Published : 01 Sep 2020 14:42 pm

Updated : 01 Sep 2020 14:42 pm

 

Published : 01 Sep 2020 02:42 PM
Last Updated : 01 Sep 2020 02:42 PM

வாழ்க்கையைத் தின்னும் வாடகை: வீடிழந்து நிற்கும் அமெரிக்கர்களின் அவலக் கதை

rent-for-life-the-tragedy-of-homeless-americans

ஜான் லொவாய்ஸா - சுகே பெடோயா தம்பதிக்கு மூன்று மகள்கள். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நியூயார்க்கில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலிருந்து, டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டானியோவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அவர்கள் குடிபுகுந்தனர். வேலி போடப்பட்ட கொல்லைப்புறமும், மென்மையான பழுப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட நான்கு படுக்கை அறைகளுமாக அந்த வீடு அவர்களுக்குப் பிடித்திருந்தது. புதிய நகரமும்தான். நதிக்கரையோரமாக ஐஸ் க்ரீம் சுவைத்துக்கொண்டே நடப்பது அல்லது ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்றுவந்த பின்னர் பைக் சவாரி செய்வது என்று சந்தோஷமாக இருந்தார்கள்.

கரோனாவால் முடிவுக்கு வந்த மகிழ்ச்சி


இவையெல்லாமே ஒரு கட்டம் வரைதான். வணிகம் முடக்கப்பட்டதால் வருமானமிழந்து, வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதாக மிரட்டப்பட்டு, அதன் விளைவாகக் கோவிட்-19 தொற்றுக்குள்ளானது என லொவாய்ஸாவுக்கு நேர்ந்ததெல்லாம் பெரும் கொடுமைகள்.

தடகள விளையாட்டு வீரரின் உடற்கட்டு கொண்ட 45 வயது லொவாய்ஸா, சான் அன் டானியோ ஏதெனியன்ஸ் எனும் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிந்துவந்தார். பகுதி நேர விளையாட்டு அணி அது. போட்டிகள் இல்லாத சமயங்களில் கட்டுமானப் பணிகளைச் செய்வது, உணவகங்களில் பணிபுரிவது என வருமானம் ஈட்டிவந்தார். நவம்பரில் நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்ததால் அவர் மட்டும் தற்காலிகமாக நியூயார்க்குக்குத் திரும்பினார். அங்கிருந்து வேலை பார்த்துக்கொண்டே வீட்டுக்குப் பணம் அனுப்பிவந்தார்.

மார்ச் மாதத்தில் நியூயார்க் நகரம் கரோனா வைரஸ் பரவலின் மையமாக ஆனபோது சான் அன்டோனியோவுக்குத் திரும்பிய லொவாய்ஸா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், கரோனா வைரஸ் முழு வேகத்தில் டெக்சாஸை வந்தடைந்தது. அந்நகரத்தில் வேலைகள் பறிபோயின. ஏப்ரல் மாத வாடகைக்கு (1,595 டாலர்கள்) என லொவாய்ஸா தம்பதியிடம் பணம் கையிருப்பில் இருந்தது. எனினும், வேறு செலவுகளும் இருந்தன. விரைவிலேயே தேவாலயத்திலிருந்து கிடைக்கும் உணவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆம், வீட்டு வாடகைதான் வாழ்க்கையை முதலில் தின்கிறது.

வீட்டு உரிமையாளர் தந்த அழுத்தம்

அடுத்த மாதம் வாடகை கொடுக்கக் கையில் பணம் இல்லை என்பதை உணர்ந்ததும், உடனடியாக அவசரகால உதவி கோரி விண்ணப்பித்தார் லொவாய்ஸா. சான் அன்டோனியோ நகரின் வீட்டு வசதித் துறையினரையும் பல முறை அழைத்து உதவி கோரினார். அவரது பெயரை நினைவுகொள்ளும் அளவுக்கு அதன் ஊழியர்களுக்குப் பரிச்சயமாகிப் போனார். ஆனால், நகரின் அத்தனை பேரும் உதவி கோரி விண்ணப்பித்துக் கொண்டிருந்ததால், உதவி கிடைத்தாலும் அது கைக்கு வந்து சேர ஒரு மாதமாகும் என்பதை லொவாய்ஸா புரிந்துகொண்டார்.

