

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைப் பற்றிய ஊடகங்களின் இடைவிடாத பரபரப்புச் செய்திகள் தொடர்பில் ‘உணர்ச்சிகரமான ஒரு வழக்கு நாடகமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார் பிரபல பத்தியாளரான ஷோபா டே. தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் சேர்ந்துகொண்டுதான் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.
பிஹாரைச் சேர்ந்த சுஷாந்த், தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி, பின்பு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியவர். கடந்த எட்டாண்டுகளில் 12 படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், 2016-ல் அவர் நடிப்பில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வரலாற்றுத் திரைப்படம் இந்தியா முழுவதும் அவரைப் பிரபலப்படுத்தியது. சினிமா ரசிகர்களைத் தாண்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவரது பெயர் பரிச்சயமானது. திரைத் துறையில் மென்மேலும் சாதிப்பதற்கு வாய்ப்பிருந்த அந்த அர்ப்பணிப்பு கொண்ட 34 வயது இளைஞரின் தற்கொலை துயரமானது.
இரண்டு மரணங்கள்
கடந்த ஜூன் 14 அன்று மும்பையிலுள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துகிடந்தார் சுஷாந்த். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியான் வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார். மேலாளர் திஷாவின் மரணம் ஊடகங்களால் பெரியளவில் கவனிக்கப்படவில்லை என்றபோதும், அவரின் மரணத்தோடு தன்னை இணைத்துப் பேசுவதைக் குறித்து சுஷாந்த் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதுகுறித்து வழக்கறிஞரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ‘சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான அபிப்ராயங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் சுஷாந்த். அடிக்கடி தனது பெயரை இணையத்தில் தேடி தன்னைப் பற்றி என்னென்ன எழுதப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர் அவர். இறப்பதற்கு முன்பு வலியில்லாத தற்கொலை, மனச் சிதைவு ஆகிய வார்த்தைகள் குறித்து அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார் மும்பை காவல் ஆணையர் பரம் பீர் சிங்.
தற்கொலைக்குக் காரணம் மன உளைச்சல் என்று கருதிய மஹாராஷ்டிர காவல் துறை, அது தொடர்பில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறது. என்றாலும், எவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யவில்லை. அதே நேரத்தில், சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பெயரில் பிஹார் காவல் துறை வழக்குப் பதிவுசெய்ததோடு, நான்கு பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் மும்பைக்கு அனுப்பிவைத்தது. பிஹாரிலிருந்து இப்படிச் சென்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரியை உடனடியாகத் தனிமைப்படுத்தியது மஹாராஷ்டிர அரசு. சிபிஐ இவ்வழக்கைக் கையிலெடுத்துக்கொண்ட பின்னரே, வினய் திவாரி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
தங்களது விசாரணைக்கு மஹாராஷ்டிர காவல் துறை ஒத்துழைக்கவில்லை என்று பிஹார் அரசு குற்றஞ்சாட்டியதும் இவ்வழக்கு இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்தது. குறிப்பாக, மஹாராஷ்டிர பாஜகவினரால், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரே குறிவைக்கப்பட்டார்.
திஷா இறந்துபோவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது நண்பர் ரோஹன் ராய் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த விருந்தில் ஆதித்யாவும் கலந்துகொண்டார் என்பதால், திஷாவின் கொலையில் ஆதித்யாவுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியது மஹாராஷ்டிர பாஜக. ‘சுஷாந்த், திஷா இருவருமே கொல்லப்பட்டுள்ளனர், திஷா வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுஷாந்த் இறப்பதற்கு முதல் நாள் ஆதித்ய தாக்கரேவும் மாடலிங் நடிகை தினோ மௌரியாவும் சேர்ந்து அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்’ என்று அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டினார் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயண ராணே. அதை மறுத்திருக்கும் தினோ, ‘உண்மையைப் பேசுங்கள்’ என்றும் ‘என்னை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்?’ என்றும் ராணேவைக் கேட்டுக்கொண்டிருந்தார். மஹாராஷ்டிரத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக வளர்ந்துவரும் ஆதித்யாவை இந்த வழக்கோடு தொடர்புபடுத்துவதன் மூலம் அவரது நற்பெயரைக் குலைக்க பாஜக திட்டமிடுகிறது என்கிறார்கள் சிவசேனை ஆதரவாளர்கள்.
