித வரலாற்றில் இதைப் போன்று நாம் வேறெதையும் எதிர்கொண்டதில்லை. தனது செல்வாக்கு எத்தகையது என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஸக்கர்பெர்க் தயாராக இருக்கிறாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எவ்வளவு சக்தியைத் தான் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் எப்போதாவது சிந்தித்தால் அவரால் தூங்க முடியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே.”

ஃபேஸ்புக்கின் சக்தி இப்போது தானே விரிந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெரிய உதாரணம் கிடைத்திருக்கிறது. சமீபத்தில், ரஷ்ய இணையதள நிறுவனம் ஒன்றின் ரகசிய நடவடிக்கையை ஃபேஸ்புக்கும் மற்ற ஊடகங்களும் வெளிப்படுத்தின. அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாகப் பிரிவினையை விதைக்கும் வகையில் அந்த ரஷ்ய நிறுவனம் போலிப் பயனர் கணக்குகளையும் இணையதளங்களையும் பெருமளவில் உருவாக்கியிருந்தது. இதைப் பற்றி அறியாத அமெரிக்க சுயாதீனப் பத்திரிகையாளர்களை அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொண்டது.

ஃபேஸ்புக்கின் – கூடவே, கூகுள் போன்றவற்றின் – அசுர வளர்ச்சியும் டிஜிட்டல் விளம்பரச் சந்தையில் அதன் மேலாதிக்கமும் இதழியலைப் பெரும் சரிவுக்குள் தள்ளின. இது எல்லா இடங்களிலும் பத்திரிகை நிறுவனங்கள் இழுத்து மூடப்படுவதற்கும், இதழாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுவதற்கும் காரணமானது. இதனால், பத்திரிகைகளின் இடத்தை ஃபேஸ்புக் பிடித்துக்கொண்டுவருகிறது. இதனால், தவறான தகவல்களும் போலியான செய்திகளும் வைரலாகிவரும் நிலை உருவாகியுள்ளது, இந்நிலையை ஃபேஸ்புக்கால் போதுமான அளவுக்குக் கண்காணிக்க முடியவில்லை (அல்லது கண்காணிக்க விருப்பமின்றி இருக்கலாம்). இந்தக் கட்டற்றதன்மைதான் அரசியல்ரீதியில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான களமாக ஃபேஸ்புக்கை ஆக்கியிருக்கிறது.

ஒவ்வொரு திசையிலும் ஃபேஸ்புக்கே வென்றுகொண்டிருக்கிறது. அதன் அளவும் சக்தியும் நிலையற்றதன்மையை உருவாக்குகின்றன. இதற்கான தீர்வு, அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை அதற்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதாம். இந்தச் சுழற்சியானது நீடித்து நிலைக்கும் தன்மையற்றது. உலக அளவில் குழந்தைகளைப் பாலுறவுக்காகக் கடத்தும் சிறார் மோகிகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும், அவர்களை எதிர்த்து ட்ரம்ப் போரிட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் சதிக்கோட்பாடுகள் உலகெங்கும் பரவுவதற்கு ஃபேஸ்புக் உதவியது. தீவிரவாதக் குழுக்களுக்கு அது ஒருங்கிணைப்பைக் கொடுத்தது, அவை அமெரிக்க நகரங்களில் நடந்த போராட்டங்களில் இறப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுத்தது.

இந்த நிலைமையை ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஃபேஸ்புக் ஊழியர்கள் புரிந்துகொண்டதுபோல் தோன்றுகிறது; அவர்கள் ஸக்கர்பெர்க்கின் தலைமையைப் பற்றி நிறுவனத்துக்குள்ளே விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர். “ஃபேஸ்புக்கில் எடுக்கப்படும் முடிவுகள், நடவடிக்கைகளுக்குத் தனிப்பட்ட விதத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளும் திறனற்றவராகவே அவர் தோன்றுகிறார்” என்று ஃபேஸ்புக் ஊழியர் கூறினார்.

ஜனநாயகமும் சர்வாதிகாரமும்

அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. தேர்தல்கள் நியாயமாக நடக்க வேண்டும் என்பதில் நாட்டின் கவனம் குவிந்துள்ளது. தேர்தல் முடிவுகளின் மதிப்பைப் பொருட்படுத்தப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஸக்கர்பெர்க் சமீபத்தில் எழுதியதுபோல், “அமெரிக்க ஜனநாயகத்தைக் காக்க நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது.”

ஆனால், ஜனநாயகத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிறுவனமே சர்வாதிகாரத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? “ஜனநாயகத்துக்குப் பொருந்தாத வகையில் ஃபேஸ்புக் மிகப் பெரியதாக வளர்ந்துவிட்டது. இதற்கு அதன் பயனர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்” என்று எழுதினார் மாக்ஸ் ரீட். அவரது வார்த்தைகள் இன்றைய நிலையை முன்கூட்டியே சொன்னதுபோல் இருக்கின்றன. ஏனெனில், அரசுகளால் கட்டுப்படுத்தப்படாத, தங்குதடையற்ற ஃபேஸ்புக்கானது தற்போது தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலராக முன்வைக்கிறது.

முதலில், தேர்தல் குறித்து ஸக்கர்பெர்க் அளித்த வாக்குறுதி நம்மை ஆசுவாசப்படுத்தும் வகையில் இருந்திருக்கக்கூடும். ஆனால், அவரது திட்டமானது, தான் அமெரிக்கர்களைத் தர்மசங்கடத்துக்குள் ஆழ்த்தும் வகையிலான ஒரு மாபெரும் சக்தி என்பதை ஒப்புக்கொள்வதாகும். ஒரு பக்கம் எதிர்கால ‘சக்திமான்’ ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்துப் போராடும் அமெரிக்கர்கள், மறுபக்கம் இன்னொரு ‘சக்திமான்’ அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கக் கூடாது.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in