மெல்லத் தமிழன் இனி 2 - மது வருவாய் எனும் மாயை!

மெல்லத் தமிழன் இனி 2 - மது வருவாய் எனும் மாயை!
Updated on
2 min read

மது விற்பனை மூலம் அபரிமிதமான வருவாய் அரசுக்குக் கிடைக்கிறது என்பதை எண் கணக்குகள் நிரூபித்தாலும் அது ஒரு மாயை என்கிறார்கள் விவரமான அதிகாரிகள். நடப்பு பட்ஜெட்டின்படி நமது மொத்த வரி வருவாய் ரூ. 1,42,681.33 கோடி. செலவு ரூ. 1,47,297.35 கோடி. பற்றாக்குறை 4,616.02 கோடி. மதுவால் அபரிமிதமான வருவாய் வருகிறது என்றால் பட்ஜெட்டில் துண்டுவிழுவது ஏன்? பற்றாக்குறையைத் தீர்க்க முடியாத, அதேசமயம் மாநிலத்தின் ஏகோபித்த எதிர்ப்பைச் சம்பாதித்துவரும் மது வருவாயால் என்ன பலன்? அதைத் தலைமுழுகிவிட்டு, பிற துறைகளில் சீரமைப்பை மேற்கொண்டாலாவது அரசின் வருமானம் உயர்வதுடன் ஓட்டு வங்கியும் உயரும் என்பது அவர்கள் வைக்கும் வாதம்.

அப்படிச் சீரமைக்க வேண்டிய துறைகளில் முக்கியமானது பதிவுத் துறை. நாம் ஒரு சொத்தை வாங்கும்போது சொத்தின் உண்மையான மதிப்புக்கேற்ப குறிப்பிட்ட சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை, சொத்தின் மதிப்பைக் குறைத்து குறைவான வரி செலுத்தியிருந்தால், மாவட்ட ஆட்சியர் மூன்று மாதங்களுக்குள் அதன் மீது இறுதி ஆணை பிறப்பித்து, சரியான வரி வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால் இன்று தமிழகத்தில் எத்தனைப் பதிவுகள் நியாயமாக நடக்கின்றன? எத்தனை பேர் உண்மையான சந்தை மதிப்புக்குப் பதிவுக் கட்டணம், முத்திரைத் தீர்வை செலுத்துகிறார்கள்? விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் அரசாங்கத்தைக் குறைச் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை. இது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் விடுக்கப்படும் கேள்வி. தமிழகத்தின் மொத்த வரி வருவாயில் சராசரியாக 10-11 % முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணங்களின் மூலம் பெறப்படுகிறது. ஆனால், உண்மையான சந்தை மதிப்புக்கு வரி செலுத்தினால், அரசுக்குக் கூடுதலாக 20% வரை வருவாய் கிடைக்கும். இந்த வகையில் அரசுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 கோடி. ஓர் ஆண்டு மது வருவாயில் சுமார் 50% இது.

சரி, பதிவுத் துறை நிர்வாகமாவது திறம்படச் செயல்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. நாட்டிலேயே முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் வசூலுக்காக அதிகம் செலவிடும் மாநிலம் நாமாகத்தான் இருப்போம். கடந்த 2012-13-ம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ரூ. 7,645.40 கோடி. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை ரூ.203 கோடி. மொத்த வரவில் 2.66% இது. ஆனால், நமது தேசிய சராசரியே 1.89%தான். இதிலிருந்தே நமது பதிவுத் துறையின் 'நிர்வாகத் திறனை'ப் புரிந்துகொள்ளலாம்.

பதிவுத் துறையில் நிலுவையிலிருக்கும் வரி வருவாய் மட்டும் ரூ.299.46 கோடி. கடந்த 2012-13-ல் தமிழகத்தில் 135 பதிவுத் துறை அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் முத்திரைத் தீர்வையைக் குறைத்து மதிப்பிடுதல், ஆவணங்களைத் தவறாக வகைப்படுத்துதல் போன்ற குளறுபடிகளால் ரூ.1,271.27 இழப்பு கண்டறியப்பட்டது. வழிகாட்டி மதிப்பின்படி செலுத்தப்பட வேண்டிய தொகையில் 1% முதல் 25% மட்டுமே செலுத்தப்பட்டிருந்தன. ஆறு அலுவலகங்களில் மட்டும் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யாமல் 14,264 ஆவணங்கள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு ரூ.454.66 கோடி. ரூ. 85.61 லட்சம் மதிப்புள்ள பயோ மெட்ரிக் கருவிகள் முடங்கிக்கிடக்கின்றன. விடுமுறை நாட்களில் பதிவுசெய்யப்படும் ஆவணங்களுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கூடுதல் கட்டணம் பெரும்பாலும் வசூல் செய்யப்படுவது இல்லை. மூச்சு வாங்குகிறது, ஒன்றா, இரண்டா? குளறுபடிகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆங்காங்கே நடத்தப்படும் சிறு ஆய்வுகளிலேயே இவ்வளவு இழப்புகளைக் கண்டறிய முடிகிறது என்றால், மொத்தத் துறையிலும் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு இருக்கும்? மது விற்பனையில் காட்டும் அக்கறையை இந்தத் துறையில் காட்டினால் அரசின் வருவாய் உயர்வதுடன் மக்களின் ஆரோக்கியமும் மீளும் அல்லவா!

தெளிவோம்…

- டி.எல்.சஞ்சீவிகுமார்

- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in