

பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ‘பிரமிக்க வைக்கும் வளர்ச்சி’ எல்லோருக்கும் தெரியும். மது விற்பனை தொடங்கப்பட்ட சுமார் 10 ஆண்டுகளில் அதன் வருவாய் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றால், அதன் பின்னாலிருக்கும் அதிகாரிகளின் உழைப்பு கொஞ்சமா, நஞ்சமா?
1983-ல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தொடங்கப்பட்டபோது தொலைக்காட்சி, சிமென்ட் போன்ற பொருட்களை விற்றுப் பார்த்தது. பெரிதாக லாபம் இல்லை. 2002-03-ல் அந்த நிறுவனம் மது விற்பனையைக் கையில் எடுத்தவுடன் சுறுசுறுப்பானது நிர்வாகம். அதுவரை பொறுப்பிலிருந்த உதவி ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் விடுவிக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
அமைச்சர், அரசுச் செயலர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. எம்.பி.ஏ. பட்டதாரிகள் மாவட்ட மேலாளர்களாக நியமிக்கப்பட்டனர். விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வீதிகள்தோறும் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. எங்கும் வர்க்கத்துக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் அல்லவா! மேட்டுக் குடி நோயாளிகளுக்கு ‘எலைட்’ கடைகள் தொடங்கப்பட்டன. வருவாய் பெருகியது. (நிர்வாக நடைமுறைகளுக்காக நிறுவனம் ஈட்டும் லாபமும் வரியுடன் சேர்க்கப்படுவதால் சுமார் ரூ. 1.56 கோடி நஷ்டக் கணக்கு காட்டப்படுவது தனிக்கதை).
சரி, தமிழகத்தில் இருக்கும் மற்ற பொதுத் துறை நிறுவனங்களின் நிலவரம் என்ன? தமிழகத்தில் 64 பொதுத் துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றின் விற்பனை வரவு ரூ.70,673.64 கோடி. இது மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 9.49 %. கடந்த 2013, மார்ச் 31-ம் தேதியின்படி மேற்கண்ட நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் மட்டுமே ரூ.615.29 கோடி லாபம் ஈட்டின. 19 நிறுவனங்கள் ரூ.14,232.03 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன.
இவை தவிர, தமிழ்நாடு வேளாண்மைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கோழியின வளர்ச்சிக் கழகம், கரும்புப் பண்ணைக் கழகம், கட்டுமானக் கழகம், மெக்னீசியம் மற்றும் மரைன் கெமிக்கல்ஸ் லிமிடெட், எஃகு நிறுவனம், கிராஃபைட்ஸ் நிறுவனம், சதர்ன் ஸ்ட்ரச்சுரல்ஸ் லிமிடெட், மாநிலப் பொறியியல் மற்றும் பயன்நோக்கு நிறுவனம், தோல் வளர்ச்சி நிறுவனம், திரைப்பட வளர்ச்சிக் கழகம், பொருள் போக்குவரத்துக் கழகம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 13 பொதுத் துறை நிறுவனங்கள் ‘செயல் படாத நிறுவன’ங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றின் நஷ்டம் ரூ.38,233.61 கோடி.
அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல; மக்கள் நலனைப் பிரதானமாகக் கொண்டு செயல்படும் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டம் அடைவது இயல்புதான் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தாலும், நிர்வாகத் திறமை இல்லாததால் பொதுத் துறை நிறுவனங்கள் ரூ.3,282.85 கோடி இழப்பைச் சந்தித்ததுடன், ரூ.219.96 கோடி முதலீட்டைப் பலன் இல்லாத வகையில் வீணடித்திருக்கின்றன என்கிறது தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கை. வருங்காலத்திலாவது பொதுத் துறை நிறுவனங்களைச் சீரமைத்தால் அவற்றின் மொத்த நஷ்டமான சுமார் ரூ.50,000 கோடியைத் தவிர்க்க முடியும். நாம் பெரிதாக விளக்க ஏதுமில்லை.
‘டாஸ்மாக்’ நிறுவனம் மது விற்பனை வளர்ச்சிக்குக் காட்டிவரும் அக்கறையை மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் வளர்ச்சியிலும் காட்டினால் போதும்; மதுவிலக்கு சாத்தியமாகிவிடும்!
தெளிவோம்…
- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in