ஒரு சங்கீதக்காரர் ஆகியிருந்தால்!

படம்: புதுவை இளவேனில்
படம்: புதுவை இளவேனில்
Updated on
1 min read

கி.ரா., “நான் சங்கீதக்காரன் ஆக ஆசைப்பட்டேன். காலம் என்னை எழுத்தாளனாக மாற்றிவிட்டது” என்று அடிக்கடி சொல்வார். இளமைக் காலத்தில் நாகஸ்வர வித்துவான் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் நாகஸ்வரம் படித்தவர்தான் நம் கி.ரா. தொடர்ந்து படிக்க முடியாமல்போனதைச் சொல்லி அடிக்கடி வருத்தப்பட்டுக்கொள்வார். நெருக்கடி மிகுந்த சாலையோரத்தில் கவிஞர் தேவதச்சன் கடையருகே நின்றுகொண்டு, விளாத்திகுளம் சாமிகளின் சங்கீத ஞானத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார் கி.ரா. அவர் சங்கீதக்காரர் ஆகியிருந்தால், அதிகம் வெளிச்சம் கிடைக்காத விளாத்திகுளம் சாமிகள் பற்றி இசையுலகம் கூடுதலாக அறிந்திருக்கக்கூடும். ஆனால், இலக்கிய வாசகர்களுக்கு திருவேதி நாயக்கர் அறிமுகமாகியிருக்க மாட்டார். பால்யத்தில் ‘பிஞ்சுகள்’ நாவல் வாசித்து முடித்தபோது, நமக்கு இப்படி ஒரு திருவேதி நாயக்கர் வாழ்வில் கிடைக்காமல் போயிட்டாரே என்று வருத்தப்பட்டதுண்டு. கி.ரா. சங்கீதக்காரர் ஆகியிருந்தால், கோனேரி செங்கன்னாவையும் நாம் அறிந்திருக்க முடியாது. 137 வயதான மங்கத்தாயாரம்மாள் வாயிலாக சென்னாதேவியின் வரலாற்றைச் சொன்ன கி.ரா. தனது 98 ஆவது வயதில் சொல்வது என்ன? ‘அண்டரண்டப் பட்சி’யின் குரலாய்ச் சொல்கிறார்: ‘பறவைகளைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!’

- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர். தொடர்புக்கு: narumpu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in