Published : 20 Aug 2020 06:51 am

Updated : 20 Aug 2020 06:51 am

 

Published : 20 Aug 2020 06:51 AM
Last Updated : 20 Aug 2020 06:51 AM

இந்திய மதச்சார்பின்மையின் எதிர்காலம் என்ன?

secularism-in-india

ராஜீவ் பார்கவா

நமது உரையாடலின் பொதுவெளியானது மதச்சார் பின்மையின் தோல்வி அல்லது மரணம் தொடர்பில் ஒருபுறம் வெற்றிப் பெருமிதம் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

1950-ல் நிறுவப்பட்ட இந்தியக் குடியரசின் குழந்தையாகிய எனது ஒரு பாதிப் பகுதி அந்தத் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால், இன்னொரு பாதிப் பகுதியோ, இந்தத் தருணத்தை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டி, இந்தக் கேள்வியைக் கேட்கிறது: இந்தியாவில் எப்போதாவது ஏதாவது மரணித்திருக்கிறதா? அமைதியாக்கப்பட்டிருக்கிறது; தற்காலிகமாகத் தலைமறைவாகப் போகச்செய்திருக்கலாம்; வேறு பெயருக்குள் வேறு உடலுக்குள் புலம்பெயர்ந்திருக்கும். ஆனால், முற்றிலும் அழிந்துபோயிருக்கிறதா? இல்லை!


மூன்றாண்டுகளுக்கு முன்பு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘அரசமைப்புரீதியிலான மதச்சார்பின்மையா அல்லது கட்சி அரசியல் மதச்சார்பின்மையா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பொது விவாதங்கள், அரசியல் விவாதங்கள் ஆகியவற்றின் மையப்பொருளாக இருந்துவருவதால் மதச்சார்பின்மையானது நம் நாட்டில் பெரிய விலை கொடுத்திருக்கிறது என்று அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். மதச்சார்பின்மை தொடர்ந்து தவறாகவும் மோசமாகவும் இங்கு பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. ஆக, அரசமைப்புரீதியிலான மதச்சார்பின்மையிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக, மோசமாகப் பயன்படுத்தப்பட்ட நடைமுறையிலுள்ள மதச்சார்பின்மையை நான் ‘கட்சி அரசியல் மதச்சார்பின்மை’ என்று குறிப்பிட்டேன்.

அரசமைப்பு மதச்சார்பின்மை

அரசமைப்பு மதச்சார்பின்மையைக் குறைந்தபட்சம் இரண்டு அம்சங்களைக் கொண்டு அடையாளம் காணலாம். முதலாவது, எல்லா மதங்கள் மீதும் மதிப்பு செலுத்துதல். சில நாடுகளின் மதச்சார்பின்மையைப் போலல்லாமல், நம் நாட்டின் மதச்சார்பின்மை கண்மூடித்தனமாக மதங்களை எதிர்க்கவில்லை, மாறாக மதங்களை மதிக்கிறது. மேலும், ஒற்றை மதங்களை மட்டும் கொண்டுள்ள நாடுகளின் மதச்சார்பின்மைகளைப் போலல்லாமல், இந்தியா ஒரு மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களையும் மதிக்கிறது. எனினும், சமூகத்திலிருந்து மதத்தைப் பிரிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பதால், பி.ஆர்.அம்பேத்கர் கூறியபடி, ‘மதக்கோட்பாடு, நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் இந்த மதச்சார்பின்மை செல்வாக்கு செலுத்தப்பட முடியாது. அதே சமயம், மதத்தின் மீது மதிப்பு கொள்வதுடன் அதை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியதும் அவசியம்.’

