Published : 18 Sep 2020 06:38 AM
Last Updated : 18 Sep 2020 06:38 AM

ஆங்கிலத்துக்குப் புதிய பாடநூல்: அடுத்த சர்ச்சை

பி.எஸ்.கவின்

தேசிய கல்விக் கொள்கை தொடர்பில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கருத்துகளைத் தமிழகக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் வரவேற்றிருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை அது எட்ட வேண்டிய இலக்குகளில் ஒன்றாகக் குறிப்பிடுவது 1:26 ஆசிரியர் - மாணவர் விகிதம். ஆனால், தமிழகத்திலோ ஏற்கனெவே 1:17 என்ற மேம்பட்ட நிலை நிலவுகிறது. இதேபோல, இன்னோர் இலக்காக அது குறிப்பிடும் நிகரச் சேர்க்கை விகிதமான 50% என்பதும் தமிழகத்தில் நடப்பாண்டிலேயே எட்டப்பட்டுவிடும் என்று புள்ளிவிவரங்களோடு தெரிவித்துள்ளார் அமைச்சர்.

கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இருமொழிக் கொள்கை தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பழகன். முதல்வர் பழனிசாமியும் இதை உறுதிப்படுத்துகிறார். தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரும் நீண்ட நெடியதொரு அரசியல் உரிமைப் போராட்டத்தில் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மட்டுமின்றி, பாடங்களில் ஒன்றாகவும் பயிற்றுமொழியாகவும் தமிழகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனினும், இந்திக்குப் பதிலாகத்தான் ஆங்கிலம் முன்னிறுத்தப்படுகிறதே அன்றி, தமிழுக்கு மாற்றாக அல்ல. இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில், அவர் சார்ந்த துறையோ தமிழைவிட ஆங்கிலத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்பாக இறங்கியிருக்கிறது.

ஒரே பாடநூல்

தமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தில் இரண்டாவது மொழித்தாளாக ஆங்கிலம் இருந்துவந்த நிலையில், தற்போது ஆங்கிலத்துக்குப் பதிலாக ஆங்கில மொழித் தொடர்பு என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இளநிலைப் படிப்பு மாணவர்கள் தங்களது பாடங்களில் நான்காவது பகுதியாக விருப்பப் பாடங்களைப் படித்து வந்த நிலையில், அந்தப் பாடங்களுக்கு மாற்றாகத் தொடர்புடைய துறை சார்ந்த ஆங்கிலப் பாடம் ஒன்று கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றோடு இணைந்த அனைத்துக் கல்லூரிகளுக்கும் இளநிலைப் படிப்பு மாணவர்களுக்கு ஒரே ஆங்கிலப் பாடநூலைப் பரிந்துரைத்திருப்பதோடு, அதை நடப்பாண்டிலேயே பின்பற்றவும் உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு மாநில உயர் கல்வித் துறை கவுன்சில்.

கல்லூரி மாணவர்கள் தற்போதைய காலகட்டத்தின் உலகளாவிய வேலைவாய்ப்புத் தேவைகளுக்கேற்ப ஆங்கிலத்தில் மொழித் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது, புதிய தேசிய கல்விக் கொள்கை. அதை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தமிழ்நாட்டு உயர் கல்வித் துறை முந்திக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த நடைமுறை இன்னொரு வகையில் புதிய கொள்கைக்கு எதிராகவும்கூட இருக்கிறது. கல்லூரிகள் ஒவ்வொன்றும் தன்னாட்சி பெற்றவையாக இயங்க வேண்டும் என்று விரும்புகிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழக உயர் கல்வித் துறையின் முடிவோ பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கம் இரண்டிலும் கல்லூரிகளை மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியையும்கூட கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

தனியாரின் கையில் அதிகாரம்

தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உயர் கல்வி ஆணையம், பல்கலைக்கழகப் மானியக் குழுவின் விதிமுறைகளைப் பல்கலைக்கழகங்களும் அரசுக் கல்லூரிகளும் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்று கண்காணிக்கும் அமைப்பாகவே செயல்பட்டுவந்தது. ஆனால், தற்போது அரசு - தனியார் கூட்டு உடன்படிக்கைகளின்படி மத்திய அரசோடும் தனியார் அமைப்புகளோடும் சேர்ந்து பாடநூல் உருவாக்கத்திலும் அது ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. அதாவது, ஆணையத்தின் சார்பாகத் தனியார் அமைப்புகளே பாடநூலை உருவாக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பில் தமிழ்நாட்டின் கருத்துகளைத் தெரிவிக்க உயர் கல்வித் துறைச் செயலாளரின் தலைமையில்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகளைக் கேட்காமல் துணைவேந்தர்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு ஒரு அரசு அதிகாரியைத் தலைவராக நியமித்திருப்பது தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஆங்கிலப் பாடத்துக்குப் புதிய பாடநூலை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்ற உயர் கல்வித் துறையின் உத்தரவு சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கிறது.

அறிவுத் திருட்டு

அரசுக் கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முடிவு பாராட்டத்தக்கதாகவே இருந்தாலும் அதை ஏன் இவ்வளவு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கேள்வி தவிர்க்கவியலாததாகிறது. பொதுவாக, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை வகுக்கும்போதும் பாடநூல்களை உருவாக்கும்போதும் துறை சார்ந்த பேராசிரியர்களின் கருத்துகளைக் கேட்பது வழக்கம். ஆனால், இப்படியொரு ஆங்கிலப் பாடநூல் வெளிவருவது குறித்த தகவலே பேராசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

இந்தப் புதிய பாடநூலைப் படித்துப் பார்த்த பேராசிரியர்கள் மேலும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கூறியது கூறல், இலக்கணப் பிழையுள்ள வாக்கியங்கள், எழுத்துப் பிழைகள் மலிந்த புத்தகமாக இருப்பதோடு, இணையப் பக்கங்களை அப்படியே அடிமாறாமல் எடுத்தாண்டிருக்கிறார்கள்; ஏறக்குறைய 44% வலைதளங்கள் மற்றும் புத்தகங்களிலிருந்து அறிவுத் திருட்டாக அமைந்துள்ளது என்று கருத்து தெரிவிக்கிறார்கள் ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள். ஆங்கிலப் பாடத்துக்குக் கவனம் கொடுப்பதற்காக முதல் தாளான தமிழுக்கு ஒதுக்கப்பட்ட பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விருப்பப்பாடங்களில் ஒன்றாக இருந்துவந்த சிறப்புத் தமிழும் நீக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பாடத்திட்டத்தை வகுக்கவும் அதன்படி பாடநூல்களை உருவாக்கவும் பல்துறை அறிஞர்களின் உதவியுடன் ஒரு பெரும் விவாதத்தை நடத்தி, முன்னுதாரணத்தை உருவாக்கியது தமிழகப் பள்ளிக் கல்வித் துறை. பள்ளிப் பாடநூல்களை உருவாக்க எடுத்துக்கொண்ட அக்கறையில் ஒரு சிறு அளவையேனும் கல்லூரிப் படிப்புகளுக்கும் காட்டக் கூடாதா?

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x