சிவசேனை, காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க இந்த வழக்கை எந்தெந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அத்தனையும் முயன்று பார்த்தது பாஜக என்றார்கள் சிவசேனை கட்சியினர். ‘எனக்கு பாலிவுட்டில் எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பழகுவது குற்றமா என்ன? இது மிகவும் மட்டரகமான அரசியல்’ என்று விளக்கம் அளித்தார் ஆதித்ய தாக்கரே.
சில பிரபலமான படத் தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதுதான் சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று திரையுலகின் ஒரு பிரிவினரிடையே பேச்சு இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களில் சுஷாந்துடன் இணைந்து நடித்துவந்தவரும் சுஷாந்தின் முன்னாள் தோழியுமான அங்கிதா லோகண்டேவுடனான அவரது உறவு, மாடலும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் அறிமுகத்துக்குப் பிறகு முறிந்துபோனது குறித்தும் விசாரிக்கப்பட்டுவந்தது. சுஷாந்திடமிருந்து ரூ.18 கோடி அளவில் ரியா சக்ரவர்த்தி மோசடி செய்திருக்கிறார் என்றும், அவரும் அவரது குடும்பத்தினருமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையுமேஎ மறுத்தார் ரியா. சுஷாந்துடன் நெருக்கமான உறவில் இருந்த அவருக்கும் சுஷாந்துக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலும் சுஷாந்தின் மனவுளைச்சலுக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
அரசியல் சாயம்
சுஷாந்தின் முன்னாள் தோழியான அங்கிதாவும் சுஷாந்தின் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு, ரியாவின் மீது இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். ஆனால், சுஷாந்தின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டைத் தங்களது புகாரிலோ விசாரணையிலோ தெரிவிக்கவில்லை என்கிறார்கள் மஹாராஷ்டிரக் காவல் துறையினர். இன்னொருபக்கம் கங்கணா ராவத், சேகர் சுமன் போன்ற சில நடிகர்கள், பாலிவுட்டில் நெருங்கிய வட்டத்துக்குள்ளேயே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், இவ்வழக்கின் விசாரணையை உத்தவ் தாக்கரேவும் ஆதித்ய தாக்கரேவும் தடுக்கிறார்கள் என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரினர்.
எது எப்படி என்றாலும், மும்பையில் நடந்த ஒரு தற்கொலை குறித்து விசாரிப்பதற்கு மஹாராஷ்டிர காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது; அப்படி இருக்கும்போது, பிஹாரிலிருந்து விசாரணைக் குழுவை அனுப்பிவைக்க வேண்டிய அவசியம் என்ன?; சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிஹாரிலும், ஜார்கண்டிலும் வீதிகளில் அவருடைய சுவரொட்டியுடன் முழக்கங்கள் முன்வைக்கப்பட அரசியலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்விகள் தவிர்க்கவியலாதவை. தற்போது, சுஷாந்த் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கின்றன.
ஒரு இளம் திரைக்கலைஞரின் தற்கொலையில் காதல், துரோகம், தொழிற்போட்டி என்று பல்வேறு ஊகங்கள் எழுவது இயல்பானதுதான். ஆனால், இப்போது வழக்கத்துக்கு மாறாக அந்த மரணத்துக்கு அரசியல் சாயமும் பூசப்பட்டிருக்கிறது. கரோனோ நோய்த்தொற்றால் ஒட்டுமொத்த நாடும் திண்டாடிவரும் நிலையிலும்கூட, ஒரு நடிகரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய நம் கட்சித் தலைவர்கள் தயங்கவில்லை என்பதுதான் கொடுமையானது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in