Published : 09 Sep 2020 03:09 PM
Last Updated : 09 Sep 2020 03:09 PM

ஜிடிபி மட்டும்தான் பொருளாதாரமா?

ஜூலை மாதத்தில் இருந்ததைவிட தற்போது சற்று நல்ல நிலைமையில் இருக்கிறீர்களா? வெளிப்படையாகச் சொன்னால் இப்படிக் கேட்க வேண்டியதே இல்லை. அமெரிக்கப் பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதப் பொருளாதாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. மூன்றாவது காலாண்டில் ஜிடிபி மதிப்பு வேகமாக உயர்ந்துவருவதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், பங்குச் சந்தை மட்டுமே பொருளாதாரம் அல்ல. அமெரிக்காவின் பங்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை, 1 சதவீத அமெரிக்கர்களின் கைவசமே இருக்கின்றன. மீதியுள்ள மக்களிடம் இருப்பது 0.7 சதவீதப் பங்குகள்தான்.

எது பொருளாதாரம்?

பொதுவாக வேலைவாய்ப்பும், ஜிடிபியும்தான் பொருளாதாரம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அவை மட்டுமே பொருளாதாரத்தின் அம்சங்கள் அல்ல. சில பொருளாதார நிபுணர்களும், பல அரசியல்வாதிகளும் அடிக்கடி மறந்துபோகும் விஷயம் இதுதான்: அடிப்படையில் பொருளாதாரம் என்பது தரவுகள் தொடர்பானது அல்ல; அது மக்களுடன் தொடர்புடையது.

எனக்கும் தரவுகள் ரொம்பவே பிடிக்கும். சொல்லப்போனால் மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பிடிக்கும் எனலாம். ஆனால், பொருளாதாரத்தின் வெற்றியை, நபர் சாராத புள்ளிவிவரங்கள் மூலம் தீர்மானிக்கக் கூடாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதா என்பதின் அடிப்படையிலேயே அது தீர்மானிக்கப்பட வேண்டும். கடந்த சில வாரங்களில் பல அமெரிக்கர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு எளிய உண்மை ஆகும்.

பெருந்தொற்றும் பெரும் துன்பமும்

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 30,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக மரணமடைந்திருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அமெரிக்காவைவிட அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், இதே காலகட்டத்தில் 4,000 பேர்தான் உயிரிழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஏராளமான அமெரிக்கர்கள் உடல்ரீதியாக நீண்டகாலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான எண்ணிக்கையில் அது தொடர்வதாகத் தெரிகிறது. அதேசமயம், தொழிலாளர் தின (செப்டம்பர் 7) விடுமுறைக் கொண்டாட்டங்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சூழல் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிலைமை மீண்டும் மோசமடைய அதிக வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

ஆனால், பெருந்தொற்று காரணமாக ஏற்கெனவே பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பெருமளவில் வருமானத்தை இழந்திருக்கின்றன. அதிலிருந்து இன்னமும் அவர்கள் மீண்டு வரவில்லை. பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் அரசு வழங்கிய அவசர உதவி பெரும்பாலான அமெரிக்கர்களுக்குக் கிடைத்தது. ஆனால், ஜூலை மாத இறுதியில், அதில் பெரும்பகுதி முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும், தேசியத் துயர் அதிகரித்துவரும் சூழலில்தான் நாம் (அமெரிக்கா) இப்போது இருக்கிறோம்.

வேலைவாய்ப்பும் உண்மை நிலவரமும்

வேலைவாய்ப்பு அறிக்கை குறித்துப் பேசலாம். அதிகாரபூர்வ மாதாந்திர வேலைவாய்ப்பு தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே அந்தப் புள்ளிவிவரங்கள் பெறப்பட்டிருக்கின்றன என்பதுதான்.

