

அரசின் பிற துறைகளில் வரி வருவாய் குறைவதற்குக் காரணமே, டாஸ்மாக் மூலம் வரும் வருமானம்தான் என்றார் அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். “டாஸ்மாக் மூலம் 80% விற்பனை வரி மற்றும் கலால் வரி மிக எளிதாக அரசுக்குக் கிடைக்கிறது. வாசல் தேடிச் சென்று வரி வசூலிப்பது, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வரி வருவாய் இலக்கை அடைவது போன்ற சிரமங்கள் எல்லாம் மது விற்பனையில் இல்லை. கடையைத் திறந்து வைத்தால் மக்கள் கூட்டமாக வந்து சுமார் 80% வரியைச் செலுத்தி, மதுவை வாங்கிச் செல்கின்றனர். இப்படி எளிமையாக, அபரிமிதமாகக் கிடைக்கும் வரி வருவாய்தான் பிற துறைகளில் அதிகாரிகள் துரிதமுடன் செயல்பட மறைமுகத் தடையாக இருக்கிறது. அதாவது, மது விற்பனையால் கிடைக்கும் கணிசமான வரி வருவாயால், மற்ற துறைகளில் ஏற்படும் வருவாய் இழப்புகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கொள்ளலாம்” என்றார் அவர்.
உண்மைதான், அலட்சியம் காரணமாகவும் அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்புகள் ஏராளம். இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் ஆய்வின்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள ஆய்வறிக்கைகள் மற்றும் தீர்க்கப்படாத தணிக்கைக் கருத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.3,662.83 கோடி. அதாவது, வரி சீர்திருத்தம் செய்வது, நிலுவை வரி வசூலிப்பது, புதிய வரி வருவாயைப் பெறுவது, வருவாய் இழப்புகளைத் தடுப்பது போன்றவை குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் அவை.
கடந்த 2012-13ல் மட்டும் தமிழகத்தின் 166 விற்பனை வரி அலுவலகங்களில் 33,449 வரி விதிப்புப் பதிவுகள் தணிக்கைக்கு அனுப்பப்படவில்லை. இதில் தமிழகத்தின் மிகப் பெரும் வணிகர்கள் கட்ட வேண்டிய சுமார் 195 வரி இனங்களும் அடங்கும். மேலும், 2007-2012 வரை பல்வேறு துறைகளில் தணிக்கைக் குழு ரூ. 336.15 கோடி வரி வசூல் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், வசூலிக்கப்பட்டது ரூ.31.01 கோடி மட்டுமே. குறிப்பாக, மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறையில் 2011-12ல் மட்டும் ரூ.78.02 கோடி மதிப்புள்ள வரி வசூலிப்பு அறிக்கைகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ரூ.11.19 கோடி வரி வசூலிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வசூலித்தது வெறும் ரூ. ஒரு லட்சம் மட்டுமே. அதிகாரிகளின் அலட்சியத்தின் ஒரு துளி இது.
இது தவிர, 2012-13ல் வணிக வரி, மாநில ஆயத் தீர்வை, வாகனங்களின் மீதான வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்கள், மின் வரி, சுரங்கம், கனிமங்களுக்கான வரி வரவுகள் என மொத்தம் 374 அரசு அலுவலகங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில் குறைவான வரி மதிப்பீடு, குறைவான வரி விதிப்பு, குளறுபடிகள் காரணமாக 1,828 இனங்களில் ரூ.1,635 கோடி மதிப்பில் வருவாய் இழப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தணிக்கைக் குழு சுட்டிக்காட்டிய பின்பு, அந்தத் துறைகள் வசூலித்த தொகை ரூ.6.99 கோடி மட்டுமே.
இறுதியாக, “தீர்க்கப்படாமல் நிலுவை யிலுள்ள ஆய்வு அறிக்கைகளின் அதிகமான போக்கு, தணிக்கையில் குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் மற்றும் தவறுகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவையிலுள்ள கேட்புத் தொகை/ இழப்புத் தொகை ஆகியவற்றை வசூலிக்கத் தவறிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறது தணிக்கை குழுவின் அறிக்கை. சில துறைகளில் மட்டுமே அலட்சியம் காரணமாக நிலுவையில் இருக்கும் வரி வருவாய் சுமார் ரூ.3,622.83 கோடியை எட்டுகிறது. எல்லா துறைகளையும் ஆய்வு செய்தால் அலட்சியத்தின் இழப்பு ரூ.5,000 கோடியைத் தாண்டும்!
தெளிவோம்…
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in