Published : 10 Sep 2020 07:53 am

Updated : 10 Sep 2020 07:53 am

 

Published : 10 Sep 2020 07:53 AM
Last Updated : 10 Sep 2020 07:53 AM

தமிழ்நாட்டுக்கு சொந்தமாக ரயில்கள், கப்பல்கள், விமானங்கள் வேண்டும்

tamilnadu-needs-its-own-trains-ships-and-planes

நம் நாட்டின் பெயரை இனி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்றே எழுதுவோம் என அண்ணா பிறந்த நாளன்று நாடு தழுவிய இயக்கம் நடத்தவிருக்கிறது தன்னாட்சித் தமிழகம். கூடவே, அம்பானிகள் ரயில் இயக்கும்போது, ஏன் தமிழ்நாடு ரயில்வே கூடாது என்று பரப்புரையும் செய்துவருகிறார், தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன். மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்படுவது எந்த அளவுக்கு முக்கியம், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதால் என்ன நடக்கிறது, தமிழ்நாட்டுக்கென ஏன் தனியாக ரயில், கப்பல், விமானப் போக்குவரத்து வேண்டும் என்பன உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசுகிறார்.

எதற்காக இந்தப் பிரச்சாரம்? அதற்கு ஏன் அண்ணா பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தீர்கள்?


இன்று நாட்டில் நிலவுகிற முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரக் குவிப்பு. ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை எல்லாமே மாநிலங்களின் பிரச்சினை மட்டுமல்ல; மக்களின் பிரச்சினையும்கூட. இந்த இக்கட்டான காலத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தையும், குடியரசு ஆட்சி முறையையும், மக்களின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற நல்ல வியூகம் தேவைப்படுகிறது. அந்த வியூகமாகத்தான் தன்னாட்சி, கூட்டாட்சி என்கிற முழக்கத்தைப் பார்க்கிறோம்.

இது வெறுமனே ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தைப் பெற்றுத்தரக் குரல் கொடுக்கும் இயக்கமல்ல. இந்தியா என்பது ஒரு ஒற்றை அரசு அல்ல; பல்வேறு தேசியங்களின் ஒன்றியம் என்பதை உணர்த்தும் செயல்பாடு. தேசிய இனங்களின் பிரச்சினையை மிகச் சரியாகவும், நடைமுறை சார்ந்தும் அணுகியதில் அண்ணாவுக்கு இணையாக ஒரு தலைவர் இந்தியாவிலேயே கிடையாது. தொடக்கத்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்தாலும்கூட, பிறகு கூட்டாட்சி, தன்னாட்சி என்கிற இடத்துக்கு நகர்ந்தார். ஆகவே, அவரது பிறந்த நாளில் இதைத் தொடங்குவது மிகப் பொருத்தமானது.

பொருளாதாரப் பிரச்சினைக்கும் மாநிலத் தன்னாட்சிதான் தீர்வு என்று சொல்வது ஏன்?

இந்தியாவின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சிதான். மாநிலங்கள் உருவாக்கும் வளர்ச்சியையெல்லாம் கூட்டித்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, இந்தியாவுக்கென தனியாக ஜிடிபி இல்லை. எந்தெந்த மாநிலங்களில் அந்த மாநிலத்தை ஆளும் கட்சியும் முதல்வரும் தனிப்பட்ட வகையில் மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்களோ அந்த மாநிலங்களில்தான் வேகமான வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத் எல்லாம் உதாரணங்கள். எந்த மாநிலங்களிலெல்லாம் மாநிலக் கட்சிகள் வலுவாக இல்லையோ அங்கே வளர்ச்சி வரவில்லை.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பிஹார் எல்லாம் இதற்கு உதாரணங்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்யேகமான தனித்தன்மையும் வரலாற்றுப் பின்னணியும் இருக்கின்றன. அதைக் கருத்தில் கொள்ளாமல், அதிகாரக் குவிப்பாலும் தவறான நடவடிக்கைகளாலும் மாநிலங்களின் வளர்ச்சியைக் குறைத்துவிட்டது ஒன்றிய அரசு. ஒருபக்கம் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, பதற்றமான சூழல் காரணமாக வளர்ச்சியைத் தடுத்தார்கள் என்றால், இன்னொரு புறம் மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதியையும் முடக்கினார்கள். இவையெல்லாமும் சேர்ந்துதான் இன்று நாட்டின் ஜிடிபியை 23.9% அளவுக்குச் சரித்திருக்கின்றன. ஏகபோக உரிமைகள் அதிகமிருக்கும் இடத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பலமாக இருக்க முடியாது. நாட்டின் அத்தனை நிறுவனங்களும் சொத்துகளும் பணமும் நான்கைந்து பேரிடம்தான் இருக்கும் என்றால் எப்படி இந்தியா வளரும்?

தமிழ்நாட்டுக்கென தனி ரயில்வே, கப்பல், விமானப் போக்குவரத்து வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறீர்களே?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமானது உள்கட்டுமான வசதி. நாட்டின் எலும்பும் நரம்பும் அதுதான். வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆசைப்படும் எல்லா நாடுகளும் அதனால்தான் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் 1990-களிலிருந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை உருவாக்கினார். அது எந்தளவுக்கு சரக்குப் போக்குவரத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்தோம்.