மே மாதம் வந்ததும் அவரது குடும்பம் மேலும் பின்னடைவைச் சந்தித்தது. ஜூன் 2-ல் அவர்களது வீட்டு உரிமையாளர் ரிகார்டோ அகோஸ்டா வீட்டைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கினார். ‘பத்தி B-யில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்கு முன்னதாக வீட்டைக் காலி செய்யுமாறு வாடகைதாரரை வீட்டு உரிமையாளர் கேட்டுக்கொள்கிறார்’ என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதி ஜூன் 6. இப்படியான ஒரு நெருக்கடியை லொவாய்ஸா சந்தித்ததே இல்லை. வெறும் நான்கே நாட்களில் வீட்டைக் காலி செய்ய வேண்டுமா? மீண்டும் அந்த நோட்டீஸைப் படித்த லொவாய்ஸாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

உரிய நேரத்தில் கிடைக்காத உதவி

இந்தச் சூழலில் பலரும் வீட்டைக் காலிசெய்து கொண்டுவிடுவார்கள். ஆனால், செயின்ட் மேரி சட்டக் கல்லூரியின் சட்டம் மற்றும் சமூக நீதி மையத்தை அணுகினார் லொவாய்ஸா. வீட்டைக் காலிசெய்யும் நடவடிக்கையின் முதல் படிதான் அந்த நோட்டீஸ் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஜூன் 6-ல் வீட்டைக் காலிசெய்யாவிட்டால், சட்டரீதியாகக் காலி செய்யப்படும் சூழல் உருவாகும் என்று ஒரு வழக்கறிஞர் அவருக்குச் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரம் கழித்து, தனக்கு 3,000 டாலர்கள் அவசரகால உதவியாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது லொவாய்ஸாவுக்குத் தெரியவந்தது. விண்ணப்பித்து 44 நாட்களுக்குப் பின்னர் ஒருவழியாக அவருக்கு உதவி கிடைத்துவிட்டது. அந்தப் பணம் நேரடியாக வீட்டு உரிமையாளருக்கு அனுப்பப்படும் என்று தெரியவந்தது. எனினும், வீட்டைக் காலி செய்யும் நடவடிக்கைகளை வீட்டு உரிமையாளர் ரத்து செய்யவில்லை. தனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று காரணம் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து லொவாய்ஸாவுக்கு நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வந்தது. அதில் இருந்த முதல் வாசகம், ‘உங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது’ என்பதுதான்.

ஜூலை 10-க்குள் வீட்டைக் காலி செய்யுமாறு நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. மே, ஜூன் மாதங்களுக்கு மொத்தம் 3,190 டாலர்கள் வாடகை செலுத்தியாக வேண்டும். அத்தனை விரைவில் அந்தத் தொகையைச் சம்பாதிக்க முடியுமா என்று அவர் குழம்பி நின்றார். அவசரகால நிதியுதவி விரைவில் கிடைத்துவிடும் என்று வீட்டு உரிமையாளரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பெருந்தொற்றுக் காலத்தில் பலரும் ஏறத்தாழ இப்படித்தான் வீட்டைக் காலிசெய்ய நேர்கிறது. நான் இயக்குநராகப் பணிபுரியும் ‘எவிக் ஷன் லேப்’ (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்) வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, கடந்த மாதம் ஒஹாயோ மாநிலத்தின் ஹாமில்டன் கவுன்ட்டியில் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் சராசரியாகச் செலுத்த வேண்டியிருந்த தொகை 1,172 டாலர்கள். அரிசோனாவின் மாரிகோபா கவுன்ட்டியில் அது 1,706 டாலர்கள். ஹாமில்டன் கவுன்ட்டியிலும், மாரிகோபா கவுன்ட்டியிலும் 500 டாலர்கள் அல்லது 100 டாலர்களுக்கும் குறைவான தொகையைச் செலுத்த முடியாமல் வீட்டைக் காலி செய்ய நேர்ந்தவர்களும் உண்டு.

