Last Updated : 06 Sep, 2020 07:01 AM

 

Published : 06 Sep 2020 07:01 AM
Last Updated : 06 Sep 2020 07:01 AM

ஒரு பழங்குடியாக இருப்பது என்றால் என்ன?

கடைக்குச் சென்று தனக்குப் பிடித்த வண்ணத்தில் ஒரு புதிய ஆடையைக் காசு கொடுத்து வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்று, புழுதியில் போட்டுப் புரட்டிவிட்டு, நடுநடுவே கொஞ்சம் கிழித்துக்கொண்ட பிறகு அதை அணிந்து வெளியில் நடந்து செல்லும் வழக்கம் இந்தியாவில் ஒரு பிரிவினரால் பின்பற்றப்படுவதை நீங்கள் அறிவீர்களா? இந்த வழக்கம் மீறப்படும்போது என்ன ஆகும் தெரியுமா?

“ஒருமுறை பார்தி பழங்குடிப் பெண் ஒருவரை எங்கள் நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேற்றிருந்தோம். பயணச் சீட்டோடு கொஞ்சம் பணமும் அவருக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு புதிய புடவை வாங்கி அணிந்துகொண்டு ரயில் ஏறியிருக்கிறார். சில மணி நேரங்களில் மும்பைக் காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டனர். ‘உனக்கு எப்படிப் புதிய புடவை கிடைத்தது? திருடினாயா? எங்கிருந்து?’ என்று அவரைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தன் புதிய சேலையையும் தன்மானத்தையும் அவர் இழக்க நேர்ந்தது. திரௌபதி ஒரு புராணப் பாத்திரம் என்று யார் சொன்னது?”

நம் உலகில் நம்மோடு வாழ்பவர்கள்தான் என்றாலும் பழங்குடிச் சமூகங்கள் குறித்து நமக்குக் குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை என்கிறார் மொழியியல், வரலாறு, பண்பாடு, மானுடவியல், தத்துவம், சமூகவியல், கல்வி என்று பல துறைகளில் இயங்கிவரும் கணேஷ் தேவி. பத்மஸ்ரீ விருது பெற்றவர். நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பியளித்தவர்.‌ பாஷா ஆய்வு மையத்தைத் தோற்றுவித்து, கடந்த 25 ஆண்டுகளாக இந்தியப் பழங்குடி மக்களோடு இணைந்து அவர்கள் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து பங்களித்துவருபவர். கரோனா ஊரடங்கு ஆரம்பிப்பதற்குச் சில வாரங்கள் முன்பு சென்னை வந்திருந்த கணேஷ் தேவி, பழங்குடி மக்களின் அசாதாரணமான வாழ்க்கையை அறிமுகப்படுத்தி உரையொன்றை நிகழ்த்தினார். தனிப்பட்ட முறையில் அவரோடு உரையாடும் வாய்ப்பும் முன்னதாக எனக்கு அமைந்தது.

பார்திகள் மட்டுமல்ல; சான்சிகள், சாராக்கள், மதாரிகள், தூரிகள், சம்தாக்கள், கோசாவிகள் என்று நாடு முழுக்கப் பல பழங்குடிகள் ‘குற்றப்பரம்பரையினராக’ அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் கணேஷ் தேவி. “டெல்லியில் ஒரு திருட்டு நிகழ்ந்துவிட்டால், அருகில் இருந்த பார்தி குடியிருப்பைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று செய்தித்தாள்கள் நேரடியாகவே அறிவித்துவிடும். ஒரு படேலை, மேதாவை, ரெட்டியை இப்படிச் சந்தேகிக்க முடியுமா?” என்று கேட்கிறார். காவலர்கள் மட்டுமல்ல, பொதுச் சமூகமும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறது.

