Last Updated : 07 Sep, 2020 08:33 AM

Published : 07 Sep 2020 08:33 AM
Last Updated : 07 Sep 2020 08:33 AM

காங்கிரஸ் எங்கே போய்ச்சேரும்?

காங்கிரஸ் தலைமை குறித்த காவியத்தில் மற்றுமொரு அத்தியாயம் எதிர்பார்த்த முடிவுக்கு வந்திருக்கிறது. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார். தலைமை தொடர்பான பிரச்சினையை காங்கிரஸ் எதிர்கொண்டிருப்பதற்கு நேரு குடும்பமானது அவர்கள் குடும்பத்தைச் சாராத ஒவ்வொரு திறமைசாலிக்கும் முட்டுக்கட்டை போடுவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் காணப்படாததை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மைபோலத் தோன்றலாம். ஆனால், இந்த வாதமானது, நேரு குடும்பத்தைச் சாராத ஒவ்வொரு அரசியலரும் ராகுல் காந்தியைவிடத் திறமையானவர் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஆகஸ்ட் 24 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியதற்கு உடனடிக் காரணம், கட்சிக்குள்ளே சீர்திருத்தம் வேண்டுமென்று மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியதுதான். என்றாலும், தற்போதைய நெருக்கடியானது உண்மையிலேயே 2019 மக்களவைத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியதில் தொடங்கியது. புதிய, முழுநேரத் தலைவர் பொறுப்பேற்பதற்கு அது பொருத்தமான தருணமாக இருந்தது. “புதிய தலைவரைத் தேடத் தொடங்கும் பணியை ஒரு குழுவினரிடம் ஒப்படைப்பதே முன்நோக்கிச் செல்வதற்கான வழியாகும். அதைச் செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறேன். இந்த நடைமுறைக்கும் இலகுவாக அதிகார மாற்றம் ஏற்படுவதற்கும் எனது முழு ஆதரவையும் வழங்கியிருக்கிறேன்” என்று ராகுல் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பேச்சும் யதார்த்தமும்

ஆனால், காங்கிரஸ் அப்படிச் செய்யவில்லை அல்லது அதனால் செய்ய முடியவில்லை. நேரு பரம்பரையினருக்குச் சிறந்த மாற்று என்று அடிக்கடி பேசப்படும் இளம் மேதைகள் யாரும் தலைமைப் பொறுப்பை நோக்கி முன்னேறும் துணிவையோ வேட்கையையோ வெளிப்படுத்தவில்லை. அவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருந்தது, அதாவது ஒரு தலைவருக்கு அவசியமான பண்பு; அல்லது பெரும்பாலானோரின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பிறகு, இடைக்காலத் தலைவராக இருக்க சோனியா காந்தி முன்வந்தார். எனினும், இந்த உண்மைக்கு மாறான ஒன்றே பொதுமக்களிடம் உலவுகிறது: கட்சியில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள்; இவர்கள் எல்லோரும் பொறுப்பற்ற ஒரு வம்சத்தால் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வம்சத்துக்கு வெளியே மிகத் திறமையான தலைமை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படி ஒன்று இருந்திருந்தால் அது நேரு பரம்பரையை இந்நேரம் மாற்றீடு செய்திருக்கும். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு 20 ஆண்டுகளாகத் தேர்தலே நடைபெறவில்லை என்பது உண்மைதான். மேலிடமும் அதன் குழாம் சார்ந்த கலாச்சாரமுமே இன்னமும் மேலோங்கியிருக்கிறது. சமீபத்திய கடிதத்தை எழுதிய 23 பேரும் தனிப்பட்ட வகையில் என்ன நோக்கம் கொண்டிருந்தார்களோ; ஆனால், அந்தக் கடிதத்தில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கவலைகள் உண்மையானவையே. அந்தக் கடிதத்தோடு தொடர்புடைய பெரும்பாலானோர் தங்களின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இயல்பிலேயே காங்கிரஸ்காரர்கள். ஆனால், முதலும் முடிவுமாக, அவர்கள் நடைமுறைவாதிகள். எதிர்பார்த்த விளைவுகளைத் தர முடியாத கட்சியொன்றில், தங்கள் அரசியல் வாழ்க்கையை முதலீடு செய்வது குறித்து அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, தற்போதைய மோசமான நிலையை காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றிபெறும் வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அதற்கு, அரசியல் வெளியில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, சித்தாந்தரீதியிலான சமரசங்களைச் செய்ய வேண்டியது அவசியமென்றால், அப்படியே ஆகட்டும். துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற சமரசங்களுக்கு ஒரு முட்டுக்கட்டை இருக்கிறது: ராகுல் காந்தியும் அவரது ஆலோசனைக் குழுவினரும்தான் அது. கட்சியின் ‘பெருசுகள்’ சோனியா காந்தியுடன் பணியாற்றுவதை சௌகரியமாக உணர்கிறார்கள்; ராகுல் காந்தி மீது ஒரு ஒவ்வாமை அவர்களுக்கு.

