Published : 21 Aug 2020 07:42 am

Updated : 21 Aug 2020 07:42 am

 

Published : 21 Aug 2020 07:42 AM
Last Updated : 21 Aug 2020 07:42 AM

பிஹார் ஏன் பின்தங்கியிருக்கிறது?

bihar

ஷைபல் குப்தா

கரோனா பெருந்தொற்றை அடுத்து, இந்திய அரசால் பொருளாதாரத்துக்கு ஊக்கத் தொகுப்பு ஒன்று அறிவிக்கப்பட்டது இல்லையா, அது பெருமளவில் உற்பத்தி - சேவைத் துறைகளுக்கான மேலாண்மை ஊக்குவிப்பு நடவடிக்கையாகவே இருக்கிறது. இதனால் ஏதேனும் பலன் இருக்குமென்றாலும்கூட, அது தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இப்போது ஒரு கேள்வி எழுகிறது: இந்த நிதித் தொகுப்பின் பலன்களை மற்ற மாநிலங்கள், குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்கள் ஏன் இழக்க வேண்டும்? ஏனென்றால், வரலாற்றுச் சுமையினாலும் இந்த மாநிலங்கள் கீழே இருக்கின்றன.

பிஹார் கதை


சில ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்டின் அப்போதைய நிதித் துறைச் செயலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாநிலத்தின் அமைச்சர்கள் தங்கள் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையை, தங்கள் சொந்த வங்கிக்கணக்குக்கு மறைமுகமாக மாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். அரசாங்கப் பணத்தை இப்படித் தனதாக்கிக்கொள்ளும் செயலானது, ஜார்க்கண்டில் மட்டுமல்ல; ஏனைய இந்தி மாநிலங்களிலும் பரவலாகக் காணப்படுவதுதான். இந்தக் கலாச்சாரத்தைக் கிழக்கிந்திய கம்பெனி எங்கெல்லாம் ‘ஜமீன்தாரி வேளாண் முறை’யிலான வேளாண் உற்பத்தி முறைமையை அறிமுகப்படுத்தியதோ அங்கெல்லாம் - குறிப்பாக கிழக்கிந்திய மாநிலங்களில் - காணலாம். இந்த மாநிலங்கள் சுதந்திரத்துக்குப் பிறகு போதுமான வளர்ச்சியைப் பெறத் தவறிவிட்டன.

இதற்கு மாறாக, ‘ரயத்வாரி வேளாண் முறை’யைக் கடைப்பிடித்த தென்னிந்திய மற்றும் மேற்கத்திய மாநிலங்கள், பொருளாதார வளர்ச்சியைப் பெற்றன. இந்த மாநிலங்களில் நிலப்பிரபுத்துவத்தின் பிடி ஒப்பிடத்தக்க அளவில் குறைவு, அதிகார வர்க்கமும் பண்ணையாட்களும் கூட்டு சேர்ந்து ஒடுக்க முடியாதபடிக்குச் சமூக சமத்துவத்துக்கான தனித்த இயக்கங்கள் தோன்றி, சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது.

இதனால், வேளாண்மை மூலமாகவும் தொழில் மூலமாகவும் உற்பத்தி பெருகி, இந்த மாநிலங்களில் உபரி ஏற்பட்டு அதனால் முதலீடுகளும் பெருகின. எடுத்துக்காட்டாக, ஆந்திரத்தில் கம்மவார்கள் விவசாயத்தில் தங்களுக்குக் கிடைத்த உபரியை முதலில் புகையிலை சாகுபடி மற்றும் அது சார்ந்த தொழில்களிலும் பிறகு திரைப்படத் தயாரிப்புகளிலும், பிந்தைய காலத்தில் அறிவுசார் தொழில்நுட்பத் துறையிலும் முதலீடுசெய்தார்கள். பிறகு, அவர்களைப் பின்பற்றி ரெட்டிகள், காப்புகளும் தங்களின் அபாரமான தொழில்முனைவுத் திறன்களைக் காட்டினார்கள். இப்படியே தமிழ்நாட்டின் செட்டியார்களும் நாடார்களும் பிறரும் வணிகத்திலும், வியாபாரத்திலும், தொழில்துறையிலும் முதலீடுசெய்து, செல்வம் சேர்த்தார்கள். இதே கதை கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் திரும்பத் திரும்ப நிகழ்ந்தது. இதில் தனிச்சிறப்பு மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள், கர்நாடகத்தின் மைசூர் மகாராஜா, மஹாராஷ்டிரத்தின் லக்ஷ்மண் ராவ் கிர்லோஸ்கர், குஜராத்தின் அம்பாலால் சாராபாய்.