ஆனால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு இணையாக வளர்ந்த நகரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை இணைக்கக் கூடுதல் ரயில்களும் விமானங்களும் தேவை. ஆனால், இந்திய ரயில்வேயை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிக வருவாயைத் தருகிற தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்தார்கள். ஒற்றைத் திட்டத்தைப் பெற 30 ஆண்டுகள் குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது.

டெல்லிக்கு வந்த மெட்ரோ ரயில், சென்னைக்கு வர எத்தனை ஆண்டுகள் ஆயின? இதே வேகத்தில் போனால், தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில் எந்த நூற்றாண்டில் வரும்? ஒன்றிய அரசால் ஒரு பொதுத் துறை நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாதபோது, அதை ஏன் மாநிலங்களிடம் ஒப்படைக்கக் கூடாது? அதானிகளால் விமான நிலையத்தை நடத்த முடியும், அம்பானிகளால் தொடர் வண்டிகளை இயக்க முடியும் என்றால், ஒரு மாநில அரசால் செய்ய முடியாதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய அரசுப் பட்டியலின் கீழ் ரயில்வே துறையை வைத்ததே அது பொதுத் துறை நிறுவனமாக இயங்க வேண்டும் என்பதால்தான்.

தனியார் துறையிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, அதன் முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசு தனது கைகளில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? நாட்டிலேயே முதன்முறையாகப் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் மாநிலம் இது. எனவே, தமிழ்நாடு ரயில்வே தொடங்கப்பட வேண்டும். விரும்பினால், ஒன்றிய அரசும் முதலீடு செய்யட்டும். சீனாவில் ஒவ்வொரு மாகாண அரசும் விமானப் போக்குவரத்தை நடத்துகிறது. எல்லா மாகாணங்களிலும் புல்லட் ரயில் ஓடுகிறது.

தமிழ்நாடு ஏர்வேஸையும் வெற்றிகரமாக நடத்த முடியும். கப்பல் போக்குவரத்தும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நடத்தியதுதான். எனவே, தமிழ்நாடு ரயில்வே, தமிழ்நாடு ஏர்வேஸ், தமிழ்நாடு துறைமுகப் பொறுப்புக் கழகம் எல்லாமே காலத்தின் தேவை. இவை எல்லாம் நாங்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்த கோரிக்கைகள் அல்ல. ஏற்கெனவே அண்ணா பேசியதும், 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றும்போது முதல்வர் கருணாநிதி அறிவித்ததும்தான்.

தமிழ்நாட்டை மாறிமாறி மாநிலக் கட்சிகளே ஆள்வதற்குப் பதிலாக, கர்நாடகம்போல மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் மாறிமாறி ஆள்கிறபோது, கூடுதல் நிதியும் வளர்ச்சியும் கிடைக்கும் என்கிற கருத்து இருக்கிறதே?

இது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்தாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் 2014 தேர்தலிலாவது அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள். ஏன் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்? தமிழ்நாடு இன்று இந்தளவு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு திமுக, அதிமுகதான் காரணம். தொடர்ச்சியாக அகில இந்தியக் கட்சிகளால் ஆளப்பட்ட எத்தனையோ மாநிலங்கள் எந்த வளர்ச்சியும் இன்றி இருக்கின்றனவே... அதற்கு என்ன பதில்? கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கப்பட்டும், அந்த மாநிலங்கள் தொடர்ந்து பின்தங்கியே இருப்பதற்கு என்ன காரணம்? காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி ஆண்ட மத்திய பிரதேசம் என்ன நிலையில் இருக்கிறது? கட்சி வேறுபாடு பார்க்காமல் அந்தந்த மாநிலத்துக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு, தேசியக் கட்சிக்கு வாக்களிக்கக் கோருவது அயோக்கியத்தனம்.

இந்தப் பரப்புரையில் எந்தெந்த மாநிலங்கள் பங்கேற்கின்றன?

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா, தன்னாட்சித் தமிழகம் என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் பரப்புரையை நடத்துகிறோம். கேரளம், கர்நாடகம், பஞ்சாப், வங்கம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநில கூட்டாட்சிவாதிகளிடம் ஆதரவு கேட்டோம். காலத்துக்கேற்ற முன்னெடுப்பு, நிச்சயம் கலந்துகொள்கிறோம் என்று அவர்களும் சொன்னார்கள். அண்ணா பிறந்த நாளில் அனைத்திந்திய அளவில் நடைபெறுகிற முதல் பரப்புரை இது என்பதால், அண்ணாவின் முழக்கங்களை, கருத்துகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம். கூடவே, பிற மாநிலத் தலைவர்களைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையையும் செய்யப் போகிறோம். காந்தி, அம்பேத்கர் பிறந்த நாளைப் போல நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி அண்ணாவின் பிறந்த நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்துவோம்.

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in


தமிழ்நாடுரயில்கள்கப்பல்கள்விமானங்கள்Tamilnaduபொருளாதாரப் பிரச்சினையுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியாதனி ரயில்வே

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x