Published : 03 Sep 2020 06:43 am

Updated : 03 Sep 2020 06:43 am

 

Published : 03 Sep 2020 06:43 AM
Last Updated : 03 Sep 2020 06:43 AM

தீர்வா இன்னொரு தலைநகரம்?

second-capital-in-tn

மதுரையைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரங்களைக் கொண்ட மாநிலங்கள் உண்டு. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது ஸ்ரீநகர் கோடைகாலத் தலைநகரமாகவும் ஜம்மு குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்தன. மஹாராஷ்டிரத்தில் மும்பை தலைநகரமாகவும், நாக்பூர் குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்துவருகின்றன. விதர்பா பிராந்தியத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நாக்பூரில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கிறது.

இமாச்சல பிரதேசத்தில் ஷிம்லாவுக்கு அடுத்து தர்மஷாலாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் இரண்டாவது தலை நகர மாக்கினார்கள். நாகர்கோட் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இன்றைய கங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூர்க்காக்களின் குடியிருப்புப் பகுதியாக மாறியது. அவர்களை மாநில அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே தர்மஷாலா இரண்டாவது தலைநகரமாக்கப்பட்டது.


ஆந்திரத்தைத் தொடர்ந்து தமிழகம்

தெலங்கானா தனி மாநிலமாகிவிட்ட பிறகு, ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக அமராவதியைத் தேர்ந்தெடுத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்நூல் ஆகியவற்றையும் சேர்த்து மூன்று தலைநகரங்களை நிர்மாணிப்பதற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாக விசாகப்பட்டினம் இருக்கும் என்றும் அமராவதியில் சட்டமன்றம், கர்நூலில் உயர் நீதிமன்றம் இயங்கும் என்றும் இந்தத் தீர்மானங்கள் கூறுகின்றன. தென்னாப்பிரிக்காவைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் சம வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக மூன்று தலைநகரங்களை நிர்மாணிக்க இருப்பதாகக் கூறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. தொழில் துறை வளர்ச்சியும் பெரும் தொகையிலான மக்களையும் கொண்ட விசாகப்பட்டினத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்பதும் ஒரு காரணம். எனினும், ஆந்திர சட்டமன்றத்தின் மூன்று தலைநகரத் தீர்மானத்தை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் பற்றியெரியும் ஒரு பிரச்சினை தமிழ்நாட்டைத் தாமதமாகத் தாக்கியிருப்பதே ஓர் ஆச்சரியம்தான்.

இன்னொரு பக்கம், உத்தராகண்ட் தனி மாநிலமாக்கப்பட்டு இருபது ஆண்டுகளை நெருங்கும் நிலையில், அதன் நிலையான தலைநகரம் எது என்று இன்றும் முடிவுசெய்யப்படவில்லை. ஐந்து முறை ஆட்சி மாறியிருக்கிறது, எட்டு முறை முதல்வர்களும் மாறிவிட்டார்கள். கைர்சைனைத் தலைநகரமாக்குவோம் என்று காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் மாறி மாறி வாக்குறுதிகளை அளித்தாலும் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. டேராடூன் உத்தராகண்டின் தற்காலிகத் தலைநகரம்தான். டேராடூன் மிகவும் வளர்ச்சிபெற்ற நகரமாக இருக்கலாம். ஆனால், மாநிலத்தின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது; டேராடூனை மையம்கொண்ட உத்தராகண்டின் அதிகார வர்க்கம் இடம்பெயரத் தயாராக இல்லை. கைர்சைன் தற்போதைக்குக் கோடை காலத் தலைநகரம் மட்டுமே. ஆண்டுதோறும் ஒரே ஒரு சட்டமன்றத் தொடர் மட்டும் கைர்சைனில் நடத்தப்பட்டுவருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தின் உயர் நீதிமன்றம் நைனிடாலில் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தைத் தலைநகரம் அல்லாத மற்றொரு நகரத்தில் அமைப்பதும்கூட இரண்டாவது தலைநகரத்துக்கு மாற்றான ஒரு உத்தியாகத்தான் கையாளப்பட்டுவருகிறது.

கேரளத்தில் உயர் நீதிமன்றம் தலைநகரத்தில் இல்லை. என்றாலும், திருவனந்தபுரத்தில் ஒரு அமர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும்கூட அங்கு எதிர்ப்பு நிலவுகிறது. திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் இணைந்ததுதானே இன்றைய கேரளம்; திருவிதாங்கூருக்கு உட்பட்ட திருவனந்தபுரத்தில் தலைநகரம் இருக்கும்போது, கொச்சிக்கு சம மதிப்பு கொடுக்கும் வகையில் அங்கு மட்டுமே உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது இதன் பின்னாலுள்ள அரசியல்.

