Last Updated : 21 Sep, 2015 09:07 AM

 

Published : 21 Sep 2015 09:07 AM
Last Updated : 21 Sep 2015 09:07 AM

ஆப்பிரிக்க கிராமங்கள் ஏன் பின்தங்கியுள்ளன?

நகரமயமாக்கலுக்கான அடையாளம் எதுவும் இல்லாமல்தான் உபுலு இப்போதும் இருக்கிறது.

பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, நைஜீரியாவில் உள்ள எங்களுடைய கிராமத்துக்கு இந்த ஆண்டு சென்றிருந்தேன். நான் சார்ந்த இக்போ இனத்தார் பயணம் செல்வதில் ஆர்வம் மிக்கவர்கள். புதிய வாய்ப்புகளை நாடி சிறு நகரங்கள், பெரு நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என்று எல்லை கடந்து சென்றுகொண்டே இருப்போம். “வெளியூருக்குப் போன வீட்டாளி, ஒரு நாள் வீடு திரும்பியே ஆக வேண்டும்” என்ற பழமொழி மக்களிடையே பிரபலம். பிரிட்டனில் 10 ஆண்டுகளைக் கழித்த பிறகு உபுலு என்ற என் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினேன்.

திடீரென்று எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். ஒரு பெரிய எழுத்தாளர் அவருடைய சொந்த ஊருக்குச் செல்வதைப் போல நினைத்தேன். உடனே, எனக்குத் தோன்றும் உணர்வுகளைப் பதிவுசெய்வதற்காகச் சிறிய நோட்டுப் புத்தகத்தை விரித்துவைத்துக்கொண்டேன். எழுதுவதற்குப் பேனாவும் தயார். எழுதுவதற்கு கவித்துவமாகவோ சிறப்பாகவோ ஏதும் தோன்றவில்லை.

பிரதான சாலையிலிருந்து கிராமத்துக்குள் என்னுடைய பஸ் நுழைந்தபோது தார்சாலை முடிந்து மண் சாலை வந்துவிட்டது. மழைக் காலம் என்பதால் சாலை சேறும் சகதியுமாக நடப்பதற்கே தகுதியில்லாமல் இருந்தது. வீடு வரைக்கும் நடந்தே போய்விடலாமா என்றுகூட நாங்கள் நினைத்தோம். எதிர்பார்த்த மாதிரி அது ‘பிரமாதமான மறு பிரவேசமாக’அமையவில்லை.

எங்களுடைய பெட்டி, படுக்கை, சாமான்களைச் சுமந்துகொண்டு ஒரு பஸ் முதலில் சென்றது. அதன் பின்னால் எங்களுக்குப் பாதுகாப்பாக வந்த ஆயுதம் ஏந்திய மெய்க்காவலர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றது. கடைசியாக நாங்கள் சென்ற டொயாட்டா பஸ் 40 இருக்கைகள் கொண்டது. ஓரிடத்தில் பஸ் சேற்றில் சிக்கிக்கொண்டு மேற்கொண்டு நகர முடியாமல் திணறியது. டிரைவர் பஸ்ஸை நகர்த்த முயன்றபோதெல்லாம் சக்கரங்கள் மட்டும் சுழன்று சேற்றை வாரி இறைத்தன.

ஆட்டமும் பாட்டமும்

கடைசியாக எங்கள் வீட்டை அடைந்தோம். ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம், உற்சாகத்தில் கூவினோம், அறிமுகப்படுத்திக்கொண்டோம். நானும் பாடி, ஆடி மகிழ்ந்தேன். ஆனால், என்னுடைய வீடு திரும்பலின் முதல் நாளில் நோட்டில் அதிகம் எழுத முடியவில்லை. “இந்தச் சாலையை ஏன் இன்னும் தார் சாலையாக மாற்றவில்லை?” என்ற கேள்வியை மட்டும் அதில் பதிவுசெய்தேன்.

அடுத்தடுத்த நாட்களில் எங்கள் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். கிராமத்தில் எதுவுமே மாறவில்லை என்பதைப் பார்த்து முதலில் மகிழ்ச்சியும், பிறகு சோகமும் ஏற்பட்டது. குழந்தைப் பருவத்தில் பார்த்த மாதிரியேதான் உபுலு இப்போதும் இருக்கிறது. நகரமயமாக்கலுக்கான அடையாளம் எதுவும் அதை எட்டவில்லை.

மெய்க்காவலர்கள் ஏன்?

