Published : 16 Sep 2020 07:35 AM
Last Updated : 16 Sep 2020 07:35 AM

முடிவிலா இலக்கியப் பயணம்!

கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-ல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச் சமூகம் என வற்றாது இயங்கிக் குளுமை பரப்பிக்கொண்டுள்ளது. வட்டார மொழியும் அதன் வகைதொகையிலாச் செழுப்பமும் கி.ரா. என்னும் பெருமரத்தைக் கொப்பும்கிளையுமாய்ச் செழிக்கச் செழிக்க வளர்த்தன. தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல்கள், விடுகதை என்று நாட்டார் வழக்காறுகளினுள் முங்குநீச்சல் போட்டு முத்துகள் சேகரித்துக் கொட்டினார். இவையெல்லாமும் சேர்ந்து அவராகி, பள்ளிக்கூடம் கண்டிராதவரைப் பல்கலைக்கழக ‘வருகைதரு பேராசிரியர்’ ஆக்கியது புதுவைப் பல்கலைக்கழகம்.

கி.ரா. சொல்கிறார்: “தமிழ்மொழி தமிழ்ப் பண்டிதர்களிடம் இல்லை. படித்த வெள்ளைச் சட்டைக்காரர்களிடம் இல்லை. அதன் இனிமையைக் கேட்க வேண்டுமென்றால், கிராமத்துக்குப் போகணும். படிக்காத மக்களைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்கணும். அப்போது அதன் மொழிவீச்சு பிரமாதமாயிருக்கும்.” கி.ரா.வின் தொய்வுபடா முயற்சியில் உருவானது ‘கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி’. 98 வயதிலும் விடாமுயற்சியாய்ப் புதுப்புதுச் சொற்கள், சொல்லாடல், சொலவம், வரலாற்றுத் தரவுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள் என குறித்து வைத்துவருகிறார். ஒவ்வொரு முறை காணச் செல்கிற வேளையிலும் புதுப்புது வழக்குச் சொற்களை அகராதியில் கோத்துக்கொண்டிருப்பார். உரையாடுவதில் புதியன விழுந்தால், “அதை எழுதிக்கோங்க” என்று அகராதியை நீட்டுவார். புதியன சிவப்பு மையால் எழுதி அந்தப் பக்கத்தில் நிலைநிறுத்தப்படும்.

இளமைகளைத் தனக்குள் தொகுத்துள்ள கி.ரா. இன்னும் கருக்கழியா உயிர்ப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதன் சாட்சி, அண்மையில் வெளியான அவரது ‘அண்டரண்டப் பட்சி’. 150 பக்கங்கள் எழுதி அதை 40 பக்கமாய்ச் சுருக்கிவிட்டதாய்ச் சொன்னார்.

கி.ரா.வின் இளைய மகன் பிரபாகர்-நாச்சியார் இணையரின் மகள் அம்ஸா ஒரு கணினிப் பொறியாளர். அம்ஸா தன் வாழ்க்கைத் துணையாகக் காதலித்துத் தேர்ந்தெடுத்தது முகமது ஆசிப் என்ற இஸ்லாமியரை. “சிலர் எல்லா வீடுகளுக்கும் போவார்கள். எல்லா வீடுகளிலும் சாப்பிடுவார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சாதியினருக்கு, மதத்தினருக்குத் திருமணம் செய்து தர மறுப்பார்கள். என் பேத்தி ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்ய விரும்பினாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுகிறபோது, என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம். துணிவாக ஏதாவது செய்ய வேண்டும். கடைசியில் நம் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம்” என்று கி.ரா. மனம் திறந்தார்.

எழுத்தாளன் என்றால் எழுத்துக்கு மட்டும், வாழ்வுக்கு இல்லை என்றிருக்கும் நியதியை கி.ரா. மாற்றிப் போட்டு அர்த்தமுள்ளதாக்குகிறார்.

- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்.

தொடர்புக்கு: jpirakasam@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x