ஆகவே, மதத்தை அதற்கு உரிய மரியாதையுடன் நமது நாடு தனியே விட வேண்டியதுடன் எப்போதெல்லாம் மதத்தின்பேரில் மதக்குழுக்கள் வகுப்புவாதத்தையும் பாகுபாட்டையும் ஏற்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் தலையிட வேண்டியதும் அவசியம். எனவே, இந்திய அரசு மதங்களிலிருந்து முழுமையாக விலகிவிடவில்லை; எல்லா மதங்களிடமிருந்தும் குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்கிறது. இது அரசமைப்பு மதச்சார்பின்மையின் இரண்டாவது அம்சம். எடுத்துக்காட்டாக, தீண்டாமையை அதனால் பொறுத்துக்கொள்ள முடியாது; அல்லது எல்லா மதங்களின் சட்டங்களையும் அப்படியே விட்டுவிட முடியாது. அதேபோல், மத அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு நிதியுதவியும் அளிக்கலாம். இப்படியாக, எப்போது மதங்களிடம் உறவு வைத்துக்கொள்வது, எப்போது விலகியிருப்பது என்பதையெல்லாம் நம் அரசு முடிவெடுக்கும்; இவற்றுள் எதைச் சார்ந்திருந்தால் நமது அரசமைப்பு உத்தரவாதப்படுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள் உறுதிப்படுமோ அவற்றை நம் அரசு தேர்ந்தெடுக்கும். இப்படித்தான் நம்முடைய அரசமைப்பு மதச்சார்பின்மை நம்புகிறது.
ஆனால், இந்தவிதமான அரசமைப்பு மதச்சார்பின்மையை அரசாங்கங்களால் மட்டுமே வளர்த்தெடுக்க முடியாது. பாரபட்சமற்ற நீதித் துறை, விழிப்புணர்வு மிக்க ஊடகங்கள், குடிமைச் சமூகச் செயல்பாட்டாளர்கள், எச்சரிக்கையுணர்வுடன் இருக்கும் குடிமைச் சமூகம் என எல்லாத் தரப்புகளின் கூட்டு முயற்சியும் இதற்குத் தேவை.

கட்சியரசியல் மதச்சார்பின்மை

கட்சியரசியல் சார்ந்த மதச்சார்பின்மை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. இது, ‘மதச்சார்பற்ற சக்திகள்’ என்று சொல்லப்படுபவை உட்பட அனைத்துக் கட்சிகளாலும் பின்பற்றப்படும் தீங்கான கொள்கையாகும். இந்த மதச்சார்பின்மையானது அதன் மையத்திலிருந்து அனைத்து விழுமியங்களையும் விரட்டியடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் சந்தர்ப்பவாதத்தைக் கொண்டுவந்து வைத்தது. உடனடித் தேர்தல் பலன்களுக்காக மதக் குழுக்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வதானது இந்த சந்தர்ப்பவாத அரசியலின் தாரக மந்திரமானது. சுதந்திரம், சமத்துவம் அடிப்படையிலான சீர்திருத்தத்தை அது கண்டுகொள்ளவில்லை. ஆக, இது சந்தர்ப்பவாத மதச்சார்பின்மை என்றானது. பாபர் மசூதி/ ராமர் கோயில் பூஜையோ, ஷா பானு வழக்கோ எதுவென்றாலும், மதவுணர்வைத் தூண்டிவிடுவதிலும், சார்ந்திருப்பதிலும் இந்த சந்தர்ப்பவாதம் பங்குகொண்டிருக்கிறது. ஆக, இந்தக் கட்சியரசியல் மதச்சார்பின்மை மாறிமாறி சிறுபான்மை, பெரும்பான்மை மதங்களின் வெறிபிடித்த உதிரிக் குழுக்களுடன் நெருக்கம் காட்டிவந்தது. ஆக, இந்தச் சட்டகம் ஒரு பெரும்பான்மைவாதக் கட்சியால் ஆட்கொள்ளப்படுவதற்கு ஏற்றவிதத்தில் இருந்தது.

இன்று இந்தியாவின் அரசமைப்பு மதச்சார்பின்மையைக் கட்சியரசியல் மதச்சார்பின்மை விழுங்கிவிட்டிருக்கிறது; எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், நீதித் துறை ஆகியவை எந்த வகையிலும் உதவிக்கு வரவில்லை. எனினும், அரசமைப்புரீதியிலான மதச்சார்பின்மையின் மரணத்தை அறிவிக்க நான் தயங்குகிறேன்.

மதச்சார்பின்மையின் எதிர்காலம் என்ன?

