Published : 18 Aug 2020 08:29 AM
Last Updated : 18 Aug 2020 08:29 AM

கல்விக் கொள்கை: கடந்து வந்த பாதை

சுதந்திர இந்தியாவின் முதன்மையான கவனங்களில் ஒன்றாகக் கல்வித் துறையும் இருந்தது. நாட்டின் முதலாவது கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்தார். ஜவாஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் ஐஐடி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக் குழு, என்சிஇஆர்டி என்று இந்தியாவின் நவீன கல்வி வளர்ச்சிக்கு அடித்தளங்கள் இடப்பட்டன.

1964-ல் அமைக்கப்பட்ட கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கல்வி ஆணையம் தன்னுடைய பரிந்துரைகளை 1966-ல் அளித்தது. 19 உறுப்பினர்கள், 20 ஆலோசகர்களை உள்ளடக்கியதாக இந்த ஆணையம் அமைந்திருந்தது. 9,000 நேர்முகங்கள் மற்றும் 2,400 கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, தன்னுடைய பரிந்துரையை கல்வியமைச்சர் எம்.சி.சாக்லாவிடம் வழங்கியது. எம்.சி.சாக்லா பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவரும்கூட. கோத்தாரி ஆணைய அறிக்கையின் முதல் வாசகம் ‘ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது’ என்று தொடங்கியது.

1968-ல் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் முதலாவது தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டார். அரசமைப்புச் சட்டத்தின்படி பதினான்கு வயது வரைக்கும் அடிப்படைக் கல்வி அளிக்கப்பட வேண்டும், தேசிய வருமானத்தில் 6% கல்வித் துறைக்குச் செலவழிக்கப்பட வேண்டும் ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்.

1986-ல் ராஜீவ் காந்தி ஆட்சியில் நாட்டின் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்தியது. பின்தங்கிய வகுப்பினருக்கான பிரத்யேகக் கல்வி நிலையங்களை உருவாக்கவும் இந்தக் கொள்கை காரணமாக அமைந்தது. திறந்தவெளிப் பல்கலைக்கழக முறையையும் இந்தக் கல்விக் கொள்கை ஊக்குவித்தது.

1986 கல்விக் கொகையானது 1992-ல் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் சற்றே மாறுதலுக்கு உள்ளானது. 2005-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கல்விக் கொள்கையில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

2020 ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020 ஆனது, 2019-ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிட்ட வரைவின்படி அமைந்தது. 10 2 முறைக்கு மாறாக 5 3 3 4 முறை உள்ளிட்ட முந்தைய கல்விக் கொள்கையிலிருந்து முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x