

மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது மதுவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் வைக்கும் முக்கியமான வாதம். காலம்காலமாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தைவிடக் குறைவு என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின் புள்ளிவிவரங்கள் (பார்க்க பெட்டிச் செய்தி).
அதேசமயம், தமிழகத்தில் அரசு விற்கும் மதுவைக் குடித்து இறந்தவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் எடுக்கப்படவில்லை. எனவே, நாம் சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரைகளின் அடிப்படையில் பார்ப்போம். கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் கிராமத்தில் மட்டும் 450 குடும்பங்களில் 105 பெண்கள் தங்கள் கணவரை இழந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் பணிபுரிந்த ஊழியர்கள் சுமார் 3,500 பேர் மதுவால் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தப் பணியாளர்களில் கிட்டத்தட்ட 10% இது.
தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.32 கோடி என்கின்றன பல்வேறு ஆய்வுகள். மேலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை/ ஒருவர் குடிக்கும் மதுவின் அளவு ஆகிய இரண்டுமே தேசிய சராசரியைவிட தமிழகத்தில் சுமார் இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம், சாலை விபத்துகள். தேசிய அளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி கடந்த 2013-ல் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால், 718 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். அந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் 70% மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள்.
இவற்றை எல்லாம் ஒப்பிடும்போது, குறைத்துக் குறைத்துக் கணக்கிட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு விற்பனை செய்யும் மதுவால் இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும் அல்லவா. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தானே இது.
இன்னொரு விஷயம், இத்தனை நாட்களாக மதுவிலக்கு கொண்டுவந்தால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை/ அதற்கான தீர்வுகளை மட்டுமே பார்த்துவந்தோம். அதேசமயம், மது விற்பனையால் பொதுமக்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைப் பற்றியும் சிந்திப்போம். சமீபத்தில் தன்னார்வத் தொண்டு அமைப்பான மகசூல் அறக்கட்டளை தமிழகத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. எப்போதாவது குடிப்பவர்கள்/ வாரத்துக்கு 1-2 நாட்கள் குடிப்பவர்கள்/ வாரத்துக்கு 3-4 நாட்கள் குடிப்பவர்கள்/ தினமும் குடிப்பவர்கள்/ குடிப்பதால் ஏற்படும் வேலை இழப்பு/ வருமானம் இழப்பு/ மருத்துவச் செலவு/ விபத்து இழப்பு என்று மிகவும் விலாவாரியாக எடுக்கப்பட்ட ஆய்வு அது.
மது அருந்துவதால் தமிழகம் முழுவதும் 5.8 லட்சம் பேருக்கு உடல் ஆரோக்கியப் பிரச்சினையும், 3.7 லட்சம் பேருக்கு விபத்துகளும் நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மேலும், ஓர் ஆண்டில் மட்டும் தமிழக மக்கள் மதுவுக்காக ரூ.44,769 கோடி செலவழிக்கிறார்கள்; மதுவினால் ஏற்படும் வேலை இழப்பின் நஷ்டம் 20,574 கோடி; மதுவினால் ஏற்படும் மருத்துவச் செலவு இழப்பு ரூ.2,100 கோடி. மொத்தம் ரூ.67,443 கோடி என்று புட்டுப்புட்டு வைக்கிறது அந்த ஆய்வறிக்கை. அரசின் சுமார் ரூ. 25,000 கோடி வருமானத்துக்காக மக்கள் இழக்கும் தொகை அதைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது.
எனவே, மதுவிலக்கைக் கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டு. சொல்லப்போனால், அப்படியானதொரு வாதமே தமிழக காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்துவதைப் போன்றது. தமிழகத்தில் லாட்டரியை ஒழிக்க முடிந்த காவல் துறைக்கு கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதா என்ன?
தெளிவோம்...
- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in