தலைமை நெருக்கடியும் மூல காரணமும்

அதிகாரபூர்வமாகப் பொறுப்பை ஏற்பதற்கு ராகுல் காந்தி மறுப்பதற்கான காரணங்களும் அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில் தெளிவாக இருக்கின்றன. “2019-ல் நாம் ஒரு அரசியல் கட்சியுடன் போட்டிபோடவில்லை; மாறாக, தன்னுடைய ஒவ்வொரு நிறுவனமும் எதிர்க்கட்சிக்கு எதிராகச் செயல்படுமாறு அணிதிரட்டப்பட்ட இந்திய அரசின் ஒட்டுமொத்த இயந்திரத்துடனும் போட்டியிட்டோம். நமது நிறுவனங்களின் நடுநிலைத்தன்மை குறித்து மிகுந்த பெருமை கொண்டிருந்தோம்; அது இந்தியாவில் தற்போது காணாமல் போய்விட்டது.”

ராகுல் காந்தி அரசியலில் இறங்கியபோது அவரது செயல்பாடுகள் ‘மிகவும் புரட்சிகரமானவை’ என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்களால் புறந்தள்ளப்பட்டன. அது மேலும் மேலும் சுவாரஸ்யமாக ஆனது. “நான் தனிப்பட்ட விதத்தில் பிரதமருடனும் ஆர்எஸ்எஸ்ஸுடனும் அவை கைப்பற்றிய நிறுவனங்களுடனும் முழு மூச்சுடன் போராடினேன்” என்று அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கான வழியென்பது, “நமது நிறுவனங்களை மீட்டு, புத்துயிர் கொடுப்பதுதான்; மேலும், இந்தப் புத்துயிருக்கான கருவியாக காங்கிரஸ் கட்சி இருக்கும்.” “நமது நிறுவன அமைப்பு முறைகளைக் கைப்பற்றுதல் எனும் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் தற்போது முழுவதுமாக நிறைவேறிவிட்டது… இப்போதைய உண்மையான ஆபத்து என்னவெனில், இப்போதிலிருந்து தேர்தல்கள் என்பவை இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவை என்ற நிலையிலிருந்து வெறும் சடங்குகளாகிவிடும்.”