காலனியாதிக்கமும் பழங்குடிகளும்

இரண்டு சட்டங்கள் மூலம் பிரிட்டிஷ் காலனி அரசு இந்தியப் பழங்குடிகளின் வாழ்வில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. முதலாவது, 1865-ல் கொண்டுவரப்பட்ட இந்திய வனச் சட்டமும், 1878-ல் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமும். இரண்டாவது, 1871-ல் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம். இந்த இரண்டும் ஏன் கொண்டுவரப்பட்டன என்பதைப் புரிந்துகொண்டால் பழங்குடிகளின் இன்றைய நிலையை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்கிறார் கணேஷ் தேவி.

1870-ம் ஆண்டு பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் போர் நடைபெற்றது. பிரஷ்யப் பேரரசு ஜெர்மனியாக உருவானதே இந்தப் போருக்குப் பிறகுதான். போர் முடிவடைந்ததும் ஜெர்மனி தன்னைப் பலப்படுத்திக்கொள்ள முதன்முறையாக வனத் துறை ஒன்றை உருவாக்கி, தேசத்திலுள்ள அனைத்து வளங்களையும் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றிக்கொண்டது. தேக்கு மரங்களைத் தடையின்றிப் பயன்படுத்தி, கப்பல் படையைப் பலப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியது. காடு ஒரு முக்கியமான செல்வம்; அதை மக்களிடம் விட்டு வைப்பதைவிட அரசு கையகப்படுத்திக்கொள்வதே லாபகரமானது எனும் எண்ணம் ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தது. பிரிட்டனில் அதற்கான சாத்தியமில்லை என்பதால் தனது காலனி நாடான இந்தியாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. ஏற்கெனவே வனச் சட்டத்தைக் கொண்டுவந்திருந்தது. இப்போது அந்தச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து வனங்களையும் விளைச்சல் நிலங்களையும் மரங்களையும் நதிகளையும் அரசு உடைமைகளாக மாற்றிக்கொண்டது.

காட்டு வளத்தை நம்பி வாழ்ந்துவந்த பழங்குடிச் சமூகங்கள் பிரிட்டனின் அநீதியான சட்டத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். எச்சரிக்கையடைந்த காலனி அரசு தன்னை எதிர்த்து நிற்கும் இந்த மக்களை ‘பழங்குடிகள்’ என்று முதன்முறையாக அழைத்தது. முன்னதாக, குற்றப்பரம்பரைச் சட்டம் பிரிட்டனுக்கு உதவியாக இருந்தது. வில்லியம் ஸ்லீமென் எனும் அதிகாரி பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த சிலரை தக்கர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்கள் ஆபத்தானவர்கள் என்று வரையறுத்தார். ஓர் இரும்புக் கொல்லரின் மகன் இரும்புக் கொல்லனாக இருப்பதைப் போல் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் மகனும் குற்றவாளியாகவே இருப்பான் எனும் நம்பிக்கையில் பிரிட்டிஷ் அரசு பல பழங்குடி மக்களைக் குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்தி அவர்களை வேட்டையாட ஆரம்பித்தது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெரும் திரளான மக்கள் கொள்ளையர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் மாற்றப்பட்டனர். வேட்டையாடுபவர்கள், காட்டுவாசிகள், இரும்புக் கொல்லர்கள், கைவினைக் கலைஞர்கள் என்று பலரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். அவர்களிடமுள்ள கருவிகளை ஆயுதங்கள் என்று கருதி பறிமுதல் செய்தனர். பழங்குடிகளும் நாடோடிகளும் குடியுரிமை அற்றவர்களாக மாறினர். அவர்களுடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தினமும் இரவு நேரங்களில் காவல் நிலையத்துக்குச் சென்று ஆஜர் ஆக வேண்டும், அங்குள்ள பதிவேட்டில் கைநாட்டிட வேண்டும். மீறுபவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இது போக, தேசம் முழுக்கவும் பல பகுதிகளில் முகாம்கள் உருவாக்கப்பட்டு, பழங்குடி மக்கள் அவற்றில் அடைக்கப்பட்டனர்.

