Published : 16 Aug 2020 07:38 AM
Last Updated : 16 Aug 2020 07:38 AM

கும்பம் தாளித்தல்

சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறவர்களை ஊர் மக்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கும் அவலங்கள் ஆங்காங்கே நடந்தேறுகின்றன. மனிதர்களையே கொள்ளை நோயாகப் பார்ப்பதன் வெளிப்பாடுதான் இது. இதையொட்டி, என் கிராமத்தில் கடைப்பிடிக்கும் ‘கும்பம் தாளித்தல்’ எனும் சடங்கு நிகழ்வு ஞாபகம் வருகிறது.

தங்கள் ஊருக்கு அம்மை, காலரா போன்ற கொள்ளைநோய்கள் வராமல் தடுப்பதற்காக ‘கும்பம் தாளித்தல்’ சடங்கைச் செய்வார்கள் ஊர் மக்கள். அதாவது, பயன்பாடில்லாமல் உடைந்துகிடக்கும் ஆட்டுக்கல் (உரல்), அம்மிக்கல், உலக்கை, முறம், விளக்குமாறு போன்றவற்றை ஒரு வண்டியில் போட்டு ஏற்றிக்கொண்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டுபோவார்கள். ஊர்வலத்தின் முன்னால் அந்தக் கிராமப் பூசாரி வாய்க்கட்டு கட்டிக்கொண்டு, மணியடித்துக்கொண்டே நடக்க, ஆண்களும் பெண்களும் குலவை கொட்டிக்கொண்டே பின்னால் போவார்கள். ஊர்வலம் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும். உடனே, அந்த வீட்டிலுள்ள சிதிலமடைந்த பழைய பொருட்களைக் கொண்டுவந்து வண்டியில் ஏற்றுவார்கள். அந்த ஊர் முழுக்க ஊர்வலம் சுற்றிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, ஊருக்கு வெளியே உள்ள எல்லைப் பகுதிக்குக் கொண்டுபோய் பூஜைசெய்து பொருட்களைக் கொட்டிவிட்டுத் திரும்புவார்கள். இதனால், கொள்ளைநோய்களை ஊருக்கு வெளியே விரட்டிவிட்டதாகவும், இனி எல்லை தாண்டி ஊருக்குள் வராது என்பதாகவும் நினைத்துக்கொள்வது கிராமத்து ஐதீகம்.

‘உன்னையெல்லாம் கும்பம் தாளிச்சுடணும்’ என்கிற சொலவடையின் உட்கரு இதுதான். ‘கும்பம் தாளித்தல்’ சடங்கில் பல வடிவேல் காமெடிகள் நடக்கும். பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே போகும் ஊர்வலத்தைத் தங்களது கிராமத்து எல்லைகளில் கொட்டுவதற்கு அந்தக் கிராமத்துக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கும்பலாகத் திரண்டுவந்து, தங்களது வீடுகளில் இருந்த சாமான்களையெல்லாம் ஏற்றி, குலவை கொட்டிக்கொண்டே இன்னொரு கிராமத்து எல்லைகளைக் கடப்பார்கள். இப்படியே ஊர்வலம் போய்க்கொண்டே இருக்கும். யாரும் இல்லாத ஒரு தருணம் பார்த்து, ஆளரவமற்ற ஒரு எல்லையில், சடாரென அந்தப் பொருட்களையெல்லாம் கொட்டிவிட்டு, ஒரே ஓட்டமாய்த் தங்களது ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். அதன் பிறகு, கும்பம் தாளித்துக் கொட்டப்பட்ட அந்த எல்லைப் பகுதிக்காரர்கள், இதேபோல பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்தப் பொருட்களைத் தங்களது வண்டியில் ஏற்றிக்கொண்டு வேறு எல்லைகளில் கொண்டுபோய்க் கொட்டுவார்கள்.

இதிலும் சாதிய அதிகாரங்களும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன என்பது தனியாக ஆய்வுசெய்ய வேண்டிய அளவிலான விஷயம். இதுபோன்ற காலனிய, சாதிய மனோபாவத்தில் இயங்கும் கிராமங்கள், கடந்த 10 - 20 வருடங்களாக அதிலிருந்து சரிந்து, தங்களது ஆதிக்க முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில், கிராமிய அமைப்பின் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து, கம்பீரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், கரோனாவும் ஊரடங்கும் மீண்டும் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது.

வேலையின்மையிலும், தங்களது வசிப்பிடத்துக்கு வாடகை, மின்வரி போன்ற மிக அத்தியாவசியச் செலவுகளுக்குக்கூட வசதியில்லாத கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், பசி, பட்டினி, தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரக்கூட ஆதரவற்ற கையறு நிலையிலும், இன்னும் எத்தனை நாள் இந்த ஊரடங்கு நீண்டுகொண்டே போகுமோ என்ற விரக்தியிலும்தான் தங்களது சொந்த ஊருக்கும், சாதி சனத்தின் ஆதரவை நாடியும் வருகிறார்கள் மக்கள். இதில் நோய்த் தொற்று பரவுகிறது என்பதற்காகப் பயந்து வருபவர்களின் விழுக்காடு மிகவும் குறைவு.

சென்னையிலிருந்து ஊர் திரும்புகிறவர்களை எவ்வளவு கட்டுப்பாடுகள், பரிசோதனைகள் செய்து அனுமதிக்கப்படுகிறது என்பதை ஒருகணம் யோசிக்க வேண்டும். முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு அனுமதி வழங்கும் இபாஸ், அதிலும் போலி இபாஸ்கள் வந்துவிடுகின்றன என்று சுங்கச் சாவடிகளில் பல அடுக்குச் சோதனைகள், பலமுறை உடல் வெப்பப் பரிசோதனைகள்… இப்படிப் பல பரீட்சைகளில் தேர்வாகி, தங்களது மாவட்டத்துக்குள் நுழையும்போது இறுதியாக அங்கே ஒரு அக்னிப் பரீட்சை: நோய்த்தொற்று உள்ளதா என்ற முழுமையான மருத்துவப் பரிசோதனை. தேர்வு முடிவு வரும் வரை கும்பலோடு கும்பலாக அருகில் இருக்கும் மண்டபத்தில் காத்திருப்பு.ப் பரீட்சையில் பெயிலானவர்கள், அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்கள். பரீட்சையில் வென்றவர்கள் வீட்டுக்கு வந்தாலும், மீண்டும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வளவு கட்டுப்பாடுகள், வடிகட்டல்களுக்குப் பிறகும் சென்னைக்காரர்களிடமிருந்து கரோனா பரவுகிறது என்று உள்ளே விடாமல் தடுப்பது எவ்வளவு பெரிய அவலம்! கொள்ளைநோயைத் துரத்துவது மாதிரி ஒருவரைத் துரத்துவது சரிதானா? ஒருவரை நோயாகப் பார்ப்பது உண்மையில் யாருடைய நோய்?

- கௌதம சித்தார்த்தன்,

தொடர்புக்கு: unnatham@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x