பாரதி பேசுகிறார்!

பாரதி பேசுகிறார்!
Updated on
2 min read

சிட்டுக்குருவி

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.

இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன. சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத் தோன்றவில்லை. ஒருமுறையேனும் தலை நோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும் மானமும் மனிதனுக்குள்ளதுபோலவே குருவிக்கும் உண்டு. இருந்தபோதிலும், க்ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பதுபோலே. அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும் அதன் கட்டுகளையும் நோய்களையும் துன்பங்களையும் பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்லமாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள்புரியலாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடுண்டு; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை.

நான் அமரன்

நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும், தீராத, மாறாத இளமையுடையேன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர். நான் அதனை வேண்டேன். ஏனென்றால், இவர்கள் எய்தும் நீண்ட வயது துன்பம் ஆகிறதேயன்றி வேறு இல்லை. நான் ஸதா காலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன், ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணம் உண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.

அன்பும் பக்தியும்

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே, பக்தியை விளைவிக்கும். நம்மை போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலேயே அடிமைப்பட்டு இருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும் குருவாயினும் புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்துமா வெளிக்கு அடிமைபோல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in