ஜூலை இறுதியிலிருந்து வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டிருப்பதாகவே தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அடுத்து வரவிருக்கும் வேலைவாய்ப்பு அறிக்கை (அது இந்த வாரம் சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே இருக்கும்), அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படவிருக்கும் கடைசி அறிக்கையாக இருக்கும். அது ஒருவேளை முந்தைய அறிக்கையைவிட பலவீனமான ஒன்றாக இருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும், ஆகஸ்ட் மாதம் வெளியான அறிக்கை சிறப்பானது அல்ல. சாதாரண நாட்களில் 1.4 மில்லியன் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது நம்பிக்கை தரும் விஷயமாகக் கருதப்படும். ஆனால், பிப்ரவரியில் இருந்ததைவிட 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை நாம் (அமெரிக்கா) இழந்திருக்கிறோம். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மோசமானதாகவே இருக்கிறது. பெருந்தொற்றுப் பரவல் குறைந்திருந்தாலும், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறை வேலைகளில் கிட்டத்தட்ட 25 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

ஊதியம் உயர்ந்திருப்பது நல்ல அறிகுறியா?

பெருந்தொற்றுப் பரவல் குறைவதற்கு முன்பு குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த அமெரிக்கர்களே சமீபகாலமாக அதிகமாக வேலையிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாத அறிக்கையில் கவலை தரும் முக்கிய விஷயம், சராசரி ஊதியம் அதிகரித்திருப்பதுதான். எழுத்துப் பிழையோ எனக் குழம்பிக்கொள்ள வேண்டாம். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படும் சூழலில், சராசரி ஊதியத்திலும் சரிவைத்தான் நாம் எதிர்பார்ப்போம். ஆனால், இன்றைய சூழலில் சராசரி ஊதியம் உயர்ந்திருப்பது என்பது, யாருக்கு உண்மையாகவே வேலை தேவையோ அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியே.

ஆக, மீண்டுவர வேண்டிய நிலையில் இருப்பவர்களைப் பொருளாதாரம் இன்னமும் அலட்சியப்படுத்துகிறது.

காத்திருக்கும் கடின காலம்

கரோனா காரணமாகப் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாகக் கிடைத்துவந்த பாதுகாப்பு வளையமும் தகர்ந்துவிட்டது. மார்ச் மாதம் அமலுக்கு வந்த ‘கேர்ஸ் ஆக்ட்’ சட்டத்தின் மூலம், வேலையில்லாதவர்களுக்கு வாரம் 600 டாலர்கள் நிதியுதவியாக அளிக்கப்பட்டது. தொழிலாளர்களின் கடுமையான கஷ்டங்களைக் குறைக்க இந்த உதவி முக்கியப் பங்காற்றியது. இல்லையென்றால் வறுமை இன்னமும் அதிகரித்திருக்கும்.

ஆனால், இந்த உதவி ஜூலை 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. தேர்தலுக்கு முன்னதாக இந்த நிதியுதவியை மீண்டும் வழங்க, செனட்டில் (அமெரிக்க மேலவை) உள்ள குடியரசுக் கட்சியினர் தயாராக இல்லை என்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. நிர்வாக நடவடிக்கை மூலம், வாரம் 300 டாலர் நிதியுதவி வழங்கும் ட்ரம்ப்பின் முயற்சி பலரைச் சென்றடையப்போவதில்லை. அப்படியே சென்றடைந்தாலும் அது போதுமானதாக இருக்கப்போவதில்லை. சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு, சில வாரங்களுக்குக் குடும்பங்கள் சமாளித்திருக்கலாம். ஆனால், மில்லியன் கணக்கானவர்கள் மிகக் கடினமான காலத்தையே எதிர்கொண்டிருக்கிறார்கள்.

எண்களும் யதார்த்தமும்

சுருக்கமாகச் சொன்னால், பொருளாதாரப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டும் முன்னர், மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் அந்தப் புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு உடையவை என்பதைச் சிந்திக்க வேண்டும். தரவுகள் அர்த்தமற்றவை அல்ல. ஒரு மில்லியன் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பது என்பது, ஒரு மில்லியன் வேலைவாய்ப்பு குறைவதைவிட நல்ல விஷயம்தான். சுருங்கிவரும் ஜிடிபி-யை விட, வளர்ந்துவரும் ஜிடிபி நல்லதுதான்.

ஆனால், தலைப்புச் செய்திகளில் வரும் எண்களுக்கும், அமெரிக்க வாழ்க்கையின் யதார்த்தத்துக்கும் இடையில் ஒரு தொடர்பின்மை இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது அது மிகத் தெளிவாகத் தெரிகிறது!

- பால் க்ரூக்மேன்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x