“இந்தியக் குடிமக்கள் வேறு, இந்தியப் பழங்குடிகள் வேறு எனும் கருத்தாக்கத்தையும் பிரிட்டிஷ் காலனி அரசு வளர்த்தெடுத்தது. யாரிடமெல்லாம் நிலம் இருந்ததோ, நிலத்தோடு தொடர்புடைய பணிகளில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தனரோ, யாரெல்லாம் அரசுக்கு வரி செலுத்தினார்களோ அவர்களை இந்தியக் குடிமக்களாக பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்தது. நிலம் மனிதர்களை ஓரிடத்தில் கட்டுண்டு வைத்திருந்ததால் அவர்கள் நம்பத் தகுந்தவர்களாகவும் பலனளிக்கக்கூடியவர்களாகவும் பார்க்கப்பட்டனர். பழங்குடிகளும் நாடோடிச் சமூகத்தினரும் காற்றுபோல் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு விருப்பம்போல் உலாவுபவர்களாக இருந்தனர். அவர்களுடைய மொழிகளும் சரி, வாழ்க்கை முறைகளும் சரி; கட்டுக்குள் அடங்காதவையாக, காலனிய அதிகாரிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. மற்ற இந்தியர்களைப் போல் அவர்களைத் திட்டவட்டமான ஓர் அமைப்புக்குள் கொண்டுவருவது எளிதல்ல என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்துகொண்டது. எனவே, அவர்களைக் குடிமக்களாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள். எனவே, அவர்கள் ஒதுக்கப்படவேண்டியவர்கள்.”

1952-ல் நேரு அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்கியதைத் தொடர்ந்து குற்றப்பரம்பரையினராக முன்பு அறியப்பட்டவர்கள் சீர் மரபினர் எனும் புதுப் பெயரால் அழைக்கப்படலாயினர். ஆனால், இந்த மாற்றம் பெயரளவிலானது மட்டுமே. இந்தியாவில் 14 முதல் 15 கோடி பழங்குடிகள் வசிக்கிறார்கள் என்றால் அவர்களில் 6 முதல் 7 கோடிப் பேர் சீர் மரபினர், நாடோடிகள். காலனி ஆட்சியாளர்கள் வெளியேறிச் சென்ற பிறகும் நாம் தொடர்ந்து இந்த மக்களைக் குற்றவாளிகளாகவே கருதி இழிவாக நடத்திக்கொண்டிருக்கிறோம். பழங்குடிகள் வேறு, குடிமக்கள் வேறு எனும் காலனியப் பாகுபாட்டை இன்னமும் பின்பற்றிவருகிறோம். வனம் மக்களுக்குச் சொந்தமானதல்ல, அரசின் உடைமை எனும் காலனியக் கொள்கையே சுதந்திர இந்தியாவின் கொள்கையாகவும் இருக்கிறது.

காலனியாதிக்கம் வருவதற்கு முன்பு இந்தியாவில் பழங்குடிகள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டதில்லையா? “இல்லை” என்கிறார் கணேஷ் தேவி. “பிரிட்டனின் வரவுக்குப் பிறகே பழங்குடிகளையும் பழங்குடி அல்லாதோரையும் பிரித்துப் பாகுபடுத்தும் வழக்கம் இங்கே வலுப்பெற்றது. வால்மீகி யார்? அவர் ஒரு பழங்குடி அல்லவா?”

பிளவுகளும் இழப்புகளும்

சீர் மரபினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியப் பழங்குடிச் சமூகமும் பிளவுண்டு தனியே வேறோர் உலகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. “ஒரு மக்கள் கூட்டம் ஒதுக்கப்படும்போது, அச்சுறுத்தலுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கப்படும்போது அது என்ன செய்யும்? தன் அடையாளத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொள்ளும். மொழி நம்முடைய அடையாளமாக இருக்கிறது என்றால் பழங்குடிகளுக்கு அதுவே அவர்களைக் காட்டிக்கொடுக்கும் அபாயமாக இருக்கிறது. எனவே, அவர்கள் தங்கள் மொழியை வீட்டுக்குள் மட்டும் வைத்துக்கொண்டு பொதுவெளிக்கு வரும்போது ‘அங்கீகரிக்கப்பட்ட’ ஏதேனும் ஒரு பொதுமொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவரால் தன் தாய்மொழியைப் பேச முடியாமல் போகும்போது அவர் தன் இயல்பான குரலை இழந்துபோகிறார். சமூகம் வலிந்து திணிக்கும் அமைதி இது” என்கிறார் கணேஷ் தேவி.