நான் சிறுமியாக இருந்தபோது கிராமத்தில் ஆயுதம் ஏந்திய மெய்க்காவலர்கள் யாரும் இருந்ததில்லை. அப்போதெல்லாம் அதைக் கற்பனைகூடச் செய்து பார்த்ததில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் உபுலு வுக்கு மின்இணைப்பு கிடைக்கவில்லை. உள்ளூரில் ஒரு தொழிற்சாலைகூட இல்லை. கிராமத்தில் குவிந்து விட்ட குப்பைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பு ஏதுமில்லை. கிராமப் பள்ளிக்கூடத்தில் கணினி கிடையாது. கிராமவாசிகள் இப்போதும் கடுமையான உழைப்பாளிகளாகவும் அப்பாவிகளாகவும் இருக்கின் றனர். புதியவர்களைப் பார்த்தால் முகம் மலரச் சிரித்து வரவேற்கின்றனர். ஏழைகளாக, பரம ஏழைகளாகவே வாழ்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரரீதியாக கிராமம் வளர்ச்சி பெறாவிட்டாலும், சமூக மாற்றங்கள் பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென்று கண்ணில்பட்டன. மெய்க்காவலர்கள் சாதாரண வீடுகளுக்குச் செல்லும் வழக்கமே இருந்ததில்லை. அரசியல்வாதிகளுக்குப் பாதுகாவலாய் செல்வோரும், கொடிய மனிதர்களும் தான் துப்பாக்கி வைத்திருப்பார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு மெய்க்காவலர் கள் தேவைப்பட்டதில்லை. இம்மூன்று தொழில்களையும் செய்யும் எங்கள் குடும்பத்தவருக்கு இப்போது மெய்க்காவலர்கள் அவசியமாகிவிட்டனர். தென் கிழக்கு நைஜீரியாவில் இப்போது ஆள் கடத்தலும் வீடு புகுந்து கொள்ளையடிப்பதும் சகஜமாகிவிட்டது. இரவில் எங்கள் வீட்டு வளாகத்துக்குக் காவலிருக்கும் மெய்க்காவலர்கள், திடீரென வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு ஊரில் இருக்கக்கூடிய, ஊரை நோக்கி வரக்கூடிய சமூக விரோதிகளை எச்சரிக்கின்றனர். இந்த வீட்டில் நாங்கள் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறோம், கடத்தவோ, கொள்ளையடிக்கவோ வந்தால் முதலில் எங்களோடு மோதிவிட்டுத்தான் நீங்கள் அவர்களை நெருங்க முடியும் என்பதற்கான எச்சரிக்கை அது. எங்கள் வீட்டை இதற்கு முன் சிலர் தாக்கியிருக்கின்றனர்.

நகரம் வளர்ந்தால் போதுமா?

கிராமத்தில் விடுமுறையைக் கழித்த பிறகு மீண்டும் தலைநகர் லாகோஸுக்கு வந்தோம். அது ஏதோ புதிய நாட்டைப் போல மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் விளக்குகள், சாலைகள், பொதுப் போக்குவரத்துகள், விளம்பரப் பதாகைகள், இரைச்சல்கள், வியாபாரம். நகர்ப்புறமானதன் நன்மை, தீமை என்று எல்லாமும் கலந்திருந்தன. லாகோஸ் என்பது முழுக்க முழுக்கச் சரியான நகரமில்லைதான். ஆனாலும், பிழைப்பு தேடி அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் நகரை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர்.

ஆண்டுதோறும் லாகோஸ் வளர்ந்துவருவது குறித்து உண்மையிலேயே எனக்குப் பெருமைதான். ஒரு நாட்டுக்குள்ளேயே பிராந்தியங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவான அம்சம்தான். வடக்கு இத்தாலி - தெற்கு இத்தாலி, வடக்கு இங்கிலாந்து - தென் கிழக்கு இங்கிலாந்து, கிரேக்கம் - டென்மார்க் என்று பல உதாரணங்கள். ஆனால், லாகோஸின் வளர்ச்சியை நைஜீரியாவின் வளர்ச்சியாகக் கருதி, ஆப்பிரிக்காவே வளர்ந்துவருகிறது என்று கூறுவதைத்தான் ஏற்க முடிய வில்லை. ஆப்பிரிக்கா வளர்கிறது என்று காட்டும் கேமராக்கள்கூட எங்களுடைய கிராமங்களைப் பார்த் ததும் விலகிச் செல்கின்றன. ஆம், லாகோஸ், நைரோபி, லுவாண்டாவின் பொருளாதாரங்கள் வளர்கின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர். மத்திய தர வர்க்கத்தாரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. உபுலு போன்ற கிராமங்களுக்கு இதில் எங்கே இடம்?

எண்ணெய்த் தொழிலில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரு விரிவும் இக்கிராமங்களைக் கடந்துதான் சென்றுள்ளன. ஏற்பட்ட எல்லா ராணுவ, மக்கள், இடைக்கால அரசுகளும் எங்களை மறந்துவிட்டன. புஹாரி தலைமையிலான அரசு மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று சொல்லித்தான் நைஜீரியாவில் இப்போது ஆட்சிக்கு வந்துள்ளது. லாகோஸ், ஹர்கோர்ட் துறைமுகம், அபுஜாவுக்கு மட்டும் மாற்றங்கள் வந்தால் போதாது. வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் சுற்றிப்பார்க்கும் நகரங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது. சிபாக் வளர வேண்டும், உபுலு வளர வேண்டும். நைஜர் நதி தீரத்தில் உள்ள எல்லாக் கிராமங்களும் மாற வேண்டும்.

ஒரு நாடு என்பது அது எத்தனை கோடீஸ்வரர்களைப் படைத்தது என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. அதன் மக்களில் எத்தனை பேர் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கிறார்கள் என்பதால் மதிப்பிடப் படுவதில்லை. எத்தனை பீப்பாய் சேம்பேன் குடித்தார்கள் என்பதைக்கொண்டு மதிக்கப்படுவதில்லை. ஒரு நாடு தன் நாட்டு ஏழைகளையும் வலுவற்றவர்களையும் எப்படி நடத்துகிறது, அவர்களை எப்படி முன்னுக்குக் கொண்டுவருகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய வளர்ச்சிக்காக உபுலு காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழில்: சாரி

© தி கார்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x