

சமூக - பொருளாதார வரலாறு என்றாலே மார்க்சிய வரலாறு என்கிறார்களே?
நீங்கள் சொல்வதைப் போல, சமூக - பொருளாதார வரலாற்றைப் பற்றி பேசப்படுவ தெல்லாம் மார்க்சிய வரலாறுதான் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், மார்க்சியத்தின் வழியாக வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒரு சிலர் தவிர, கல்வியாளர்கள்கூட மெனக்கெடுவதில்லை. இதில் விசித்திரமான ஒரு வழக்கம் இந்துத்துவப் படையினரிடம் (பொதுவாக இப்படித்தான் அவர்கள் அழைக்கப்படுகின்றனர்) காணப்படுகிறது. அதாவது, தங்களை மறுப்பவர்களெல்லாம் ‘மார்க்சியவாதி’ என்பது.
மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வதற்கும் மார்க்சியப் பார்வையில் சில கேள்விகளை எழுப்புவதற்கும் இடையிலான வேறுபாட்டை இன்னமும் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இத்தகைய சூழலுக்கு இடையில் சமூகவிய லாளர்களான எம்.என்.நிவாசன், ஆண்ட்ரீ பிட்டீல், பொருளாதார வல்லுநர்களான சுகமய சக்ரவர்த்தி, அமர்த்தியா சென், ஜெகதீஷ் பகவதி போன்றவர்களுடனான சந்திப்பு நவீன இந்தியா குறித்த பார்வையைப் புரட்டிப்போட்டது. இதே நேரத்தில்தான் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்ற மார்க்சிய வரலாற்று மேதைகளும் இருந்துள்ளனர். தகவல்களை மட்டுமே சேகரிப்பதல்ல வரலாறு என்பதை நான் ஆழமாக உணர்ந்தது இவர்களையெல்லாம் வாசித்தபோதுதான்.
பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமல்லாமல் வரலாற்றின் பல்வேறு அம்சங்களை உள்வாங்க வேண்டிய அவசியத்தை லண்டனில் படிக்கும்போதே புரிந்துகொண்டேன். ‘ஒப்பீட்டு வரலாறு’ எனக்குப் பிடித்தமான மற்றொரு கிளை. இந்திய வரலாற்றைத் தவிர ஐரோப்பிய வரலாற்றை மட்டுமே படித்துவந்த காலகட்டத்தில், சீன வரலாற்றைப் படிக்கத்தொடங்கினேன். 1957-ல் ஆய்வு உதவியாளராக சீனாவுக்கே சென்று சீன வரலாற்றை ஆழமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும், சீன வரலாற்றில் கால் ஊன்ற முடியாமல் போனது. பிறகு கிரேக்க - ரோமானிய வரலாற்றை வட இந்திய வரலாற்றோடு மிகச் சிறப்பாக ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஹோமரின் இதிகாசங்களுக்கும் இந்திய இதிகாசங்களுக்கும் இடையில் சுவாரசியமான ஒற்றுமைகள் தென் பட்டன. மகாபாரதத்தைப் பற்றியும் பேச நிறையவே இருந்தது. இப்படி நான் பெற்ற அனுபவங்கள் அத்தனையும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தில் 1970-களில் பணியாற்றியபோது வெளிப்படுத்தினேன். அந்த காலகட்டம் மறக்க முடியாத அனுபவங்களால் நிறைந்தது.
பண்டைய இந்தியச் சமூகத்தின் காலம் ‘பொற்காலம்’ என்னும் கூற்றை நீங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றீர்கள். முன்னேற்றம் என்ற ஒற்றைச் சொல்லை முன்னிறுத்தி எல்லாவற்றையும் நியாயப்படுத்தினால் பழங்குடியின மக்களுக்கெல்லாம் விடிவே கிடையாது. ஆனால், இத்தகைய விமர்சனப் பார்வையினால் நீங்கள் ‘வில்லனாக’ பார்க்கப்படுகிறீர்கள் அல்லவா?