“எனக்குத் தெரிந்த பல பழங்குடிக் குழந்தைகளால் தங்கள் தூரத்து உறவுகளைத் தகுந்த சொற்களால் நினைவுகூர முடியவில்லை. காரணம், அந்தச் சொற்களை அவர்கள் மறந்துவிட்டார்கள். தங்களைச் சுற்றியுள்ள தாவரங்களின் பெயர்களை அவர்களால் சொல்ல முடியவில்லை. வாரத்தின் ஏழு நாட்களைக்கூடத் தங்கள் மொழியில் பலரால் சொல்ல இயலவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடம் கேட்டிருந்தால் பல நூறு பாடல்களை அவர்களால் பாட முடிந்திருக்கும். பல நூறு கதைகளை அவர்களால் விவரித்திருக்க முடியும். இன்று அவர்களிடம் பாடல்களில்லை, கதைகளில்லை. உறவுகளிடமிருந்தும் வேர்களிடமிருந்தும் அவர்கள் வெகு தொலைவுக்கு விலகிவந்திருக்கிறார்கள். இது அவர்களை மட்டுமல்ல, நம்மையும் பாதிக்கிறது. இனியும் பாதிக்கும்.”

20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 7,000 மொழிகள் உலகில் இருந்தன. 21-ம் நூற்றாண்டு நிறைவடையும்போது இவற்றுள் 300 மட்டுமே உயிர்த்திருக்கும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் பத்தில் ஒரு பங்கு மொழி மட்டுமே எதிர்காலத்தில் நிலைத்திருக்கும். காணாமல்போகும் மொழிகளில் பெரும் பகுதி பழங்குடிகளின் மொழிகளாக இருக்கும் என்கிறார் கணேஷ் தேவி.

“நிலவியல் அழிந்து, அங்குள்ள மக்கள் சிதறும்போது, மொழி மறைகிறது. மொழி மறையும்போது பண்பாடும் மறைகிறது. இமயமலையை ஒட்டிப் புழங்கும் மொழிகளில் பனியைக் குறிக்க மட்டும் 160 சொற்கள் இருக்கின்றன. ‘கின்னார்’ மொழி பேசுபவர்கள் பனிப்பொழிவின்போது வானத்தில் தோன்றும் நீல நிறத்தைக் குறிக்க மட்டும் ஒரு தனிச் சொல்லைக் கையாள்கிறார்கள். கலங்கலான நீரில் வந்து விழும் பனிக்கென்று வேறொரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்களையும் அவற்றைப் பயன்படுத்துபவர்களையும் நாம் இழந்துகொண்டிருக்கிறோம்.”

