வார்த்தைகளில் வாழ்கிறார் பாரதி!

வார்த்தைகளில் வாழ்கிறார் பாரதி!
Updated on
2 min read

பாரதியைப் பற்றிய அவரது சமகாலத்தினரின் நினைவுக் குறிப்புகளில் பாரதிதாசன் எழுதியவை முக்கியமானவை. ஏறக்குறைய 12 ஆண்டுக் காலம் பாரதியுடன் நெருங்கிப் பழகியவர். அவரையே தமது ஆசிரியராக ஏற்றுக்கொண்டவர். பக்திப் பாடல்களிலிருந்து இறைமறுப்பை நோக்கி நகர்ந்தாலும் பாரதியின் தாசனாகவே தன்னை அறிவித்துக்கொண்டவர் கனக.சுப்புரத்தினம். பாரதியின் தொடர்புக்குப் பிறகே தன்னுடைய கவிதைகள் அரசியல், சமுதாயம், மொழி ஆகிய துறைகளில் உள்ள நிறைகுறைகளை எடுத்துக்காட்டத் தொடங்கியதாகக் கூறியிருக்கிறார் பாரதிதாசன்.

பாதியில் நின்றுபோன பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ மறுநாள் ஒரு குழந்தையின் இறுதி ஊர்வலத்தையடுத்து முழுமை பெற்றதை முதல் வாசகராகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பாரதிதாசன். அன்று அவர் பாரதியிடம் கற்றுக்கொண்ட கவிதையின் ரகசியம்: ‘அருவியின் வீழ்ச்சிபோல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டுமே என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கக் கூடாது’.

பாரதிக்குப் பிறகு மரபுக் கவிதைகளின் உள்ளடக்கமும் மொழியும் மாறின. மரபுக் கவிதைகள் என்று சொன்னாலும் விருத்தமும் சந்தப் பாக்களும் மட்டுமே. (கட்டளைக் கலித்துறை போன்ற எழுத்தெண்ணிப் பாடும் வித்தகத்திலெல்லாம் பாரதி சற்றே பின்தங்கியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். ‘விநாயகர் நான்மணி மாலை’ அதற்கு ஓர் உதாரணம்.) மரபுக் கவிதையின் அந்தப் புதிய தொடர்ச்சியில் பாரதியின் வழித்தோன்றலாக பாரதிதாசன் இருந்தார். வசனக் கவிதைகள் என்னும் இன்னொரு கிளைத் தொடர்ச்சி, பாரதியின் அத்வைதத்தை ஏற்றுக்கொள்வதாக அமைந்தது. எனவே, பாரதியின் இரண்டு கிளைத் தொடர்ச்சிகளுக்கும் இடையிலான உறவறுந்துபோனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், வசனக் கவிதை இயக்கம் அந்நியர்கள் யாரையும் அனுமதிக்காதவாறு தன்னைச் சுருக்கிக்கொண்டபோது, மரபுக் கவிதை இயக்கமோ எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரையும் கவிஞர்களாக்கி அழகுபார்த்தது. அதில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை கணிசமானதாக இருக்கலாம். உடலுழைப்புத் தொழிலாளர்களும்கூட கவிஞர்களாக அறிமுகமானார்கள் என்பதையும் கணக்கில்கொண்டாக வேண்டும். பாரதிதாசனின் வழியாகவே அது நிகழ்ந்திருந்தாலும் பாரதியின் வெற்றியும்கூட அது.

பாரதிதாசன் பரம்பரையில் தன்னையும் ஒருவராக எண்ணிய இந்தத் தமிழாசிரியர்களும் தமிழார்வலர்களுமே பாரதியாரை வீடுதோறும் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். பள்ளிகளிலும் பொது விழாக்களிலும் பேச்சுப் போட்டியோ கட்டுரைப் போட்டியோ வெற்றிபெறும் மாணவர்களுக்கு பாரதியார் கவிதைத் தொகுப்பே பரிசளிக்கப்பட்டது. ‘சக்தி காரியாலய’மும் ‘வானவில் பிரசுர’மும் மலிவு விலைப் பதிப்புகளை வெளியிட்டன என்றாலும், அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் இந்தப் போட்டிகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. பாரதியின் கவிதைகளை நயம் சொல்லிப் பாராட்டாமல் பட்டிமன்றங்களோ சுழலும் சொற்போர்களோ நிறைவுபெற்றதில்லை. இன்று பாரதியின் எழுத்துகள் எந்தெந்தப் பத்திரிகையில், என்னென்ன தேதிகளில் வெளிவந்தன என்று மூல ஆவணங்களைத் தேடித் திரட்டி வெளியிடும் அளவுக்கு பாரதி ஆய்வுகள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆனால், இன்னொரு பக்கம் பாரதி கவிதைகளின் நயங்களைப் பாராட்டும், அவரது கவிதைகளைப் பகுப்பாய்வு செய்யும் இலக்கியத் திறனாய்வுகள் குறைந்துகொண்டே இருக்கின்றன. வரலாற்று ஆளுமை என்ற வகையில், பாரதி அத்தகைய ஆய்வுகளுக்கும் உரியவர்தான் என்றாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பது வார்த்தைகளால்தான், வரலாற்றுக் குறிப்புகளால் அல்ல.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in