மேலும் சில வாரங்கள் கழிந்த பின்னரும், தனக்கான உதவி வந்துசேர்ந்துவிட்டதா இல்லையா என்று லொவாய்ஸாவுக்குத் தெரியவில்லை. ஜூன் 23-ல், வீட்டு உரிமையாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது: ‘ஜான், கடந்த வார இறுதியிலேயே வீட்டைக் காலி செய்துகொள்வதாகச் சொல்லியிருந்தீர்கள். வீடு காலியாகிவிட்டதா?’

அதிகரிக்கும் தற்கொலைகள்

முற்றிலும் வலுவிழந்ததுபோல இயலாமையை உணர்ந்ததாக என்னிடம் சொன்னார் லொவாய்ஸா. தூக்கமிழக்கத் தொடங்கினார். அழுத்தம் ஒரு பாம்பின் விஷம் போல் உடலெங்கும் பரவுவதாக உணர்ந்தார். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட யோசித்தார். அப்படியான எண்ணம் ஒருபோதும் அவருக்கு வந்ததில்லை. ஆனால், அந்தச் சூழல் ஏற்படுத்திய அவநம்பிக்கை அந்த அளவுக்கு அவரை அழுத்தியது.

வீடுகளைக் காலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மார்ஷல்களிடம், தற்கொலைச் சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் உண்டு. அதிகாலையில் கதவு தட்டப்படும்போது வீட்டுக்குள்ளிருந்து எழும் ஒற்றைத் துப்பாக்கிச் சூடு சத்தம், விரக்தியின் உச்சமாக ஒலிப்பதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் 2005 முதல் 2010 வரை வீட்டு வாடகை, வீட்டுத் தவணைத் தொகை உள்ளிட்ட செலவுகள் கணிசமாக அதிகரித்துவந்த நிலையில் பலரும் வீடுகளை இழந்ததால் தற்கொலைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது.

ஆறுதல் உதவி

லொவாய்ஸாவும் அந்த நிலையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தார். உதவித் தொகை கிடைக்காததால், சான் அன்டானியோவில் உள்ள தனது நண்பர்களின் உதவியை நாடத் தொடங்கினார். ஆனால், அவரது குடும்பத்தினர் தங்குவதற்குத் தங்கள் வீட்டின் அறைகளை ஒதுக்க யாருக்கும் வசதியில்லை. இறுதியாக, அவரது குடும்பத்தினர் தங்கிக்கொள்ள தங்கள் வீட்டின் இரு அறைகளையும், கார் நிறுத்துமிடத்தில் பொருட்களை வைத்துக்கொள்ள இடத்தையும் வழங்க ஃப்ளோரிடாவைச் சேர்ந்த நண்பர்கள் முன்வந்தனர். எனினும், குடிபெயர்வதற்கு வீட்டுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் ‘யு-ஹால்’ நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்பட்டது. எனவே, ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானக் குழுவில் சேர்ந்தார் லொவாய்ஸா.

ஜூலை 1-ம் தேதி வீட்டு உரிமையாளரிடமிருந்து இன்னொரு குறுஞ்செய்தி வந்தது: ‘ஜான் வீடு காலியாகிவிட்டதா?’ ஆமாம். வீடு காலி செய்யப்பட்டுவிட்டது. அதிகாலையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ‘யு-ஹால்’ நிறுவன ட்ரக்கில் புறப்பட்டது. அந்த ட்ரக்கில் லொவாய்ஸா ஏறிக்கொண்டார். அவரது மனைவியும் மகள்களும் தங்கள் சொந்தக் காரில் பின்தொடர்ந்தனர். சில மணி நேரப் பயணத்தில் லொவாய்ஸா சோர்வடைந்தார். அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடல்நிலை பற்றி அவரது மனைவி பெடோயா காரிலிருந்து அடிக்கடி போன் செய்து கேட்டுக்கொண்டே வந்தார்.