ஒவ்வொரு சமூகமும் தனித்த சிந்தனை மரபைக் கொண்டது. ஒரு சமூகத்தை இழக்கும்போது நம்மில் ஒரு பகுதி காணாமல்போகிறது என்கிறார் கணேஷ் தேவி. பழங்குடிகளின் சிந்தனை மரபு எத்தகையது? “ஒரு செடியிலிருந்து எப்போது இலையைப் பறிக்க வேண்டும், ஒரு மரத்தை எப்படிப் பார்க்க வேண்டும், ஓர் ஓடையை எப்படி மதிக்க வேண்டும், ஒரு விதையை எப்படிப் போற்ற வேண்டும், உயிரற்ற ஒரு பொருளை எப்படி மதிக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் பழங்குடிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் அறிவு, அவர்கள் அணுகுமுறை, அவர்கள் ஆன்மிகம், அவர்கள் தர்க்கம், அவர்கள் அறம், அவர்கள் சமூக நீதி ஆகியவற்றை நாமும் பெற்றுக்கொள்ள முடியும். பூமி மீது எண்ணற்ற கோடுகளைக் கீறி, அந்தக் கோடுகளுக்கு அருகில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிறுத்தி வைக்கும் முறை பழங்குடிகளுடையது அல்ல. மத வெறுப்போடும் சாதிப் பாகுபாட்டோடும் ஒரு மனிதனை நடத்துவது பழங்குடி முறையல்ல. பூமியைத் துளை போட்டு, மலையை வெட்டியெடுத்து, வனங்களை அழிக்கும் முறை பழங்குடி முறையல்ல.”

பூமி எனக்குச் சொந்தமானதல்ல. நான்தான் பூமிக்குச் சொந்தம். பூமி என்னை நம்பி இருப்பதில்லை. நான்தான் பூமியை நம்பிக்கொண்டிருக்கிறேன். இன்னோர் மனிதனைவிட மட்டுமல்ல; வேறெந்த உயிரையும்விடவும் நான் எந்த வகையிலும் உயர்ந்துவிடவில்லை என்று பழங்குடிகள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை நாமும் பகிர்ந்துகொள்ளவேண்டியது காலத்தின் தேவை என்கிறார் கணேஷ் தேவி.

“பழங்குடிகளோடு பழகிய எந்தவொரு தருணத்திலும் அவர்களை நான் நாகரிகமற்றவர்களாகவோ கல்வியறிவு அற்றவர்களாகவோ ஒருமுறைகூட கருதியதில்லை. மாறாக, அவர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கற்றுவருகிறேன். என்னிடமுள்ள போதாமைகளை, தீங்கிழைக்கும் சிந்தனைகளை அவர்கள் எனக்கு உணர்த்துகிறார்கள். அவர்களோடு பழகிய பிறகே என்னிடமுள்ள பிற்போக்குத்தனமான கூறுகளை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.”

எதிர்காலமும் தீர்வுகளும்

சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் இந்தியாவிலுள்ள 8 கோடி பழங்குடி மக்களில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். கல்வி இல்லை, மருத்துவ வசதி இல்லை, பொருளாதார ஆதரவு இல்லை. மேலதிகமாக மைய நீரோட்டத்துக்கு வெளியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று திட்டமிடப்பட்ட இடஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. வெவ்வேறு ஆட்சிகளில் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கும் கிட்டத்தட்ட இதே கதிதான்.

பழங்குடிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும்போதெல்லாம் இரண்டு வழிகள் அவர்களுக்காகப் பரிந்துரைக்கப்படுவது வழக்கம் என்கிறார் கணேஷ் தேவி. “முதல் வழி, இந்து சமூக அமைப்போடும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்போடும் அவர்களை ஒருங்கிணைப்பது. இது பழங்குடிகளின் பண்பாட்டை, தனித்துவமான வாழ்க்கைமுறையை, சிந்தனை மரபை முற்றாக அழித்துவிடும். இரண்டாவது, வன்முறைப் போராட்டத்தின் மூலம் அரசு மற்றும் கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பது. ஒரு காந்தியவாதியாக நான் எந்த வடிவிலும் வன்முறையை ஏற்க மாட்டேன். வன்முறை மேலதிக வன்முறையையே கொண்டுவரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். உள்ளிருந்தே பழங்குடிகள் சமூகத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவ வேண்டும். அரசையோ அரசு சாரா நிறுவனங்களையோ நம்பியிருக்காமல் தற்சார்போடு, தன்னம்பிக்கையோடு, அச்சமின்றி அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.”