ரயத்வாரி மாநிலங்களின் ஏற்றம்

வளர்ச்சியின் மூலமும், தங்களுக்கென்று சொந்தமான அமைப்புரீதியிலான லட்சிய நோக்கை உருவாக்குவதன் மூலமும் ரயத்வாரி மாநிலங்கள் தங்களுக்கே உரிய பாணியில் ஏற்றம்பெற்றன. எடுத்துக்காட்டாக, 1925-ல் அப்போதைய மைசூரு மாநிலத்துக்கான ஐந்தாண்டுத் திட்டம் எம்.விஸ்வேஸ்வரய்யாவால் உருவாக்கப்பட்டது; அது மைசூரை ஆண்ட மன்னர் ஜெய சாமராஜ உடையாரின் ஆதரவைப் பெற்றது. லட்சிய நோக்கை உருவாக்குவது மட்டுமல்லாமல், தங்கள் சமூகச் செயல்திட்டத்தை வழிநடத்த வல்லுநர்களையும் மாநிலங்கள் அடையாளம் கண்டன. எடுத்துக்காட்டாக, எம்.விஸ்வேஸ்வரய்யாவை உடையார்கள் ஆதரித்தனர், பி.ஆர்.அம்பேத்கரை மூன்றாவது சாயாஜி ராவ் கெய்க்வாட் ஆதரித்தார்; தனது நிதி அமைச்சராக ஆக்குவதற்காக மேற்படிப்புக்கு அம்பேத்கரை கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார் கெய்க்வாட்.

தங்கள் செயல்திட்டங்கள் வெற்றிபெறுவதற்காக நிதி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். பி.பி.சீதாராமையாவால் தொடங்கப்பட்ட ஆந்திர வங்கி, பரோடா மகாராஜா உருவாக்கிய பரோடா வங்கி, டி.எம்.ஏ.பாய் நிறுவிய சிண்டிகேட் வங்கி ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவற்றுக்கு நிதியுதவி வழங்கியவை அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள பிராந்திய வர்த்தக அமைப்புகள். தங்கள் அக்கறைகளை இந்த அமைப்புகள் வலுவாக வெளிப்படுத்தின. சுதந்திர இந்தியாவில் அவர்களுக்காகச் செயல்பட நிதியமைச்சர்கள் பலர் இருந்தார்கள் என்பது அவர்களின் அரசியல் செல்வாக்கு எவ்வளவு வலுவானது என்பதை உணர்த்தும்.

