Last Updated : 04 Sep, 2020 08:11 AM

Published : 04 Sep 2020 08:11 AM
Last Updated : 04 Sep 2020 08:11 AM

எம் எம்.சி.ராஜா: கொண்டாடத் தவறிய ஆசான்!

எம்.சி.ராஜா ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ (The Oppressed Hindus) என்ற புத்தகத்தில் எழுதுகிறார்: ‘கல்வி (என்பது) உரிமை எனும் கல்வியாக இருத்தல் வேண்டும்… ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்குக்கூட கட்டாயக் கல்வி தேவையா, அதுவும் குறிப்பிட்ட இனத்து ஆண், பெண்களுக்குத் தேவையா என்று விவாதிப்பது இன்றைய நிலைக்கு ஒவ்வாத வாதமாகும். தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வித் திட்டம் தேவை. அவர்களுக்கு மதிய உணவும் வயிறார வழங்க வேண்டும். அத்தோடு அப்பிள்ளைகளின் சிறு கூலியால் வயிறு வளர்த்த பெற்றோருக்கு ஒருவித நிதி உதவியும் அரசாங்கம் செய்ய வேண்டும்!’

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நீதிக் கட்சி 1920-ல் அறிமுகப்படுத்தியது. பிறகு, நிதிச் சுமையைக் காரணம் காட்டி பிரிட்டிஷ் அரசு இந்தத் திட்டத்தை நிறுத்த, 1960-களில் காமராஜர் தமிழகம் முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்கிற வரலாறு மட்டுமே பரவலாக அறியப்படுகிறது. ஆனால், 1919 மார்ச் 29 அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நல வாரியமாகத் தொழிலாளர் துறையை நிறுவியது. இதன் ஆலோசனை வாரிய உறுப்பினர்களாக கில்பர்ட் ஸ்லேட்டர், ராமானுஜசாரியார், எம்.சி.ராஜா இடம்பெற்றிருந்தனர். இதில் எம்.சி.ராஜாவின் வழிகாட்டுதலின்படி ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட தொழிலாளர் பள்ளியில்தான் நீதிக் கட்சி அரசால் 1920-ல் மதிய உணவுத் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை பட்டியலினக் குழந்தைகள் பள்ளிகளை நோக்கிச் செல்வதில் பசி மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பதால், அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எம்.சி.ராஜா சட்டப் பேரவை கவுன்சிலில் 1922-ல் வலியுறுத்தினார்.

பள்ளி, கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மட்டுமல்லாது, நாட்டின் முதல் தலித் நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தபோதும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து எம்.சி.ராஜா பெரும் பங்காற்றினார். அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் 1928-ல் அவர் தலைமையில் நிறுவப்பட்டது. இரவுப் பள்ளிகளைத் திறப்பது, இலவச வாசகர் வட்டங்களை உருவாக்குவது, நூலகங்களை நிறுவுவது, அரசியல், சமூகம், அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பிரசுரிப்பது உள்ளிட்ட கல்விசார் செயல்பாடுகளே இந்தச் சங்கத்தின் பிரதானக் குறிக்கோளாக முன்வைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவுக்கு இரு முறை (1924, 1927) நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கோரிப் போராடி வெற்றியும் கண்டார். அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.

பிறவி ஆசிரியர்

1883 ஜூன் 17 அன்று சென்னை பரங்கிமலைப் பகுதியில் மயிலை சின்னதம்பி (எம்.சி.) ராஜா பிறந்தார். பிரிட்டிஷ் அரசால் 1922-ல் ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்ட எம்.சி.ராஜாவும் திரு.வி.க.வும் ராயப்பேட்டையில் வசித்தார்கள். இருவரும் வெஸ்லி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பின்னாளில் அங்கேயே வேலைசெய்தார்கள். இருவரும் பிற்காலத்தில் அரசியல் தளத்தில் முரண்பட்டபோதும் நட்பை முறித்துக்கொள்ளவில்லை.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது படிப்பு போக கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளிலும் ராஜா ஜொலித்தார். தமிழ்நாட்டில் சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர் இவரே. மேற்கொண்டு, சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்தார். தான் ஆசிரியர் பணிக்கான பயிற்சியைப் பெறும்போதே சக மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையில் புது உத்திகளைக் கற்றுத் தந்தார். ‘திரு.ராஜா ஒரு பிறவி ஆசிரியர். அவரிடம் கல்வி கற்கும் பேறு பெற்றவன் நான். வகுப்பில் உள்ள கடைநிலை மாணவனும் அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும்... மாணவர்களிடம் கடுமையாகவோ கோபமாகவோ நடந்துகொள்ளாமல், அவர்கள் உயிர்த்துடிப்புள்ளவர்களாக விளங்குமாறு பார்த்தும்கொள்வார்’ என்று ‘இராவ் பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தேர்வுசெய்யப்பட்ட எழுத்துக்களும் உரைகளும்’ நூலில் ஜே.சிவசண்முகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வித் திட்டத்துக்கு இணையான முக்கியத்துவத்தை ஆரம்பக் கல்விக்கும் ராஜா அளித்தார். 1917-ல் ஆரம்பப் பள்ளிக் கல்விக் குழுவில் நியமிக்கப்பட்டார். 1919-ல் ஆரம்பக் கல்வி மசோதாவுக்கான பொதுக் குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவிலும் செயலாற்றினார். சொல்லப்போனால், உயர்கல்வியைவிடப் பள்ளிக் கல்வியைச் சீரமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சீரமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வரைவு மீது எம்.சி.ராஜா 1922 நவம்பர் 15 அன்று சென்னை சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் தமிழாக்கம், வே.அலெக்ஸ் தொகுத்த ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 1922-லேயே கல்வி நிதி ஒதுக்கீட்டுக்காக வலுவாகக் குரல் எழுப்பினார் ராஜா. அதிலும், ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். “ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவுவதற்கான நிதியைக் கொண்டு ஏழை எளிய மக்கள் கல்வி பெறுவதற்கு 100 ஆரம்பப் பள்ளிகளை நிறுவி அவற்றை நிர்வகிக்கவும் முடியும்” என்று பேசினார்.

சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளைத் தொடங்கக் காரணமாக விளங்கினார். இலக்கணம், தத்துவம், தர்க்கம், உளவியல், அறவியல் ஆகிய பிரிவுகளில் பள்ளி, கல்லூரிக்கான பல பாடப் புத்தகங்களை எழுதினார். சென்னை ராஜதானியில் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாகப் பரிந்துரைக்கப்பட்ட பல நூல்களை இயற்றினார். அவர் எழுதிய, ‘நீதி மார்கக் கதைகளும் பாடல்களும்’ புத்தகத்தை, ‘சிறுவர்களும் சிறுமிகளும் வாங்கி வாசிப்பாரேல் எளிதிற் தமிழ் நடையை உணர்வார்கள் என்பது திண்ணம்’ என்று 1907 ஆகஸ்ட் 27 அன்று வெளியான ‘ஒரு பைசா தமிழன்’ இதழில் பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிட்டிருக்கிறார். தலித் குழந்தைகளுக்குப் பாடசாலைகளின் நுழைவாயிலைத் திறந்து வைத்தவர்களில் முன்னோடி அமெரிக்கரான ஹென்றி ஸ்டீல் ஆல்காட், சென்னையில் 1894-ல் ஐந்து ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளிகளை நிறுவினார். “தேனாம்பேட்டையில் ஆல்காட் தொடங்கிய தாமோதர் பஞ்சமர் இலவசப் பள்ளியில் 1907-ல் 22 வயதான எம்.சி.ராஜா பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். இதன் மூலம், அவருடைய ஆசிரியர் பணி இங்கிருந்துதான் தொடங்கியது என்பது தெரியவருகிறது. அப்போதே அங்கு படித்த தலித் மாணவர்களுக்கென பிரத்தியேகப் பாடத்திட்டத்தை ராஜா வகுத்தார்” என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

நிலா பாட்டுக்குச் சொந்தக்காரர்

மேலே குறிப்பிட்டிருக்கும் புத்தகங்கள் தொடர்பிலான குறிப்புகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. மூலப் புத்தகங்களை ஆய்வாளர்கள் தேடிவருகிறார்கள். அதேநேரம், எம்.சி.ராஜா முதலில் தனித்து, பிறகு ரங்கநாயகி அம்மையாரோடு இணைந்து 1930-ல் எழுதிய, ‘கிண்டர்கார்டன் ரூம்’ என்ற மழலையர் பாடநூல், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டு, 2013-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறுவர் இலக்கியக் கர்த்தாவாக எம்.சி.ராஜா பரிமளிப்பதைக் காண முடியும். அதிலும், ‘கை வீசம்மா கை வீசு’, ‘நிலா நிலா ஓடிவா’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ உள்ளிட்ட பாடல்கள் இவர் எழுதியவை என்பது ஆச்சரியமளிக்கிறது.

கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும், மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்தம் பெற்றோருக்கும் நிதி உதவி நல்கப்பட வேண்டும் என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தீவிரமாகச் செயலாற்றியவர் ஆசிரியரும் அரசியலருமான எம்.சி.ராஜா. ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே முற்போக்கான கல்வித் திட்டங்களை முன்னிறுத்திய ஓர் ஆசானைக் கொண்டாடத் தவறியவர்களாக இந்த ஆசிரியர் தினத்தன்று நிற்கிறோம்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x