வேறு சாத்தியங்கள்

மாநில அரசின் முக்கிய உறுப்புகளான ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை பெரும்பாலும் ஒரே நகரத்தில் இருப்பதே விரும்பப்படுகிறது. சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் ஒரே நகரத்தில்தான் இருந்தாக வேண்டும். ஆனால், ஆளுநர் மாளிகையும் உயர் நீதிமன்றமும் வேறொரு நகரத்தில் அமையலாம். ராஜஸ்தானின் தலைநகரம் ஜெய்ப்பூர்; அம்மாநில உயர் நீதிமன்றம் இருப்பது ஜோத்பூரில். மார்வார் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்தது என்பதால், ஜோத்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அங்கு உயர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. தலைநகரமான ஜெய்ப்பூரிலும் உயர் நீதிமன்ற அமர்வு ஒன்று உள்ளது. இன்னும் இதுபோல உதாரணங்கள் உண்டு. ஒடிஷாவின் தலைநகரம் புவனேஸ்வர்; உயர் நீதிமன்றம் இருப்பது கட்டாக்கில். மத்திய பிரதேசத்தின் தலைநகரம் போபால்; உயர் நீதிமன்றம் இருப்பது ஜபல்பூரில். கர்நாடகத்தில் உயர் நீதிமன்றம் பெங்களூருவில் இருந்தாலும் தார்வாட்டிலும் குல்பர்காவிலும் அமர்வுகள் இருக்கின்றன. பம்பாய் உயர் நீதிமன்றத்துக்கு ஒளரங்காபாத், நாக்பூர், பனாஜி என்று மூன்று அமர்வுகள் இருக்கின்றன. தமிழகம் கேரளத்தைப் போல நீளவாக்கில் அமைந்த மாநிலமல்ல. முக்கோண வடிவில் இருக்கும் தமிழகத்தை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரித்து உயர் நீதிமன்றத்தின் அமர்வை மதுரையில் மட்டும் நடத்துவதும்கூட போதாதுதான். தமிழகத்தின் தொழிற்பகுதியாக இருந்துவரும் மேற்குத் தமிழகமும்கூட எதிர்காலத்தில் தங்களுக்கென்று ஒரு தனி அமர்வைக் கேட்கலாம். ஆனால், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களே அதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை அமர்வு உருவாக்கப்பட்டபோதே அதற்கு சென்னை வழக்கறிஞர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

நமது தேவை என்ன?

எல்லாப் பிராந்தியங்களிலும் சம வளர்ச்சி என்பதற்கும் இரண்டாவது, மூன்றாவது தலைநகர அறிவிப்புகளுக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்றாலும், அவை நேரடியானவை இல்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆளுநர் மாளிகை மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தால்தான் என்ன? பக்கத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையம் இருந்தால் போதுமானது. அமைச்சரவையையும் அதிகாரிகளையும் தவிர, ஆளுநர் மாளிகையில் யாருக்கு என்னதான் வேலை? உயர் நீதிமன்ற அமர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்புண்டா? அப்படி இருந்திருந்தால், மதுரையில் தலைநகர் கோரிக்கையே எழுந்திருக்காதே. உயர் நீதிமன்றத்துக்கு ஒரு புதிய அமர்வு வந்தால், அதைச் சுற்றி வழக்கறிஞர் அலுவலகங்களும் ஜெராக்ஸ் கடைகளும் மட்டும்தான் வரும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை தலைநகர அந்தஸ்து அல்ல; தொழில் மையங்களே.

பொருளாதாரத்தில் தென்தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அங்கு, புதிய தொழில் வாய்ப்புகளுக்குக் கண்டிப்பாக கவனம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தலைநகரக் கோரிக்கை அதைத் தீர்த்துவிடாது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டாவது தலைநகரம் என்பது பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே அறிவிக்கப்படுகின்றனவே அல்லாமல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அல்ல. தமிழக அரசியலிலோ தென்தமிழகத்தின் முக்கியத்துவம் தவிர்க்கவே முடியாதது. நமக்குத் தேவை மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சி.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


இன்னொரு தலைநகரம்Second capital in TNMaduraiTrichyஇரண்டாவது தலைநகரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x