பொற்காலத்தைக் கேள்வி கேட்பது அதன் உன்னதத்தைச் சிதைப்பதற்கல்ல. அத்தகைய சித்தரிப்பு எப்படி உருவானது என்பதைக் கண்டறிவதுதான் வரலாற்றாசிரியர்களின் நோக்கம். இதைக் கண்டறியக் கேள்விகள் எழுப்பத்தான் வேண்டும். காட்டுக்குள் நடந்து செல்லும்போதுகூட
`நான் எந்தத் திசையில் செல்கிறேன், இங்கிருக்கும் மரம், செடி கொடிகளிடமிருந்து என்ன தெரிந்துகொள்ளப்போகிறேன்?' போன்ற கேள்விகளை எழுப்பத்தான் வேண்டும் இல்லையா! வரலாற்றா சிரியரும் இதைத்தான் செய்கிறார். அவர் தெரிந்த நிலப்பரப்பிலிருந்து தெரியாததை நோக்கிப் பயணிக்கிறார்.
அமைதியைப் போதித்த காந்தியடிகள் எதற்காக போருக்கும் வன்முறைக்கும் ஆதரவளித்த பகவத்கீதையைத் தூக்கிப்பிடித்தார்? என்னை அடிக்கடி குடையும் கேள்வி இது?
காந்தியின் எழுத்துக்களை மதிப் பிடும் அளவுக்கு அவரை ஆழமாக வாசித்ததில்லை. அஹிம்சையும் இம்சையும் வெவ்வேறு கோணங்களில் செயல்படுகின்றன என்பதே என்னுடைய பார்வை. உதாரணமாக, அசோகர் அஹிம்சையை முன்மொழிந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட்ட அஹிம்சை என்றே சொல்ல வேண்டும். தன் மகன்களும் பேரப்பிள்ளைகளும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். வன்முறையில் இறங்க வேண்டிவந்தால், கருணையோடு தண்டனை விதிப்பார்கள் என்றார் அசோகர். கீதையும் இதைத்தான் போதிக்கிறதா? இதில் எனக்கு ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், அசோகரின் வழிகாட்டலால் காந்தி ஏன் ஈர்க்கப்படவில்லை?
ஒன்று புரிகிறது… கீதையை காந்தி பின்பற்ற முக்கியக் காரணம் வர்ணாசிரம தர்மம். ஏனெனில், அது சமூகக் கட்டமைப்பை ஸ்திரமாகப் பேசியது. சட்டதிட்டங்களை மக்கள் மீறும்போது அவர்களை முறைப்படுத்தி வழிநடத்துவேன் என உறுதியளித்தது.
தன்னுடைய இறுதிக்கட்டத்தில்தான் வர்ணாசிரம தர்மத்தை காந்தி கைவிட்டார்.
பாரம்பரியத்தைத் தக்கவைத்துக்கொண்டே சிக்கலுக்கு விடை தேடும் முயற்சியில், `ஹரிஜன் ' என்னும் சொல்லை காந்தி பிரயோகித்தார். சா திய அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டதை அவர் எதிர்த்தார். ஆனால், அதற்கு மாற்று என்ன என்பதே இன்றைக்குத் தொக்கி நிற்கும் கேள்வி?
தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயங்களில் வழிபட காந்தியடிகள் தொடர்ந்து போராடினார் என்பது உண்மைதான். ஆனால், சாதியை ஒழிக்க முயற்சிக்காமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்னும் பெயரைச் சூட்டியது தான் அவர்களைவிட உயர்ந்தவர் என்பதைக் காட்டத்தானோ?
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கடவுளின் பெயரைச் சூட்டியது வெறும் பாவனைதானோ என்னும் சந்தேகம் இன்றைய சூழலில் நின்றுகொண்டு விமர்சிப்பவர் களுக்கு எழலாம். ஆனால், தன் பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்க காந்தி ஒருபோதும் செயல்பட்டிருக்க மாட்டார். அவருடைய நோக்கத்தைக் கேள்விக்குள் ளாக்குவதற்குப் பதிலாக, காந்தியின் அணுகுமுறை சாதியப் படிநிலையைப் புரட்டிப்போட்டதா? அன்றைய சூழலுக்குச் சவால் விட்டதா என்ற கேள்விகளை எழுப்புவதுதான் நியாயம்.
தொடரும்..
தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா, © ஃப்ரண்ட்லைன்