ஜமீன்தாரி மாநிலங்களின் சீரழிவு

இதற்கு மாறாக, நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மோசமான நிர்வாகமே காணப்பட்டது. சுதேசி இயக்கத்தின் பிறப்புக்கு அந்தப் பகுதி காரணமாக இருந்தாலும், அங்குள்ள குடிமைச் சமூகத்துக்குத் தனியான பார்வையோ முன்னேற்றத்துக்கான உத்தியோ கிடையாது. அந்தப் பகுதியில் தொழில்கள் வளர முடியாமல் தடுத்ததன் மூலம், அங்குள்ள பூர்வகுடி தொழில்முனைவோர்களை கிழக்கிந்திய கம்பெனி அடியோடு அழித்தது. தொழில் தொடங்குவதற்கு யாராவது முயன்றாலும் அவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தார்கள். ஏனெனில், அந்தப் பகுதியில் முதலீட்டுக்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்கெனவே பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றியிருந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம், கனிமச் சுரங்கத்திலிருந்து தொலைதூரத்துக்குக் கொண்டுசெல்லும் போக்குவரத்துச் செலவுக்கு மத்திய அரசே மானியம் தரும் என்ற கொள்கை, கனிம வளம் நிரம்பிய இந்தப் பிரதேசத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கென்று இருந்த ஒருசில வாய்ப்புகளையும் அடியோடு அழித்துவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது வங்காள மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசமாக பிஹார் இருந்தது. சமூக இயக்கங்கள் அங்கு குறைந்த அளவே முன்னெடுக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் இரண்டு அடையாளங்கள்தான் இருந்தன – சாதி அடையாளம் அல்லது தேசிய அடையாளம். துணை தேசிய அடையாளமான மாநில அடையாளம் முற்றிலுமாக அங்கு காணப்படவில்லை. பிஹாரின் விவசாயிகள் இயக்கம் ஜமீன்தாரி முறைக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டன.

பிஹார் கிட்டத்தட்ட ஒருபோதும் உருப்படியான நிலச் சீர்திருத்தங்களைப் பார்த்ததில்லை. பொருளாதாரரீதியில் வெற்றிகரமான மாநிலங்கள் பலவும் சுதந்திரமடைந்த சில காலத்துக்குள் நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டன. பிரிட்டிஷ்காரர்களின் சிறு விவசாயிகளின் நிலங்களைச் சேர்த்து பெரும் பண்ணையாகச் சாகுபடிசெய்யும் முறையையோ, பிரெஞ்சுக்காரர்களின் விவசாயத் தொழில்முனைவு முறையையோ, ஜெர்மனியின் ஜங்க்கர் முதலாளித்துவ முறையையோ அல்லது இந்த மூன்றின் கலவையையோ அந்த மாநிலங்கள் பின்பற்றின. பல்வேறு சாதிகளையும் உள்ளடக்கிய சமூக இயக்கமும், மாநில உணர்வும் இல்லாத நிலையில், பொதுப் பணத்தைச் சுருட்டுவதுதான் பிஹாரில் காலங்காலமாக மேல்தட்டில் இருந்துவரும் சமூகத்தின் ஒரே செயல்திட்டமாக இருந்தது. பிஹாரில் பெரும்பாலான மேம்பாட்டுப் பணிகள், ஊழலில் சிக்கிச் சீரழிந்திருக்கின்றன. வேலை நடந்தபாடில்லை என்றாலும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கணக்கெழுதி சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்றால், ஏனைய மாநிலங்களில் ஊழல் இல்லையா? இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அங்கே வேலைகள் செய்யப்பட்டிருக்கும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றோருக்கு வேலை முடிந்த பிறகு நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் போய்ச் சேரும். பிஹாரில் வளர்ச்சி சார்ந்த குடிமைச் சமூகம் உருவாகவில்லை. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, திட்டப்பணிகளில் பிஹாரின் மேல்தட்டு வர்க்கத்தினர் ஆதாயம் தேடுவதற்கு அரசு அதிகாரிகளாவது ஒன்றே வழியாக இருந்தது. பிஹாரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. அவர்கள் பெருமளவில் சொத்து சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் சாதியையோ தங்கள் பகுதியையோ சேர்ந்தவர்களை வெற்றிகரமாக அதிகாரத்தரப்புக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஆக, பிஹார் போன்ற மாநிலத்தை மேம்படுத்தவும், அதன் வரலாற்றுச் சுமையிலிருந்து அதை விடுவிக்கவும் அந்த மாநிலத்துக்கென்றே நிதியுதவியும் சமூகரீதியிலான ஊக்கமும் தேவை.

- ஷைபல் குப்தா, பிஹாரைச் சேர்ந்த சமூகவியலாளர்.


Biharபிஹார்பிஹார் ஏன் பின்தங்கியிருக்கிறதுகரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x