Published : 25 Aug 2020 07:46 am

Updated : 25 Aug 2020 07:48 am

 

Published : 25 Aug 2020 07:46 AM
Last Updated : 25 Aug 2020 07:48 AM

விமர்சனம் எது, அவமதிப்பு எது?

criticism-and-contempt

கௌதம் ராமன்

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சமீபத்தில் இட்ட இரண்டு ட்விட்டர் பதிவுகளுக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரைக் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஒரு ட்வீட், தலைமை நீதிபதி நின்றுகொண்டிருக்கும் ஒரு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பது பற்றியது; மற்றொன்று, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றம் பங்காற்றியிருக்கிறது என்று பூஷன் குற்றம் சுமத்தியது பற்றியது.

இங்கே நாம் அவமதிப்புக் குற்றத்தை மட்டுமே அலசுகிறோம். நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறும் மனுதாரர்களைப் பற்றி இங்கே பேசவில்லை. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-ன் பிரிவு 2(சி) அவமதிப்புக் குற்றத்தை இப்படி வரையறுக்கிறது: எந்த நீதிமன்றத்தையும் பற்றி அவமதிப்பாகவோ, அதன் அதிகாரத்தைக் கீழிறக்கும் வகையிலோ பிரசுரித்தல் அல்லது செயல்படுதல்; எந்த நீதிமன்றச் செயல்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் அல்லது குறுக்கீடு ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்; அல்லது நீதி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுதல். இதில் எங்கேயாவது நீதித் துறையை விமர்சிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இல்லை. இந்திய நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி எதைச் சொல்வதற்கு அனுமதிக்கிறது என்பதே இந்தக் குறிப்பிட்ட சட்டக்கூறின் அடிப்படையாக அமைகிறது, அதாவது, விமர்சனத்தையும் அவதூறையும் மெல்லிய கோடே பிரிக்கிறது.


கருத்துச் சுதந்திரமும் அவமதிப்பும்

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1)(ஏ)-வின் படி கருத்துச் சுதந்திரமானது அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், சட்டக்கூறு 19(2)-ன் கீழ் இதற்குச் சில கட்டுப்பாடுகளும் உண்டு. சி.கே.டஃப்தாரி எதிர் ஓ.பி.குப்தா வழக்கில் (1971) ஏற்கெனவே இருக்கும் அவமதிப்புக் குற்றச் சட்டம் அதுபோன்ற நியாயமான கட்டுப்பாடே என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. அதனால், அவமதிப்பு வழக்கு தன் மீது பாயும் என்று அஞ்சிக்கொண்டு ஒருவர் நீதித் துறை மீதான தனது விமர்சனத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று அர்த்தமல்ல. 1968 வாக்கில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து லார்டு டென்னிங் எம்.ஆர். சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தார். நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பதற்கான வழிமுறை அவமதிப்புச் சட்டம் அல்ல என்றார் அவர். அது மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். மேலும் கருத்துச் சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்றார். விமர்சனத்தை வரவேற்ற அவர், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏனெனில், நீதிபதிகள் அவர்களின் அந்தஸ்தைப் பொறுத்தவரை, தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலையில் இருப்பதில்லை.

எதையெல்லாம் அனுமதிக்கலாம், எதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இந்திய நீதித் துறை கருதுகிறது? ஒரு நீதிபதியின் செயல்பாட்டுக்கு எதிராக ஒரு கருத்து கூறப்பட்டால், அது நியாயமானதா அல்லது தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கப்படும். ஒரு நீதிபதியைத் தனிப்பட்ட முறையில் குறிக்கும் வகையிலான கருத்து என்றால், அது நீதிபதியின் நிர்வாகத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கிறதா அல்லது வெறுமனே அவதூறானதா என்பதை நீதிமன்றம் மதிப்பிடும். ஒரு கூற்று நியாயமானதா, உண்மையானதா, அவதூறானதா அல்லது வெறுப்பு மிக்கதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். ஒரு நீதிபதியின் நீதித் துறை செயல்பாட்டைச் சாராமல், அவர் மீது தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் கருத்தானது அவமதிப்புக் குற்றமாகாது. சட்டத்தின் ஆட்சியில் நீதித் துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் பார்வையானது முக்கியமான செல்வாக்கு செலுத்துவதால், நீதித் துறையின் நிர்வாகத்தையோ நீதிமன்றங்களின் செயல்பாடுகளையோ பாதிக்கக்கூடிய கூற்றுகள் மட்டுமே அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும். நீதிபதியை அவரது அதிகாரத் தளத்தில் வைத்து அவர் மீது தொடுக்கப்படும் கருத்துத் தாக்குதல், நீதித் துறை மொத்தத்தையும் இழிவுபடுத்துகிறது. அது நியாயமான விமர்சனமாக இல்லாதபட்சத்தில், அந்த விமர்சனத்தை முன்வைத்தவர் மீது அவமதிப்புக் குற்றச் சட்டம் கடுமையாகப் பாயும்.