வீட்டு உரிமையாளரின் வஞ்சகம்

லொவாய்ஸா குடும்பம் குடிபெயர்ந்துவிட்ட நிலையில், அவர்கள் தரப்பில் செயின்ட் மேரி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார். லொவாய்ஸாவுக்கான உதவித் தொகை அவரது வீட்டு உரிமையாளர் ரிகார்டோ அகோஸ்டாவுக்குச் சென்றடைந்துவிட்டதா என்று விசாரிக்கப்பட்டது. அப்போதுதான் 3,000 டாலருக்கான காசோலை ரிகார்டோவுக்குப் பல வாரங்களுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்டது என்றும், ஜூன் 19-ல் அதை வங்கியில் செலுத்திப் பணம் பெற்றுக்கொண்டார் என்றும் தெரியவந்தது. அதாவது, வீடு காலிசெய்யப்படுவது குறித்து லொவாய்ஸாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு முன்பே வீட்டு உரிமையாளரின் கைக்குப் பணம் சென்று சேர்ந்துவிட்டது.

(அது தொடர்பாக ரிகார்டோவிடம் ஒரு பேட்டியில் பல முறை கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அதை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. எனினும், எனக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில், ‘வேறு எங்கோ வேலை தேடிச் செல்வதால்தான் வீட்டை அவர் காலி செய்தார். நீதிமன்ற ஆவணங்கள் அதைக் காட்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் ரிகார்டோ. ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அந்த வீட்டைக் காலிசெய்ய நேர்ந்தது என்றும், வேலை தேடுவதற்காகக் குடிபெயர்ந்து செல்வதாக ரிகார்டோவிடம் தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் லொவாய்ஸா என்னிடம் சொன்னார்.)

அதன் பின்னர் லொவாய்ஸாவைத் தொடர்புகொள்ள வழக்கறிஞர் பல முறை முயன்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி ஃப்ளோரிடாவின் ஒரு மருத்துவமனையில் படுத்துக் கிடந்தார் லொவாய்ஸா.

வாடகை எனும் பெரும் சுமை

வாடகை - பேராசை மிக்க ஒரு விஷயம். ஒவ்வொரு ஆண்டும் தன்னிச்சையாக, கிட்டத்தட்ட மாயாஜாலம் போல் வளரும் வாடகைக்குக் காரணம், வசிக்கும் வீட்டில் செய்யப்படும் மேம்பாடுகள் அல்ல. டிமாண்ட் தான். வாடகை உயர்வு தொடர்பாகப் புதிய ஒப்பந்தத்தை வாடகைதாரர்களின் கையில் திணிக்கும் வீட்டு உரிமையாளர்கள் அதற்காகச் சொல்லும் காரணம், ‘பொருட்கள் விலையேறிக் கொண்டிருக்கின்றன’ என்பதாகவே இருக்கும். பிற செலவுகளைத் தவிர்ப்பது போல் வாடகை செலுத்துவதிலிருந்து தவறிவிட முடியாது. தவறினால், உடனடியான, மோசமான விளைவுகள் ஏற்படும். குடும்பங்கள் ஏழ்மையில் தள்ளப்படும். அவர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

வாடகை நெருக்கடி தொடர்பான ஊடகச் செய்திகள் பெரும்பாலும், பிரதானமான கடற்கரை நகரங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. அங்கெல்லாம் ஒற்றை அறை கொண்ட வீட்டின் வாடகையே 3,000 டாலர் இருக்கும். உண்மையில், இது நியூயார்க்கின் பிரச்சினையோ, சான் பிரான்சிஸ்கோவின் பிரச்சினையோ மட்டும் அல்ல. இது தேசத்தின் பிரச்சினை. அதிக அளவில் வெளியேற்றங்கள் நடந்த இடங்களின் பட்டியலில் ஓக்லஹாமா மாநிலத்தின் துல்சா, ஒஹாயோ மாநிலத்தின் அல்புக்கெர்க், இண்டியானபோலிஸ், டோலிடோ போன்ற நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாட்டின் புறநகர்களிலும், சிறுநகரங்களிலும் நிலைமை எத்தனை மோசமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர், அமெரிக்காவில் சுமார் 8 லட்சம் பேர் ஒவ்வொரு மாதமும் இப்படியான மிரட்டல்களை எதிர்கொண்டுவந்தனர். பொருளாதாரப் பெரும் வீழ்ச்சிக்குப் (Great Depression) பிறகான காலத்தில் பார்த்திராத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் இன்றைய சூழலில், அரசிடமிருந்து கிடைத்த நிதி உதவிகள் கரைந்துவரும் நிலையில், வெளியேற்றுவதைத் தடுக்கும் தடை உத்தரவுகள் காலாவதி ஆகிவரும் நிலையில், இந்த வருடத்தின் இறுதியில் லட்சக்கணக்கானோர் வீடிழப்பார்கள் எனத் தெரிகிறது. இப்போதே பலரும் வீடிழந்துவருவதைப் பார்க்க முடிகிறது.

