Published : 27 Aug 2020 08:48 am

Updated : 27 Aug 2020 08:48 am

 

Published : 27 Aug 2020 08:48 AM
Last Updated : 27 Aug 2020 08:48 AM

சூறையாடப்படுமா அமெரிக்கத் தேர்தல்?

us-election

தாமஸ் ஃப்ரீட்மன்

பின்வரும் வாக்கியத்தை நான் எழுதவோ படிக்கவோ செய்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டேன்: இந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவால் முதன்முறையாக சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த முடியாமல் போகலாம்.

அமெரிக்க அஞ்சல் துறையைத் தற்போதைய ட்ரம்பின் நிர்வாகம் முடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், அமெரிக்காவில் பாதிப் பேர் தங்கள் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று நினைக்கக்கூடும். மீதமுள்ள பாதிப் பேர் அஞ்சல் வழியாக ஜோ பிடனுக்குக் கிடைக்கும் வாக்குகள் போலியானவை என்று அமெரிக்க அதிபரால் நம்ப வைக்கப்படக்கூடும். அது வெறுமனே இதைப் பிரச்சினைக்குரிய தேர்தலாக மட்டும் ஆக்காது. நாமறிந்த அமெரிக்க ஜனநாயகத்தின் அஸ்தமனமாகவும் அமைந்துவிடும். இன்னொரு உள்நாட்டுப் போருக்கு அது வித்திடும் என்று சொன்னால் அது மிகையல்ல.


இந்த அச்சுறுத்தல் உண்மையானது!

தனிப்பட்ட முறையில் பார்த்தால் என்னால் நடக்க முடியும், என்னால் மெல்லோட்டம் ஓட முடியும், என்னால் தவழ முடியும், ஊர்ந்துசெல்ல முடியும், பைக்கில் செல்ல முடியும், நடந்து பயணிக்க முடியும், வாகனங்களை மறித்து அவற்றில் ஏறிச்செல்ல முடியும், என்னால் வாகனத்தை ஓட்டிச்செல்ல முடியும், என்னால் சவாரி செல்ல முடியும், ஓட முடியும், விமானத்தில் செல்ல முடியும், என்னால் உருண்டு செல்ல முடியும், நான் உருட்டிவிடப்படுவேன், நான் சுமந்துசெல்லப் படுவேன், என்னால் ரயிலில் செல்ல முடியும், என்னால் தாவித் தாவி ஓட முடியும், டிரக்கில் செல்ல முடியும், நிமிர்ந்து நடைபோட முடியும், என்னால் மிதக்க முடியும், என்னால் படகில் செல்ல முடியும், என்னால் திரிய முடியும், அணிவகுத்துச் செல்ல முடியும், பேருந்தில் செல்ல முடியும், என்னால் டாக்ஸியில் செல்ல முடியும், என்னால் ஊபரில், லிஃப்ட்டில், ஸ்கூட்டரில், சறுக்குப் பலகையில் அல்லது மோட்டார் சைக்கிளில் செல்ல முடியும் - மேலும் நான் முகக்கவசம், கையுறைகள், கண்காப்புக் கண்ணாடிகள், கவச உடை, விண்கல உடை, நீர்புகா உடை அணிந்துகொள்வேன். நிச்சயம் நவம்பர் 3 அன்று அருகிலுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று, ஜோ பிடனுக்கும் கமலா ஹாரிஸுக்கும் நான் அளித்த வாக்கு பதிவாகியிருக்கிறதா என்றும், எண்ணப்படுகிறதா என்றும் பார்ப்பேன்.

நான் தாராளனாக இருக்கிறேன் என்பதற்காக அல்ல; அமெரிக்கா தன்னுடைய அடிப்படை இயல்பில் மைய-இடதுசாரியாகவும், மைய-வலதுசாரியாகவும் இருக்கிறது என்றும், இந்த இரண்டு இயல்புகளையும் ஒன்றுசேர்த்து அங்கிருந்து அமெரிக்காவை வழிநடத்தக்கூடிய ஒருவரால் அது ஆளப்பட வேண்டும் என்றும் நாம் நம்புவதால்தான் அதைத் தன்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் பிடன் என்று நம்புகிறேன். அதுதான் பெரும்பாலான அமெரிக்கர்களின் ஆதரவு அவருக்குக் கிடைப்பதற்குக் காரணம்.

பணிஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோர் வழக்கமாக வாக்குச்சாவடிகளில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவார்கள். அவர்களெல்லாம் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுமோ என்று அஞ்சி, இந்த ஆண்டு முன்வரத் தயங்குகிறார்கள். குறைவாகவே உள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில், கூட்டத்தோடு கூட்டமாக நின்றால் தங்களுக்கும் தொற்று ஏற்படலாம் என்று வாக்காளர்களும் அஞ்சுகிறார்கள். பெருமளவிலான அஞ்சல் வழி வாக்குகளை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு வாக்கையும் பதிவுசெய்து எண்ணவும் ஏற்ற விதத்தில் அஞ்சல் துறை தயார் நிலையில் இல்லை என்பதற்கு ட்ரம்பைக் குற்றஞ்சாட்டிவிட முடியாதுதான். ட்ரம்ப் நாடாளுமன்றத்தையும் ஆளுநர்களையும் ஒன்று திரட்டி, அமெரிக்காவின் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, தனக்கு ஆதரவான ஃப்ளோரிடா போன்ற மாநிலங்களைத் தவிர, ஏனைய மாநிலங்களில் பதியப்படும் அஞ்சல் வழி வாக்குகளைப் பித்தலாட்டம் என்று அமெரிக்க மக்களை நம்பவைப்பதற்குத் தனது பிரச்சார மேடையைப் பயன்படுத்துகிறார். அது மட்டுமல்லாமல், பெருமளவிலான அஞ்சல் வாக்குகளை எதிர்கொள்ளும் விதத்தில் தனது திறனை விரிவாக்க வேண்டிய அஞ்சல் துறைக்கான நிதிகளை நிறுத்திவைக்கவும் ட்ரம்ப் முயல்கிறார்.

வாழைப்பழக் குடியரசுகள்

அஞ்சல் துறைக்கான நெருக்கடிக் கால நிதிகளுக்காக 2,500 கோடி டாலரையும், தேர்தல் உதவியாக மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 350 கோடி டாலரையும் தருவதற்குத் தான் கையெழுத்திடப்போவதில்லை என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்று நிவாரண மசோதாவின் பங்காக இந்த நிதிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்திவருவது குறிப்பிடத் தகுந்தது.

“அஞ்சல் துறை இயங்குவதற்காக இந்தத் தொகை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதன் மூலம் கோடிக்கணக்கான வாக்குகளைக் கையாளலாம். ஆனால், இந்த இரண்டு நிதிகளையும் அவர்கள் பெறவில்லை என்றால், நாடு தழுவிய அஞ்சல் வாக்குகளைப் பெற முடியாது என்று அர்த்தம். ஏனெனில், இந்தச் சூழ்நிலையைக் கையாளும் கட்டமைப்பை அவர்கள் கொண்டிருக்கவில்லை” என்று ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். தேர்தலில் மோசடி செய்யவும் தங்கள் எதிரிகளின் வாக்குகளைக் குறைத்துக் காட்டவும் முயன்ற வாழைப்பழக் குடியரசுகளின் சர்வாதிகாரிகள் பற்றி நான் எழுதியிருக்கிறேன். அவர்களெல்லாம், ட்ரம்ப் அளவுக்கு இவ்வளவு வெளிப்படையாக அந்தக் காரியங்களைச் செய்ததில்லை.