பல்வேறு எடுத்துக்காட்டுகள்

நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவுகள் 4, 5 ஆகியவை ஒரு அவமதிப்பு வழக்கில் ஒருவர் சார்ந்திருக்கும் தற்காப்பை, அதாவது நியாயமான கருத்தைப் போன்றதே. எஸ்.முகோல்க்கர் எதிர் இன்னாரென்று அறியாதவர் வழக்கில் (1978) நியாயமான விமர்சனத்திலிருந்து நீதித் துறையை ஒதுக்கிவிட முடியாது என்றும் நீதித் துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கீழிறக்கும் தீய நோக்கத்தின் மீது, அல்லது நீதித் துறையின் மீது தன் செல்வாக்கைச் செலுத்தும் தவறான நோக்கத்தின் மீது மட்டுமே அவமதிப்புச் சட்டம் பாயும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. சில சமயங்களில், நீதித் துறையின் மேம்பாட்டுக்காக அதன் செயல்பாடுகளைப் பற்றி முன்வைக்கப்படும் ஈவிரக்கமற்ற, நியாயமற்ற விமர்சனங்களைக்கூட நீதித் துறை பெருந்தன்மையுடன் அணுக வேண்டும் என்று இந்த வழக்கின் தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி எம்.எச்.பெக் கூறினார். அதே நீதிபதி பெக் ஓய்வுபெற்றபோது, ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கில் (1976) நீதிபதி எச்.ஆர்.கன்னா வெளிப்படுத்திய கருத்து வேறுபாடு சட்டத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை என்றும், நீதிபதி எச்.ஆர்.கன்னா பிரபலமடையவே அது உதவியது என்றும் கருத்துத் தெரிவித்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவில்லை.

இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் பி.ஷிவ ஷங்கர், உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்புகளைப் பற்றி இப்படி விமர்சித்திருந்தார்: “கேசவானந்தா போன்ற மஹா அதிபதிகள் மீதும், கோலக்நாத் போன்ற ஜமீன்தார்கள் மீதும் நாடெங்கும் யாரும் பரிவு காட்ட மாட்டார்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தைத் தவிர. கூப்பர் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் குறுக்கீட்டால்தான் வங்கித் தொழிலின் முதலைகளுக்கு நிவாரணமாகப் பெருந்தொகை கிடைத்தது.” மேலும், “சமூக விரோதிகள், அந்நியச் செலாவணி குற்றவாளிகள், மனைவிகளை எரித்தவர்கள், பிற்போக்குவாதிகளின் பெருங்கூட்டம் போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம்தான் சொர்க்கம்” என்றும் அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் சார்பில் 1988-ல் இதற்கு எதிர்வினையாற்றிய நீதிபதி சப்யாசாச்சி முகர்ஜி, இந்தக் கூற்றுகள் நீதித் துறை நிர்வாகத்துக்கு இடையூறு ஏதும் விளைவிக்கவில்லை என்று கருதினார். அமைச்சரின் சட்டப் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவருடைய மொழி கொஞ்சம் கடுமை குறைவாக இருந்திருக்கலாம் என்று மட்டும் அவர் கருதினார். “சமூக விரோதிகளும் குற்றவாளிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் பலனடைந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு சட்டத்தில் உள்ள தவறுகளும் சட்டமாக்கலில் உள்ள ஓட்டைகளும்தான் காரணம். இதுபோன்ற விமர்சனங்களால் நீதிமன்றங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது” என்று நீதிபதி சப்யாசாச்சி கூறினார். மறைமுக வரி செலுத்துவோர் சங்கம் எதிர் ஆர்.கே.ஜெயின் (2010) வழக்கில், உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தபடி, குறிப்பிட்ட ஒரு விமர்சனமானது உண்மையானதாகவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டும் செய்யப்பட்டு, அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிட்டால் அங்கே சத்தியமே அந்தக் கருத்தாளருக்குத் துணை நிற்கும்.

அருந்ததி ராய்க்கு என்ன நடந்தது?

ஆனால், அருந்ததி ராய் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டபோது, மேற்கண்ட முன்னுதாரணங்களெல்லாம் அவருக்கு உதவவில்லை. அருந்ததி ராயின் மீது குற்றம் சுமத்தித் தாக்கல்செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், அந்த மனுவுக்கு அருந்ததி ராய் அளித்த எதிர்வினைதான் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டது. அற்பமான மனு ஒன்றின் மீது உச்ச நீதிமன்றம் தேவையில்லாத அவசரம் காட்டியது என்று அருந்ததி ராய் எச்சரித்தார். சர்தார் சரோவர் அணை வழக்கில் உச்ச நீதிமன்றத்தைத் தான் கடுமையாக விமர்சித்ததால்தான் உச்ச நீதிமன்றம் இப்படி நடந்துகொண்டது என்றும் அவர் கூறினார். முக்கியத்துவமற்ற மனு ஒன்றைப் பொருட்படுத்தி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது என்ற கூற்று, உச்ச நீதிமன்றத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் மக்களுக்கு முன்னே அதன் நம்பகத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்றம் கருதியதால், அவமதிப்பு வழக்கில் அருந்ததி ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு கருத்தானது அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படுவதும் கருதப்படாததும் முற்றிலும் ஒவ்வொரு வழக்கின் உண்மைத் தன்மையையும் சூழலையும் சார்ந்தது. முடிவாக, மனசாட்சி மிக்க குடிமக்களின் ட்விட்டர் பதிவுகளும் கருத்துகளும் நீதித் துறையின் கண்ணியத்தை நிச்சயம் பாதிக்காது. லார்டு டென்னிங்கின் கூற்றுப்படி சொல்வதானால், இந்திய நீதித் துறை ‘வலுவான அடித்தளங்களைச் சார்ந்திருக்க வேண்டும்.’

- கௌதம் எஸ்.ராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

© தி இந்து, தமிழில்: தம்பி


CriticismContemptவிமர்சனம்அவமதிப்புமூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்நீதிமன்ற அவமதிப்புஉச்ச நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x