வைரஸ் பரவலை அதிகரிக்கும் வெளியேற்றங்கள்

பெருந்தொற்று சமயத்தில் வீட்டில் இருப்பது என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். வலுக்கட்டாயமாக வீட்டைக் காலிசெய்ய நேர்வது என்பது வைரஸ் பரவலை அதிகரிக்கவே உதவும். வீடிழந்த குடும்பங்கள் புகலிடங்களில் கூட்டத்துடன் கூட்டமாகத் தங்க நேர்கிறது. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நெருக்கடிக்கு இடையே தங்க வேண்டியதாகிறது. அல்லது வாடகையைக் கட்டப் பணம் சம்பாதிப்பதற்காக, தொற்று அபாயம் அதிகம் உள்ள வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

சான் அன்டானியோவைச் சேர்ந்த 63 வயதுப் பெண்மணி மார்கி ஹெர்னாண்டெஸின் கதையும் ஏறத்தாழ இதுதான். கணவரை இழந்த அந்த மூதாட்டி, ஜூன் மாத வாடகையைச் செலுத்த முடியாமல் வீட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், ‘பெஸ்ட் வெஸ்டர்ன்’ எனும் விடுதியில்தான் அவர்கள் தங்க நேர்ந்தது.

வீட்டில் இருந்தபோது, வெளியில் செல்லாமல் இருப்பது, வீட்டுக்குள்ளேயே தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது என சுகாதார வழிகாட்டுதல்களை அவர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால், தங்கும் விடுதிகளில் அதற்கு வாய்ப்பில்லை. மார்கியும் அவரது குடும்பத்தினரும் முகக்கவசம் அணிந்துதான் இருந்தார்கள். ஆனால், விடுதிக்கு வரும் பலர் முகக்கவசம் அணியவில்லை. இதன் விளைவாக, மார்கிக்கும் அவரது 27 வயது மகனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. மார்கி இன்னமும் ஐசியூவில்தான் இருக்கிறார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அவரது மகனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனா தொற்றிலிருந்து லொவாய்ஸா குணமடைந்துவிட்டார். ஃப்ளோரிடாவில் வீடுகளுக்குப் பெயின்ட் அடிக்கும் வேலையும் கிடைத்துவிட்டது. அவரது சொந்த ஊருக்கு அவரது குடும்பம் சென்றுவிட்டது. ஆனால், வாடகை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வேதனையிலிருந்து இன்னமும் அவர் முழுமையாக மீண்டுவரவில்லை. வீடு மாற்றுவதற்கான செலவுக்காகக் கட்டுமானப் பணி செய்தபோதுதான் தனக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அவர் நம்புகிறார்.

அவசரகால உதவி விரைவில் கிடைத்திருந்தாலோ, வீட்டு உரிமையாளர் அவருக்கு உதவியிருந்தாலோ இப்படி ஒரு ஆபத்தான சூழலுக்கு அவர் ஆட்பட்டிருக்க மாட்டார். மார்கியும் அவரது மகனும் தொற்றுக்குள்ளானது போலத்தான் லொவாய்ஸாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியேற நேர்ந்ததால்தான் இது நேர்ந்திருக்கிறது.