ராகுல் இப்படியெல்லாம் நினைக்கிறார்: 1) இந்தியாவின் தேர்தல் அமைப்பு இனியும் நடுநிலையாக இருக்கப்போவதில்லை; 2) இந்தியாவின் நிறுவனங்களையெல்லாம் ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது; 3) ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான தீவிரமான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ்காரர்கள் அதிகார ஆசையைத் தியாகம் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் சொல்லும் மனிதரின் தலைமையில் வழிநடத்தப்படும் சாத்தியம் குறித்து, கட்சியின் ‘பெருசுகள்’ எச்சரிக்கையுணர்வு அடைந்திருப்பது ஒன்றும் வியப்பல்ல. கடிதம் எழுதிய 23 பேரில் சிலர் ராகுல் காந்தியின் பார்வையுடன் உடன்பட சாத்தியம் இல்லையா? 2019 தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “சில சமயம் நான் மிகவும் தனியனாக நின்றேன்” என்றார் ராகுல் காந்தி. இப்போதும்கூட, சித்தாந்தரீதியாக ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து எப்படிப் போராடுவது என்ற கேள்வி வரும்போது, அவருக்கு நெருக்கமான ஒருசில விசுவாசிகள் வட்டத்தைத் தவிர, அவர் தனியராகவே நிற்கிறார். ‘புதிய இந்தியா’வின் காவியமயமாக்கப்பட்ட நிதர்சனத்துக்குக் கட்சி எப்படி எதிர்வினையாற்றுவது என்பது குறித்து ‘பெருசுக’ளில் சிலர் மாறுபட்ட பார்வை கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரியது அல்ல. இரண்டு திசைகளிலிருந்தும் இப்படி இழுத்துக்கொண்டிருப்பது, கட்சியைத் தற்போது பீடித்திருக்கும் செயலற்றதன்மைக்குக் கணிசமான அளவு காரணம் ஆகும்.

தர்மசங்கடமான கேள்விகள்

ஆக, காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமை தொடர்பான நெருக்கடியானது பிரதானமாக ஆளுமைப் பண்புகள் குறித்ததல்ல. அவற்றுக்கு முக்கியமான இடம் இருந்தாலும் உண்மையான பிரச்சினைகளானவை சித்தாந்தம், உத்தி போன்றவை குறித்து ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளாகும். பாஜகவிடம் இழந்த உயர் சாதி வாக்குகளுக்கு காங்கிரஸ் தூண்டில் போடுவதா அல்லது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் ஆகியோரை இலக்கு வைப்பதா? பிந்தைய நிலைப்பாட்டை எடுப்பதென்றால் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போன்று ‘பூணுல் அணிந்தவர்’ இருப்பதைவிட, பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் தலைவர் ஒருவர் அல்லவா கட்சியின் முகமாக இருக்க வேண்டும்? கட்சி தன்னை ‘இந்துமயப்படுத்திக்கொள்வதன்’ மூலம் இந்துத்துவா அரசியலைச் செயலிழக்கச் செய்வதா அல்லது ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக ஒரு சித்தாந்தப் போரை அது முன்னெடுப்பதா? பிந்தையதைத் தேர்ந்தெடுப்பதென்றால் கடந்த காலத்தில் அது மேற்கொண்ட வகுப்புவாத அரசியல், குறிப்பாக 1984 கலவரங்கள் குறித்து முறையாக மறுபரிசீலிக்காமல் அதன் நிலைப்பாடுகளில் நம்பகத்தன்மை இருக்குமா?

இன்னொரு சங்கடமான கேள்வி சூழ்ந்திருக்கிறது: காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில் அதிகாரம், ஆதாரங்கள் போன்றவை தொடர்பாகப் பெருமளவில் வேறுபாடு நிலவுவதால், நேரு குடும்பத்து வாரிசு எதிர்கொள்வதைவிட நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருந்தால் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்குமல்லவா? பாஜகவில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் பெரும் பட்டியல் இதையே நமக்கு உணர்த்துகிறது.

தெளிவாக, கட்சி எந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்று ராகுல் விரும்புகிறாரோ அந்தப் பாதை எளிதானதல்ல. இதுபோன்ற விஷயங்களில் தெளிவின்மையும் உட்கட்சி கருத்து வேறுபாடுகளும் நிலவுவது இந்தப் பாதையை மேலும் கடினமானதாகத்தான் ஆக்கும். வாதத்துக்கு இடமின்றி இருப்பது என்னவென்றால், ராகுலின் அரசியல் பார்வை அல்லது ‘கருத்தொற்றுமை’ இந்த இரண்டில் ஒன்றைப் பின்பற்றுவதைப் பொறுத்து, கட்சியானது வேறுபட்ட இரண்டு இடங்களைப் போய்ச்சேரும் என்பதுதான்.

© தி இந்து, தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x