ஒரு பழங்குடிக்கு என்ன தேவை? “ஒருமுறை அகமதாபாதுக்கு அருகில் அமைந்துள்ள சாராக்களின் கெட்டோவுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் ஆபத்தானவர்கள், செல்லாதீர்கள் என்று அந்தப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் எச்சரித்தனர். அப்போது என்னோடு மஹாஸ்வேதா தேவியும் உடனிருந்தார். எச்சரிக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மெல்ல மெல்ல அவர்களோடு உரையாடத் தொடங்கினோம். அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதற்கு எங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து பலமுறை அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்றோம். அதன் பிறகே மனம் திறந்து அவர்கள் பேசத் தொடங்கினார்கள். உங்களுக்கு நான் ஏதேனும் செய்ய விரும்புகிறேன்? என்ன செய்யட்டும் என்று ஒருமுறை நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எதையெல்லாம் கேட்கக்கூடும் என்பது குறித்து எனக்குள் சில அனுமானங்கள் இருந்தன. என் அனுமானங்களைப் பொய்யாக்கும்படி, ஒரு நூலகத்தை அமைத்துக்கொடுக்க முடியுமா என்று அவர்கள் கேட்டனர். உடனடியாக நூல்களைத் தருவித்து ஒரு சிறிய அறையில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தினோம்.”

அப்போது ஏற்பட்ட மறக்க முடியாத ஓர் அனுபவத்தை கணேஷ் தேவி பகிர்ந்துகொண்டார். மாலை நேரங்களில் சாராக்கள் தங்கள் வீதிகளில் நாடகம் நிகழ்த்துவது வழக்கம். ஒருநாள் ‘புதன்’ எனும் பெயர் கொண்ட பழங்குடியைப் பற்றிய நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. புதன் என்பவர் சாரா பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர். சீர் மரபினர். ஒருநாள் புதனைக் காவல் துறை காரணமேயின்றி, திருட்டுப் பழி சுமத்தி கைதுசெய்தது. சிறையிலேயே புதன் இறந்துபோனார். அவர் உடலை எடுத்துவந்து காவலர்கள் ஒரு மரத்தில் தொங்கவிட்டு, தற்கொலைபோல் மாற்றிக் காட்ட முயன்றனர்.

இது தெரிந்ததும் நாங்கள் தலையிட்டு வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றோம். புதனின் கதையை சாராக்கள் மனவெழுச்சியோடு நடித்துக் காட்டியதைக் கண்டதும் அவர்களோடு பேசி ‘புதன் நாடகக் குழு’ எனும் அமைப்பைத் தொடங்கினேன். கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் குழுவினர் உலகம் முழுக்கச் சென்று பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கின்றனர். ‘யார், சாராக்களா? அவர்கள் குற்றப்பரம்பரையினர் அல்லவா?’ என்று கேட்ட காலம் போய், அவர்கள் பெரிய கலைஞர்கள் அல்லவா என்று இன்று பலரும் வியக்கிறார்கள்.

நாம் இணைந்தால் நிச்சயம் பழங்குடிகளின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவர முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் கணேஷ் தேவி. “உபநிடதத்தில் ஓரிடத்தில் வரும் காட்சி இது. படிப்பதற்காக ஒரு சிறுவன் முனிவரிடம் செல்கிறான். உன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டபோது, ‘சத்யகம்’ என்கிறான் அவன். உன் அப்பா பெயரென்ன என்னும் கேள்விக்கு, ‘எனக்குத் தெரியாது’ என்கிறான். இதுவும் இந்திய மரபுகளில் ஒன்றுதான். இந்த மரபை ஏன் நாம் இழந்தோம்? காலனியப் பார்வையை ஏன் இன்னமும் பற்றிக்கொண்டிருக்கிறோம்?”

இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம் நேர்மையாகத் தேடிக் கண்டடையும்போது, நம் பாதைகளை நாம் திருத்திக்கொள்ளும்போது பழங்குடிகள் சமூகம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதச் சமூகமும் சில படிகள் மேலே உயரும்.

- மருதன், ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x