சுகாதார நெருக்கடி

வாடகை தர முடியாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் இந்த நெருக்கடி, பொது சுகாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், வீட்டு வாடகை தொடர்பான நெருக்கடி ஒரு சுகாதார நெருக்கடி என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் 26 மருத்துவ சங்கங்கள் கையெழுத்திட்டு அமெரிக்க நாடாளுமன்றத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கின்றன.

வீடிழக்கும் சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்றாவிட்டால், கோவிட்-19-க்கு எதிரான போரிலும், பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவரும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா பெரும் பின்னடைவையே சந்திக்க நேரும். அது கரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பின்மை நெருக்கடியையும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதில் பாதிப்பையும் ஏற்படுத்தும். ஏனெனில், வீடிழந்து தொலைதூர இடங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் வேலையை இழக்க வேண்டியிருக்கும். பள்ளிக் குழந்தைகள் இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்படுவதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படும்.

நாடாளுமன்றம் தலையிட வேண்டும்

வாடகைதாரர்களை வீட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதற்கும் தீர்வாகாது. வாடகை தராவிட்டால் வீட்டைவிட்டு வெளியேற்ற நேரும் எனும் அச்சுறுத்தல் மூலம்தான் தங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று வீட்டு உரிமையாளர்கள் கருத வேண்டியதில்லை. அவர்கள் அப்படிச் செய்திருந்தால், வெளியேற்றுவதைத் தடை செய்யும் உத்தரவுகளின் காலக்கெடு முடிவுறும் மாநிலங்களில் வாடகை வசூல் விகிதம் அதிகமாகவும், தடை தொடரும் மாநிலங்களில் அந்த விகிதம் குறைவாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், தரவுகள் சொல்வது முற்றிலும் மாறானது. வெளியேற்றுவதைத் தடை செய்யும் உத்தரவு தொடர்வதற்கும் / முடிவுற்றுவிட்டதற்கும், வாடகை வசூல் விகிதத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வாடகை வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வெளியேற்றம் ஒரு தீர்வாகாது. வாடகை உதவித் தொகைதான் அதற்குத் தீர்வாகும்.

அந்த அடிப்படையில்தான் நான் சில தீர்வுகளை முன்வைக்கிறேன். இதுபோன்ற நெருக்கடியிலிருந்து வாடகைதாரர்களைக் காக்கும் வல்லமை நாடாளுமன்றத்திடம் மட்டும்தான் இருக்கிறது. அமெரிக்கக் குடும்பங்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றம் எடுத்தாக வேண்டும். வெளியேற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையை நாடு முழுவதற்குமாக அமல்படுத்த வேண்டும். கூடவே, வாடகைதாரர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தத்தமது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க நாடாளுமன்றம் உதவ வேண்டுமானால், ஒவ்வொரு மாதமும் 7 பில்லியன் டாலர் முதல் 12 பில்லியன் டாலர் வரை நிதி தேவை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஒரு நிவாரண மசோதாவை நிறைவேற்றியிருக்க வேண்டும். மாறாக செனட் (அமெரிக்க மேலவை) கூட்டத்தை செப்டம்பர் 8-ம் தேதி வரை தள்ளிவைத்திருக்கிறார் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனல்.

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காக்கும் இந்த அணுகுமுறை குரூரமானது மட்டுமல்ல. முட்டாள்தனமானதும்கூட. வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவது தொடர்பான இந்த நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், மனித உயிர்கள், பொருளாதாரம் ஆகியவற்றில் இழப்புகளை எதிர்கொள்ள நேரும். ஏற்கெனவே ஏராளமான அமெரிக்கர்கள் தங்கள் உயிரையும், வேலையையும் இழந்திருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்கர்கள் அநாவசியமாகத் தங்கள் வீடுகளை இழக்கும் சூழலை அனுமதிப்பதை மன்னிக்கவே முடியாது.

- மேத்யூ டெஸ்மாண்ட், தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தவறவிடாதீர்!


வாழ்க்கைவாடகைஅமெரிக்கர்கள்அவலக் கதைRent for LifeHomeless Americansகரோனாகொரோனாலொவாய்ஸாகால்பந்து அணிவீட்டு வாடகை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x