கொள்கை அளவில் என்ன செய்வது? மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செனட்டர்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும், போராட்டங்கள் நடத்த வேண்டும், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மிக முக்கியமாக ட்ரம்பின் தலைமை அஞ்சல் அதிகாரியான லூயிஸ் டிஜாயின் வீட்டுக்கு முன்னால் போராட வேண்டும். அவர் தனது வழிமுறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவரின் மீதமுள்ள ஆயுட்காலத்தில் அவர் எங்கே சென்றாலும், எந்த உணவகத்துக்குச் சென்றாலும், எந்தத் திரையரங்குக்குச் சென்றாலும், தன் நாயுடன் எப்போது நடந்தாலும், “2020 தேர்தலில் அமெரிக்கர்களின் வாக்குகள் எண்ணப்பட முடியாத வகையில் வேண்டுமென்றே அஞ்சல் துறையின் ஆணிவேரை அடியோடு பிடுங்கியெறிந்த மனிதர் போகிறார் பாருங்கள்” என்று மக்கள் எதிர்காலத்தில் சொல்வார்கள் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட வேண்டும்.

இந்த வழிமுறை டிஜாயிடம் கொஞ்சம் வேலை செய்வதைப் போல் தோன்றுகிறது. அஞ்சல் வாக்குகளுக்கு எதிரான, பொய்யான செய்திகளை எங்கெங்கும் அமெரிக்க அதிபர் தூவிக்கொண்டிருக்கும்போது, செலவுக் குறைப்பு மற்றும் பிற மாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக டிஜாய் அறிவித்தார். ஆனால், இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு டிஜாயையோ ட்ரம்பையோ நாம் நம்பிவிட முடியாது. எடுத்துக்காட்டாக, அஞ்சல் வழி வாக்குகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதைப் பற்றி டிஜாய் ஏதும் சொல்லவில்லை.

வாக்குச்சாவடிகள்

உள்ளூரிலேயே வாக்குச்சாவடிப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கர்கள் ஒத்துழைக்க வேண்டும், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் என்று எந்தத் தரப்பும் விடுபாடின்றி வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வாக்களிக்க விரும்பும் அனைவரையும் எதிர்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை இது நம் தலைமுறையின் மிக முக்கியமான நாள். 1944 ஜூன் 6 அன்று இரண்டாம் உலகப் போரின்போது நார்மண்டி கடற்கரைக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள், தங்கள் வாழ்க்கையையே வாக்காகச் செலுத்தினார்கள். அதனால்தான், அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளை அந்த நாளிலிருந்து, பெருந்தொற்றின் நடுவேயும்கூட அளிக்க முடிந்தது.

“கோடிக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தற்போது வீட்டில் தங்கியிருக்கிறார்கள். தொலைக் கல்வி பயின்றுவருகிறார்கள். கிட்டத்தட்ட, 1944 ஜூனில் நார்மண்டியில் இறங்கிய வீரர்களின் வயதுதான் அவர்களுக்கும். வாக்குச்சாவடிப் பணிகளுக்காக அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்தால் உதவியாக இருக்கும். அதற்கு முதலில் அவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தால் வாக்காளர்களுக்கு உதவலாம். வாக்குச்சாவடி மையங்களைக் கிருமிநீக்கம் செய்வதில் உதவலாம். இப்படியாக மக்கள் தங்களின் மிக அடிப்படையான சுதந்திரம் ஒன்றை நிறைவேற்றுவதற்குச் சிறந்த இடமாக வாக்குச்சாவடிகளை மாற்றலாம்” என்று பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநராக இருந்த டான் பேர் என்னிடம் தெரிவித்தார்.

ஆகவே, அமெரிக்கர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், எல்லா வாக்குகளும் பதிய விடாமலும், எல்லா வாக்குகளையும் எண்ண விடாமலும் தடுக்க முயலும் நபர்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், நார்மண்டி கடற்கரைக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களை அவமதித்ததுபோல் ஆகிவிடும்.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை


US electionஅமெரிக்கத் தேர்தல்சூறையாடப்படுமா அமெரிக்கத் தேர்தல்Donald trumpJoe biden

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x