இந்தியா ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பன்மைத்துவ மரபுகளைக் கொண்டது, அதை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மாறாக, நான் ‘பின்னடைவு’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுப்பேன். மதங்களுக்கிடையே இணக்கம் பேணுதல் என்ற அரசியல் செயல்திட்டத்துக்குத் திடீரென்று வேகத்தடைகள் இடப்பட்டிருக்கின்றன. அது திடீரென்று ஒரு இடத்தில் வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது, அதில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்றால், இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இருக்கிறதா?

பொதுவாக, மதச்சார்பின்மை குறித்த உரையாடலையும் நடைமுறையையும் தொடங்கிவைத்த இரண்டு முக்கியமான நகர்வுகளை நான் குறிப்பிடுவேன். ஒன்று, நீதிக்காக அரசியல்ரீதியிலான செயல்திட்டத்திலிருந்து சமூகரீதியிலான செயல்திட்டத்தை நோக்கிக் கவனம் செலுத்தியது. இரண்டாவது, மதங்களுக்கு இடையிலான விவகாரங்களிலிருந்து மதத்தின் உள்விவகாரங்கள் மீது கவனம் செலுத்தியது. அரசு முன்னெடுத்த அரசியல் செயல்திட்டமான மதச்சார்பின்மையும், அதன் அரசமைப்புரீதியிலான வடிவமும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்ட நிலையில், கீழிருந்து உருவாகும் அமைதியான, ஜனநாயகபூர்வமான மதச்சார்பின்மையானது நமக்கு ஒரு விசாலமான பார்வைக் கோணத்தைத் தரலாம். அதாவது, இனி அவரவர் மதங்கள் குறித்த, மிகவும் அவசியமான விமர்சனப் பார்வையும் சீர்திருத்தமும் பெரும் பங்காற்ற முடியும். இப்படியாக, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான சமத்துவம், சுதந்திரம், நீதி போன்றவற்றிலிருந்து மதங்கள் விலகிச்செல்லாமல் நாம் பார்த்துக்கொள்ள முடியும்.

ஒற்றுமையாக வாழ்வதற்கான புதிய வழிமுறைகளை உள்ளுக்குள்ளேயே நாம் ஒவ்வொருவரும் தேடலாம். மதச் சகிப்புத்தன்மையின் பழைய, தோல்வியடைந்த வழிமுறைகளை மீட்டெடுப்பதல்ல இங்குள்ள பிரச்சினை. மதச் சகிப்புத்தன்மை வெற்றிபெறாததால்தான் மதச்சார்பின்மை என்ற அரசியல் செயல்திட்டமே உருவானது. சமூக - மத பரஸ்பரத்தன்மையின் புதிய வடிவங்கள்தான் தற்போதைய தேவை. ஆக, மதத்தைப் பற்றிய விமர்சனபூர்வமான மதிப்பீடு அதற்குள்ளிருந்து பகுதியளவாவது வர வேண்டியது அவசியம். வெளியிலிருந்து வரும் விமர்சனபூர்வமான மதிப்பீடு பலனளிக்காது. இதுபோன்ற போராட்டங்களுக்கு அறிவுஜீவிகளின் ஆதரவும் அவசியம் தேவை. ஆனால், இந்த ஆதரவு சக்தி மிகுந்ததாக இருக்க வேண்டுமென்றால், இந்த அறிவுஜீவிகள் எந்த இடத்தில் பிறந்தார்களோ அந்த இடம், அதற்கு வெளியில் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றின் கலாச்சார மரபுகளின் பல்வேறு வகைகளைப் பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் குரலுக்கு சக்தி இருக்கும், மற்றவர்கள் அந்தக் குரலை அப்போதுதான் கேட்பார்கள்.

- ராஜீவ் பார்கவா, பேராசிரியர், முன்னேறிவரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம், புதுடெல்லி.

© தி இந்து, தமிழில்: ஆசை


Secularism in indiaஇந்திய மதச்சார்பின்மைஇந்திய மதச்சார்பின்மையின் எதிர்காலம் என்னஅரசமைப்பு மதச்சார்பின்மை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x